வேதங்கள்
ஏத்தேர் 10


அதிகாரம் 10

ஒரு ராஜாவை மற்றொரு ராஜா தொடருதல் – சில ராஜாக்கள் நீதிமான்களாயிருத்தல், மற்றவர்கள் துன்மார்க்கராயிருத்தல் – நீதி ஜெயம்பெறும்போது, ஜனங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு விருத்தியடைதல்.

1 அந்தப்படியே, கேத்தினுடைய சந்ததியாகிய சேஸ் – ஏனெனில் சேஸ்ஸைத்தவிர கேத்தும் அவன் வீட்டார் அனைவரும் பஞ்சத்தால் அழிந்து போனார்கள், ஆதலால் சேஸ் வீழ்ந்துபோன ஜனத்தை மறுபடியும் பலப்படுத்தத் துவங்கினான்.

2 அந்தப்படியே, சேஸ் தன் பிதாக்களுடைய அழிவை நினைவுகூர்ந்தான். அவன் நீதியுள்ள ராஜ்யத்தை எழுப்பினான்; ஏனெனில் கர்த்தர் யாரேதையும் அவன் சகோதரனையும் சமுத்திரத்தைக் கடந்துகொண்டு வருவதில் செய்தவற்றை அவன் நினைவுகூர்ந்தான்; அவன் கர்த்தருடைய வழிகளில் நடந்தான். அவன் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

3 சேஸ் என்ற பெயருடைய அவனுடைய மூத்த குமாரன் அவனுக்கு விரோதமாக கலகம் பண்ணினான். ஆயினும், சேஸ் தன்னுடைய மிகுந்த ஐஸ்வரியத்தினாலே ஒரு திருடனால் கொல்லப்பட்டான். அது அவனுடைய தகப்பனுக்கு மறுபடியும் சமாதானத்தைக் கொண்டுவந்தது.

4 அந்தப்படியே, அவன் தகப்பன் பூமியின்மேல் அநேக பட்டணங்களைக் கட்டினான். ஜனங்கள் மறுபடியும் தேசத்தின் மேல் பரவ ஆரம்பித்தார்கள். சேஸ் மிகவும் வயதான காலம் வரைக்குமாய் ஜீவனம் பண்ணினான். அவன் ரிப்லாகீஸைப் பெற்றான். அவன் மரித்து அவனுடைய ஸ்தானத்தில் ரிப்லாகீஸ் ஆளுகை பண்ணினான்.

5 அந்தப்படியே, ரிப்லாகீஸ் கர்த்தருடைய பார்வைக்குச் சரியானதைச் செய்யவில்லை. ஏனெனில் அவன் அநேக மனைவிகளையும் மறுமனையாட்டிகளையும் வைத்திருந்தான். சுமக்க முடியாதவைகளை மனுஷருடைய தோள்களின்மேல் வைத்தான். ஆம், அவன் அவர்கள் மேல் பலத்த வரிச்சுமையை சுமத்தினான். வரிகளைக்கொண்டு அவன் அநேக விசாலமான கட்டிடங்களைக் கட்டினான்.

6 அவன் தனக்காக ஒரு மிகுந்த அழகான சிங்காசனத்தை எழுப்பினான், அநேக சிறைச்சாலைகளையும் கட்டினான், வரிகளுக்கு கீழ்ப்படியாதவர்களை அவன் சிறையினுள் தள்ளினான்; வரிகளைக் கட்ட இயலாதோரையும் அவன் சிறையினுள் தள்ளினான்; அவர்கள் தாங்களே தங்களைத் தாங்கிக்கொள்ள தொடர்ந்து வேலை செய்யும்படியாய் செய்தான்; பணிசெய்ய மறுப்போரை மரணத்திற்குள்ளாகும்படி செய்தான்.

7 ஆதலால் அவன் ஒருவனுடைய எல்லா அருமையான வேலைகளையும், ஆம், அவனுடைய பசும்பொன்னையும் சிறையிலே புடமிடப்படும்படியாகச் செய்தான்; எல்லா விதமான நுட்பமான கைவேலைகளையும் அவன் சிறையிலே செய்யும்படிச் செய்தான். அந்தப்படியே, அவன் ஜனங்களைத் தன்னுடைய வேசித்தனங்களாலும், அருவருப்புகளாலும் துன்பப்படுத்தினான்.

8 அவன் நாற்பத்திரண்டு வருஷ காலமளவும் ராஜரீகம்பண்ணின பின்பு, ஜனங்கள் அவனுக்கு விரோதமாகக் கலகத்தில் எழும்பினார்கள்; அங்கே, அதினாலே ரிப்லாகீஸ் கொல்லப்பட்டு, அவனுடைய சந்ததியினர் தேசத்திலிருந்து வெளியே துரத்தப்படும் அளவுக்கு தேசத்திலே மறுபடியும் யுத்தம் துவங்கியது.

9 அந்தப்படியே, அநேக வருஷங்களுக்குப் பின்பு மோரியாந்தன் (ரிப்லாகீஸின் வம்சத்தான்) தள்ளப்பட்டவர்கள் அடங்கிய ஓர் சேனையை ஏகமாய்க் கூட்டிப்போய் ஜனங்களோடு யுத்தம் பண்ணினான்; அவன் அநேக பட்டணங்களின்மேல் அதிகாரம் பெற்றான்; யுத்தம் மிகவும் கொடிதாகி அநேக வருஷமளவும் நீடித்தது. அவன் தேசம் முழுவதும் அதிகாரம்பெற்று தன்னையே தேசம் முழுவதும் ராஜாவாக நியமித்துக்கொண்டான்.

10 அவன் தன்னையே ராஜாவாக நியமித்த பின்பு, அவன் ஜனங்களின் சுமையை லகுவாக்கி, அதினிமித்தம் ஜனங்களுடைய கண்களில் தயை பெற்றான். அவர்கள் அவனைத் தங்கள் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.

11 அவன் ஜனங்களுக்கு நியாயத்தைச் செய்துவந்தான். ஆனால் தன்னுடைய அநேக வேசித்தனங்களினிமித்தம், தனக்கு அப்படிச் செய்யவில்லை, ஆகவே அவன் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போனான்.

12 அந்தப்படியே, மோரியாந்தன் அநேக பட்டணங்களைக் கட்டினான். ஜனங்கள் அவன் ஆளுகையின் கீழ், கட்டிடங்களிலும், பொன்னிலும் வெள்ளியிலும், தானியங்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவை வளர்ப்பிலும், தங்களுக்கு திரும்பக் கொடுக்கப்பட்ட அனைத்திலும் ஐஸ்வரியவான்களானார்கள்.

13 மோரியாந்தன் மிகவும் அதிக காலம் உயிரோடிருந்தான். பின்பு அவன் கிம்மை பெற்றான், கிம் தன் தகப்பனுடைய ஸ்தானத்தில் ஆளுகை பண்ணினான். அவன் எட்டு வருஷங்கள் ராஜரீகம் பண்ணினான். அவன் தகப்பனும் மரித்தான். அந்தப்படியே, கிம் நீதியிலே ராஜரீகம் பண்ணவில்லை. ஆதலால் அவன் கர்த்தரிடத்தில் தயை பெறவில்லை.

14 அவனுடைய சகோதரன் அவனுக்கு விரோதமாகக் கலகத்தில் எழும்பி, அதனாலே அவன் அவனை சிறைத்தனத்திற்குள்ளாகக் கொண்டுவந்தான்; அவன் தன் வாழ்நாட்கள் முழுவதிலும் சிறைத்தனத்திலே தரித்திருந்தான்; அவன் சிறைத்தனத்திலே குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான். அவன் தன் வயதான காலத்தில் லேவியைப் பெற்று மரித்துப் போனான்.

15 அந்தப்படியே, லேவி தன் தகப்பனின் மரணத்திற்குப் பின்பு சிறைத்தனத்திலே நாற்பத்திரண்டு வருஷகாலம் சேவை செய்தான். அவன் தேசத்தின் ராஜாவிற்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அதினிமித்தம் தனக்கென்று ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டான்.

16 அவன் தனக்கென்று ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவன் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஜனங்கள் தேசத்தில் விருத்தியடைந்தார்கள்; அவன் நல்ல முதிர் வயதுவரைக்கும் ஜீவனம்பண்ணி குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்; அவன் கோரோமையும் பெற்றான். அவனைத் தன்னுடைய ஸ்தானத்திலே ராஜாவாக அபிஷேகம் பண்ணினான்.

17 அந்தப்படியே, கோரோம் தன் நாட்கள் முழுவதிலும் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்தான்; அவன் அநேக குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான்; அவன் அநேக நாட்களைக் கண்ட பின்னர் பூமியிலுள்ளவர்களைப் போலவே அவனும் மரித்துப் போனான்; கீஸ் அவன் ஸ்தானத்திலே ராஜரீகம் பண்ணினான்.

18 அந்தப்படியே, கீஸ்ஸூம் மரித்துப் போனான். அவன் ஸ்தானத்திலே லிப் ஆட்சி செய்தான்.

19 அந்தப்படியே, லிப்பும் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்தான். லிப்பின் காலத்தில்தான் விஷசர்ப்பங்கள் கொல்லப்பட்டன. ஆதலால் தென் தேசம் வனவிலங்குகளால் நிரப்பப்பட்டிருந்ததால், தேசத்தின் ஜனங்களுக்காக உணவை வேட்டையாடும்படி அவர்கள் தென்தேசத்திற்குள்ளே போனார்கள். லிப்பும் ஒரு பெரிய வேட்டைக்காரனானான்.

20 சமுத்திரம் நிலத்தைப் பிரிக்கும் இடத்திற்குப் பக்கத்திலே இருந்த குறுகிய பூமிக்கு அருகாமையிலே அவர்கள் ஒரு பெரிய பட்டணத்தைக் கட்டினார்கள்.

21 வேட்டையாட வனாந்தரம்போல தென்தேசம் இருக்கும்படியாக அதை அவர்கள் பாதுகாத்தார்கள். வடதேசம் முழுவதும் குடிகளால் நிறைக்கப்பட்டிருந்தது.

22 அவர்கள் மிகுந்த உழைப்பாளிகளாயிருந்தார்கள். அவர்கள் லாபம் பெறும்படிக்கு வாங்கி விற்று, ஒருவரோடு ஒருவர் கொடுக்கல் வாங்கல் பண்ணினார்கள்.

23 அவர்கள் எல்லாவிதமான தாதுக்களாலும் வேலை செய்தார்கள். அவர்கள் பொன்னையும், வெள்ளியையும், இரும்பையும், பித்தளையையும் எல்லா விதமான உலோகங்களையும் செய்தார்கள்; அவர்கள் அதைப் பூமியிலிருந்து தோண்டி எடுத்தார்கள்; ஆதலால் பொன், வெள்ளி, இரும்பு, செம்பு ஆகியவைகளின் தாதுக்களை எடுக்க அவர்கள் மண்ணை பெரும் குவியல்களாக எடுத்துப் போட்டார்கள். அவர்கள் எல்லா விதமான நேர்த்தியான வேலைகளையும் செய்தார்கள்.

24 அவர்கள் பட்டுக்களையும் அருமையாய் நெய்யப்பட்ட வஸ்திரங்களையும் வைத்திருந்தார்கள், அவர்கள் தங்கள் நிர்வாணத்தை மூட எல்லா விதமான துணிகளையும் நெய்தார்கள்.

25 பூமியைப் பண்படுத்தவும், உழுதிடவும், விதைக்கவும், அறுவடை செய்யவும், களைபறிக்கவும், கதிரடிக்கவும் அவர்கள் எல்லா விதமான கருவிகளையும் தயாரித்தார்கள்.

26 அவர்கள் எல்லாவிதமான கருவிகளையும் செய்து, அவைகளை வைத்து தங்கள் மிருகஜீவன்களை வேலைக்குப் பயன்படுத்தினார்கள்.

27 அவர்கள் எல்லா விதமான யுத்தக் கருவிகளையும் செய்தார்கள். அவர்கள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய பணிகளையும் செய்தார்கள்.

28 அவர்களைக் காட்டிலும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்ட, கர்த்தருடைய கரத்தால் அதிகமாய் விருத்தி பண்ணப்பட்ட ஜனம் இருந்திருக்கவே முடியாது. அவர்கள் எல்லா தேசங்களைக் காட்டிலும் சிறந்த தேசத்தில் இருந்தார்கள். ஏனெனில் கர்த்தர் அதைச் சொல்லியிருக்கிறார்.

29 அந்தப்படியே, லிப் அநேக வருஷங்கள் வாழ்ந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்; அவன் இயர்தமையும் பெற்றான்.

30 அந்தப்படியே, இயர்தம் தன் தகப்பனுடைய ஸ்தானத்திலே ராஜரீகம் பண்ணினான். இயர்தம் இருபத்தி நான்கு வருஷங்கள் ராஜரீகம் பண்ணின பின்பு, இதோ, ராஜ்யம் அவனிடத்திலிருந்து பறிக்கப்பட்டது; அவன் அநேக வருஷங்களாய், ஆம், தன் மீதி நாட்கள் முழுவதும் சிறைத்தனத்திலே சேவித்தான்.

31 அவன் கேத்தைப் பெற்றான். கேத் தன் வாழ்நாட்களையெல்லாம் சிறைத்தனத்தில் ஜீவித்தான். கேத் ஆரோனைப் பெற்றான். ஆரோன் தன் வாழ்நாட்கள் எல்லாம் சிறையிலேயே வாசம் பண்ணினான்; அவன் அம்னிகாத்தாவைப் பெற்றான். அம்னிகாத்தாவும் தன் வாழ்நாட்கள் முழுவதும் சிறைத்தனத்திலே வாசம் பண்ணினான்; அவன் கொரியாந்தாமைப் பெற்றான். கொரியாந்தாம் தன் வாழ்நாட்கள் முழுவதும் சிறைத்தனத்திலே வாசம் பண்ணினான்; அவன் கோம்மைப் பெற்றான்.

32 அந்தப்படியே, கோம் ராஜ்ஜியத்தின் பாதியை தன் வசப்படுத்தினான். அவன் பாதி ராஜ்யத்தை நாற்பத்திரண்டு வருஷங்கள் ஆண்டுவந்தான்; அவன் அம்கித் என்ற ராஜாவுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனான்; அவர்கள் அநேக வருஷங்களாக யுத்தம் பண்ணி, அந்த நேரத்தில் கோம், அம்கித் மேல் வல்லமை பெற்று, ராஜ்யத்தின் மீதியின் மேலும் அதிகாரம் பெற்றான்.

33 கோமின் நாட்களில் தேசத்தில் திருடர்கள் இருக்கத் துவங்கினார்கள்; அவர்கள் பூர்வகாலத் திட்டங்களைத் தழுவி, பூர்வத்தாரின் முறையின்படியே உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு, ராஜ்யத்தை அழிக்க மறுபடியும் வகைதேடினார்கள்.

34 இப்பொழுதும் கோம் அவர்களுக்கு விரோதமாய் அதிகமாய் யுத்தம் பண்ணினான், ஆயினும், அவன் அவர்களுக்கு விரோதமாய் ஜெயிக்கவில்லை.