அதிகாரம் 13
யோசேப்பின் சந்ததியினரால் அமெரிக்காவில் கட்டப்படும் புதிய எருசலேமைக் குறித்து ஏத்தேர் பேசுதல் – அவன் தீர்க்கதரிசனமுரைத்தல், வெளியே துரத்தப்படுதல், யாரேதியர்களின் வரலாற்றை எழுதுதல். மற்றும் யாரேதியர்களின் அழிவை முன்னறிவித்தல் – தேசமெங்கிலும் யுத்தம் பரவுதல்
1 இப்பொழுதும் மரோனியாகிய நான் எந்த ஜனத்தைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேனோ, அவர்களுடைய அழிவைப்பற்றிய என் பதிவேட்டை முடிக்கப் போகிறேன்.
2 இதோ அவர்கள் ஏத்தேரின் வார்த்தைகளனைத்தையும் மறுதலித்தார்கள்; அவன் மனுஷனுடைய ஆரம்பத்திலிருந்து சகல காரியங்களையும் சொன்னான். இந்த தேசத்தின் பரப்பிலிருந்து ஜலம் வற்றின பின்பு, அது மற்ற எல்லா தேசங்களிலும் சிறந்த தேசமாயும், கர்த்தருடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசமாயும் மாறினதென்று அவர்களுக்கு மெய்யாகவே சொன்னான். ஆதலால் அந்த தேசத்தின்மேல் வாசம் பண்ணுகிற சகல மனுஷரும் அவரை சேவிக்கவேண்டுமென்று கர்த்தர் வாஞ்சித்திருக்க வேண்டும்.
3 கர்த்தருடைய பரிசுத்த அடைக்கல ஸ்தலமாகிய, புதிய எருசலேம் வானத்திலிருந்து இறங்கி வரவேண்டிய இடமும் அதுவே.
4 இதோ, ஏத்தேர் கிறிஸ்துவின் நாட்களைக் கண்டான். அவன் இந்த தேசத்தின் மேல் ஒரு புதிய எருசலேமைக் குறித்துப் பேசினான்.
5 அவன் இஸ்ரவேலரின் வீட்டாரைக் குறித்தும், லேகி அங்கிருந்து வரவேண்டிய இடமாகிய எருசலேமைக் குறித்தும், அது அழிக்கப்பட்டுப்போன பிறகு அது மறுபடியும் கர்த்தருக்கு பரிசுத்த நகரமாகக் கட்டப்படுமென்றும் சொன்னான்; ஆதலால் அது பழங்காலத்திலிருந்து இருந்துவருவதால் அது புதிய எருசலேமாக இருக்கமுடியாது; ஆனால் அது மறுபடியும் கட்டப்பட்டு கர்த்தரின் பரிசுத்த நகரமாக வேண்டும், அது இஸ்ரவேலரின் வீட்டாருக்காகக் கட்டப்படவேண்டும்.
6 அவன் யோசேப்பின் சந்ததியாரின் மீதியானவர்களுக்காக, இந்த தேசத்தின் மேல் ஒரு புதிய எருசலேம் கட்டப்படவேண்டுமென்றும் இவைகளுக்கான ஒரு முன்னடையாளம் இருந்திருக்கிறதென்றும் சொன்னான்.
7 ஏனெனில் யோசேப்பு தன் தகப்பனை எகிப்து தேசத்திற்குக் கொண்டுவந்ததும் அவன் அங்கு மரித்துப்போனான்; ஆதலால் யோசேப்பின் தகப்பன் அழிந்துபோகக் கூடாதென்று, கர்த்தர் அவன் மேல் இரக்கமாய் இருந்ததைப்போல, யோசேப்பின் சந்ததியாரும் அழிந்துபோகாதபடி, அவர் அவர்கள்மேல் இரக்கமாய் இருப்பதற்காக, அவர் யோசேப்பின் சந்ததியாரின் மீதியானவர்களை எருசலேம் தேசத்தைவிட்டு கொண்டுவந்தார்.
8 ஆதலால் யோசேப்பின் வீட்டாரின் மீதியானவர்கள் இந்த தேசத்தில் விருத்தியடைவார்கள்; அது அவர்களுடைய சுதந்திர பூமியாய் இருக்கும்; அவர்கள் பழங்காலத்து எருசலேமைப் போலவே, கர்த்தருக்கென்று ஒரு பரிசுத்த நகரத்தைக் கட்டுவார்கள்; பூமி கடந்து போகும்போது வரும் முடிவு வரைக்கும் அவர்கள் தாறுமாறாக்கப்படுவதில்லை.
9 அங்கே ஒரு புதிய வானமும், புதிய பூமியும் இருக்கும்; பழையவை ஒழிந்து போனாலும், அவை பழையவை போலிருக்கும், சகலமும் புதிதாகியிருக்கின்றன.
10 அதன் பின்பு புதிய எருசலேம் வரும்; அங்கே வாசம்பண்ணுபவர்களெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் அவர்களுடைய வஸ்திரங்களே ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் வெண்மையாக்கப்பட்டது; இஸ்ரவேலின் வீட்டாராகிய யோசேப்பின் சந்ததியாரின் மீதியானவர்களுக்குள்ளே எண்ணப்படுபவர்கள் அவர்களே.
11 அதன் பின்பு பூர்வகாலத்து எருசலேம் வரும்; அதனுடைய குடிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனில் அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறார்கள். அவர்களே சிதறடிக்கப்பட்டு, உலகத்தின் நான்கு திசைகளிலிருந்தும், வடதேசங்களிலிருந்தும் கூட்டிச்சேர்க்கப்பட்டிருப்பவர்கள், தேவன் அவர்களுடைய பிதாவாகிய ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை நிறைவேறுவதில் பங்கேற்கிறவர்களுமாயிருக்கிறார்கள்.
12 இந்தக் காரியங்கள் வரும்போது, முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள் என்கிற வேதவசனத்தை நிறைவேற்றுகிறது, மற்றும் பிந்தினோராயிருந்தவர்கள் முந்தினோராயிருப்பார்கள்.
13 நான் இன்னும் அதிகமாய் எழுத இருந்தேன். ஆனால் நான் தடை செய்யப்பட்டேன்; ஆனால் ஏத்தேரின் தீர்க்கதரிசனங்கள் பெரிதும் அதிசயமுமானவைகள்; அவர்கள் அவனை வீணனென்று எண்ணினார்கள். அவனை புறம்பே தள்ளினார்கள்; அவன் பகலிலே கன்மலை இடுக்கில் ஒளிந்து கொண்டான். ஜனங்களுக்குள்ளே வரவேண்டியவைகளை காணும்படியாய் இரவிலே போனான்.
14 ஜனத்தின்மேல் வந்த அழிவுகளை, இரவிலே பார்த்து, கன்மலை இடுக்கிலே இருக்கும்போது, இந்த வரலாற்றின் மீதியை எழுதினான்.
15 அந்தப்படியே, அவன் ஜனங்களுக்குள்ளிருந்து துரத்தப்பட்ட அதே வருஷத்தில் அங்கே ஜனங்களுக்குள்ளே பெரும் யுத்தம் துவங்கியது, பலசாலிகளான அநேகர் எழும்பி, பேசப்பட்டிருக்கிறபடியே, தங்களுடைய துன்மார்க்க இரகசிய திட்டங்களால், கொரியாந்தமரை அழிக்க வகை தேடினார்கள்.
16 இப்பொழுதும் கொரியாந்தமர் தான் யுத்தத்தின் சகல கலைகளையும், உலகத்தின் சகல சூதுகளையும் கற்றறிந்தபடியால், அவன் தன்னை அழிக்க வகை தேடினவர்களுக்கு விரோதமாக யுத்தம் தொடுத்தான்.
17 ஆனால் அவனோ, அவனுடைய அழகான குமாரரோ, குமாரத்திகளோ, கோஹோரின் அழகான குமாரரோ, குமாரத்திகளோ, கோரிஹோரின் அழகான குமாரரோ, குமாரத்திகளோ மனந்திரும்பவில்லை; முடிவாக பூமியின் மேற்பரப்பிலெங்கும் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பின அழகான குமாரரும், குமாரத்திகளும் ஒருவரும் இல்லை.
18 ஆதலால், அந்தப்படியே, முதல் வருஷத்தில் ஏத்தேர் ஒரு கன்மலையின் துவாரத்தில் வாசம் பண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த இரகசியச் சங்கங்களைச் சார்ந்தவர்களின் பட்டயங்களால் அநேகர் கொல்லப்பட்டு, அவர்கள் ராஜ்யத்தைப் பெறும்படிக்கு கொரியாந்தமருக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள்.
19 அந்தப்படியே, கொரியாந்தமரின் குமாரர்கள் அதிக சண்டையிட்டு இரத்தம் மிகுதியாகச் சிந்தினார்கள்.
20 இரண்டாவது வருஷத்தில் கர்த்தருடைய வார்த்தை ஏத்தேருக்கு உண்டாகி, அவன் போய் கொரியாந்தமரிடத்தில் அவனும், அவனது வீட்டாரனைவரும் மனந்திரும்புவார்களாகில், கர்த்தர் அவனுக்கு அவனுடைய ராஜ்யத்தைக் கொடுத்து ஜனங்களைத் தப்புவிப்பார்.
21 இல்லையென்றால், அவனைத் தவிர அவன் வீட்டாரனைவரும் அழிக்கப்படுவார்கள், மற்ற ஜனங்கள் தேசத்தைத் தங்களுடைய சுதந்தரத்திற்காகப் பெறுவார்கள் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகிறதைப் பார்க்க அவன் ஜீவித்திருப்பான் என்றும், கொரியாந்தமர் அவர்களால் அடக்கம் பண்ணப்படுவான் என்றும், கொரியாந்தமரைத் தவிர மற்ற எல்லா ஆத்துமாக்களும் அழிக்கப்படுமென்றும் தீர்க்கதரிசனமாய் சொல்லு, என்றது.
22 அந்தப்படியே, கொரியாந்தமரோ, அவன் வீட்டாரோ, ஜனங்களோ மனந்திரும்பவில்லை, யுத்தங்களும் ஓயவில்லை. அவர்கள் ஏத்தேரைக் கொல்ல வகை தேடினார்கள். ஆனால் அவனோ அவர்கள் முன்னிருந்து ஓடி மறுபடியும் கன்மலையின் இடுக்கிலே ஒளிந்துகொண்டான்.
23 அந்தப்படியே, அங்கே சாரேத் எழும்பி, கொரியாந்தமரிடத்தில் போர் தொடுத்தான்; அவன் அவனை தோற்கடித்து அதினிமித்தம் மூன்றாம் வருஷத்தில் அவன் அவனை சிறைத்தனத்திற்குள்ளாகக் கொண்டுவந்தான்.
24 நான்காம் வருஷத்திலே கொரியாந்தமரின் குமாரர்கள் சாரேத்தை அடித்து, தன் தகப்பனுக்கு மறுபடியும் ராஜ்யத்தைப் பெற்றுத் தந்தார்கள்.
25 இப்பொழுது தேசத்தின் மேல் எங்கும் யுத்தம் துவங்கி, ஒவ்வொரு மனுஷனும் தன் கூட்டத்தோடு தான் வாஞ்சிக்கிறதற்காக சண்டைபோட்டான்.
26 அங்கே திருடர்கள் இருந்தார்கள். இறுதியாகத் தேசத்தின் மேல் எல்லா விதமான துன்மார்க்கங்களும் இருந்தன.
27 அந்தப்படியே, கொரியாந்தமர் சாரேத்தோடு மிகவும் கோபப்பட்டு, அவன் அவனுக்கு விரோதமாக தன் சேனைகளோடு போரிடப் போனான்; அவர்கள் பெரும் கோபத்தோடு சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் கில்கால் பள்ளத்தாக்கிலே சந்தித்தார்கள்; யுத்தம் மிகவும் கொடியதானது.
28 அந்தப்படியே, சாரேத் அவனுக்கு விரோதமாக மூன்று நாட்களளவும் யுத்தம் பண்ணினான். அந்தப்படியே, கொரியாந்தமர் அவனை தோற்கடித்து ஏஸ்லோன் சமபூமிக்கு வரும்வரைக்கும் அவனைப் பின்தொடர்ந்தான்.
29 அந்தப்படியே, சாரேத் அவனோடு மறுபடியும் சமபூமியின் மேல் யுத்தம் புரிந்தான்; இதோ, அவன் கொரியாந்தமரை தோற்கடித்து, அவனை மறுபடியும் கில்கால் பள்ளத்தாக்குக்கு துரத்தினான்.
30 கொரியாந்தமர் மறுபடியும் சாரேத்தோடு கில்கால் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணினான், அதிலே அவன் சாரேத்தை தோற்கடித்து அவனை வெட்டிப்போட்டான்.
31 சாரேத் கொரியாந்தமரை அவன் தொடையில் காயப்படுத்தினான், அதினாலே அவன் இரண்டு வருஷங்களளவும் யுத்தத்திற்குப் போகாதிருந்தான். அந்த சமயத்திலே தேசங்களிலிருந்த ஜனங்களெல்லாரும் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுக்க அங்கே ஒருவருமில்லை.