வேதங்கள்
ஏத்தேர் 14


அதிகாரம் 14

ஜனங்களுடைய அக்கிரமம் பூமியின் மேல் சாபத்தைக் கொண்டுவருதல் – கொரியாந்தமர் கீலேயாத்துடனும் பின்பு லிப்புடனும், பின்பு சிஸ்ஸூடனும் யுத்தங்களை மேற்கொள்ளுதல் – இரத்தமும், சங்காரமும் தேசத்தில் நிறைந்திருத்தல்.

1 இப்பொழுதும் ஜனங்களினுடைய அக்கிரமத்தினிமித்தம் தேசமெங்கும் ஒரு சாபம் உண்டானது. அதினிமித்தம் ஒரு மனுஷன் தன் கருவியையோ, அல்லது தன் பட்டயத்தையோ, தன் அலமாரியின் மேலோ, அல்லது அதை வைக்கிற இடத்திலோ வைத்தால், இதோ, மறுநாளில் அவன் அதைக் காணமுடியாது. தேசத்தின்மேல் சாபம் அவ்வளவு கொடியதாயிருந்தது.

2 ஆகையால் ஒவ்வொரு மனுஷனும் தனக்குச் சொந்தமானதைத் தன் கைகளால் பற்றிக்கொள்வான். அவன் வாங்கவும் மாட்டான். கொடுக்கவும் மாட்டான்; அவனவன் தன் சொத்தையும், தன் சொந்த ஜீவனையும், தன் மனைவிகள் மற்றும் பிள்ளைகளின் ஜீவன்களையும், தற்காப்பதற்கென்று தன் பட்டயத்தின் பிடியை தன் வலது கரத்தால் பிடித்திருந்தான்.

3 இப்பொழுதும் இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, சாரேத்தின் மரணத்திற்குப் பின்பு, இதோ, அங்கே சாரேத்தின் சகோதரன் எழும்பி, கொரியாந்தமரிடத்தில் யுத்தம் பண்ணினான். அதிலே கொரியாந்தமர் அவனை தோற்கடித்து, அவனை ஆகீஸின் வனாந்தரம் வரைக்குமாய்த் துரத்தினான்.

4 அந்தப்படியே, சாரேத்தின் சகோதரன் அவனோடு ஆகீஸின் வனாந்தரத்திலே யுத்தம் பண்ணினான்; யுத்தம் மிகவும் கொடியதாகி அநேக ஆயிரக்கணக்கானோர் பட்டயத்தால் வீழ்ந்து போனார்கள்.

5 அந்தப்படியே, கொரியாந்தமர் வனாந்தரத்தை முற்றுகையிட்டான்; சாரேத்தின் சகோதரன் வனாந்தரத்தைவிட்டு இரவிலே அணிவகுத்துப்போய், கொரியாந்தமரின் சேனைகள் குடித்து வெறித்திருக்கும்போது, அவர்களில் ஒரு பகுதியினரை வெட்டிப்போட்டான்.

6 அவன் மோரான் தேசத்திற்கு வந்து கொரியாந்தமரின் சிங்காசனத்தின் மேல் தன்னையே அமர்த்திக்கொண்டான்.

7 அந்தப்படியே, கொரியாந்தமர் வனாந்தரத்தில் தன் சேனையோடு இரண்டு வருஷங்களளவும் வாசம் பண்ணினான். அதினாலே அவன் சேனைக்குப் பெரும் பலத்தைப் பெற்றுக்கொண்டான்.

8 இப்பொழுதும் கீலேயாத் என்னும் பேர்கொண்ட சாரேத்தின் சகோதரன், இரகசிய சங்கங்களினிமித்தம் தன் சேனைக்கும் மிகுந்த பலத்தைப் பெற்றான்.

9 அந்தப்படியே, அவன் தன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும்போது, அவனை அவனது பிரதான ஆசாரியன் கொலை செய்தான்.

10 அந்தப்படியே, இரகசிய சங்கங்களைச் சேர்ந்த ஒருவன் அவனை இரகசிய பாதையில் கொலைபண்ணி, ராஜ்யத்தை தனக்கென்று பெற்றுக்கொண்டான்; அவனது பெயர் லிப். ஜனத்தார் எல்லாருக்குள்ளும் எந்த ஒரு மனுஷனைக்காட்டிலும் அதிக பருத்த உடல்வாகை உடையவனாய் லிப் விளங்கினான்.

11 அந்தப்படியே, லிப்பின் முதலாம் வருஷத்தில், கொரியாந்தமர் மோரானின் தேசத்திற்கு வந்து, லிப்போடு போர் புரிந்தான்.

12 அந்தப்படியே, அவன் லிப்போடு சண்டை போட்டான். அதிலே லிப் அவன் கரத்தை வெட்டினதாலே, அவன் காயமடைந்தான்; ஆயினும் கொரியாந்தமரின் சேனை லிப்பை துரத்தி அவன் கடற்கரையருகேயுள்ள எல்லைகளுக்கு ஓடும்படிக்கு முன்னேறியது.

13 அந்தப்படியே, கொரியாந்தமர் அவனைப் பின்தொடர்ந்தான். லிப் கடற்கரையிலே அவனோடு போர் புரிந்தான்.

14 அந்தப்படியே, கொரியாந்தமரின் சேனையை லிப் வெட்டினதாலே, அவர்கள் மறுபடியும் ஆகீஸின் வனாந்திரத்திற்கு ஓடிப்போனார்கள்.

15 அந்தப்படியே, லிப் ஆகோஸ் சமவெளிகளுக்கு வரும்வரைக்குமாய் அவனைத் துரத்தினான். லிப் முன்பாக கொரியாந்தமர் ஓடும்போது, அவன் தன்னுடன் அப்பகுதியிலிருந்த சகல ஜனங்களையும் கூட்டிக்கொண்டு போனான்.

16 அவன் ஆகோஸ் சமவெளிகளுக்கு வந்தபோது, அவன் லிப்போடு யுத்தம் பண்ணினான்; அவன் மரணம் அடையும் வரைக்கும் அவனை அடித்தான்; ஆயினும் அவனுக்குப் பதிலாக லிப்பின் சகோதரன் கொரியாந்தமருக்கு விரோதமாய் வந்தான். யுத்தம் மிகவும் கொடியதாகி அதினிமித்தம் கொரியாந்தமர் மறுபடியும் லிப்பின் சகோதரனின் சேனைக்கு முன்பாக ஓடினான்.

17 இப்பொழுது லிப்பின் சகோதரனின் பெயர் சிஸ் என்பதாகும். அந்தப்படியே, சிஸ், கொரியாந்தமரைப் பின்தொடர்ந்து போய், அநேக பட்டணங்களை வீழ்த்தினான். அவன் பெண்களையும், பிள்ளைகளையும் வெட்டினான். அவன் பட்டணங்களை எரித்துப்போட்டான்.

18 அங்கே சிஸ்ஸைப்பற்றிய பயம் தேசமெங்கிலும் பரவியது; ஆம், சிஸ்ஸின் சேனைக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? என்ற ஒரு கூக்குரல் தேசமெங்கும் பரவியது, இதோ, அவன் தனக்கு முன்பாகப் பூமியை துடைத்துப் போடுகிறான்

19 அந்தப்படியே, ஜனங்கள் தேசத்தின்மேல் எங்கிலும் சேனைகளாக ஏகமாய்க் கூட ஆரம்பித்தார்கள்.

20 அவர்கள் பிரிந்திருந்தார்கள்; அவர்களில் ஒரு பகுதியினர் சிஸ்ஸின் சேனையிடம் ஓடினார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் கொரியாந்தமரின் சேனையிடம் ஓடினார்கள்.

21 யுத்தம் கொடியதாயும், நீண்ட நாள் இருந்ததாலும் இரத்தம் சிந்துதலும், சங்காரமும் நீண்டுகொண்டே போனதாலும், தேசத்தின் மேற்பரப்பெல்லாம் மரித்தோரின் சரீரங்களால் மூடப்பட்டிருந்தது.

22 யுத்தம் வேகமாயும் துரிதமாயும் நடந்ததால் மரித்தோரை அடக்கம்பண்ண அங்கே ஒருவரும் மீந்திருக்கவில்லை, ஆனால் புருஷர்கள், ஸ்திரீகள், பிள்ளைகள் ஆகியோரின் உடல்கள் மாம்சப் புழுக்களுக்கு இரையாகும்படி தேசத்தின்மேல் சிதறவிடப்பட்டிருக்க, அவர்கள் அணிவகுத்துப்போய் யுத்தங்களில் தொடர்ந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

23 அதனுடைய துர்நாற்றமோ, தேசத்தின் மீதெங்கும் பரவிப்போனது. தேசத்தின் பரப்பளவு முழுவதும் பரவியது; ஆகவே ஜனங்கள் அதனுடைய நாற்றத்தினிமித்தம், இரவும் பகலும் அவதிப்பட்டார்கள்.

24 இருப்பினும் கொரியாந்தமரை சிஸ் பின் தொடர்வதிலிருந்து ஓயவில்லை. கொல்லப்பட்ட தன் சகோதரனின் இரத்தத்துக்காக கொரியாந்தமர் மேல் பழிதீர்க்கவும் ஆணையிட்டான். கொரியாந்தமர் பட்டயத்தால் வீழ்ந்து போவதில்லையென்று ஏத்தேருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது.

25 இப்படியாக கர்த்தர் அவர்களைத் தம்முடைய உக்கிரத்தின் முழுமையில் விசாரித்தார் என்றும், அவர்களுடைய துன்மார்க்கமும் அருவருப்புகளும் அவர்களின் என்றுமுள்ள அழிவுக்கு வழியை ஆயத்தப்படுத்திக் கொடுத்ததென்றும் நாம் காண்கிறோம்.

26 அந்தப்படியே, கொரியாந்தமரை கடற்கரையோரமாய் உள்ள எல்லைகள் வரைக்குமாய் கிழக்கே சிஸ் பின்தொடர்ந்தான். அங்கே அவன் மூன்று நாளளவும் சிஸ்ஸிடத்தில் யுத்தம் தொடுத்தான்.

27 சிஸ்ஸின் சேனைகளுக்குள்ளே அழிவு மிகக் கொடூரமாயிருந்ததாலே, ஜனங்கள் பயப்படத் துவங்கி, கொரியாந்தமர் சேனைகளுக்கு முன்பாக ஓடத்துவங்கினார்கள். அவர்கள் கோரிஹோரின் தேசத்திற்கு ஓடி, தங்களோடு சேராத, தங்களுக்கு முன்னிருந்த குடிகள் யாவரையும் நிர்மூலமாக்கினார்கள்.

28 அவர்கள் கோரிஹோரின் பள்ளத்தாக்கிலே பாளையமிறங்கினார்கள்; கொரியாந்தமர் சுர் என்ற பள்ளத்தாக்கிலே பாளையமிறங்கினான்; இப்பொழுதும் சுர் பள்ளத்தாக்கு கோம்நரின் மலைக்கு அருகாமையில் இருந்தது; ஆதலால் கொரியாந்தமர் தன் சேனைகளை ஏகமாய் கோம்நரின் மலைகளின் மேல்கூட்டி, சிஸ்ஸின் சேனைகளை யுத்தத்திற்கு வரும்படி எக்காளம் ஊதி அழைத்தான்.

29 அந்தப்படியே, அவர்கள் வந்தார்கள், ஆனால் மறுபடியும் துரத்தப்பட்டார்கள்; இரண்டாம் விசையும் வந்தார்கள், அவர்கள் இரண்டாம் விசையும் துரத்தியடிக்கப்பட்டார்கள். அந்தப்படியே, அவர்கள் மூன்றாம் விசையும் வந்தார்கள், யுத்தம் வெகு தீவிரமடைந்தது.

30 அந்தப்படியே, அவனுக்கு ஆழமான அநேகக் காயங்களை உண்டாக்கும்படிக்கு, கொரியாந்தமரை சிஸ் வெட்டினான்; கொரியாந்தமர் தன் இரத்தத்தை இழந்தவனாய், மயக்கம்போட்டு மரித்தவனைப்போல எடுத்துச் செல்லப்பட்டான்.

31 இப்பொழுது இருபுறத்திலும் புருஷர், ஸ்திரீகள், பிள்ளைகள் ஆகியோரின் இழப்பு அதிகமாயிருந்ததால், சிஸ் தன் ஜனம் கொரியாந்தமரின் சேனைகளைத் துரத்திக்கொண்டு போகவேண்டாமென்று கட்டளையிட்டான்; ஆதலால், அவர்கள் தங்கள் பாளையத்திற்குத் திரும்பினார்கள்.