அதிகாரம் 7
ஒரீகா நீதியிலே ஆளுகை பண்ணுதல் – ஆட்சியைக் கைப்பற்றுதலுக்கும், பிணக்குகளுக்கும் மத்தியில், போட்டி ராஜ்யங்களான சியுலின் ராஜ்யமும், கோஹோரின் ராஜ்யமும் ஸ்தாபிக்கப்படுதல் – தீர்க்கதரிசிகள் ஜனங்களுடைய துன்மார்க்கத்தையும் விக்கிரக ஆராதனையையும் கண்டித்தல், அவர்கள் பின்பு மனந்திரும்புதல்.
1 அந்தப்படியே, ஒரீகா தன் நாட்கள் முழுவதும் தேசத்திலே நீதியோடு நியாயம் விசாரித்து வந்தான். அவன் நாட்களோ நீடித்திருந்தது.
2 அவன் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்தான்; ஆம், அவன் பெற்றெடுத்த முப்பத்தொரு பேரில் இருபத்தி மூன்று பேர் குமாரர்கள்.
3 அந்தப்படியே, அவன் கிப்பை தன் முதிர்வயதிலே பெற்றான். அந்தப்படியே, கிப் அவனுடைய ஸ்தானத்தில் ஆட்சி செய்தான். கிப் கோரிஹோரைப் பெற்றான்.
4 கோரிஹோர் முப்பத்திரண்டு வயதானபோது, அவன் தன் பிதாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணி, நிகோர் என்னும் தேசத்திற்குப் போய், அங்கே வாசம் பண்ணினான்; அவன் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்தான். அவர்கள் மிகவும் அழகாயிருந்தார்கள்; ஆதலால் கோரிஹோர் அநேக ஜனங்களைத் தனக்குப் பின்பு இழுத்துக்கொண்டான்.
5 அவன் ஒரு சேனையை ஏகமாய்க் கூட்டின பின்பு, அவன் ராஜா வாசம் பண்ணின மோரான் தேசத்திற்கு வந்து அவனைச் சிறைப் பிடித்தான். அவர்கள் சிறைத்தனத்தினுள் கொண்டுவரப்படுவார்கள் என்ற யாரேதின் சகோதரனின் வார்த்தை நிறைவேறினது.
6 ராஜா வாசம்பண்ணின மோரான் தேசம் நேபியர்களால் பாழ்க்கடிப்பு என்றழைக்கப்பட்ட தேசத்திற்கு அருகாமையிலிருந்தது.
7 அந்தப்படியே, கிப்பும் அவன் ஜனமும் அவன் குமாரனாகிய கோரிஹோரின் கீழ் அவன் மிகவும் முதிர்வயதடையும்வரை சிறைவாசமாயிருந்தார்கள்; கிப் தன் வயதான காலத்திலும், தான் சிறைத்தனத்திலிருக்கிற போதே சியுலைப் பெற்றான்.
8 அந்தப்படியே, சியுல் தன் சகோதரனோடு கோபமாயிருந்தான். சியுல் பெலவானாகி, ஒரு மனுஷ பெலத்திற்கு சமானமாய் பராக்கிரமம் அடைந்தான்; அவன் பகுத்தறிவதிலும் பலவானாயிருந்தான்.
9 ஆதலால் அவன் எப்பிராயீம் மலைக்கு வந்து, அவன் தன்னோடு இழுத்துச் சென்றவர்களுக்காக மலையிலிருந்து உருக்கி, இரும்பிலிருந்து பட்டயங்களைச் செய்தான்; அவன் அவர்களை பட்டயங்களால் ஆயுதந்தரிக்கச் செய்த பின்னர் அவன் நிகோரின் பட்டணத்திற்குத் திரும்பி தன் சகோதரனாகிய கோரிஹோருடன் யுத்தம் பண்ணினான். இதனாலே அவன் ராஜ்யத்தைப் பெற்று, அதை தன் தகப்பனாகிய கிப்புக்கு மீட்டுக் கொடுத்தான்.
10 இப்பொழுதும், சியுல் செய்த காரியத்தினிமித்தம், அவன் தகப்பன் அவனுக்கு ராஜ்யத்தை அருளினான்; ஆதலால் அவன் தன் தகப்பனுக்குப் பதிலாக ராஜரீகம் பண்ணலானான்.
11 அந்தப்படியே, அவன் நீதியாய் விசாரணை பண்ணினான்; அவன் தேசத்தின் மேல் எங்கும் தன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணினான். ஏனெனில் ஜனங்கள் மிகவும் அதிகமானார்கள்.
12 அந்தப்படியே, சியுலும் அநேக குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
13 கோரிஹோர் தான் செய்த அநேக பொல்லாப்புகளிலிருந்து மனந்திரும்பினான். ஆகவே சியுல் அவனுக்குத் தன் ராஜ்யத்திலே அதிகாரம் கொடுத்தான்.
14 அந்தப்படியே, கோரிஹோருக்கு அநேக குமாரரும், குமாரத்திகளும் இருந்தார்கள். கோரிஹோரின் குமாரருக்குள்ளே நோவா என்று அழைக்கப்பட்ட ஒருவன் இருந்தான்.
15 அந்தப்படியே, நோவா, ராஜாவாகிய சியுலுக்கு விரோதமாயும், தன் தகப்பனாகிய கோரிஹோருக்கு விரோதமாயும் கலகம்பண்ணி, தன் சகோதரனாகிய கோஹோரையும், தன் சகோதரர் அனைவரையும், ஜனத்தில் அநேகரையும் கூட்டிக்கொண்டு போனான்.
16 அவன் ராஜாவாகிய சியுலோடு யுத்தம் பண்ணினான். அதிலே அவன் தன் முதற் சுதந்திர பூமியைப் பெற்றான்; அத்தேசத்தின் அப்பகுதிக்கு அவன் ராஜாவானான்.
17 அந்தப்படியே, அவன் ராஜாவாகிய சியுலோடு மறுபடியும் யுத்தம் பண்ணினான்; அவன் ராஜாவாகிய சியுலை மாரானுக்கு சிறை பிடித்துத் தூக்கிச் சென்றான்.
18 அந்தப்படியே, அவன் அவனை மரணத்திற்குள்ளாக்க இருக்கும்போது, சியுலின் குமாரர்கள் நோவாவின் வீட்டினுள் இரவிலே நுழைந்து, அவனை வெட்டி, சிறைக் கதவை உடைத்துத் தங்கள் தகப்பனை வெளியே கொண்டுவந்து, அவனுடைய சொந்த ராஜ்யத்திலே, சிங்காசனத்தின் மேல் அவனை அமர்த்தினார்கள்.
19 ஆதலால் நோவாவின் குமாரர் அவனுக்குப் பதிலாக, அவன் ராஜ்யத்தைக் கட்டினார்கள்; இருப்பினும் அவர்கள் ராஜாவாகிய சியுலுக்கு மேலே எந்த வல்லமையையும் பெறவில்லை. ராஜாவாகிய சியுலின் ஆளுகைக்குக் கீழ் இருந்த ஜனங்கள் மிகவும் விருத்தியடைந்து பெலனடைந்தார்கள்.
20 தேசம் பிரிக்கப்பட்டது; சியுலின் ராஜ்யம் என்றும், நோவாவின் குமாரனாகிய கோஹோரின் ராஜ்யம் என்றும் இரண்டு ராஜ்யங்களிருந்தன.
21 நோவாவின் குமாரனாகிய கோஹோர் தன் ஜனங்களை சியுலோடு யுத்தம் பண்ணச் செய்தான். அதிலே சியுல் அவர்களை அடித்து கோஹோரை வெட்டிப்போட்டான்.
22 இப்பொழுது கோஹோருக்கு நிம்ரோத் என்று அழைக்கப்பட்ட குமாரன் ஒருவன் இருந்தான்; நிம்ரோத் சியுலுக்கு கோஹோரின் ராஜ்யத்தைக் கொடுத்து அவன் சியுலின் கண்களில் தயை பெற்றான்; ஆகையால் சியுல் அவன் மேல் பெரும் தயைகளை அருளினான். அவன் தன் இஷ்டப்படியெல்லாம் சியுலின் ராஜ்யத்திலே செய்தான்.
23 சியுலின் ராஜாங்கத்திலேயும், கர்த்தரிடத்திலிருந்து அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்குள்ளே வந்து, ஜனங்களுடைய துன்மார்க்கமும், விக்கிரக ஆராதனையும் தேசத்தின் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதென்றும், அவர்கள் மனந்திரும்பவில்லையெனில், அவர்கள் அழிக்கப்படுவார்களென்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.
24 அந்தப்படியே, ஜனங்கள் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் கலகம்பண்ணி, அவர்களைக் கேலி செய்தார்கள். அந்தப்படியே, தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுகிற எல்லாருக்கும் எதிராக சியுல் ராஜா நியாயம் விசாரித்தான்.
25 அவன் தேசம் முழுவதும் ஒரு சட்டத்தை நிறைவேற்றினான். அதன் மூலமாய் தீர்க்கதரிசிகள் தாங்கள் விரும்புகிற எவ்விடத்திற்கும் போகக்கூடிய அதிகாரத்தைப் பெற்றார்கள்; இப்படியாக ஜனங்கள் மனந்திரும்புதலுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
26 ஜனங்கள் தங்கள் அக்கிரமங்களிலிருந்தும், விக்கிரக ஆராதனைகளிலிருந்தும் மனந்திரும்பினபடியால், கர்த்தர் அவர்களைத் தப்புவித்தார். அவர்கள் மறுபடியும் தேசத்தில் விருத்தியடைய ஆரம்பித்தார்கள். அந்தப்படியே, சியுல் தன் வயதான காலத்தில் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
27 ஆதலால் அங்கே சியுலின் நாட்களில் யுத்தங்கள் இருக்கவில்லை. கர்த்தர் அவனுடைய பிதாக்களை அந்தப் பெரும் ஆழங்களைக் கடந்து, வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு கொண்டுவருவதற்காக அவர் செய்த அந்த மாபெரும் காரியங்களை அவன் நினைவுகூர்ந்தான்; ஆதலால் அவன் தன் நாட்கள் முழுவதிலும் நீதியாய் நியாயம் விசாரித்தான்.