வேதங்கள்
ஏத்தேர் 15


அதிகாரம் 15

லட்சக்கணக்கான யாரேதியர்கள் யுத்தத்தில் வெட்டப்படுதல் – சிஸ்ஸூம் கொரியாந்தமரும் மரணப்போருக்காக ஜனங்கள் யாவரையும் கூட்டுதல் – கர்த்தருடைய ஆவி அவர்களோடு இருப்பதிலிருந்து நின்றுபோகுதல் – யாரேதிய தேசம் முழுவதுமாய் அழிந்துபோகுதல் – கொரியாந்தமர் மாத்திரம் உயிரோடிருத்தல்.

1 அந்தப்படியே, கொரியாந்தமர் தன் காயங்களிலிருந்து குணமடைந்தபோது, ஏத்தேர் தன்னிடத்தில் பேசின வார்த்தைகளை நினைவுகூரத் துவங்கினான்.

2 அவன் தன் ஜனங்களில் ஏற்கனவே ஏறக்குறைய இருபது லட்சம் பேர் பட்டயத்தினால் கொல்லப்பட்டதைக் கண்டு அவன் தன் உள்ளத்தில் துக்கிக்கத் துவங்கினான்; ஆம், இருபது லட்சம் பராக்கிரமசாலிகள், அவர்களுடைய மனைவிகள், மற்றும் அவர்களுடைய பிள்ளைகளும் கொல்லப்பட்டார்கள்.

3 அவன் தான் செய்த பொல்லாப்பினிமித்தம் மனந்திரும்பத் துவங்கினான்; சகல தீர்க்கதரிசிகளின் வாயால் பேசப்பட்ட வார்த்தைகளை நினைவுகூரத்துவங்கினான். அவைகள் இதுவரைக்கும் பூரணமாய் நிறைவேறினது எனக் கண்டான்; அவன் ஆத்துமா துக்கித்து, ஆறுதலடைய மறுத்தது.

4 அந்தப்படியே, அவன் ஜனங்களைத் தப்புவிக்க வேண்டுமென்றும், ஜனங்களுடைய ஜீவன்களினிமித்தம் ராஜ்யத்தை துறப்பதென்றும் விரும்புவதாக, சிஸ்ஸூக்கு ஒரு நிருபத்தை எழுதினான்.

5 அந்தப்படியே, சிஸ் அவனுடைய இந்த நிருபத்தைப் பெற்றபோது, அவன் தன்னை ஒப்புக்கொடுத்தால், அவனைத் தன்னுடைய சொந்தப் பட்டயத்தினால் வெட்டி, ஜனங்களுடைய ஜீவன்களைத் தப்புவிப்பதாகத் தெரிவித்து, அவன் கொரியாந்தமருக்கு ஒரு நிருபத்தை எழுதினான்.

6 அந்தப்படியே, ஜனங்கள் தங்கள் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பவில்லை; கொரியாந்தமரின் ஜனங்கள் சிஸ்ஸின் ஜனங்களுக்கு விரோதமாக கோபத்தால் தூண்டப்பட்டார்கள். சிஸ்ஸின் ஜனங்கள் கொரியாந்தமரின் ஜனங்களுக்கு விரோதமாக கோபத்தால் தூண்டப்பட்டார்கள். ஆதலால் சிஸ்ஸின் ஜனங்கள் கொரியாந்தமரின் ஜனங்களோடு யுத்தம் தொடுத்தார்கள்.

7 கொரியாந்தமர் தான் வீழ்ந்து போக இருக்கிறோம் என்று கண்டபோது, அவன் மறுபடியும் சிஸ்ஸின் ஜனங்களுக்கு முன்பாக ஓடினான்.

8 அந்தப்படியே, அவன் ரிப்லியான்கும் தண்ணீர்களுக்கு வந்தான். அதற்கு பெரிய அல்லது அனைத்தையும் மிஞ்சத்தக்கது, என்று அர்த்தமாம்; ஆதலால் அவர்கள் இந்தத் தண்ணீர்களுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கூடாரங்களைப் போட்டார்கள்; சிஸ்ஸூம் தன் கூடாரங்களை அவர்களுக்கு அருகே போட்டான். ஆதலால் மறுநாளில் அவர்கள் யுத்தத்திற்கு வந்தார்கள்.

9 அந்தப்படியே, அவர்கள் மிகவும் கொடிய யுத்தத்தை நடத்தினார்கள். அதிலே கொரியாந்தமர் மறுபடியும் காயமடைந்து, இரத்த இழப்பினால் மயக்கமடைந்தான்.

10 அந்தப்படியே, கொரியாந்தமரின் சேனைகள் அவர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடச் செய்யும்படிக்கு, சிஸ்ஸின் சேனைகளைத் தாக்கினார்கள். அவர்கள் தெற்கே ஓடி, ஓகாத்து என்று அழைக்கப்பட்ட ஸ்தலத்திலே தங்கள் கூடாரங்களைப் போட்டார்கள்.

11 அந்தப்படியே, கொரியாந்தமரின் சேனை ராமா என்ற மலைக்கு அருகாமையில் பாளையமிறங்கினார்கள்; அதே மலையில் தான் என் தகப்பனாகிய மார்மன் கர்த்தருக்குள்ளே பரிசுத்தமான பதிவேடுகளை மறைத்து வைத்தார்.

12 அந்தப்படியே, அவர்கள் ஏத்தேரைத் தவிர தேசத்தின் மேல் இருந்த கொல்லப்பட்டுப் போகாத ஜனங்கள் யாவரையும் ஏகமாய்க் கூட்டினார்கள்.

13 அந்தப்படியே, ஏத்தேர் ஜனங்களுடைய நடப்பித்தல்கள் யாவையும் கண்டான்; கொரியாந்தமரைச் சார்ந்த ஜனங்கள் கொரியாந்தமரின் சேனையில் சேருவதையும், சிஸ்ஸைச் சார்ந்த ஜனங்கள் சிஸ்ஸின் சேனையில் சேருவதையும் அவன் கண்டான்.

14 ஆதலால் அவர்கள் தங்களால் பெறமுடிந்த பலம் யாவையும் பெறும்படிக்கு, தேசத்தின் மேலுள்ள சகல ஜனங்களையும் நான்கு வருஷகாலம் திரட்டிக்கொண்டிருந்தார்கள்.

15 அந்தப்படியே, அவர்கள் யாவரும் ஒவ்வொருவரும் தான் விரும்பின சேனையில் தன் மனைவிகளோடும், பிள்ளைகளோடும் சேர்க்கப்பட்டார்கள். புருஷரும், ஸ்தீரீகளும், பிள்ளைகளும், கேடயங்களையும், மார்புக்கவசங்களையும், தலைக்கவசங்களையும் பெற்று, யுத்தக்கருவிகளால் ஆயுதந்தரித்து, யுத்த முறையின்படி வஸ்திரமணிந்திருந்த அவர்கள், யுத்தம் பண்ண ஒருவருக்கு விரோதமாக ஒருவர் அணிவகுத்துப் போனார்கள்; அவர்கள் நாள் முழுவதும் யுத்தம் பண்ணியும் ஜெயம் பெறவில்லை.

16 அந்தப்படியே, இரவானபோது அவர்கள் களைத்துப்போய் தங்கள் பாளையத்திற்குத் திரும்பினார்கள்; அவர்கள் தங்கள் பாளயத்திற்குத் திரும்பின பின்பு, மாண்டுபோன தங்கள் ஜனங்களது இழப்பினிமித்தம் புலம்பி, துக்கித்தார்கள்; அவர்களுடைய கூக்குரல்களும், புலம்பல்களும், துக்கங்களும், மிகுதியாய் இருந்தபடியால், அவைகள் வெகுவாய் காற்றையும் கிழித்தன.

17 அந்தப்படியே, மறுநாளில் அவர்கள் மறுபடியும் யுத்தத்திற்கு போனார்கள். அந்த நாள் பெரிதும் பயங்கரமுமாய் இருந்தது; ஆயினும் அவர்கள் ஜெயம் பெறவில்லை. இரவு வந்தபோது, அவர்கள் மாண்டுபோன தங்கள் ஜனங்களின் இழப்பினிமித்தம், தங்கள் கூக்குரலாலும், தங்கள் புலம்பல்களாலும், தங்கள் துக்கங்களாலும் மறுபடியும் காற்றைக் கிழித்தார்கள்.

18 அந்தப்படியே, கொரியாந்தமர் தான் யுத்தத்துக்கு மறுபடியும் வரமாட்டானென்றும், அவனது ராஜ்யத்தை எடுத்துக்கொண்டு, ஜனங்களினுடைய ஜீவன்களைத் தப்புவிக்கவேண்டுமென்றும் வாஞ்சித்து, ஒரு நிருபத்தை மறுபடியும் சிஸ்ஸூக்கு எழுதினான்.

19 இதோ, கர்த்தருடைய ஆவி அவர்களுடன் கிரியை செய்வதிலிருந்து நின்றது. சாத்தான் ஜனங்களினுடைய இருதயங்களின் மேல் முழு வல்லமை கொண்டான்; ஏனெனில் அவர்கள் தாங்கள் அழிந்துபோகும்படியாக தங்கள் இருதயங்கள் கடினப்படவும், தங்கள் மனங்கள் குருடடையவும் ஒப்புக்கொடுத்தார்கள்; ஆதலால் அவர்கள் மறுபடியும் யுத்தத்திற்குப் போனார்கள்.

20 அந்தப்படியே, அவர்கள் அந்த நாள் முழுவதும் யுத்தம் பண்ணினார்கள், இரவு வந்தபோது அவர்கள் தங்கள் பட்டயங்களைப் பிடித்தவர்களாய் உறங்கினார்கள்.

21 மறுநாளிலும் அவர்கள் இரவுவரைக்கும் யுத்தம் பண்ணினார்கள்.

22 இரவு வந்தபோது அவர்கள் யாவரும், திராட்சை ரசத்தால் குடித்து வெறித்த மனுஷனைப்போல, கோபத்தால் வெறித்திருந்தார்கள்; அவர்கள் மறுபடியும் தங்கள் பட்டயங்களைப் பிடித்தவர்களாய் உறங்கினார்கள்.

23 மறுநாளில் அவர்கள் மறுபடியும் சண்டையிட்டார்கள்; இரவு வந்தபோது கொரியாந்தமரின் ஜனங்களில் ஐம்பத்து இரண்டுபேரும், சிஸ்ஸின் ஜனங்களில் அறுபத்தி ஒன்பது பேரும் தவிர, அவர்களில் மற்ற யாவரும் பட்டயத்தால் வீழ்ந்திருந்தார்கள்.

24 அந்தப்படியே, அவர்கள் அந்த இரவிலே தங்கள் பட்டயங்களைப் பிடித்தவர்களாய் உறங்கினார்கள். மறுநாளில் அவர்கள் மறுபடியும் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் அந்த நாள் முழுவதும் தங்கள் ஊக்கத்தோடும் தங்கள் பட்டயங்களோடும், தங்கள் கேடயங்களோடும் சண்டையிட்டார்கள்.

25 இரவு வந்தபோது அங்கே சிஸ்ஸின் ஜனங்கள் முப்பத்திரண்டு பேரும், கொரியாந்தமரின் ஜனங்கள் இருபத்தி ஏழுபேரும் இருந்தார்கள்.

26 அந்தப்படியே, அவர்கள் உண்டு, உறங்கி, நாளை மரிப்பதற்கென்று ஆயத்தம் பண்ணினார்கள். மனுஷருடைய பலத்தின்படி அவர்கள் பெரியவர்களாயும், பராக்கிரமசாலிகளாயும் இருந்தார்கள்.

27 அந்தப்படியே, அவர்கள் மூன்று மணிநேரமளவும் சண்டையிட்டார்கள். அவர்கள் இரத்த இழப்பினால் மயக்கம் அடைந்தார்கள்.

28 அந்தப்படியே, கொரியாந்தமரின் மனுஷர் நடக்கும் அளவிற்குப் போதுமான பெலத்தைப் பெற்ற பின்பு, தங்கள் ஜீவன்களைக் காக்க ஓட இருந்தார்கள்; ஆனால் இதோ, சிஸ்ஸூம், அவன் மனுஷரும் எழுந்தார்கள். தான் கொரியாந்தமரைக் கொல்லப்போவதாகவும், இல்லையேல் பட்டயத்தால் அழிந்து போகப்போவதாகவும் அவன் தன் உக்கிரத்திலே ஆணையிட்டான்.

29 ஆதலால் அவன் அவர்களைத் தொடர்ந்துபோய், மறுநாளில் அவர்களை மேற்கொண்டான். அவர்கள் மறுபடியும் பட்டயத்தால் சண்டையிட்டார்கள். அந்தப்படியே, கொரியாந்தமரையும், சிஸ்ஸையும் தவிர அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் விழுந்தார்கள். இதோ, சிஸ் இரத்த இழப்பினால் மயக்கமடைந்தான்.

30 அந்தப்படியே, கொரியாந்தமர் பட்டயத்தின் மேல் சாய்ந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்பு சிஸ்ஸின் தலையை வெட்டினான்.

31 அந்தப்படியே, அவன் சிஸ்ஸின் தலையை வெட்டின பின்பு, சிஸ் தன் கைகளை ஊன்றி எழுந்து விழுந்தான். அதன் பின்பு அவன் மூச்சுத் திணறி மரித்தான்.

32 அந்தப்படியே, கொரியாந்தமர் பூமியிலே விழுந்து ஜீவனற்றவனைப் போலானான்.

33 கர்த்தர் ஏத்தேரிடத்தில் பேசி, அவனைப் போ, என்றார். அவன் போய் கர்த்தருடைய வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறியதைக் கண்டான்; அவன் தன் பதிவேட்டை முடித்தான் (அதில் நூற்றில் ஒரு பகுதியைக்கூட நான் எழுதவில்லை) லிம்கியின் ஜனங்கள் அதைக் கண்டெடுக்கும் வண்ணம், அதை அவன் மறைத்து வைத்தான்.

34 ஏத்தேரால் எழுதப்பட்ட கடைசி வார்த்தைகள் இவைகளே: நான் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவேனேயாகில், நான் மறுரூபமாக்கப்பட கர்த்தர் சித்தமாயிருந்தாலோ, அல்லது மாம்சத்தில் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றிருந்தாலோ, அது பொருட்டல்ல. ஆமென்.

அச்சிடவும்