வேதங்கள்
ஏத்தேர் 12


அதிகாரம் 12

ஏத்தேர் தீர்க்கதரிசி ஜனங்களை தேவனில் விசுவாசிக்கும்படி புத்தி சொல்லுதல் – விசுவாசத்தினாலே செய்யப்பட்ட அதிசயங்களையும், அற்புதங்களையும் மரோனி சொல்லுதல் – விசுவாசம் யாரேதின் சகோதரன் இயேசு கிறிஸ்துவைக் காணும்படியாய் உதவிற்று – மனுஷர் தாழ்மையாய் இருக்கவே கர்த்தர் அவர்களுக்கு பெலவீனங்களைத் தருகிறார் – யாரேதின் சகோதரன் விசுவாசத்தினாலே சீரின் மலையை நகர்த்துதல் – இரட்சிப்புக்கு விசுவாசம், நம்பிக்கை, தயாளத்துவம் ஆகியவை முக்கியமானவை – மரோனி இயேசுவை முகமுகமாய்க் காணுதல்.

1 அந்தப்படியே, ஏத்தேரின் நாட்கள், கொரியாந்தமரின் நாட்களின்போது இருந்தன; கொரியாந்தமர் தேசமனைத்திற்கும் ராஜாவாக இருந்தான்.

2 ஏத்தேர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாய் இருந்தான். ஆதலால் ஏத்தேர் கொரியாந்தமரின் நாட்களில் வந்து, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமுரைக்கத் துவங்கினான். ஏனெனில் அவனுக்குள் இருந்த கர்த்தருடைய ஆவியினிமித்தம் அவனைத் தடைபண்ணக்கூடாமல் போனது.

3 அவன் காலையிலிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் மனந்திரும்புதலுக்கேதுவாய் தேவனில் விசுவாசிக்கவும், இல்லையேல் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும், ஜனங்களுக்கு உணர்த்தி, சகலமும் விசுவாசத்தினால் நிறைவேறினது, என்று அவர்களிடத்தில் சொன்னான்.

4 ஆகவே தேவனில் விசுவாசிக்கிறவன் எவனும், தேவனுடைய வலது பாரிசத்தில், ஆம், ஒரு மேன்மையான உலகத்தை நிச்சயமாய் நம்பியிருப்பான். அந்த நம்பிக்கையோ விசுவாசத்தினால் வந்து, மனுஷ ஆத்துமாக்களுக்கு ஒரு நங்கூரமாகிறது, அது அவர்களை உறுதியுள்ளவர்களாயும், அசைவில்லாதவர்களாயும், நற்கிரியைகளில் எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருக்கப்பண்ணி, தேவனை மகிமைப்படுத்தும்படியாக அவர்களை நடத்திச் செல்லுகிறது.

5 அந்தப்படியே, ஏத்தேர் பெரிதும் அற்புதமுமானவைகளை ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனமுரைத்தான். அவர்களோ அவைகளைக் காணாததினிமித்தம் விசுவாசிக்கவில்லை.

6 இப்பொழுதும் மரோனியாகிய நான் இவைகளைக் குறித்து சற்று உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். காணப்படாதவை நம்பப்படுவதே விசுவாசம், என்று நான் உலகுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் காணாததினிமித்தம் வாக்குவாதம் பண்ணாதிருங்கள். ஏனெனில் உங்கள் விசுவாசம் பரிட்சிக்கப்படும்வரைக்கும் நீங்கள் சாட்சியைப் பெறுவதில்லை.

7 கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு, விசுவாசத்தினிமித்தம் அவர் தம்மையே நம்முடைய பிதாக்களுக்கு, காண்பித்தார்; அவர்கள் அவரில் விசுவாசம் வைக்கும்வரைக்கும் அவர் தம்மை அவர்களுக்குக் காண்பிக்கவில்லை; ஆதலால், சிலர் அவரில் விசுவாசம் வைத்திருக்கவேண்டியது அவசியம். அவர் தம்மை உலகுக்குக் காண்பிக்கவில்லை.

8 மனுஷருடைய விசுவாசத்தினிமித்தம் அவர் தம்மையே உலகுக்குக் காண்பித்து, பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தி, மற்றவர்கள் பரலோக ஈவின் பங்காளிகளாய் இருக்கும்படிக்கும், தாங்கள் கண்டிராத அந்தக் காரியங்களில் நம்பிக்கை வைக்கும்படிக்கும் ஓர் வழியை ஆயத்தப்படுத்தினார்.

9 ஆதலால், உங்களுக்கு விசுவாசமிருந்தால் மாத்திரம், நீங்கள் நம்பிக்கை அடைந்து, ஈவின் பங்காளிகளாய் இருப்பீர்கள்.

10 இதோ, விசுவாசத்தினாலே பூர்வகாலத்தினர் தேவனுடைய பரிசுத்த முறைமையின்படி அழைக்கப்பட்டிருந்தார்கள்.

11 ஆதலால், விசுவாசத்தினாலே மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. ஆனால் தம்முடைய குமாரனென்னும் ஈவினால், தேவன் ஒரு அதிமேன்மையுள்ள வழியை ஆயத்தப்படுத்தினார், விசுவாசத்தினாலே அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

12 மனுப்புத்திரருக்குள்ளே விசுவாசம் இல்லையென்றால் தேவன் அவர்கள் மத்தியிலே எந்த அற்புதத்தையும் செய்யமுடியாது. ஆதலால் அவர்களுக்குள் விசுவாசம் உண்டாகும் வரைக்கும் அவர் தம்மைக் காண்பிக்கவில்லை.

13 இதோ, ஆல்மா மற்றும் அமுலேக்கின் விசுவாசமே அந்த சிறைச்சாலையை பூமியில் விழப்பண்ணியது.

14 இதோ, நேபி மற்றும் லேகியின் விசுவாசமே, லாமானியர் அக்கினியாலும், பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் பெறத்தக்கதான மாற்றத்தை அவர்கள் மேல் கொண்டுவந்தது.

15 இதோ, அம்மோன் மற்றும் அவனது சகோதரரின் விசுவாசம், லாமானியருக்குள் ஒரு பெரும் அற்புதத்தை சம்பவிக்கப் பண்ணினது.

16 ஆம், கிறிஸ்துவுக்கு முன்னிருந்தவர்களும், பின்னிருந்தவர்களுமான அற்புதத்தைச் செய்த யாவரும் அவைகளை விசுவாசத்தினாலே செய்தார்கள்.

17 அந்த மூன்று சீஷர்களும் விசுவாசத்தினிமித்தமே, தாங்கள் மரணத்தை ருசி பார்ப்பதில்லையென்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டார்கள்; அவர்கள் தங்களுக்குள் விசுவாசம் உண்டாகும் வரைக்கும் அந்த வாக்குத்தத்தத்தைப் பெறவில்லை.

18 அவர்களுக்குள் விசுவாசம் உண்டாகும் வரை எப்பொழுதும் எந்த அற்புதமும் செய்யப்படவில்லை; ஆதலால் அவர்கள் முதலில் தேவகுமாரனை விசுவாசித்தார்கள்.

19 கிறிஸ்து வருவதற்கு முன்கூட்டியே, திரையினுள் இருந்த தடுக்கப்படமுடியாத, மிகவும் விசுவாசமுடைய அநேகர் இருந்தார்கள், தங்கள் விசுவாசக்கண்ணால் கண்டவைகளை தங்களின் கண்களால் நிச்சயமாகவே கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

20 இதோ, இவர்களில் ஒருவன் யாரேதின் சகோதரன் என்று இந்தப் பதிவேட்டில் நாம் பார்க்கிறோம்; தேவனில் அவன் விசுவாசம் மிகப் பெரிதாயிருந்ததாலே, தேவன் தம்முடைய விரலை நீட்டினபோது, அவன் விசுவாசத்தால் பெற்ற வார்த்தையாகிய, அவன் அவரிடத்தில் பேசின வார்த்தையினிமித்தமே, அதை அவர் யாரேதின் சகோதரனின் பார்வையிலிருந்து மறைக்க முடியவில்லை.

21 யாரேதின் சகோதரன் கர்த்தருடைய விரலைக் கண்டபிறகு, விசுவாசத்தால் யாரேதின் சகோதரன் பெற்ற வாக்குத்தத்தத்தினிமித்தம், கர்த்தர் அவனுடைய பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியவில்லை; ஆதலால் திரையினுள் இனியும் வைக்கப்பட முடியாததால், அவர் அவனுக்குச் சகலத்தையும் காண்பித்தார்.

22 இக்காரியங்கள் தங்களுடைய சகோதரருக்கு புறஜாதியார் மூலமாக வருமென்ற வாக்குத்தத்தத்தை என் பிதாக்கள் விசுவாசத்தினாலே பெற்றுக் கொண்டார்கள்; ஆதலால், ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

23 நான் அவரிடத்தில், கர்த்தாவே, எழுதுவதில் எங்களுக்குள்ள பெலவீனத்தினிமித்தம் புறஜாதியார் இக்காரியங்களை பரியாசம் பண்ணுவார்கள்; ஏனெனில் கர்த்தாவே நீர் எங்களை விசுவாசத்தினிமித்தம் வார்த்தையில் வல்லவர்களாக்கினீர்; ஆனால் எழுதுவதில் எங்களை நீர் வல்லவர்களாக்கவில்லை; ஏனெனில் இந்த எல்லா ஜனத்திற்கும் நீர் கொடுத்த பரிசுத்த ஆவியானவராலே, இவர்களை நீர் அதிகமாக பேசும்படிச் செய்திருக்கிறீர்.

24 எங்களுடைய செம்மையற்ற கைகளினிமித்தம் கொஞ்சம் மாத்திரம் நாங்கள் எழுதும்படி நீர் செய்திருக்கிறீர். இதோ, நீர் எங்களை யாரேதின் சகோதரனைப்போல எழுதுவதில் வல்லவர்களாக்கவில்லை. ஏனெனில் அவன் எழுதின காரியங்களை வாசிக்கும்போது, மனுஷனை மேற்கொள்ளும் அளவுக்கு அவனை உம்மைப்போலவே பெலவானாக்கினீர்.

25 நாங்கள் எங்களுடைய வார்த்தைகளை எழுதமுடியாத அளவுக்கு, நீர் அவைகளை வல்லமையானதும், மகத்துவமானதுமாக்கினீர்; ஆதலால் நாங்கள் எழுதும்போது எங்களுடைய பெலவீனத்தைக்கண்டு, நாங்கள் வார்த்தைகளை அமைப்பதிலே தள்ளாடிப்போகிறோம்; புறஜாதியார் எங்களுடைய வார்த்தைகளைப் பரியாசம் பண்ணுவார்களோ என்று, நான் அஞ்சுகிறேன்.

26 நான் இதைச் சொன்னபோது, கர்த்தர் என்னை நோக்கி: மூடர் பரியாசம் பண்ணுவார்கள்; ஆனால் அவர்கள் துக்கிப்பார்கள்; என் கிருபை சாந்த குணமுள்ளவர்களுக்குப் போதுமானதாயிருக்கிறது. அவர்கள் உங்கள் பெலவீனத்தினிமித்தம் அனுகூலம் கொள்வதில்லை.

27 மனுஷர் என்னிடத்தில் வந்தால், நான் அவர்களுக்கு அவர்களுடைய பெலவீனத்தைக் காண்பிப்பேன், மனுஷர் தாழ்மையாய் இருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு பெலவீனத்தைக் கொடுக்கிறேன். எனக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கிற அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது. அவர்கள் எனக்கு முன்பாகத் தாழ்மையாயிருந்து என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால், நான் அவர்களுக்கு பெலவீனமுள்ளவைகளைப் பெலமுள்ளவைகளாக்குவேன்.

28 இதோ, நான் புறஜாதியாருக்கு அவர்களுடைய பெலவீனத்தைக் காண்பிப்பேன். விசுவாசம், நம்பிக்கை, தயாளத்துவம் ஆகியவை, சகல நீதிக்கும் ஊற்றாயிருக்கிற என்னிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று, நான் அவர்களுக்குக் காண்பிப்பேன்.

29 மரோனியாகிய நான் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தேற்றப்பட்டுச் சொன்னதாவது, கர்த்தாவே உமது நீதி விளங்குவதாக. ஏனெனில் மனுபுத்திரரிடம் அவர்களுடைய விசுவாசத்தின்படியே கிரியை செய்கிறீர், என்று நான் அறிவேன்.

30 யாரேதின் சகோதரன் சீரின் மலையை நோக்கி, பெயர்ந்து போ என்றான். அது பெயர்ந்து போயிற்று. அவனுக்கு விசுவாசமில்லாதிருந்தால் அது பெயர்ந்து போயிருக்காது; ஆதலால் மனுஷருக்கு விசுவாசம் உண்டான பிறகே நீர் கிரியை செய்கிறீர்.

31 ஏனெனில் இவ்விதமாய் தானே நீர் உம்மையே உம்முடைய சீஷர்களுக்குக் காண்பித்தீர்; ஏனெனில் அவர்களுக்கு விசுவாசம் உண்டாகி, உம்முடைய நாமத்தினாலே பேசின பின்னரே, நீர் உம்மைப் பெரும் வல்லமையோடு அவர்களுக்குக் காண்பித்தீர்.

32 மனுஷனுக்கு மிக அதிகமான நம்பிக்கை உண்டாயிருக்கும் பொருட்டு, என் பிதாவினுடைய வாசஸ்தலங்களுக்குள்ளே மனுஷனுக்கான ஒரு வீட்டை ஆயத்தப்படுத்தினேன் என்று நீர் சொன்னதை நினைவுகூருகிறேன்; ஆதலால் மனுஷன் நம்ப வேண்டும்; இல்லாவிடில் அவன் நீர் ஆயத்தம்பண்ணின இடத்தில் சுதந்திரத்தைப் பெற முடியாது.

33 மனுபுத்திரருக்கு ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணும் பொருட்டு, அதை மறுபடியும் நீர் எடுத்துக்கொள்ளும்படியாக, உலகத்திற்காக உமது ஜீவனையே கொடுக்குமளவுக்கு நீர் உலகத்தில் அன்புகூர்ந்தீரென்றும், நீர் சொன்னதை நான் மறுபடியுமாய் நினைவுகூர்கிறேன்.

34 இப்பொழுதும் நீர் மனுபுத்திரருக்காக வைத்திருக்கும் இந்த அன்பே தயாளத்துவமென்று நான் அறிகிறேன்; ஆதலால் மனுபுத்திரருக்குத் தயாளத்துவம் இல்லாதிருந்தால், நீர் உம்முடைய பிதாவின் வாசஸ்தலங்களில் ஆயத்தப்படுத்தியுள்ள இடத்தை அவர்கள் சுதந்தரிக்க முடியாது.

35 ஆதலால் எங்களுடைய பெலவீனத்தினிமித்தம், புறஜாதியாருக்கு தயாளத்துவம் இல்லாதிருந்தால், நீர் அவர்களை விசாரித்து, ஆம், அவர்கள் பெற்றுக்கொண்ட அவர்களுடைய தாலந்தை எடுத்து, ஏராளமாய் வைத்திருப்பவர்களிடம் கொடுப்பேன் என்று, நீர் சொன்னதை இந்தக் காரியத்தினிமித்தம் நான் அறிவேன்.

36 அந்தப்படியே, புறஜாதியார் தயாளத்துவத்தைப் பெற்றிருக்கும்படி, கர்த்தர் அவர்களுக்கு கிருபையைத் தந்தருளவேண்டுமென்று நான் அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணினேன்.

37 அந்தப்படியே, கர்த்தர் என்னை நோக்கி: அவர்களுக்கு தயாளத்துவம் இல்லையெனில், அது எனக்குப் பொருட்டல்ல. நீ விசுவாசமுள்ளவனாயிருந்தாய். ஆதலால் உன் வஸ்திரங்கள் சுத்தமாக்கப்படும். நீ உனது பெலவீனத்தைக் கண்டதினிமித்தம், என் பிதாவின் வாசஸ்தலங்களிலே நான் ஆயத்தப்படுத்தியுள்ள இடத்தில் உட்காருமளவுக்கு, நீ பெலப்படுத்தப்படுவாய்.

38 இப்பொழுதும் மரோனியாகிய நான் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக புறஜாதியாரையும் ஆம், நான் நேசிக்கிற என் சகோதரரையும் சந்திக்கும்வரைக்கும் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். என் வஸ்திரங்கள் உங்கள் இரத்தத்தினால் கறைபடவில்லை என்று அங்கே சகல மனுஷரும் அறிவார்கள்.

39 அப்பொழுது நான் இயேசுவைக் கண்டேனென்றும், அவர் முகமுகமாய் என்னுடன் பேசினாரென்றும், ஒரு மனுஷன் மற்றவனிடத்தில் என்னுடைய பாஷையில் பேசுவதைப்போல, அவர் இவைகளை என்னிடத்தில் தெளிவாய்த் தாழ்மையோடு பேசினாரென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

40 எழுதுவதில் எனக்குள்ள என் பெலவீனத்தினிமித்தம் நான் சிலவற்றை மாத்திரமே எழுதியிருக்கிறேன்.

41 இப்பொழுதும், பிதாவாகிய தேவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மற்றும் அவர்களைக் குறித்து சாட்சி கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரின் கிருபையும் உங்களில் என்றென்றுமாயும் நிலைத்திருக்கும்படி, தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் எழுதியிருக்கிற இந்த இயேசுவை நீங்கள் தேடவேண்டுமென்று உங்களுக்கு பரிந்துரைக்கிறேன், ஆமென்.