வேதங்கள்
ஏலமன் 10


அதிகாரம் 10

கர்த்தர் நேபிக்கு முத்திரிக்கும் வல்லமையைக் கொடுத்தல் – அவனுக்கு பூமியிலும் பரலோகத்திலும் கட்டவும் கட்டவிழ்க்கவும் வல்லமை கொடுக்கப்படுதல் – ஜனங்களை மனந்திரும்ப அல்லது அழிந்து போக அவன் கட்டளையிடுதல் – ஆவியானவர் அவனை ஒரு கூட்டத்திலிருந்து மறுகூட்டத்திற்கு கொண்டுபோகுதல். ஏறக்குறைய கி.மு. 21–20.

1 அந்தப்படியே, ஜனங்களுக்குள் பிரிவினை உண்டாகி, அவர்கள் அங்கும் இங்குமாக பிரிந்துபோய், அவர்கள் நடுவே நின்றுகொண்டிருந்த நேபியை தனியே விட்டுவிட்டு தங்கள் வழிகளிலே போனார்கள்.

2 அந்தப்படியே, கர்த்தர் தனக்கு காண்பித்தவற்றை யோசித்துக்கொண்டே நேபி தன் சொந்த வீட்டுக்குப் போகிற தன் வழியிலே போனான்.

3 அந்தப்படியே, அவன் நேபியின் ஜனங்களின் துன்மார்க்கத்தினாலும், அவர்களுடைய காரிருளான இரகசியக் கிரியைகளினாலும், அவர்களுடைய கொலைகளினாலும், அவர்களுடைய களவுகளினாலும் மற்றும் எல்லாவிதமான அக்கிரமங்களினாலும் துக்கித்து அவன் அந்தப்படியே, யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப்படியே, அவன் இப்படியாக தன் இருதயத்தில் யோசித்துக் கொண்டிருக்கும்போது, இதோ ஒரு சத்தம் அவனுக்கு வந்து:

4 நேபியே, நீ செய்தவைகளினிமித்தம் நீ பாக்கியவானாயிருக்கிறாய்; நான் இந்த ஜனங்களுக்காக உன்னிடம் கொடுத்த வார்த்தையை நீ சோர்ந்து போகாமல் அறிவித்தாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன். நீ அவர்களுக்குப் பயப்படாமல், உன் சொந்த ஜீவனைக் குறித்துக் கவலைப்படாமல், என் சித்தத்தையும் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் வகை தேடினாய்.

5 இப்பொழுதும் இதை நீ சோர்வில்லாமல் இப்படி செய்ததனிமித்தம், இதோ, நான் உன்னை என்றென்றுமாய் ஆசீர்வதிப்பேன்; நான் உன்னை வார்த்தையிலும் செயலிலுமாக, விசுவாசத்திலும் கிரியைகளிலுமாக பலவானாக்குவேன்; ஆம், நீ என் சித்தத்திற்கு முரணானதைக் கேட்காததினிமித்தம், உன் வார்த்தையின்படி சகலமும் உனக்குச் செய்யப்படும்.

6 இதோ, நேபியே, நானே தேவன். இதோ, நீ இந்த ஜனத்தின் மேல் வல்லமை கொண்டிருந்து, இந்த ஜனத்தின் துன்மார்க்கத்திற்குத் தக்கதாக, பூமியை பஞ்சத்தாலும், வாதையினாலும், அழிவினாலும் அடிப்பாய் என்று, என் தூதர்களின் முன்பாக இதை உனக்கு அறிவிக்கிறேன்.

7 இதோ, நீ பூமியில் முத்திரிக்கும் எதுவும் பரலோகத்திலும் முத்திரிக்கப்படும்படியாகவும், நீ பூமியில் கட்டவிழ்க்கிற எதுவும் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்படியான வல்லமையை உனக்குத் தருவேன்; இப்படியாக, நீ இந்த ஜனங்களுக்குள்ளே வல்லமை பெற்றிருப்பாய்.

8 இப்படியாக, நீ இந்த ஆலயத்தைப் பார்த்து, அது இரண்டாய்ப் பிளப்பதாக என்பாயாகில், அது அப்படியே சம்பவிக்கும்.

9 நீ இந்த மலையை நோக்கி, நீ தாழ்ந்து சமபூமியாகு என்பாயாகில், அது அப்படியே சம்பவிக்கும்.

10 இதோ, தேவன் இந்த ஜனத்தை அடிப்பாராக என்று நீ சொல்லுவாயாகில், அது அப்படியே சம்பவிக்கும்.

11 இப்பொழுதும் இதோ, நீ போய், நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அழிவுக்குள்ளாகும் வரைக்குமாய் அடிக்கப்படுவீர்களென்று, சர்வ வல்லவராகிய, தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார், என இந்த ஜனத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று, உனக்கு நான் கட்டளையிடுகிறேன்.

12 இதோ, இப்பொழுதும், அந்தப்படியே, கர்த்தர் இந்த வார்த்தைகளை நேபியினிடத்தில் பேசினபோது, அவன் நின்று தன்னுடைய சொந்த வீட்டுக்குப் போகாமல், தேசத்தின்மேல் பரவிக்கிடக்கிற திரளானோரிடத்தில் திரும்பி, அவர்கள் மனந்திரும்பாவிடில், அவர்களுடைய அழிவைக் குறித்து, கர்த்தர் தன்னிடம் பேசின வார்த்தையை அவர்களுக்கு அறிவிக்கத் துவங்கினான்.

13 இப்பொழுதும் இதோ, நேபி, பிரதான நியாயாதிபதியின் மரணத்தைக் குறித்து அவர்களுக்குச் சொன்னதில் செய்த, மகா அற்புதத்தையும் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.

14 ஆதலால் நேபி அவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை அறிவித்து சொன்னதாவது, கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில், நீங்கள் மனந்திரும்பாவிடில் அழிவிற்குள்ளாக போகுமட்டும் அடிக்கப்படுவீர்கள்.

15 அந்தப்படியே, நேபி அவர்களுக்கு வார்த்தைகளை அறிவித்தபோது இதோ, அவர்கள் இன்னும் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி அவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை; ஆதலால், அவர்கள் அவனுக்கு விரோதமாய் நிந்தித்து, அவனைச் சிறைச்சாலையினுள் தள்ளத் தங்கள் கைகளை அவன் மேல் போட வகை தேடினார்கள்.

16 ஆனால் இதோ, தேவ வல்லமை அவனோடுகூட இருந்தது. அவனை சிறைச்சாலையினுள் தள்ள அவர்களால் அவனைப் பிடிக்கக்கூடாமற் போயிற்று. ஏனெனில் அவன் ஆவியானவரால் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்கள் நடுவிலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டான்.

17 அந்தப்படியே, அவன் அவர்கள் யாவருக்கும் அறிவித்து, அல்லது ஜனங்கள் எல்லோருக்குள்ளும் அது அனுப்பப்படுமளவுக்கு தேவ வார்த்தையைப் பிரசங்கித்து, இப்படியாக ஆவியானவரால் ஒரு கூட்டத்திலிருந்து மற்றொரு கூட்டத்திற்குப் போனான்.

18 அந்தப்படியே, அவர்கள் அவனுடைய வார்த்தையைக் கேட்கவில்லை; அவர்கள் தங்களுக்குள்ளேயே பிரிந்துபோய் ஒருவரையொருவர் பட்டயத்தால் வெட்டத் துவங்குமளவுக்கு அங்கே பிணக்குகள் எழத் துவங்கின.

19 இப்படியாக, நேபியின் ஜனங்களின்மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் எழுபத்தி ஒன்றாம் வருஷமும் முடிவடைந்தது.