வேதங்கள்
ஏலமன் 8


அதிகாரம் 8

கெட்ட நியாயாதிபதிகள், நேபிக்கு விரோதமாய் ஜனங்களை தூண்டிவிட வகைதேடுதல் – ஆபிரகாம், மோசே, சீனஸ், சீனாக், இசையாஸ், ஏசாயா, எரேமியா, லேகி மற்றும் நேபி ஆகியோர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகன்றனர் – பிரதான நியாயாதிபதியின் கொலையைப்பற்றி நேபி உணர்த்தப்பட்டு அறிவித்தல். ஏறக்குறைய கி.மு. 23–21.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நேபி இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இதோ, அங்கிருந்த மனுஷர்களில் நியாயாதிபதிகளாயும், காதியாந்தனின் இரகசியக் கூட்டத்தைச் சார்ந்தவராயும் இருந்தவர்கள் இருந்தபடியால், அவர்கள் கோபமடைந்து அவனுக்கு விரோதமாய் ஜனங்களிடத்தில் கூக்குரலிட்டு, இவன் செய்த குற்றத்தினிமித்தம் இவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும்படி இவனை ஏன் நீங்கள் பிடித்துக் கொண்டு போகக்கூடாது என்றார்கள்.

2 இம்மனுஷன் இந்த ஜனத்திற்கும், நம்முடைய சட்டங்களுக்கும் விரோதமாக நிந்திக்கிறதையும் ஏன் நீங்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருக்கிறீர்கள்?

3 ஏனெனில் இதோ, நேபி அவர்களிடம் அவர்களுடைய சட்டங்களின் சீர்கேட்டைக் குறித்துப் பேசினான்; ஆம், நேபி பேசின அநேகக் காரியங்கள் எழுதப்படமுடியாது; தேவ கட்டளைகளுக்கு விரோதமாக அவன் ஒன்றும் பேசவில்லை.

4 அவன் அந்த நியாயாதிபதிகளின் காரிருளின் இரகசியக் கிரியைகளைக் குறித்து அவர்களிடம் தெளிவாய் சொன்னதினிமித்தம் அவர்கள் அவன் மேல் கோபம் கொண்டார்கள்; ஆயினும், ஜனங்கள் ஒருவேளை தங்களுக்கு விரோதமாகக் கூக்குரல் இடக்கூடும் என்று அஞ்சி, அவர்கள் அவன் மேல் தங்கள் சொந்த கைகளைப் போடத் துணியவில்லை.

5 ஆதலால் அவர்கள் ஜனங்களை நோக்கி: இம்மனுஷன் நம்மை நிந்திக்கும்படி ஏன் விட்டு வைக்கிறீர்கள்? ஏனெனில் இதோ, இந்த ஜனங்களெல்லோரும் அழிவுக்குள்ளாகப்படுவார்களென்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறான்; ஆம், இம்மகா பட்டணங்களில் நமக்கு இடம் இல்லாமற்போகும்படியாய், அவைகள் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும், என்கிறான்.

6 இப்பொழுதும் அது சாத்தியமில்லை என்று நமக்குத் தெரியும். ஏனெனில், இதோ, நாம் வல்லமையுடையவர்கள். நம்முடைய நகரங்கள் சிறந்தவை. ஆதலால் நம்முடைய சத்துருக்கள் நம்மேல் அதிகாரம் பெற முடியாது.

7 அந்தப்படியே, அவர்கள் இப்படியாக ஜனங்களை நேபிக்கு விரோதமாக தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளே பிணக்குகளை விளைவித்தார்கள்; ஏனெனில் சிலர், இம்மனுஷனை விட்டுவிடுங்கள், அவன் நல்லவன். அவன் சொல்லுகிற அந்தக் காரியங்கள், நாம் மனந்திரும்பாவிடில் மெய்யாகவே நிறைவேறும், என்று கூக்குரலிட்டார்கள்

8 ஆம், இதோ, அவன் நமக்குச் சாட்சி கொடுத்தபடியே நியாயத்தீர்ப்புகள் யாவும் நம்மேல் வரும்; ஏனெனில் நம்முடைய அக்கிரமங்களைக் குறித்து அவன் சரியானதையே நமக்கு சாட்சி பகர்ந்திருக்கிறான். இதோ அவைகள் அநேகமாயிருக்கிறது. அவன் நம்முடைய அக்கிரமங்களைக் குறித்து அறிந்திருக்கிறதைப் போலவே நமக்கு சம்பவிக்கப்போகிற எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறான்;

9 ஆம், இதோ, அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இல்லாமலிருந்தால், இக்காரியங்களைக் குறித்து அவன் சொல்லியிருக்கமாட்டான்.

10 அந்தப்படியே, நேபியை அழிக்க வகைதேடின அந்த ஜனங்கள் பயத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு, அவன் மேல் தங்கள் கைகளைப்போடத் துணியவில்லை; ஆகவே தான் சிலரின் கண்களில் தயை பெற்றாகிவிட்டது, அவர்களில் மீதியானோர் பயந்தார்கள், எனக்கண்டு அவர்களிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தான்.

11 ஆதலால் அவன் அவர்களிடம் அதிகம் பேசும்படி நெருக்கப்பட்டவனாய், சொன்னான், இதோ, என் சகோதரரே, சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களை அடிக்க மோசே என்ற ஒரு மனுஷனுக்கு தேவன் வல்லமை கொடுத்தாரென்றும், அவை அங்கேயும், இங்கேயுமாக பிரிந்து நின்றதினிமித்தம் நம்முடைய பிதாக்களாகிய இஸ்ரவேலர் உலர்ந்த பூமியின் மேல் நடந்தார்களென்றும், தண்ணீர்கள் எகிப்தியரின் சேனைகளின் மேல் மூடி, அவர்களை விழுங்கிப்போட்டதென்றும் நீங்கள் வாசிக்கவில்லையா?

12 இப்பொழுதும் இதோ, தேவன் அம்மனுஷனுக்கு இப்பேர்ப்பட்ட வல்லமையைத் தந்தாரெனில், நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே தர்க்கித்து நீங்கள் மனந்திரும்பவில்லையெனில், உங்கள்மேல் வருகிற தீர்ப்புகளைக் குறித்து நான் அறியும்படிக்கு அவர் எனக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்று வாக்குவாதம் பண்ணவேண்டும்?

13 ஆனால் இதோ, நீங்கள் என் வார்த்தைகளை மட்டுமல்ல, நம்முடைய பிதாக்களால் பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும், தனக்கு மிகுந்த வல்லமை அருளப்பட்டிருந்தவனாகிய மோசே என்ற இந்த மனுஷன் பேசிய வார்த்தைகளான, ஆம், மேசியாவின் வருகையைக் குறித்து அவன் பேசின வார்த்தைகளையும் மறுக்கிறீர்கள்.

14 ஆம், அவன் தேவ குமாரன் வருவார் என்று சாட்சி பகரவில்லையா? அவன் வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியதைப் போலவே, வரப்போகிற அவரும் உயர்த்தப்படுவார்.

15 அந்த சர்ப்பத்தைப் பார்த்த அநேகர் பிழைத்ததைப் போலவே, விசுவாசத்தோடும், நொறுங்குண்ட ஆவியோடும், தேவ குமாரனைக் காண்கிற அநேகரும் நித்தியமான ஜீவன் பெறத்தக்கதாகப் பிழைத்திருப்பார்கள்.

16 இப்பொழுதும், இதோ, இவைகளைக் குறித்து மோசே மாத்திரமல்ல, அவன் நாட்கள் தொடங்கி, ஆபிரகாம் வரை, இருந்த சகல பரிசுத்த தீர்க்கதரிசிகளும் சாட்சி பகர்ந்தார்கள்.

17 ஆம், இதோ, ஆபிரகாம் அவருடைய வருகையைக் கண்டு, ஆனந்தத்தால் நிரப்பப்பட்டு களிகூர்ந்தான்.

18 ஆம், இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவைகளை ஆபிரகாம் மாத்திரம் அல்ல, ஆம், அவருடைய குமாரனின் முறைமையின்படி அழைக்கப்பட்டவர்களும் கூட, தேவ முறைமையின்படியே அழைக்கப்பட்ட, ஆபிரகாமின் நாட்களுக்கு முன்பு இருந்த அநேகர் அறிந்திருந்தார்கள். ஜனங்களுக்கு மீட்பு வரவேண்டுமென்று அவருடைய வருகைக்கு அநேக ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவேண்டுமென்றே இது இப்படி செய்யப்பட்டது.

19 இப்பொழுதும் ஆபிரகாமின் நாட்கள் தொடங்கி, அநேக தீர்க்கதரிசிகள் இவைகளைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்களென்றும், நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்; ஆம், இதோ, தீர்க்கதரிசி சீனஸ் தைரியமாய் சாட்சி கொடுத்தான்; அதற்காக அவன் கொல்லப்பட்டான்.

20 இதோ, சீனாக்கும், இசையாசும், ஏசாயாவும், எரேமியாவும் (எரேமியா, எருசலேம் அழிவைக் குறித்து சாட்சி கொடுத்த அதே தீர்க்கதரிசி) இப்பொழுதும் எரேமியாவின் வார்த்தைகளின்படி எருசலேம் அழிக்கப்பட்டதென்று நாம் அறிகிறோம். அப்படியானால் அவனுடைய தீர்க்கதரிசனத்தின்படி தேவ குமாரன் ஏன் வரவில்லை?

21 இப்பொழுதும், எருசலேம் அழிக்கப்பட்டதா என்று நீங்கள் தர்க்கம் பண்ணுவீர்களோ? மூலெக்கைத் தவிர செதேக்கியாவின் குமாரர்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லுவீரோ? ஆம், நம்மோடே செதேக்கியாவின் சந்ததியார் இருக்கிறார்களென்றும், அவர்கள் எருசலேம் தேசத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள் என்றும் நீங்கள் காணவில்லையா? இதோ, இவை மாத்திரமல்ல.

22 நம்முடைய பிதாவான லேகி இவைகளை சாட்சி கொடுத்ததனிமித்தம் எருசலேமிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். நேபியும், இக்காலம் வரைக்குமாய் உள்ள நம்முடைய பிதாக்களில் ஏறக்குறைய அனைவரும், இவைகளை சாட்சி பகர்ந்திருக்கிறார்கள் ஆம், அவர்கள் கிறிஸ்துவின் வருகையைக் குறித்து சாட்சி கொடுத்து வரப்போகிற அவருடைய நாளை எதிர்நோக்கி களிகூர்ந்தும் இருக்கிறார்கள்.

23 இதோ, அவரே தேவன். அவர் அவர்களோடு இருக்கிறார். அவர்கள் அவரால் மீட்கப்படும்பொருட்டு, அவர் அவர்களுக்கு தம்மையே வெளிப்படுத்தினார்; வரப்போகிறவைகளினிமித்தம் அவர்கள் அவரை மகிமைப்படுத்தினார்கள்.

24 இப்பொழுதும் இவைகளை நீங்கள் அறிந்து இவைகளை நீங்கள் பொய்யுரைத்தாலொழிய மறுக்க முடியாது என்று அறிகிறீர்கள். ஆதலால் இதில் நீங்கள் பாவம் புரிந்தீர்கள். ஏனெனில், நீங்கள் அநேக சாட்சிகளைப் பெற்றிருப்பினும் இவைகள் அனைத்தையும் நீங்கள் நிராகரித்தீர்கள். ஆம், அவை உண்மையானவை என்பதற்கு சாட்சியாக நீங்கள் அனைத்துக் காரியங்களையும், ஆம், பரலோகத்திலுள்ளவைகளையும், பூமியிலுள்ள அனைத்துக் காரியங்களையும் பெற்றிருக்கிறீர்கள்.

25 இதோ, நீங்கள் சத்தியத்தை நிராகரித்து, உங்களுடைய பரிசுத்த தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணினீர்கள்; ஒன்றும் கெடுக்க முடியாததும், அசுத்தமான ஒன்றும் வரமுடியாததுமான பரலோகத்தில், உங்களுக்காக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்காமல், இச்சமயத்தில்கூட, நீங்கள் நியாயத்தீர்ப்பின் நாளுக்காக உங்களுக்கு விரோதமாய் கோபத்தையே சேமித்து வைக்கிறீர்கள்.

26 ஆம், உங்களுடைய கொலைகளினிமித்தமும், உங்களுடைய வேசித்தனங்கள் மற்றும் துன்மார்க்கத்தினிமித்தமும், நீங்கள் இச்சமயத்திலும் என்றுமுள்ள அழிவிற்காகப் பழுத்துக்கொண்டிருக்கிறீர்கள்; ஆம், நீங்கள் மனந்திரும்பாவிடில் அது சீக்கிரமாய் உங்களுக்குள் சம்பவிக்கும்.

27 ஆம், இதோ, அது இப்பொழுது உங்கள் நுழைவாயிலில் இருக்கிறது; ஆம், நீங்கள் நியாயாசனத்திற்குப் போய் காணுங்கள்; இதோ, உங்கள் நியாயாதிபதி கொலை செய்யப்பட்டிருக்கிறான். அவன் தன் இரத்தத்திலே விழுந்து கிடக்கிறான்; நியாயாசனத்தில் உட்கார வகை தேடுகிற தன் சகோதரனால் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.

28 இதோ, அவர்கள் இருவரும் காதியாந்தனாலும், மனுஷ ஆத்துமாக்களை அழிக்க வகை தேடுகிற அந்த பொல்லாதவனாலும் தோற்றுவிக்கப்பட்ட உங்களுடைய இரகசிய கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.