வேதங்கள்
ஏலமன் 5


அதிகாரம் 5

நேபியும், லேகியும் பிரசங்கிப்பதில் தங்களை அர்ப்பணித்தல் – அவர்களுடைய நாமங்கள் அவர்களைத் தங்களின் முற்பிதாக்களைப்போல தங்கள் ஜீவியங்களையும் அமைத்துக் கொள்ளும்படி அழைப்பு விடுதல் – மனந்திரும்புவோரை கிறிஸ்து மீட்கிறார் – நேபியும் லேகியும் அநேகரை மனம்மாறச் செய்தலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுதலும். அக்கினி அவர்களைச் சூழ்ந்துகொள்ளுதல் – காரிருளான மேகம் முன்னூறுபேர் மேல் நிழலிடுதல் – பூமி அதிர்ந்து மனுஷர் மனந்திரும்பும்படியாக ஓர் சத்தம் கட்டளையிடுதல் – நேபியும், லேகியும் தூதர்களோடு சம்பாஷணை பண்ணுதல். திரளானோர் அக்கினியால் சூழப்படுதல். ஏறக்குறைய கி.மு. 30.

1 அந்தப்படியே, இதே வருஷத்தில் இதோ, நேபி நியாயாசனத்தை சிசோரம் என்ற பெயர்கொண்ட ஒரு மனுஷனிடத்தில் ஒப்படைத்தான்.

2 அவர்களுடைய சட்டங்களும் அவர்களுடைய ராஜாங்கமும் ஜனங்களுடைய சம்மதத்தின்படி ஏற்படுத்தப்பட்டிருந்தபடியாலும், நன்மையைத் தெரிந்து கொண்டோரைக் காட்டிலும், பொல்லாப்பைத் தெரிந்து கொண்டோர் அதிகமாய் இருந்தபடியாலும், சட்டங்கள் கெட்டுப்போனதாலும் அவர்கள் அழிவுக்கேதுவானவர்களாய் பழுத்து இருந்தார்கள்.

3 ஆம், இதுமட்டுமல்ல, அவர்கள் அழிக்கப்படுவது தவிர, அவர்கள் சட்டத்தினாலோ, அல்லது நியாயத்தாலோ ஆளுகை செய்யப்பட முடியாத அளவுக்கு, வணங்காக் கழுத்துள்ள ஜனமாக இருந்தார்கள்.

4 அந்தப்படியே, அவர்களின் அக்கிரமத்தினிமித்தம் நேபி சோர்ந்து போனான்; அவன் நியாயாசனத்தைத் துறந்து, தன் மீதி நாட்கள் முழுவதும், தேவ வார்த்தையைப் பிரசங்கிக்கும் பொறுப்பை தன்மேல் எடுத்துக்கொண்டான்; அவன் சகோதரனாகிய லேகியும் தன் மீதி நாட்கள் முழுவதும், தேவ வார்த்தையைப் பிரசங்கிக்கும் பொறுப்பை தன்மேல் எடுத்துக்கொண்டான்.

5 அவர்கள் தங்கள் தகப்பனாகிய ஏலமன் தங்களுக்குச் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள். அவன் பேசின வார்த்தைகள் இவைகளே:

6 இதோ, என் குமாரரே, தேவ கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ள நினைவில் கொள்ளவேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன்; நீங்கள் இவ்வார்த்தைகளை ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். இதோ, எருசலேம் தேசத்திலிருந்து வந்துவிட்ட நம்முடைய முதற் பெற்றோரின் பெயர்களை உங்களுக்குச் சூட்டியிருக்கிறேன். இதை நான் செய்தது ஏனெனில், நீங்கள் உங்கள் பெயர்களை நினைக்கும்போது அவர்களை நீங்கள் நினைக்கவேண்டுமென்பதற்காக; அவர்களை நீங்கள் நினைவுகூரும்போது, அவர்களுடைய கிரியைகளை நீங்கள் நினைவுகூருவீர்கள்; அவர்களுடைய கிரியைகளை நீங்கள் நினைவுகூரும்போது அவர்கள் நல்லோர் என்று சொல்லப்பட்டிருப்பதையும் எழுதப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

7 ஆதலால், என் குமாரரே, அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் இருப்பதைப்போல உங்களைப்பற்றி சொல்லப்படவும் எழுதப்படவும் நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.

8 இப்பொழுதும் என் குமாரரே, இதோ, நான் உங்களிடத்தில் விரும்பும் வேறு சிலவும் உள்ளன. அந்த வாஞ்சை என்னவெனில், நீங்கள் மேன்மை பாராட்டும்படியாக, இக்காரியங்களைச் செய்யாமல், பரலோகத்தில் நித்தியமும் மங்காததுமான பொக்கிஷத்தை உங்களுக்கென்று சேர்த்து வைக்கும் பொருட்டே இவைகளைச் செய்யுங்கள் என்பதே, ஆம், அதினிமித்தம் நீங்கள் நித்திய ஜீவன் என்கிற அந்த விலையுயர்ந்த ஈவைப் பெறுவீர்கள்; அது நம்முடைய பிதாக்களுக்கும் அளிக்கப்பட்டது என்று நாம் எண்ண நமக்கு காரணமுண்டு.

9 நினைவுகூருங்கள், என் குமாரரே, இந்த ஜனத்திற்கு பென்யமீன் ராஜா சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்; ஆம், வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தினால் மாத்திரம் மனுஷன் இரட்சிக்கப்படமுடியுமே ஒழிய மற்ற எந்த வழியாலும், முறையினாலும் கூடாது என்று நினைவுகூருங்கள். ஆம், அவர் உலகத்தை மீட்க வருகிறார் என்று நினைவுகூருங்கள்.

10 அம்மோனிகா பட்டணத்தில் அமுலேக் சீஸ்ரமிடம் பேசின வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள்; ஏனெனில் அவன் அவனிடத்தில், கர்த்தர் மெய்யாகவே நம்முடைய ஜனத்தை மீட்க வருவார். ஆனால் அவர்களை அவர்களுடைய பாவங்களில் மீட்க வராமல், அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்கவே வருகிறார், என்றான்.

11 மனந்திரும்புதலினிமித்தம் அவர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்கும் வல்லமை அவருக்குப் பிதாவினிடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆகவே, அவர்கள் தங்கள் ஆத்தும இரட்சிப்புக்கேதுவாய் மீட்பரின் வல்லமையைப் பெறத் தக்கதாக, மனந்திரும்புதலின் நிபந்தனைகளைக்கொண்ட செய்திகளை அறிவிக்க தம்முடைய தூதர்களை அவர் அனுப்பியிருக்கிறார்.

12 இப்பொழுதும், என் குமாரரே நினைவுகூருங்கள், தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின் மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தைக் கட்டவேண்டுமென்று நினைவில் கொள்ளுங்கள்; பிசாசு தன் பலத்த காற்றுகளையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும் அனுப்பி, ஆம், அவன் சகல கல்மழையாலும் அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷர் கட்டினால் அவர்கள் விழுந்து போவதில்லை.

13 அந்தப்படியே, இவைகளே ஏலமன் தன் குமாரர்களுக்குப் போதித்த வார்த்தைகள்; ஆம், அவன் அவர்களுக்கு எழுதப்படாத அநேக காரியங்களையும், எழுதப்பட்ட அநேக காரியங்களையும் போதித்தான்.

14 அவர்கள் அவனுடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள்; ஆதலால் உதாரத்துவஸ்தலம் தொடங்கி, நேபியின் ஜனமனைவருக்குள்ளும் தேவ வார்த்தையைப் போதிக்க, தேவ கட்டளைகளைக் கைக்கொண்டவர்களாய், அவர்கள் போனார்கள்.

15 அவர்கள் அங்கிருந்து கித் பட்டணத்திற்கும், கித் பட்டணத்திலிருந்து மூலெக் பட்டணத்திற்கும் போனார்கள்.

16 தென் தேசத்திலுள்ள நேபியின் ஜனம் அனைத்துக்குள்ளும் போகும்வரைக்குமாய், பட்டணம் பட்டணமாய்ப் போனார்கள்; அங்கிருந்து லாமானியருக்குள்ளே சாரகெம்லா தேசத்திற்குப் போனார்கள்.

17 அந்தப்படியே, நேபியர்களிலிருந்து போன கலகக்காரரில் அநேகரை தாறுமாறாகச்செய்யும் விதமாகவும், அவர்கள் வந்து, தங்கள் பாவங்களை அறிக்கை பண்ணி மனந்திரும்புதலுக்கேதுவாய் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, தாங்கள் செய்த சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டும், உடனே நேபியர்களிடத்தில் திரும்பும் விதமாகவும், அவர்கள் அதிக வல்லமையோடு பிரசங்கம் பண்ணினார்கள்.

18 அந்தப்படியே, நேபியும் லேகியும் லாமனியருக்குள்ளே மிகுந்த வல்லமையோடும், அதிகாரத்தோடும் பிரசங்கித்தார்கள். ஏனெனில் அவர்கள் பேசவும், அவர்கள் பேசுவதெதுவோ, அது அவர்களுக்கு கொடுக்கப்படும்படியாகவும் அவர்களுக்கு அதிகாரமும் வல்லமையும் கொடுக்கப்பட்டிருந்தது.

19 ஆதலால் சாரகெம்லா தேசத்திலும் சுற்றுப்புறங்களிலுமுள்ள லாமானியரில் எட்டாயிரம்பேர் மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானம் பெற்று தங்கள் தகப்பன்மார்களின் பாரம்பரியங்கள் துன்மார்க்கமானவை என்று உணர்ந்து கொள்ளும் அளவுக்கு, லாமானியர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டு உணர்ந்து கொள்ளத்தக்கதாக அவர்கள், பேசினார்கள்.

20 அந்தப்படியே, நேபியும் லேகியும் அங்கிருந்து நேபி தேசத்திற்குப் போனார்கள்.

21 அந்தப்படியே, அவர்கள் லாமானிய சேனையினால் பிடிக்கப்பட்டு, சிறையினுள் போடப்பட்டார்கள்; ஆம், அம்மோனும் அவன் சகோதரரும், லிம்கியின் வேலையாட்களால் போடப்பட்ட அதே சிறையில் அவர்களும் போடப்பட்டார்கள்.

22 அவர்கள் அநேக நாட்கள் ஆகாரமில்லாமல் சிறையினுள் போடப்பட்டிருந்த பின்னர், இதோ, அவர்களை வெட்டிப்போடும்படி அவர்களைப் பிடிக்க, சிறையினுள் போனார்கள்.

23 அந்தப்படியே, தாங்கள் சுட்டெரிக்கப்படுவோமோ என்று பயந்து அவர்கள் மேல் தங்கள் கைகளைப் போடத் துணியாத அளவுக்கு, நேபியும், லேகியும் அக்கினியால் சூழப்பட்டார்கள். ஆயினும் நேபியும் லேகியும் எரிந்து போகவில்லை; அவர்கள் அக்கினியின் நடுவே நின்றிருந்தும் சுட்டெரிக்கப்படவில்லை.

24 அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தினால் சூழப்பட்டிருப்பதையும் அது அவர்களைப் பட்சித்துப் போடாததையும் கண்டபோது அவர்களின் இருதயம் தைரியம் கொண்டது.

25 ஏனெனில் லாமானியர் தங்கள் மேல் கைகளைப் போடவும் பயந்திருந்தார்கள் எனக் கண்டார்கள்; அவர்கள் அவர்களின் அருகில் வரவும் துணியாமல், ஆச்சரியத்தினால் ஊமையாக்கப்பட்டவர்களைப் போல நின்று கொண்டிருந்தார்கள்.

26 அந்தப்படியே, நேபியும் லேகியும் நின்று அவர்களிடம் பேசத் துவங்கி சொன்னதாவது: பயப்படாதிருங்கள், ஏனெனில் இதோ, நீங்கள் எங்கள் மேல் கைகளைப் போட்டு வெட்டிப்போட முடியாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே தேவன் இந்த அற்புதமான காரியத்தை உங்களுக்குக் காண்பித்திருக்கிறார்.

27 இதோ, அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனே, பூமி மிகவும் அதிர்ந்து, சிறைச்சாலையின் மதில்கள் கீழே விழுந்துவிடுவதைப் போல நடுங்கின; ஆனால் இதோ, அவை விழவில்லை. இதோ, சிறைச்சாலையிலிருந்தவர்கள் லாமனியரும், கலகக்காரர்களான நேபியருமே.

28 அந்தப்படியே, அவர்கள் காரிருளான மேகத்தினால் நிழலாடப்பட்டனர். அவர்களை பயங்கரமான திகில் ஆட்கொண்டது.

29 அந்தப்படியே, காரிருளான மேகத்திற்கு மேல் ஏற்படுகின்றதுபோல ஒரு சத்தம் உண்டாகிச் சொன்னதாவது: நீங்கள் மனந்திரும்புங்கள், நீங்கள் மனந்திரும்புங்கள், நற்செய்திகளை அறிவிக்க உங்களுக்குள் நான் அனுப்பின என் ஊழியக்காரர்களை இனி ஒருபோதும் அழிக்க வகை தேடாதீர்கள்.

30 அந்தப்படியே, அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது அது இடிமுழக்கத்தின் சத்தமாயோ, பெரும் குமுறலின் சத்தமாயோ இல்லாமல், ஆனால் இதோ, முனகல் சத்தம்போல, மிகவும் மெல்லிய அமர்ந்த சத்தமாய் இருந்ததென்று உணர்ந்தார்கள். அது அவர்களுடைய ஆத்துமாவை ஊடுருவிச் சென்றது.

31 சத்தம் மெல்லியதாய் இருந்த போதும், இதோ, பூமி மிகவும் நடுங்கிற்று, சிறைச்சாலையின் மதில்கள் பூமியில் விழுவதுபோன்று மறுபடியும் அசைந்தன; இதோ, அவர்கள்மேல் நிழலாடிய காரிருளான மேகம் கலைந்து போகவில்லை.

32 இதோ, சத்தம் மறுபடியும் உண்டாகி: நீங்கள் மனந்திரும்புங்கள், நீங்கள் மனந்திரும்புங்கள். ஏனெனில் பரலோக ராஜ்யம் சமீபத்திலுள்ளது; என் ஊழியக்காரர்களை அழிக்க இனி ஒருபோதும் வகை தேடாதீர்கள், என்றது. அந்தப்படியே, பூமி மறுபடியும் அதிர்ந்தது, மதில்கள் நடுங்கின.

33 மூன்றாம் முறையாக மறுபடியும் அந்த சத்தம் உண்டாகி, மனுஷனால் உச்சரிக்கக்கூடாத அநேக ஆச்சரியமான வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லிற்று; மதில்கள் மறுபடியும் நடுங்கின. பூமி இரண்டாக பிளப்பது போன்று அதிர்ந்தது.

34 அந்தப்படியே, தங்களை நிழலிட்ட அந்தக் காரிருளான மேகத்தினிமித்தம் லாமானியர் பறந்தோட முடியவில்லை; ஆம், தங்கள் மேல் வந்த பயத்தினிமித்தமும், அவர்கள் நகர முடியாமலிருந்தார்கள்.

35 இப்போது, அவர்களுள் ஒருவன் பிறப்பால் நேபியனாயிருந்தான். முன்பு அவன் தேவ சபையைச் சார்ந்திருந்து பின்பு அவர்களிடமிருந்து பிரிந்து போனவன்.

36 அந்தப்படியே, அவன் திரும்பியபோது, காரிருளான மேகத்தினூடே நேபி மற்றும் லேகியின் முகங்களைக் கண்டான்; இதோ, அவை தூதர்களின் முகங்களைப்போல மிகுதியாய் பிரகாசித்தன. அவன் அவர்கள் தங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுப்பதைக் கண்டான். அவர்கள் தாங்கள் காண்கிற ஏதோவொருவரிடத்திலே பேசுகிறதைப்போலவோ, அல்லது தங்கள் சத்தங்களை உயர்த்துகிறதைப்போலவோ காட்சியளித்தார்கள்.

37 அந்தப்படியே, இம்மனுஷன் கூட்டத்தினர் திரும்பிப் பார்க்கும்படியாக அவர்களை நோக்கிக் கூக்குரலிட்டான். இதோ, அவர்களும் திரும்பி, காணத்தக்கதாக அவர்களுக்கும் வல்லமை அளிக்கப்பட்டது; அவர்களும் நேபி மற்றும் லேகியின் முகங்களைக் கண்டார்கள்.

38 அவர்கள் அந்த மனுஷனை நோக்கி: இதோ, இவைகளுக்கெல்லாம் அர்த்தமென்ன. இம்மனுஷர் யாரோடு சம்பாஷிக்கிறார்கள், என்றார்கள்.

39 இப்பொழுது இம்மனுஷனின் பெயர் அம்மினதாப் என்பதாகும். அம்மினதாப் அவர்களை நோக்கி: அவர்கள் தேவதூதர்களோடு சம்பாஷிக்கிறார்கள் என்றான்.

40 அந்தப்படியே, லாமானியர் அவனை நோக்கி: இந்தக் காரிருளான மேகம் நம்மை நிழலாடுவதிலிருந்து நீக்கப்படும்படிக்கு நாம் செய்யவேண்டியதென்ன என்றார்கள்.

41 அம்மினதாப் அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஆல்மா, அமுலேக், சீஸ்ரம் ஆகியோரால் உங்களுக்குப் போதிக்கப்பட்ட கிறிஸ்துவிலே நீங்கள் விசுவாசம் வைக்கும்மட்டும் அந்த சத்தத்தினிடம் மன்றாடுங்கள்; இதை நீங்கள் செய்யும்போது, உங்களை நிழலாடுகிற அந்தக் காரிருளான மேகம் நீக்கப்படும்.

42 அந்தப்படியே, அவர்கள் யாவரும் பூமியை அதிரப்பண்ணினவருடைய சத்தத்தினிடம் கூக்குரலிட்டார்கள்; ஆம், அந்தக் காரிருளான மேகம் கலைந்து போகும்வரைக்கும் கூக்குரலிட்டார்கள்.

43 அந்தப்படியே, அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்து, அந்தக் காரிருளான மேகம் தங்களை நிழலாடுவதிலிருந்து கலைந்து போகிறதைக் கண்டார்கள். இதோ அவர்கள், ஆம், ஒவ்வொரு ஆத்துமாவும் தாங்கள் அக்கினி ஸ்தம்பத்தினால் சூழப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

44 நேபியும் லேகியும் அவர்கள் மத்தியில் இருந்தார்கள்; ஆம், அவர்கள் சூழப்பட்டிருந்தார்கள்; ஆம், அவர்கள் ஜொலிக்கிற அக்கினிக்கு நடுவே இருப்பதைப்போலக் காணப்பட்டும், அது அவர்களைச் சேதப்படுத்தவோ, சிறையின் மதில்களை எரிக்கவோ இல்லை; அவர்கள் சொல்லமுடியாத சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டு, மகிமையினால் நிறைந்திருந்தார்கள்.

45 இதோ, தேவனுடைய பரிசுத்த ஆவி பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, அவர்களுடைய இருதயங்களில் பிரவேசித்தது. அவர்கள் அக்கினியால் நிரப்பப்படுவதைப்போல நிரப்பப்பட்டார்கள். அற்புதமான வார்த்தைகளை அவர்களால் பேசமுடிந்தது.

46 அந்தப்படியே, முனகுதல் போன்ற சத்தம், ஆம், ஒரு இதமான சத்தம் உண்டாகி:

47 உலக அஸ்திபாரம் முதற்கொண்டு இருக்கிற எனக்கு மிகவும் பிரியமானவரில் வைத்த உங்களின் விசுவாசத்தினிமித்தம் உங்களுக்கு சமாதானம், சமாதானம் உண்டாவதாக, என்றது.

48 இப்பொழுதும் அவர்கள் இதைக் கேட்டபோது, சத்தம் எங்கிருந்து வருகிறது என்று காண தங்கள் கண்களை ஏறெடுத்தார்கள்; இதோ, வானம் திறக்கிறதையும், வானத்திலிருந்து தூதர்கள் வந்து தங்களுக்குப் பணிவிடை புரிந்ததையும் கண்டார்கள்.

49 இவைகளைக் கண்டும், கேட்டவர்களும் சுமார் முன்னூறு ஆத்துமாக்களாயிருந்தார்கள்; அவர்கள் போய் ஆச்சரியப்படவோ, சந்தேகப்படவோ கூடாதென்று சொல்லப்பட்டார்கள்.

50 அந்தப்படியே, அவர்கள் போய், தாங்கள் கண்டும் கேட்டதுமான காரியங்கள் அனைத்தையும் சுற்றுப்புறத்திலுள்ள பகுதிகள் முழுவதிலும் அறிவித்து ஜனங்களுக்கு ஊழியம்பண்ணினார்கள். இதினிமித்தம் அவர்கள் பெற்றிருந்த சாட்சியங்களின் முக்கியத்தினிமித்தம் அவர்களால் லாமானியரின் பெரும் பகுதியினர் உணர்த்தப்பட்டார்கள்.

51 உணர்த்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களின் யுத்தக் கருவிகளையும், தங்களின் வெறுப்புணர்ச்சியையும் தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்தையும் விட்டு ஒதுக்கினார்கள்.

52 அந்தப்படியே, அவர்கள் நேபியர்களுக்கு அவர்களின் சுதந்திர தேசங்களைக் கொடுத்தார்கள்.