அதிகாரம் 4
நேபியக் கலகக்காரரும், லாமானியரும், படைகளைச் சேர்த்து, சாரகெம்லா தேசத்தைக் கைப்பற்றுதல் – நேபியரின் வீழ்ச்சி அவர்களின் துன்மார்க்கத்தாலேயே வருதல் – சபை படிப்படியாக நலிந்து ஜனங்கள் லாமானியரைப்போல் பெலவீனராகுதல். ஏறக்குறைய கி,மு. 38–30.
1 அந்தப்படியே, ஐம்பத்தி நாலாம் வருஷத்தில் சபைக்குள்ளே அநேக பிரிவினைகள் இருந்தன. மிகுந்த இரத்தம் சிந்துதல் உண்டாகும்படியாக ஜனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்பட்டன.
2 கலகக்காரர் வெட்டப்பட்டு, தேசத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். அவர்கள் லாமானிய ராஜாவினிடத்திற்குப் போனார்கள்.
3 அந்தப்படியே, அவர்கள் லாமானியரை நேபியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணும்படி கலக்கிவிட முயற்சித்தார்கள்; ஆனால் இதோ, அந்த கலகக்காரரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதபடிக்கு லாமானியர் மிகவும் பயந்திருந்தார்கள்.
4 ஆனால், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பத்தி ஆறாம் வருஷத்தில் நேபியர்களிடத்திலிருந்து கலகக்காரர் லாமானியர்களிடத்திற்குப் போனார்கள்; நேபியர்களுக்கு விரோதமாய் அவர்களைக் கோபம் கொள்ளக் கலக்கிவிடுவதில் மற்றவர்களோடு இவர்களும் சேர்ந்து ஜெயம் கண்டார்கள்; அந்த வருஷம் அவர்கள் யாவரும் யுத்தத்திற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
5 ஐம்பத்தி ஏழாவது வருஷத்தில், அவர்கள் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்து மரணக் கிரியையைத் துவங்கினார்கள்; ஆம், நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பத்தெட்டாம் வருஷத்தில் சாரகெம்லா தேசத்தைப் பெறுவதிலும், ஆம், உதாரத்துவஸ்தலத்திற்கு அருகாமையிலுள்ள தேசத்தையும் மற்ற அனைத்து தேசங்களையும் வசப்படுத்துவதிலும் ஜெயம் பெற்றார்கள்.
6 நேபியரும், மரோனிகாவின் சேனைகளும், உதாரத்துவஸ்தலத்திற்குள்ளாகத் துரத்தப்பட்டார்கள்;
7 அங்கே அவர்கள் மேற்கு சமுத்திரம் தொடங்கி, கிழக்கு சமுத்திரம் வரைக்குமாய் லாமானியருக்கு விரோதமாய் அரண்களை அமைத்தார்கள்; அந்த எல்லையில் அவர்கள் தங்கள் வடதேசத்தைத் தற்காக்கக் கொத்தளங்களைக் கட்டி, தங்கள் சேனைகளை நிறுத்திய வழியே அத்தூரத்தை ஒரு நேபியன் கடக்க ஒரு நாள் பிடிக்கும்.
8 அந்த நேபியர்களிலிருந்து வந்த கலகக்காரர், லாமானியரின் எண்ணிறைந்த சேனையின் துணைகொண்டு, தென் தேசத்தில் நேபியர்களின் வசமிருந்த அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள். இவை யாவும் நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பத்தி எட்டாம் மற்றும் ஒன்பதாம் வருஷங்களில் நடைபெற்றன.
9 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபதாவது வருஷத்தில், மரோனிகா தன் சேனைகளோடு தேசத்தின் அநேக பகுதிகளைப் பெறுவதில் ஜெயம் கொண்டான்; ஆம், அவர்கள் லாமானியரின் கைகளுக்குள் விழுந்த அநேக பட்டணங்களை மறுபடியும் கைப்பற்றினார்கள்.
10 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி ஒன்றாவது வருஷத்தில், அவர்கள் தங்கள் வசமிருந்தவைகளில் பாதியளவாகிலும் மறுபடியும் கைப்பற்றுவதில் ஜெயம் கண்டார்கள்.
11 நேபியர்களுக்குள்ளே அவர்களின் துன்மார்க்கமும், அருவருப்புகளும் இல்லாமற் போயிருந்தால், அவர்களின் பெரும் இழப்பும், அவர்களுக்குள் சம்பவித்த கொடும் சங்காரமும் நடந்திருக்காது; ஆம், அந்த துன்மார்க்கமும், அருவருப்பும் தேவ சபையைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை பண்ணினவர்களுக்குள்ளும் இருந்தன.
12 அவர்களது இருதயங்களின் பெருமையினாலும், அவர்களின் மிகுந்த ஐஸ்வரியத்தினிமித்தமும், ஆம், எளிமையானோரை ஒடுக்கியதாலும், பசியாயிருப்போருக்கு தங்கள் உணவைக் கொடாததாலும், நிர்வாணிகளுக்கு தங்கள் வஸ்திரத்தைக் கொடாததாலும், தங்களின் தாழ்மையுள்ள சகோதரரைக் கன்னத்தில் அடித்ததாலும், பரிசுத்தமானவைகளை பரிகசிப்பதாலும், தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்படுத்தலின் ஆவியை மறுதலித்ததாலும் கொலைகள் கொள்ளைகள் புரிந்ததாலும் பொய்யுரைத்ததாலும், களவாடியதாலும், விபசாரம் செய்ததாலும், பெரும் பிணக்குகளை எழப்பண்ணியதாலும், நேபியின் தேசத்திலிருந்த லாமானியருக்குள்ளே ஓடிப்போனதினிமித்தமே இது சம்பவித்தது.
13 அவர்களுடைய இந்த பெரும் துன்மார்க்கத்தினிமித்தமும், அவர்கள் தங்கள் சுயபெலத்திலே பெருமை பாராட்டினதினிமித்தமும், அவர்கள் தங்கள் சுயபெலத்திலே விடப்பட்டார்கள்; ஆதலால் அவர்கள் விருத்திபெறாமல், துன்புறுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தங்களின் வசமிருந்த ஏறக்குறைய எல்லா தேசங்களையும் இழக்கும் வரைக்குமாய் லாமானியர் முன்பு துரத்தியடிக்கப்பட்டார்கள்.
14 ஆனால் இதோ, மரோனிகா அவர்கள் அக்கிரமத்தினிமித்தம் ஜனங்களுக்கு அநேகக் காரியங்களைப் பிரசங்கித்தான். ஏலமனின் குமாரர்களாகிய நேபியும் லேகியும் ஜனங்களுக்கு அநேகவற்றைப் பிரசங்கித்து, ஆம், அவர்களுடைய அக்கிரமங்களைக் குறித்தும், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவில்லையெனில் அவர்களுக்குச் சம்பவிப்பதென்ன என்றும் அநேகவற்றை அவர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.
15 அந்தப்படியே, அவர்கள் மனந்திரும்பினார்கள். அவர்கள் மனந்திரும்பிய அளவில் அவர்கள் விருத்தியடைந்தார்கள்.
16 ஏனெனில் அவர்கள் மனந்திரும்பியதை மரோனிகா கண்டபோது, அவர்கள் தங்கள் சொத்துக்களில் ஒரு பாதியையும், தங்களின் எல்லா தேசங்களிலும் ஒரு பாதியையும் திரும்பப் பெறும்படியாக அவன் அவர்களை இடத்திற்கு இடம், பட்டணத்திற்கு பட்டணம் வழிநடத்திப்போக விழைந்தான்.
17 இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி ஒன்றாம் வருஷமும் முடிவுற்றது.
18 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி இரண்டாம் வருஷத்தில் லாமானியரை மேற்கொண்டு அதிக உடைமைகளை மரோனிகாவால் பெறமுடியவில்லை.
19 லாமானியர் எண்ணிறைந்தவர்களானபடியால், அவர்கள் மேல் வல்லமைகொள்ளுவது நேபியர்களுக்கு கூடாத காரியமானதால், அவர்கள் தங்கள் மீதியான தேசங்களையும் பெற வைத்திருந்த திட்டத்தைக் கைவிட்டார்கள்; ஆதலால் மரோனிகா தான் கைப்பற்றின அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதில் தன் சேனைகள் யாவையும் ஈடுபடுத்தினான்.
20 அந்தப்படியே, லாமானியரின் பெரும் எண்ணிக்கையினிமித்தம், தாங்கள் மேற்கொள்ளப்பட்டு, மிதிக்கப்பட்டு, வெட்டுண்டு, அழிக்கப்படுவோமோ என்று நேபியர் மிகவும் பயந்தார்கள்.
21 ஆம், அவர்கள் ஆல்மாவின் தீர்க்கதரிசனங்களையும், மோசியாவின் வார்த்தைகளையும் நினைவுகூரத் துவங்கினார்கள்; அவர்கள் தாங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனமென்பதையும், தாங்கள் தேவ கட்டளைகளை அவசியமற்றதாய் எண்ணியிருப்பதையும் கண்டார்கள்.
22 மோசியாவின் சட்டங்களை அல்லது ஜனங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கர்த்தரால் அவனுக்கு கொடுக்கப்பட்டவைகளை தாங்கள் மாற்றிப்போட்டு, தங்கள் கால்களால் மிதித்ததை அவர்கள் கண்டார்கள்; அவர்கள், தங்கள் சட்டங்கள் கெட்டுப்போனதையும், தங்களின் துன்மார்க்கம் லாமானியருக்கு ஒத்ததாயிருக்குமளவிற்கு, தாங்கள் துன்மார்க்க ஜனமாய் மாறியதையும் கண்டார்கள்.
23 அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தம் சபை படிப்படியாக நலிந்து போகத் துவங்கியது. அவர்கள் தீர்க்கதரிசன ஆவியிலும், வெளிப்படுத்தலின் ஆவியிலும் அவிசுவாசமடையத் துவங்கினார்கள்; தேவ நியாயத்தீர்ப்புகள் அவர்களது முகத்தை முறைத்துப் பார்த்தது.
24 அவர்கள் தங்கள் சகோதரராகிய லாமானியரைப்போல பெலவீனமானதையும், கர்த்தருடைய ஆவி தங்களைப் பாதுகாக்கவில்லை என்பதையும் கண்டார்கள்; ஆம், கர்த்தருடைய ஆவி அசுத்த ஆலயங்களில் வாசம் பண்ணாததினிமித்தம் அது அவர்களிலிருந்து நீங்கிப்போயிற்று.
25 அவர்கள் அவிசுவாசம் மற்றும் அஞ்சத்தக்க துன்மார்க்க நிலையில் விழுந்ததினால், கர்த்தர் அவர்களைத் தம்முடைய அற்புத இணையற்ற வல்லமையினால் பாதுகாப்பதை நிறுத்தினார்; அவர்கள், லாமானியர் தங்களைக் காட்டிலும் அதிகமாய் இருப்பதையும், தேவனாகிய தங்கள் கர்த்தரிடத்தில் இசைந்திராமற் போனால், தவிர்க்கப்படமுடியாமல் அழிந்துபோவோம் என்றும் கண்டார்கள்.
26 ஏனெனில் இதோ, மனுஷனுக்கு மனுஷ பெலத்திலேயும், லாமானிய பெலம் தங்கள் பெலத்திற்கு இணையானதெனக் கண்டார்கள். இப்படியாக அவர்கள் இந்த பெரும் மீறுதலினுள் வீழ்ந்தார்கள். ஆம், சில வருஷங்களுக்குள்ளாகவே அவர்கள் தங்கள் மீறுதலினிமித்தம் பெலவீனர்களானார்கள்.