வேதங்கள்
ஏலமன் 12


அதிகாரம் 12

மனுஷர் நிலையற்றவராயும், மூடராயும் பொல்லாப்பைச் செய்ய துரிதமாயுமுள்ளனர் – கர்த்தர் தமது ஜனத்தை தண்டித்தல் – மனுஷருடைய வெறுமை, தேவ வல்லமையோடு ஒப்பிடப்படுதல் – நியாயத்தீர்ப்பின் நாளிலே மனுஷர் என்றுமுள்ள ஜீவனையோ அல்லது என்றுமுள்ள அழிவையோ ஆதாயப்படுத்திக் கொள்ளுவார்கள். ஏறக்குறைய கி.மு. 6.

1 இப்படியாக மனுபுத்திரரின் உள்ளங்கள் எவ்வளவு பொய்மையும் நிலையற்றதுமாயிருக்கிறது என நாம் காணலாம்; ஆம், கர்த்தர் தன் மேல் தங்களுடைய நம்பிக்கையை வைக்கிறவர்களை தம்முடைய மாபெரும் முடிவற்ற நன்மையால் ஆசீர்வதித்து விருத்தியடையச் செய்வதை நாம் காணலாம்.

2 ஆம், அவர் தம்முடைய ஜனத்தை விருத்தியடையச் செய்து, ஆம், அவர்கள் தங்கள் வயல்களிலும், ஆடுகளிலும், தங்கள் மாடுகளிலும், பொன்னிலும், வெள்ளியிலும், எல்லாவிதமும், வகையுமான விலையுயர்ந்த அழகிய பொருட்களிலும் பெருகப்பண்ணி அவர்களுடைய ஜீவனைத் தப்புவித்து, அவர்களை அவர்களுடைய விரோதிகளின் கைகளுக்குத் தப்புவித்து, அவர்களுடைய விரோதிகள் அவர்களுக்கு விரோதமாக யுத்தங்களை அறிவிக்கக் கூடாதபடிக்கு, ஆம் அவர்களுடைய இருதயங்களை இளகப்பண்ணி, இப்படியாக தன் ஜனத்தினுடைய நலனுக்காயும், மகிழ்ச்சிக்காயும், சகல காரியங்களையும் செய்யும் அச்சமயத்தில்தானே, அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தேவனாகிய தங்கள் கர்த்தரை மறந்து, பரிசுத்தரை தங்கள் கால்களில் போட்டு மிதிக்கிறார்கள். ஆம், இது அவர்களுடைய சௌகரியத்தினாலும், அவர்களுடைய மிகுந்த செழிப்பினிமித்தமே.

3 இப்படியாக கர்த்தர் தம்முடைய ஜனத்தை அநேக உபத்திரவங்களினால் தண்டிக்காவிட்டால், ஆம், அவர் அவர்களை மரணத்தினாலும், பயங்கரத்தினாலும், பஞ்சத்தாலும், எல்லா விதமான வாதையினாலும் விசாரிக்காவிட்டால், அவர்கள் அவரை நினைவுகூரமாட்டார்கள், என்று நாம் காண்கிறோம்.

4 மனுபுத்திரர் எவ்வளவு மூடராயும், வீணராயும், எவ்வளவு பொல்லாதவராயும், அக்கிரமத்தைச் செய்ய துரிதப்படுவராயும், நன்மை செய்ய காலம் தாமதிப்பவராயும், ஆம் பொல்லாதவனின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதற்கு துரிதமாயும், உலகத்தின் வீணானவைகளின் மேல் தங்கள் இருதயங்களை வைப்பவர்களாயும் இருக்கிறார்கள்!

5 ஆம் பெருமையிலே சீக்கிரமாய் உயர்த்தப்படத் துரிதப்படுபவராயும், ஆம், மேட்டிமை பாராட்டவும், அக்கிரமமான எல்லாவற்றையும் செய்யவும் துரிதப்படுபவராயும், தேவனாகிய தங்கள் கர்த்தரில் நினைவுகூரவும், ஆம் அவருடைய ஆலோசனைகளுக்குச் செவி கொடுக்க காலம் தாமதிப்பவராயும், ஆம் ஞானமான பாதைகளில் நடக்க காலம் தாமதிப்பவராயும் இருக்கிறார்கள்.

6 இதோ, தங்களைச் சிருஷ்டித்தவராகிய தேவனாகிய தங்கள் கர்த்தர் தங்கள் மேல் ஆட்சி செய்யவும், ஆளுகை பண்ணவும் விரும்புகிறதில்லை; அவருடைய மிகுந்த நன்மையும், அவருடைய இரக்கமும், தங்கள் மேல் இருந்தாலும், அவர்கள் அவருடைய ஆலோசனையைத் தள்ளி விடுகிறார்கள். அவர் தங்களை வழிநடத்துபவராக இருக்க அவர்கள் விரும்புவதில்லை.

7 மனுபுத்திரரின் ஒன்றுமில்லாமை எவ்வளவு பெரிதாயிருக்கிறது; ஆம், அவர்கள் பூமியின் தூசிக்கும் குறைவானவர்கள்.

8 ஏனெனில் இதோ, நம்முடைய மகத்துவமுள்ள என்றுமுள்ள தேவனுடைய கட்டளையினாலே பூமியின் தூசியானது பிரிந்து போகும்படியாக, அங்கேயும் இங்கேயுமாக நகர்கிறது.

9 ஆம், இதோ, அவருடைய சத்தத்தில், குன்றுகளும் பர்வதங்களும் நடுங்கி குலுங்குகின்றன.

10 அவருடைய சத்தத்தின் வல்லமையினால் அவை பிளந்து, ஆம், ஒரு பள்ளத்தாக்கைப் போல தட்டையாகின்றன.

11 ஆம், அவருடைய சத்தத்தின் வல்லமையினாலே பூமி முழுவதும் நடுங்குகிறது.

12 ஆம், அவருடைய சத்தத்தின் வல்லமையினாலே அஸ்திபாரங்களின் மையம் முதற்கொண்டு அசைகிறது.

13 ஆம், அவர் பூமியைப் பார்த்து, நகர்ந்து போ என்றால், அது நகர்ந்து போகும்.

14 ஆம், அவர் பூமியைப் பார்த்து, நாளானது பல மணிநேரத்திற்கு நீண்டிருக்கும்படி நீ பின்னோக்கிப்போ என்றால், அது அப்படியே செய்யப்படுகிறது.

15 இப்படியாக அவருடைய வார்த்தையின்படி பூமி பின்னோக்கிப் போகிறது. சூரியன் நகராமல் நின்று கொண்டிருப்பதைப்போல மனுஷனுக்கு அது காட்சியளிக்கிறது; ஆம், இதோ, இது அப்படித்தான்; ஏனெனில் நிச்சயமாக சூரியன் அல்ல, பூமியே சுற்றுகிறது.

16 இதோ, அவர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீர்களை நோக்கி, வற்றிப்போகக் கடவது என்றால் அது அப்படியே நடக்கும்.

17 இதோ, அவர் இந்தப் பர்வதத்தைப் பார்த்து, நீ எழுந்து வந்து, அந்தப் பட்டணம் புதைந்து போகும்படியாய், அதன்மேல் விழுவாயாக என்றால், அது அப்படியே சம்பவிக்கும்.

18 இதோ, ஒரு மனுஷன் பூமியிலே பொக்கிஷத்தை மறைத்தானாகில், கர்த்தர், மறைத்தவனுடைய அக்கிரமத்தினிமித்தம் அது சபிக்கப்பட்டிருப்பதாக என்றாராகில், இதோ, அது சபிக்கப்பட்டிருக்கும்.

19 இக்காலம் முதற்கொண்டு, இனியும் என்றென்றுமாயும் ஒரு மனுஷனும் உன்னை காணாதபடிக்கு நீ சபிக்கப்பட்டிருப்பாய் என்று கர்த்தர் சொல்வாராகில், இதோ, அதை மனுஷன் இப்போதிலிருந்து என்றென்றுமாயும் பெறப்போவதில்லை.

20 இதோ, கர்த்தர் மனுஷனைப் பார்த்து, உன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் நீ என்றென்றுமாய் சபிக்கப்பட்டிருப்பாய் என்று சொன்னால், அது சம்பவிக்கும்.

21 கர்த்தர் உன் அக்கிரமங்களினிமித்தம் நீ என் சமுகத்தினின்று அறுப்புண்டு போவாய் என்று சொல்வாராகில், அது அப்படியே நிறைவேறும்படியாயும் செய்வார்.

22 அவர் இதை எவனிடத்தில் சொல்லுகிறாரோ அவனுக்கு ஐயோ. ஏனெனில் அக்கிரமத்தைச் செய்கிறவனிடத்தில் அது நிறைவேறி அவன் இரட்சிக்கப்பட முடியாமற் போகும். எனவே இந்த காரணத்திற்காக, மனுஷன் இரட்சிக்கப்படும்படியாக, மனந்திரும்புதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

23 ஆதலால் மனந்திரும்பி, தேவனாகிய தங்கள் கர்த்தருடைய குரலுக்குச் செவிகொடுப்போர் பாக்கியவான்கள்; ஏனெனில் இவர்களே இரட்சிக்கப்படுபவர்கள்.

24 மனுஷரை மனந்திரும்பப்பண்ணி நற்கிரியைகளுக்குக் கொண்டுவரும்படியாகவும், அவர்கள் தங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக, கிருபையின்படி கிருபைக்கு திரும்பச் சேர்க்கப்படும்படியாகவும், தேவன் தம்முடைய மகா பூரணத்திலே அருளுவாராக.

25 மனுஷர் யாவரும் இரட்சிக்கப்படும்படியாய் விரும்புகிறேன். ஆனால் அந்தப் பெரிதும், கடைசியுமான நாளில் சிலர் தள்ளப்படுவார்கள், ஆம், கர்த்தருடைய பிரசன்னத்தினின்று தள்ளப்படுவார்கள், என்று வாசிக்கிறோம்;

26 ஆம், நன்மை செய்தவர்கள் என்றுமுள்ள ஜீவனையும், பொல்லாப்பைச் செய்தவர்கள் என்றுமுள்ள அழிவையும் பெறுவார்கள், என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் நிறைவேறத்தக்கதாக, அவர்கள் முடிவற்ற துர்பாக்கிய நிலைக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள். இது இப்படியாக இருக்கிறது. ஆமென்.