வேதங்கள்
ஏலமன் 16


அதிகாரம் 16

சாமுவேலில் விசுவாசம் வைக்கிற நேபியர்கள், நேபியால் ஞானஸ்நானம் பெறுதல் – மனந்திரும்பாத நேபியர்களின் அம்புகளாலும், கற்களாலும் சாமுவேல் கொல்லப்பட முடியவில்லை – சிலர் தங்கள் இருதயங்களை கடினப்படுத்துதல், மற்றவர்கள் தூதர்களைக் காணுதல் – கிறிஸ்துவிலும், எருசலேமில் அவர் வருகிறதையும், விசுவாசிக்கிறது சரியல்ல என்று அவிசுவாசிகள் சொல்லுதல். ஏறக்குறைய. கி.மு. 6–1.

1 இப்பொழுதும், அந்தப்படியே, பட்டணத்தின் மதில்கள் மேலே லாமானியனான சாமுவேல் பேசிய வார்த்தைகளை அநேகர் கேட்டனர். அவனுடைய வார்த்தையில் விசுவாசித்த அநேகர் போய் நேபியைத் தேடினார்கள்; அவர்கள் போய் அவனைக் கண்டவுடன் அவனிடத்தில் தங்கள் பாவங்களை மறுக்காமல் அறிக்கை பண்ணி, கர்த்தருக்குள்ளாக நாங்கள் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று விரும்பினார்கள்.

2 சாமுவேலின் வார்த்தைகளில் விசுவாசிக்காத அங்கு இருந்த அநேகரும், அவன் மேல் கோபம் கொண்டார்கள்; அவர்கள் மதிலின் மேலே நின்ற அவனை நோக்கி கற்களை எறிந்தார்கள். அவன் மதிலின் மேலே நின்றபோது அநேகர் அம்புகளை அவன் மேல் விட்டனர்; ஆனால் அவர்கள் அவனைத் தங்கள் கற்களாலும் அம்புகளாலும் அடிக்க முடியாதபடிக்கு கர்த்தருடைய ஆவியானவர் அவனோடு இருந்தார்.

3 இப்பொழுதும், அவர்கள் அவனை அடிக்க முடியாதென்று கண்டபோது, அநேகர் அவன் வார்த்தையில் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற நேபியிடம் போனார்கள்.

4 இதோ, கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் என்று ஜனங்கள் அறியவேண்டுமென்பதற்காக, நேபி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, தீர்க்கதரிசனமுரைத்து, பிரசங்கம் பண்ணி, ஜனங்களுக்கு மனந்திரும்புதலை கூக்குரலிட்டு, அறிகுறிகளையும், அற்புதங்களையும் காண்பித்து, அதிசயங்களைச் செய்து வந்தான்.

5 அவைகள் சம்பவிக்கிற காலத்தின்போது அவைகள் தங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டதென்று அவர்கள் அறியவும், நினைவுகூரவும், அதினிமித்தம் விசுவாசிக்கவுமே, அவன் சீக்கிரமாய் வரப்போகிற காரியங்களை அவர்களுக்குச் சொல்லி வந்தான்; ஆதலால் சாமுவேலின் வார்த்தைகளில் விசுவாசித்த அநேகரும், மனந்திரும்பி, தங்கள் பாவங்களுக்காக அறிக்கைபண்ணி, ஞானஸ்நானம் பெற அவனிடம் போனார்கள்.

6 ஆனால் அவர்களில் அதிகமானோர் சாமுவேலின் வார்த்தைகளில் விசுவாசிக்கவில்லை; ஆதலால் அவர்கள் தங்கள் கற்களாலும், தங்கள் அம்புகளாலும் அவனை அடிக்க முடிவில்லை என்று கண்டபோது, அவர்கள் தங்கள் தலையாரிகளை நோக்கி: இம்மனுஷனைப் பிடித்து அவனைக் கட்டிப்போடுங்கள். இதோ, பிசாசு அவனுள் இருக்கிறது, அவனில் இருக்கிற பிசாசின் வல்லமையினால் அவனை நம்முடைய கற்களாலும், நம்முடைய அம்புகளாலும் அடிக்க முடியவில்லை; ஆதலால் அவனைப் பிடித்து, கட்டி, இழுத்துப் போங்கள், என்றார்கள்.

7 அவர்கள் அவன் மீது கைகளைப்போட போனபோது, அவன் மதிலிலிருந்து தாழக்குதித்து, அவர்கள் தேசங்களிலிருந்து, தன் தேசத்திற்குள்ளாக ஓடினான், ஆம், தன்னுடைய சொந்த ஜனங்களுக்குள்ளே பிரசங்கிக்கவும், தீர்க்கதரிசனமுரைக்கவும் துவங்கினான்.

8 இதோ, அதற்குப் பின்பு நேபியர்கள் அவனைப்பற்றி அதிகமாய் கேள்விப்படவேயில்லை. ஜனங்களுடைய விவகாரங்கள் இப்படியாயிருந்தது.

9 நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் எண்பத்தி ஆறாம் வருஷமும் முடிவடைந்தது.

10 ஜனங்களில் பெரும்பாலானாவர்கள் தங்கள் பெருமையிலும், துன்மார்க்கத்திலும் நிலைத்திருந்தார்கள், குறைவானவர்கள் தேவனுக்கு அதிக பயபக்தியோடே நடந்து வந்தார்கள். இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் எண்பத்தி ஏழாம் வருஷமும் முடிவடைந்தது.

11 நியாயாதிபதிகளின் ஆளுகையில் எண்பத்தி எட்டாம் வருஷத்திலும் நிலைமை இப்படியேதான் இருந்தது.

12 ஜனங்கள் அக்கிரமத்திலே இன்னும் அதிகமாய் கடினப்பட்டிருப்பதைத் தவிர, ஜனங்களின் விவகாரங்களில் சில மாற்றங்களே இருந்தன. நியாயாதிபதிகளின் எண்பத்தி ஒன்பதாம் வருஷத்தின் ஆளுகையில் ஜனங்கள் தேவ கட்டளைகளுக்கு விரோதமான அநேகவற்றைச் செய்து வந்தார்கள்.

13 ஆனால், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் தொண்ணூறாவது வருஷத்தில் ஜனங்களுக்கு பெரிய அறிகுறிகளும், அற்புதங்களும் கொடுக்கப்பட்டன; தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறத் துவங்கின.

14 தூதர்கள் மனுஷருக்கும், ஞானிகளுக்கும் தோன்றி அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிற மகிழ்ச்சியான செய்திகளை அறிவித்தார்கள்; இப்படியாக இந்த வருஷத்திலே வேத வாக்கியங்கள் நிறைவேறத் துவங்கின.

15 ஆயினும் நேபியர்களிலும், லாமானியர்களிலும் அதிகமாய் விசுவாசித்தவர்களைத் தவிர மற்ற ஜனங்கள் யாவரும் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தத் துவங்கி, தங்களுடைய சுயபலத்திலும், சுய ஞானத்திலும் சார்ந்திருக்கத் துவங்கி:

16 அநேகவற்றுள் சிலவற்றை அவர்கள் சரியாய் யூகித்திருக்க முடியும்; ஆனால், பேசப்பட்டுள்ள, இந்த பெரிதும் அற்புதமானதுமான கிரியைகள் யாவும் நிறைவேறாது என்று அறிவோம், என்றார்கள்.

17 அவர்கள் தங்களுக்குளே சம்பாஷித்து விவாதிக்கத் துவங்கி:

18 கிறிஸ்து என்ற ஒருவர் வருவார் என்பது சரியல்ல; அப்படியே அவர் வந்தாலும் பேசப்பட்டிருக்கிறபடி அவர் தேவ குமாரனாயும், வானத்துக்கும் பூமிக்கும் பிதாவாய் இருக்கிறதாலும், அவர் தம்மை நமக்கும், எருசலேமில் இருக்கப்போகிறவர்களுக்கும் ஏன் காண்பிக்க மாட்டார்?

19 ஆம், அவர் தம்மை ஏன் இத்தேசத்திலும் எருசலேமிலும் அவர் காண்பிக்க மாட்டார்.

20 இதோ, நமக்குள் அல்ல. தூரமாயிருக்கிறதும் நாம் அறியாததுமான தேசத்தில் சம்பவிக்கப்போகிற, ஏதோ ஒரு பெரிதும் அற்புதமானதுமான காரியத்தில் நாம் விசுவாசம் வைக்கத்தக்கதாக நம்முடைய பிதாக்களால் நமக்கு கையளிக்கப்பட்டு வந்த, இது ஒரு துன்மார்க்க பாரம்பரியம் என்று அறிவோம். ஆகவே அவர்கள் நம்மை அறியாமையில் வைத்திருக்கலாம்; ஏனெனில் நாம் அவைகள் உண்மையென்று நம்முடைய சொந்த கண்களால் பார்க்க இயலாதே.

21 வார்த்தையைப் போதிக்கும்படி நாம் அவர்களை சார்ந்திருப்பதால், அவர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் வேலையாட்களாகவும், அவர்களுக்கும் நாம் வேலையாட்களாகவும் நம்மைக் கீழ்ப்படுத்தும்படிக்கு, நமக்குப் புரியாத சில பெரிய இரகசியத்தை பொல்லாதவனுடைய தந்திரமான, இரகசியமான திறமைகளால் அவர்கள் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு இடங்கொடுத்தால், நம்முடைய வாழ்க்கை முழுவதும், அவர்கள் நம்மை அறியாமையில் வைப்பார்கள்.

22 ஜனங்கள் மூடத்தனமும், வீணானதுமான அநேக பல காரியங்களை தங்கள் இருதயங்களிலே யோசித்தார்கள்; சாத்தான் அவர்களைத் தொடர்ந்து அக்கிரமம் செய்ய தூண்டிவிட்டபடியால், அவர்கள் மிகவும் கலங்கிப்போனார்கள்; ஆம், நன்மையானதிற்கும், வரப்போகிறவைகளுக்கும் விரோதமாக, ஜனங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தும்படியாக அவன் தேசம் முழுவதும் போய் வதந்திகளையும், பிணக்குகளையும் பரப்பினான்.

23 கர்த்தருடைய ஜனங்களுக்குள்ளே அறிகுறிகளும், அதிசயங்களும் செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அநேக அற்புதங்களை நடப்பித்திருந்தும், சாத்தான் தேசம் முழுவதுமுள்ள ஜனங்களின் இருதயங்களை இறுகப் பிடித்திருந்தான்.

24 இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் தொண்ணூறாவது வருஷமும் முடிவுற்றது.

25 இப்படியாக, ஏலமன், மற்றும் அவனுடைய குமாரர்களுடைய பதிவேட்டின்படி, ஏலமனின் புஸ்தகம் முடிவுற்றது.