வேதங்கள்
ஏலமன் 3


அதிகாரம் 3

அநேக நேபியர் வடதேசத்திற்குக் குடிபெயர்தல் – அவர்கள் காரையினால் வீடுகளைக் கட்டுதலும், அநேக பதிவேடுகளை வைத்திருத்தலும் – பல்லாயிரக்கணக்கானோர் மனம்மாறி ஞானஸ்நானம் பெறுதல் – தேவ வார்த்தை மனுஷரை இரட்சிப்புக்கேதுவாய் நடத்துகிறது – ஏலமனின் குமாரனாகிய நேபி நியாயாசனத்தில் அமர்தல். ஏறக்குறைய கி,மு. 49–39.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தி மூன்றாம் வருஷத்தில் சபையில் கொஞ்சம் பெருமை உண்டாயிருந்தது. அதினிமித்தம் நேபியின் ஜனங்களுக்குள்ளே சில பிரிவினைகள் உண்டானதைத் தவிர மற்ற எந்த பிணக்குகளும் ஜனங்களுக்குள்ளிருக்கவில்லை. அப்பிரச்சினையோ நாற்பத்தி மூன்றாம் வருஷத்திலே சரிசெய்யப்பட்டது.

2 நாற்பத்தி நாலாம் வருஷத்தில் ஜனங்களுக்குள் எந்த பிணக்குமில்லை. நாற்பத்தி ஐந்தாம் வருஷத்திலும் அதிக பிணக்குகள் எதுவுமில்லை.

3 அந்தப்படியே, நாற்பத்தி ஆறாம் வருஷத்தில், ஆம், அங்கே அதிக பிணக்குகளும், அநேக பிரிவினைகளும் உண்டானது; அதனாலே மிகவும் அதிகமானோர் சாரகெம்லா தேசத்தைவிட்டு வடக்கேயுள்ள தேசத்தை சுதந்தரிக்கும்படி அத்தேசத்திற்குப் போனார்கள்.

4 அவர்கள் மிகவும் தொலைவான தூரம் பிரயாணம் பண்ணி, பெரும் நீர்நிலை, மற்றும் அநேக நதிகள் அண்டைக்கும் வந்தார்கள்.

5 ஆம், அந்த தேசத்தை முன்னமே சுதந்தரித்த அநேக குடிகளின் நிமித்தமாக, பாழாய்ப் போகாததும், மரங்கள் இல்லாத, எல்லா பகுதிகளுக்கும் அவர்கள் சிதறிப் போனார்கள்.

6 இப்பொழுதும் மரங்கள் தவிர, தேசத்தின் எப்பகுதியும் பாழாய்ப் போயிருக்கவில்லை; ஆனால், தேசத்தை முன் சுதந்தரித்த ஜனங்களின் மிகுதியான அழிவினிமித்தம், அது பாழ்கடிப்பு என்று அழைக்கப்பட்டது.

7 அங்கே தேசத்தின்மேலே சில மரங்களே இருந்ததினிமித்தம், அங்கு போன ஜனங்கள் காரையினால் செய்யப்படும் வேலையில் நிபுணர்களானார்கள்; ஆதலால் அவர்கள் காரையினால் வீடுகளைக் கட்டி அதிலே குடியிருந்தார்கள்.

8 அந்தப்படியே, அவர்கள் பெருகி, படர்ந்து, தென் தேசத்திலிருந்து வடதேசத்திற்குப்போய், தென் சமுத்திரம் தொடங்கி வடசமுத்திரம் மட்டுமாயும், மேற்கு சமுத்திரம் தொடங்கி கிழக்கு சமுத்திரம் மட்டுமாயும், பூமியின் மீதெங்கும் போனார்கள்.

9 வட தேசத்தில் இருந்த ஜனங்கள் கூடாரங்களிலும், காரையினாலான வீடுகளிலும் வாசம் பண்ணி, தக்க நேரத்தில் தங்கள் வீடுகளையும், பட்டணங்களையும், தங்கள் ஆலயங்களையும், தங்கள் ஜெப ஆலயங்களையும், தங்கள் பரிசுத்த ஸ்தலங்களையும், எல்லாவிதமான தங்கள் கட்டிடங்களையும் கட்டும்படியாக தேசத்தின் மீதெங்கும் துளிர்விடுகிற எந்த மரத்தையும் வளரச் செய்தார்கள்.

10 அந்தப்படியே, வடதேசத்தில் மரங்கள் மிகவும் குறைவாக இருந்ததால், அவைகளைக் கப்பல் வழியே அனுப்பி வைத்தார்கள்.

11 இப்படியாக வடதேசத்திலுள்ளவர்கள் மரத்தினாலும், காரையினாலும், அநேக பட்டணங்களைக் கட்டும்படியாக இவர்கள் உதவினார்கள்.

12 அந்தப்படியே, பிறப்பிலேயே லாமானியர்களாயிருந்த அம்மோனின் ஜனங்கள் அநேகரும் இந்த தேசத்திற்குப் போனார்கள்.

13 இப்பொழுதும் இந்த ஜனங்களில் அநேகரால், தங்களின் நடவடிக்கைகளைக் கொண்ட பல பதிவேடுகள் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் அவர்களைக் குறித்து, குறிப்பாகவும் பெரிதாகவும் இருக்கின்றன.

14 ஆனால் இதோ, லாமானியர் நேபியரைப்பற்றியும், அவர்களின் யுத்தங்கள், பிணக்குகள், பிரிவினைகள், அவர்களின் போதனைகள், அவர்களின் தீர்க்கதரிசனங்கள், அவர்களின் கப்பல் வணிகம், அவர்கள் கப்பல் கட்டுதல், ஆலயங்கள், ஜெபவீடுகள், மற்றும் பரிசுத்த ஸ்தலங்களைக் கட்டுதல், அவர்களின் நீதி, அவர்களின் துன்மார்க்கம், அவர்களின் கொலைகள் அவர்களின் களவுகள், அவர்களின் சூறையாடல்கள், மற்றும் அவர்களின் எல்லாவிதமான அருவருப்புகள், வேசித்தனங்களைப்பற்றிய விவரம், ஆம், இந்த ஜனங்களின் நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பாகம்கூட இதில் அடக்கப்பட முடியவில்லை.

15 ஆனால் இதோ, அநேக புஸ்தகங்களும், எல்லாவிதமான அநேக பதிவேடுகளும் அங்கே இருக்கின்றன. அவைகள் குறிப்பாக, நேபியர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தன.

16 நேபியர்கள் மீறுதலினுள் விழுந்து, கொலை செய்யப்பட்டு, களவாடப்பட்டு, வேட்டையாடப்பட்டு, துரத்தப்பட்டு, பூமியின் பரப்பின் மீதெங்கும் சிதறடிக்கப்பட்டு, இனி ஒருபோதும் நேபியர்கள் என்று அழைக்கப்படாதபடி லாமானியர்களுடன் கலந்து துன்மார்க்கராயும், பொல்லாதவர்களாயும், ஆக்ரோஷமுள்ளவர்களாயும், ஆம், லாமானியர்களாய் மாறிப்போவதற்கு முன்னதாக, அவைகள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு கையளிக்கப்பட்டு வந்தன.

17 இப்பொழுதும், நான் என்னுடைய விவரத்திற்குத் திரும்புகிறேன்; நேபியின் ஜனங்களுக்குள்ளே பெரிய பிணக்குகளும், குழப்பங்களும், யுத்தங்களும், கலகங்களும் நடந்த பின்னரே நான் பேசியவை சம்பவித்தன.

18 நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தி ஆறாம் வருஷம் முடிவுற்றது;

19 அந்தப்படியே, நாற்பத்தி ஏழாம் வருஷத்திலும், நாற்பத்தி எட்டாம் வருஷத்திலும் தேசத்திலே பெரிய பிணக்குகள் இன்னும் இருந்தன.

20 எனினும் ஏலமன் நியாயாசனத்தை நியாயத்தோடும், நேர்மையோடும் காத்துவந்தான்; ஆம், அவன் தேவ கட்டளைகளையும், நியாயத்தீர்ப்புகளையும், கட்டளைகளையும் கைக்கொண்டுவந்தான்; அவன் தேவ பார்வைக்கு சரியாய்பட்டதைத் தொடர்ந்து செய்து வந்தான்; அவன் தன் தகப்பனின் வழிகளிலே நடந்து தேசத்தில் விருத்தியடைந்தான்.

21 அந்தப்படியே, அவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனுக்கு நேபியின் நாமத்தையும், இளையவனுக்கு லேகியின் நாமத்தையும் கொடுத்தான். அவர்கள் கர்த்தரின் வழியிலே வளர ஆரம்பித்தார்கள்.

22 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தி எட்டாம் வருஷத்தின் பிற்பகுதியில், நேபியர்களுக்குள்ளே யுத்தங்களும் பிணக்குகளும் சிறிதளவு குறைய ஆரம்பித்தன.

23 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தி ஒன்பதாம் வருஷத்தில் ராஜாங்கத் தலைமைக்குத் தெரியாமல் தேசத்தில் அதிகம் குடியேறிய பகுதியில் காதியாந்தன் என்னும் கொள்ளைக்காரன் நிலைவரப்படுத்தின இரகசிய சங்கத்தைத் தவிர தேசத்திலே தொடர்ந்து சமாதானம் ஸ்தாபிக்கப்பட்டது; ஆதலால் அவர்கள் தேசத்திலிருந்து அழிக்கப்படவில்லை.

24 அந்தப்படியே, அதே வருஷத்தில் ஆயிரக்கணக்கானோர் சபையிலே தங்களைச் சேர்த்துக்கொண்டு, மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானம் பெறும் அளவுக்கு, சபை மிகவும் விருத்தியடைந்தது.

25 பிரதான ஆசாரியர்களும் ஆசிரியர்களும் கூட அளவுகடந்து ஆச்சரியப்படும்படியாக, சபையின் விருத்தி அதிகமாயும், ஜனங்களின் மேல் பொழிந்த ஆசீர்வாதங்கள் மிகுதியாயும் இருந்தன.

26 அந்தப்படியே, அநேக ஆத்துமாக்கள், ஆம், பல்லாயிரக்கணக்கானோர் ஞானஸ்நானம் பெற்று, தேவ சபையில் இணைந்துகொள்ளத்தக்கதாக, கர்த்தருடைய கிரியை விருத்தியடைந்தது.

27 இப்படியாக, தங்கள் இருதயத்தின் உண்மையோடு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை அழைக்கிற யாவருக்கும், அவர் இரக்கமுள்ளவராயிருப்பார் என்று பார்க்கிறோம்.

28 ஆம், இப்படியாக தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவில் விசுவாசமாயிருக்கிற யாவருக்கும் பரலோக வாசல் திறந்திருக்கிறது, என்று காண்கிறோம்.

29 ஆம், பிசாசினுடைய எல்லா வஞ்சனைகளையும், கண்ணிகளையும், தந்திரங்களையும் தகர்த்தெறிவதும், துன்மார்க்கரை பிடிக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிற அந்த என்றுமுள்ள துன்பமிக்க பாதாளத்தின் குறுக்கேயுள்ள இடுக்கமும், நெருக்கமுமான பாதையில் கிறிஸ்துவின் மனுஷனை நடத்துவதுமான, ஜீவனுள்ள வல்லமையுள்ள தேவ வார்த்தையைப் பற்றிப்பிடிக்கிற யாவரும்,

30 அவர்களுடைய ஆத்துமாக்கள், ஆம், அவர்களுடைய நித்திய ஆத்துமாக்கள் இனி வெளியே போகாதவாறு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் நம்முடைய எல்லா பரிசுத்த பிதாக்களோடும் உட்காருவதற்கு பரலோக ராஜ்யத்திலிருக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் போய்ச்சேரும், என நாம் பார்க்கிறோம்.

31 இந்த வருஷத்தில் சாரகெம்லா தேசத்திலும், நேபியர்களால் வசப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளெங்கிலும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் தொடர்ந்து களிகூருதல் உண்டாயிருந்தது.

32 அந்தப்படியே, நாற்பத்தி ஒன்பதாம் வருஷத்தின் மீதி நாட்களிலும் அங்கே சமாதானமும், மிகுந்த சந்தோஷமும் உண்டாயிருந்தது; ஆம், நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பதாவது வருஷத்திலும் தொடர்ந்து, சமாதானமும் மிகுந்த சந்தோஷமும் உண்டாயிருந்தது.

33 நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பத்தோறாம் வருஷத்திலும் அங்கே சமாதானம் நிலவியது. ஆயினும் சபையினுள் பெருமை நுழையத் துவங்கியது, தேவ சபையினுள் அல்ல, தேவ சபையினுள் சார்ந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணுகிற ஜனங்களினுடைய மனதில்.

34 அவர்கள் தங்கள் சகோதரர் அநேகரைத் துன்பப்படுத்தும்படியாக பெருமையில் உயர்த்தப்பட்டிருந்தார்கள். இப்பொழுது இது பெரிய பொல்லாப்பாயிருந்தது. இதினிமித்தம் ஜனங்களில் மிகுந்த தாழ்மையுடைய பகுதியினர் அதிக துன்புறுத்தல்களையும் சகித்து, மிகுந்த உபத்திரவங்களினூடே நடக்கச் செய்தது.

35 அவர்கள் இருதயம் தூய்மையாக்கப்பட்டு, தேவனிடம் தங்கள் இருதயங்களைக் கொடுப்பதினிமித்தமே வருகிற சுத்திகரிப்பினால் சுத்திகரிக்கப்படுமளவிற்கும், அவர்கள் ஆத்துமாக்கள் சந்தோஷத்தாலும், ஆறுதலாலும் நிரப்பப்படும் வரைக்குமாய், அவர்கள் உபவாசமிருந்து, அடிக்கடி ஜெபித்து, தங்கள் தாழ்ச்சியில் மிகுந்த பெலனாயும், கிறிஸ்துவின் விசுவாசத்தில் மிக்க உறுதியாயும் இருந்தார்கள்.

36 அந்தப்படியே, ஜனங்களுடைய மிகுந்த ஐஸ்வரியத்தினிமித்தமும், தேசத்தில் அவர்கள் விருத்தியடைந்ததினிமித்தமும் அவர்களுடைய இருதயங்களில் மிகுந்த பெருமை நுழையத் துவங்கியது தவிர, ஐம்பத்தி இரண்டாம் வருஷமும் சமாதானமாய் முடிந்தது. அது அவர்களுக்குள் நாளுக்கு நாள் வளரத்துவங்கியது.

37 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஐம்பத்து மூன்றாம் வருஷத்தில் ஏலமன் மரித்து, அவனுடைய மூத்தகுமாரன் நேபி, அவனுக்குப் பதிலாய் ஆளுகையைத் தொடங்கினான். அந்தப்படியே, அவன் நியாயாசனத்தில் நியாயத்தோடும், நேர்மையோடும் அமர்ந்திருந்தான்; ஆம், அவன் தேவ கட்டளைகளைக் கைக்கொண்டு, தன் தகப்பனின் வழிகளிலே நடந்தான்.