விசுவாசத்தின் அடிச்சுவடுகளுடன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்
கிறிஸ்து இன்று நம்மை கடினமான காலங்களில் சுமக்க முடியும். ஆரம்பகால முன்னோடிகளுக்காக அவர் அதைச் செய்தார், இப்போது அவர் நம் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்கிறார்.
Faith in Every Footstep” பாடலைப் பாடியதற்காக சேர்ந்திசைக் குழுவினருக்கு நன்றி. 1847 ம் ஆண்டில் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு ஆரம்பகால முன்னோடிகளின் வருகையின் 150 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக, 1996 ம் ஆண்டில் சகோதரர் நியூவெல் டேலி1 என்பவரால் அந்தப் பாடலின் இசை மற்றும் வார்த்தைகள் எழுதப்பட்டன.
இந்தப் பாடல் அந்தக் கொண்டாட்டத்திற்கு ஆயத்தத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும், அதன் செய்தி உலகம் முழுவதற்கும் பொருந்தும்.
நான் எப்போதும் கோரஸை விரும்பினேன்:
ஒவ்வொரு அடிச்சுவட்டிலும் விசுவாசத்துடன், கர்த்தராகிய கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம்;
அவருடைய பரிசுத்த அன்பின் மூலம் நம்பிக்கை நிரப்பப்பட்டு, ஒருமனதாகப் பாடுகிறோம்.2
சகோதர சகோதரிகளே, விசுவாசத்தின் அடிச்சுவடுகளுடன் நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, நம்பிக்கை இருக்கிறது என்று நான் சாட்சி கூறுகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையில் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நமது தவறுகள், துக்கங்கள் போராட்டங்கள், சோதனைகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்க நம்பிக்கை உள்ளது. மனந்திரும்புதலிலும் மன்னிக்கப்படுவதிலும் மற்றவர்களை மன்னிப்பதிலும் நம்பிக்கை இருக்கிறது. கிறிஸ்துவில் நம்பிக்கையும் சமாதானமும் இருக்கிறது என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர் இன்று நம்மை கடினமான காலங்களில் சுமக்க முடியும். ஆரம்பகால முன்னோடிகளுக்காக அவர் அதைச் செய்தார், இப்போது அவர் நம் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்கிறார்.
இந்த ஆண்டு சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு ஆரம்பகால முன்னோடிகளின் வருகையின் 175 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது எனது முன்னோர்களைப்பற்றி சிந்திக்க காரணமாக இருந்தது, அவர்களில் சிலர் நாவூவிலிருந்து சால்ட் லேக் பள்ளத்தாக்கு வரை நடந்தனர். இளமையில் சமவெளியில் நடந்த கொள்ளுத் தாத்தா பாட்டிகள் எனக்குள்ளனர். ஹென்றி பல்லார்டுக்கு 20 வயது;3 மார்கரெட் மெக்நீலுக்கு 13 வயது;4, பின்னர் சபையின் ஆறாவது தலைவரான ஜோசப் எஃப். ஸ்மித், சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு வந்தபோது அவருக்கு வயது 9.5
குளிர்ந்த குளிர்காலம், நோய், போதிய உடை மற்றும் உணவு இல்லாமை போன்ற அனைத்து வகையான பற்றாக்குறைகளையும் பாதையில் அவர்கள் எதிர்கொண்டனர். உதாரணமாக, ஹென்றி பல்லார்ட் சால்ட் லேக் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தபோது, அவர் “வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை” கண்டு மகிழ்ந்தார், ஆனால் அவர் அணிந்திருந்த ஆடைகள் அவரது உடலை மறைக்காத அளவுக்கு தேய்ந்துவிட்டதால், யாராவது தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்ந்தார். இருட்டும் வரை நாள் முழுவதும் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர் அவர் ஒரு வீட்டிற்குச் சென்று தனது பயணத்தைத் தொடரவும், தனது பெற்றோரைக் கண்டுபிடிக்கவும் ஆடைக்காக கெஞ்சினார். அவர் தனது வருங்கால வீட்டை பாதுகாப்பாக அடைந்ததற்காக தேவனுக்கு நன்றி தெரிவித்தார்.6
என் கொள்ளுத் தாத்தா பாட்டிகள், இயேசு கிறிஸ்துவை தங்கள் ஒவ்வொரு சோதனையிலும் விசுவாசத்தின் அடிச்சுவடுகளுடன் பின்பற்றினார்கள். ஒருபோதும் மனந்தளராத அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்று உங்கள் விசுவாசத்தின் அடிச்சுவடுகள் உங்கள் சந்ததியினரை ஆசீர்வதிப்பதைப் போல, அவர்களின் விசுவாசத்தின் அடிச்சுவடுகள் என்னையும் அடுத்தடுத்த தலைமுறைகளையும் ஆசீர்வதித்துள்ளன.
முன்னோடி என்ற சொல் பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்லாகும். ஒரு புதிய பிரதேசத்தை ஆராய்ந்து அல்லது குடியேறியவர்களில் முதன்மையான நபரை பெயர்ச்சொல்லாக இது குறிக்கும். ஒரு வினைச்சொல்லாக, மற்றவர்கள் பின்பற்றுவதற்கான வழியைத் திறப்பது அல்லது தயார் செய்வது என்று பொருள் கொள்ளலாம்.7
மற்றவர்களுக்கு வழியை ஆயத்தம் செய்த முன்னோடிகளைப்பற்றி நான் நினைக்கும் போது, நான் முதலில் ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசியை நினைத்துப் பார்க்கிறேன். ஜோசப் ஒரு முன்னோடியாக இருந்தார், ஏனென்றால் அவருடைய விசுவாசத்தின் அடிச்சுவடுகள் அவரை மரங்களின் தோப்புக்கு அழைத்துச் சென்றன, அங்கு அவர் ஜெபத்தில் முழங்கால்படியிட்டு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையைப் பெறுவதற்கான வழியை நமக்காகத் திறந்தார். 1820 ம் ஆண்டு வசந்தகால காலை வேளையில் “தேவனிடம் கேளுங்கள்”8 என்ற ஜோசப்பின் விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையை மறுஸ்தாபிதம் செய்வதற்கான வழியைத் திறந்தது, அதில் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களும் பூமியில் மீண்டும் சேவை செய்ய அழைக்கப்பட்டனர்.9 “‘ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்று நான் அறிவேன்’. அவருடைய விசுவாசம் நிறைந்த அடிச்சுவடுகள் அவரை பிதாவாகிய தேவனின், அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் மண்டியிட வழிவகுத்தது என்பதை நான் அறிவேன்.
ஜோசப் தீர்க்கதரிசியின் விசுவாசத்தின் அடிச்சுவடுகள், இயேசுவின் மற்றொரு ஏற்பாடாகவும் அவருடைய பாவநிவாரண கிருபையாகவும் இருக்கும், அது மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டுவருவதில் கர்த்தருடைய கருவியாக இருக்க அவருக்கு சாத்தியமாக்கியது.
ஜோசப் ஸ்மித்தின் நம்பமுடியாத கஷ்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட விசுவாசத்தின், விடாமுயற்சியின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சபையை மீண்டும் பூமியில் ஸ்தாபிப்பதில் தேவனின் கரங்களில் ஒரு கருவியாக இருக்க அவரால் முடிந்தது என்று நான் சாட்சியமளிக்கிறேன்.
கடந்த பொது மாநாட்டின் போது, எனது முழுநேர ஊழிய சேவை என்னை எவ்வாறு ஆசீர்வதித்தது என்பதைப்பற்றி நான் பேசினேன். நம்முடைய பரலோக பிதாவின் மகிமையான இரட்சிப்புத் திட்டம், ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம் மற்றும் மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப்பற்றி நான் கற்பித்தபோது நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட போதனைகளும் கோட்பாடுகளும் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் செய்தியைக் கேட்கத் தயாராக இருப்பவர்களுக்குக் கற்பிப்பதில் என் விசுவாசத்தின் அடிச்சுவடுகளை வழிநடத்தின.
இன்று நமது ஊழியக்காரர்கள் தற்கால முன்னோடிகளாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் இந்த மகிமையான செய்தியை உலகெங்கிலும் உள்ள மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இதனால் நமது பரலோக பிதாவின் பிள்ளைகள் அவரையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள வழி திறக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வது, சபையின் மற்றும் ஆலயத்தின் நியமங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் அனைவரையும் ஆயத்தப்படுத்தவும் பெறவும் வழி திறக்கிறது.
கடந்த பொது மாநாட்டில், தலைவர் ரசல் எம். நெல்சன், “ஒவ்வொரு தகுதியுள்ள, திறமையான இளைஞனையும் ஒரு ஊழியத்துக்குத் தயார் செய்து சேவை செய்யும்படி தேவன் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றும், “இளம் மற்றும் திறமையான சகோதரிகளுக்கு ஊழியம் ஒரு வல்லமைவாய்ந்த, ஆனால் விருப்பமான வாய்ப்பாகும்” என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.10
அன்பான வாலிபர்களே, இளம் பெண்களே, உங்கள் விசுவாசத்தின் அடிச்சுவடுகள் கர்த்தருடைய அழைப்பைப் பின்பற்றி, தற்கால முன்னோடிகளாக ஊழியங்களுக்குச் சேவை செய்ய, தேவனின் பிள்ளைகள் அவருடைய மகிமைக்குத் திரும்பிச் செல்லும் உடன்படிக்கைப் பாதையைக் கண்டுபிடித்துத் தொடர வழியைத் திறப்பதன் மூலம் உங்களுக்கு உதவும்.
தலைவர் நெல்சன் சபையில் முன்னோடியாக இருந்துள்ளார். ஒரு அப்போஸ்தலராக அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக பல நாடுகளுக்குச் சென்று திறந்துள்ளார். தீர்க்கதரிசியாகவும் சபையின் தலைவராகவும் ஆன சிறிது நேரத்திலேயே, வெளிப்பாட்டைப் பெறுவதற்கான நமது ஆவிக்குரிய திறனை அதிகரிக்க அவர் நம்முடன் வேண்டிக்கொண்டார்.11 நம்முடைய சாட்சிகளை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை அவர் நமக்கு தொடர்ந்து கற்பிக்கிறார். இளம் வயதினருக்கான ஜெபத்தில், அவர் கூறினார்:
“உங்கள் சாட்சியத்திற்கு பொறுப்பேற்குமாறு நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். அதற்காக உழைத்திடுங்கள். அதை சொந்தமாக்குங்கள் அதை கவனித்துக்கொள்ளுங்கள். அது வளரும்படியாக அதைப் போஷியுங்கள்.
[பின்னர்] உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ எதிர்பாருங்கள்.”12
ஆவிக்குரிய பிரகாரமாக சுயசார்புடன் இருப்பது எப்படி என்பதை அவர் நமக்குக் கற்பிக்கிறார். “வரவிருக்கும் நாட்களில், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதல், வழிநடத்துதல், ஆறுதல் மற்றும் நிலையான செல்வாக்கு இல்லாமல் ஆவிக்குரிய பிரகாரமாக உயிர்வாழ்வது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.”13
இன்று, தலைவர் ரசல் எம். நெல்சன் பூமியில் கர்த்தருடைய தீர்க்கதரிசி என நான் சாட்சியமளிக்கிறேன்.
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வழியை ஆயத்தப்படுத்துவதில் இறுதியான முன்னோடி. உண்மையில், இரட்சிப்பின் திட்டம் நிறைவேற்றப்படுவதற்காகவும், நாம் மனந்திரும்பவும், அவர்மீதுள்ள விசுவாசத்தின் மூலம், நமது பரலோக பிதாவிடம் திரும்பவும் முடிகிறதற்கு அவரே “வழி”14.
இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”15 நம்மை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்; நம்முடைய சோதனைகளில் அவர் நம்மிடம் வருவார்.16 இருதயத்தின் முழுநோக்கத்தோடு [அவரிடத்தில்] வாருங்கள், [அவர்] [நம்மை] குணப்படுத்துவேன்”17 என அவர் நம்மை அழைத்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து நமது இரட்சகர், நமது மீட்பர், பிதாவுடன் நமது பரிந்துபேசுபவர் என்று நான் சாட்சி கூறுகிறேன். நம்முடைய பரலோக பிதா, அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஒவ்வொரு அடிச்சுவடுகளிலும் விசுவாசத்துடன் பின்பற்றுவதன் மூலம் நாம் அவரிடம் திரும்புவதற்கான வழியைத் திறந்திருக்கிறார்.
என்னுடைய கொள்ளுத் தாத்தா பாட்டிகளும் மற்ற ஆரம்பகால முன்னோடிகளும் வாகனங்கள், கைவண்டிகள் மற்றும் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு நடந்து செல்லும்போது பல தடைகளை எதிர்கொண்டனர். நாமும் நம் வாழ்வில் தனிப்பட்ட பயணங்களில் சவால்களை எதிர்கொள்வோம். நாம் செங்குத்தான மலைகள் மற்றும் ஆழமான பனிப்பொழிவுகள் வழியாக கைவண்டிகளைத் தள்ளுவது அல்லது மூடப்பட்ட வாகனங்களை ஓட்டுவதில்லை; நம்முடைய நாளின் சோதனைகள் மற்றும் சவால்களை ஆவிக்குரிய பிரகாரமாக கடக்க அவர்கள் செய்தது போல் நாமும் முயற்சி செய்கிறோம். நாம் நடக்க பாதைகள் உள்ளன; நம்மிடம் குன்றுகள் உள்ளன, சில சமயங்களில் ஏறுவதற்கு மலைகள் உள்ளன. இன்றைய சோதனைகள் ஆரம்பகால முன்னோடிகளின் சோதனைகளை விட வித்தியாசமாக இருந்தாலும், அவை நமக்கு குறைந்த சவாலானவை அல்ல.
ஆரம்பகால முன்னோடிகளைப் போலவே, தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதும், விசுவாசத்தின் உடன்படிக்கைப் பாதையில் நம் கால்களை உறுதியாக நிலைநிறுத்துவதும் முக்கியம்.
ஒவ்வொரு அடிச்சுவடுகளிலும் விசுவாசத்துடன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோம். நாம் கர்த்தருக்குச் சேவை செய்ய வேண்டும், ஒருவருக்கொருவர் சேவை செய்ய வேண்டும். நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடித்து, மதித்து நடப்பதன் மூலம் நாம் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கான அவசர உணர்வை நாம் இழக்கக்கூடாது. தேவன்மீதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுமான நமது அர்ப்பணிப்பையும் அன்பையும் மழுங்கடிக்க சாத்தான் முயற்சிக்கிறான். யாரேனும் தங்கள் வழியை இழந்தால், நாம் ஒருபோதும் நம் இரட்சகருக்கு தொலைந்து போனவர்களாக இருக்க மாட்டோம் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். மனந்திரும்புதலின் ஆசீர்வாதத்துடன், நாம் அவரிடம் திரும்பலாம். நாம் உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க முயற்சி செய்யும்போது, கற்றுக்கொள்ளவும், வளரவும், மாற்றவும் அவர் நமக்கு உதவுவார்.
நாம் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நமது ஒவ்வொரு அடிச்சுவடுகளிலும் விசுவாசம் வைத்து, அவர் மீது கவனம் செலுத்தி, உடன்படிக்கையின் பாதையில் நம் கால்களை உறுதியாக நிலைநிறுத்துவோமாக என்பது எனது தாழ்மையான ஜெபம், இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.