இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினார்கள்.
இயேசு ஜீவிக்கிறார் என்றும், அவர் நம்மை அறிந்திருக்கிறார் என்றும், குணமாக்கவும், மாற்றவும், மன்னிக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது என்பதற்கு நான் சாட்சியளிக்கிறேன்.
சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே, 2013-ல் என் மனைவி லாரலும் நானும் செக் ஸ்லோவாக் ஊழியத்தில் ஊழிய தலைவர்களாக பணியாற்ற அழைக்கப்பட்டோம். எங்கள் நான்கு குழந்தைகளும் எங்களுடன் பணியாற்றினர்.1 புத்திசாலித்தனமான ஊழியக்காரர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க செக் மற்றும் ஸ்லோவாக் பரிசுத்தர்களால் நாங்கள் ஒரு குடும்பமாக ஆசீர்வதிக்கப்பட்டோம். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம்.
எங்கள் குடும்பம் ஊழிய களத்தில் நுழைந்தபோது, மூப்பர் ஜோசப் பி. விர்த்லின் கற்பித்த ஒன்று எங்களுடன் வந்தது. “மாபெரும் கட்டளை” என்ற தலைப்பில் ஒரு செய்தியில், மூப்பர் விர்த்லின், “நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். “ஆம்” என்று பதிலளிக்கும் எங்களுக்கு அவர் அளித்த அறிவுரை எளிமையானது மற்றும் ஆழமானது: “ அவருடன் நேரத்தை செலவிடுங்கள். அவருடைய வார்த்தைகளை தியானியுங்கள். அவருடைய நுகத்தை உங்கள் மீது எடுத்துக் கொள்ளுங்கள். புரிந்துகொண்டு கீழ்ப்படிய முற்படுங்கள்.”2 மூப்பர் விர்த்லின் பின்னர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளுக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுக்க விரும்புவோருக்கு மாற்றும் ஆசீர்வாதங்களை வாக்களித்தார்.3
நாங்கள் மூப்பர் விர்த்லின் ஆலோசனையையும் வாக்களிப்பையும் ஏற்றுக்கொண்டோம். எங்களுடைய ஊழியக்காரர்களுடன் சேர்ந்து, புதிய ஏற்பாட்டிலிருந்து மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் மற்றும் மார்மன் புஸ்தகத்திலிருந்து 3 நேபி ஆகியவற்றைப் படிப்பதில் இயேசுவுடன் நீண்ட நேரம் செலவிட்டோம். ஒவ்வொரு ஊழியக் கூட்டத்தின் முடிவிலும், “ஐந்து சுவிசேஷங்கள்”4 என்று நாம் குறிப்பிடுவதில் இயேசுவைப் பற்றி படித்தல், கலந்துரையாடுதல், கருத்தில் கொள்ளுதல் மற்றும் கற்றலில் நாங்கள் மீண்டும் ஈடுபட்டோம்,.
எனக்கும், லாரலுக்கும், எங்கள் ஊழியக்காரர்களுக்கும், வேதத்தில் இயேசுவோடு நேரம் செலவழித்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அவர் யார், அவருக்கு எது முக்கியம், என்பதற்காக அவர் மீது ஆழமாக பாராட்டை உணர்ந்தோம். அவர் எவ்வாறு கற்பித்தார், என்ன கற்பித்தார், அவர் அன்பைக் காட்டிய வழிகள், ஆசீர்வதித்து சேவை செய்ய அவர் என்ன செய்தார், அவரது அற்புதங்கள், துரோகத்திற்கு அவர் எவ்வாறு பதிலளித்தார், கடினமான மனித உணர்ச்சிகளுடன் அவர் என்ன செய்தார், அவரது பட்டங்கள் மற்றும் நாமங்கள், எப்படி அவர் செவிகொடுத்தார், அவர் பிணக்கை எவ்வாறு தீர்த்தார், அவர் வாழ்ந்த உலகம், அவரது உவமைகள், ஒற்றுமை மற்றும் தயவை அவர் எவ்வாறு ஊக்குவித்தார், மன்னிக்கவும் குணப்படுத்தவும் அவரது திறன், அவரது பிரசங்கங்கள், அவரது ஜெபங்கள், அவரது பாவநிவாரண பலி, அவரது உயிர்த்தெழுதல், அவரது சுவிசேஷம் என்பனவற்றை ஒன்று சேர்ந்து கருத்தில் கொண்டோம்.
லூக்கா விவரித்தபடி, நாம் “இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடியபடி” இயேசு எரிகோவைக் கடந்து செல்லும்போது, “குள்ளனானபடியால்” சகேயு ஒரு அத்திமரத்தில் ஏற ஓடுவது போல் நாங்கள் அடிக்கடி உணர்ந்தோம்.5 நாம் நினைத்த அல்லது விரும்பியபடி இருக்கிற இயேசு அல்ல, மாறாக அவர் உண்மையாகவே இருந்தவர் மற்றும் இருக்கிறவர் போல.6 மூப்பர் விர்த்லின் வாக்களித்ததைப் போலவே, “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மாற்றத்தின் சுவிசேஷம்” என்பதை நாங்கள் மிகவும் உண்மையான வழியில் கற்றுக்கொண்டோம். “இது பூமியின் ஆண்களாகவும் பெண்களாகவும் நம்மை அழைத்துச் செல்கிறது மற்றும் நித்திய காலத்திற்கு ஆண்களாகவும் பெண்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கிறது.”7
அவை விசேஷித்த நாட்கள். “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று நாங்கள் நம்பினோம்.8 ப்ராக், பிராட்டிஸ்லாவா அல்லது ப்ர்னோவில் உள்ள பரிசுத்தமான மதியங்கள், ஒரு ஊழியமாக ஒன்றிணைந்து, இயேசுவின் வல்லமையையும் நிச்சயத்தையும் அனுபவிப்பது, எங்கள் அனைவரின் வாழ்விலும் தொடர்ந்து எதிரொலிக்கிறது.
நாங்கள் அடிக்கடி மாற்கு 2:1–12 படித்தோம். அங்குள்ள கதை அழுத்தமானது. அதன் ஒரு பகுதியை மாற்கிலிருந்து நேரடியாக வாசிக்க விரும்புகிறேன், பின்னர் எங்கள் ஊழியக்காரர்கள் மற்றும் பிறருடன் விரிவான படிப்பு மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு நான் அதைப் புரிந்துகொண்டதால் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.9
“சில நாட்களுக்குப்பின்பு [இயேசு] மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
“உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம் போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
“அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
“ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
“இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.”
கூட்டத்தில் சிலருடன் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகு,10 இயேசு வாத நோயால் பாதிக்கப்பட்ட மனிதனைப் பார்த்து, அவனை உடல் ரீதியாக குணப்படுத்துகிறார்:
“நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன்.
“உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”11
இப்போது நான் புரிந்து கொண்ட கதை: இயேசு தம் ஊழியத்தின் ஆரம்பத்தில், கலிலேயா கடலின் வடக்குக் கரையில் அமைந்துள்ள சிறிய மீன்பிடி கிராமமான கப்பர்நகூமுக்குத் திரும்ப வந்தார்.12 அவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதன் மூலமும் தீய ஆவிகளை வெளியேற்றுவதன் மூலமும் தொடர்ச்சியான அற்புதங்களைச் செய்தார்.13 இயேசு என்று அழைக்கப்படும் மனிதன் சொல்வதைக் கேட்கவும் அனுபவிக்கவும், கிராம மக்கள் அவர் தங்கியிருப்பதாக வதந்தி பரப்பப்பட்ட வீட்டில் கூடினர்.14 அவர்கள் கூடியபோது இயேசு போதிக்க ஆரம்பித்தார்.15
அந்த காலத்தில் கப்பர்நகூமில் உள்ள வீடுகள் தட்டையான கூரையுடன் கூடிய ஒற்றை மாடி குடியிருப்புகளாக சேர்ந்து இருந்தன.16 கூரை மற்றும் சுவர்கள், கல், மரம், களிமண் மற்றும் ஓலை ஆகியவற்றின் கலவையாக இருந்தன, வீட்டின் ஓரத்தில் சில எளிய படிகள் மூலம் உள்ளே செல்லலாம்.17 ஜனக்கூட்டம் வீட்டில் வேகமாகப் பெருகி, இயேசு போதித்துக்கொண்டிருந்த அறையை நிரப்பி, தெருவெங்கும் பரவியது.18
கதையானது “திமிர்வாதக்காரனான” ஒரு மனிதனையும் அவனது நான்கு நண்பர்களையும் மையமாகக் கொண்டுள்ளது.19 பக்கவாதம் என்பது வாதத்தின் ஒரு வடிவமாகும், இது பெரும்பாலும் பலவீனம் மற்றும் நடுக்கத்துடன் இருக்கும்.20 நால்வரில் ஒருவர் மற்றவர்களிடம் சொல்வதாக நான் கற்பனை செய்கிறேன், “இயேசு நமது ஊரில் இருக்கிறார். அவர் செய்த அற்புதங்களையும், அவர் குணமாக்கிய அனைவரையும் நாம் அறிவோம். நம் நண்பனை இயேசுவிடம் கொண்டு சென்றால், அவனும் குணமாகலாம்.”
எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நண்பரின் பாய் அல்லது படுக்கையின் ஒரு மூலையை எடுத்து, கப்பர்நகூமின் வளைந்த, குறுகிய, செப்பனிடப்படாத தெருக்களில் அவரைக் கொண்டு செல்லத் தொடங்குகிறார்கள்.21 தசைகள் வலிக்கிறது, அவர்கள் கடைசி மூலையில் திரும்புகிறார்கள், கூட்டம் அல்லது வேதம் அழைப்பது போல், கேட்க கூடிய மக்களின் “நெரிசல்” மிகவும் அதிகமாக இருப்பதால், இயேசுவிடம் செல்வது சாத்தியமில்லை.22 அன்புடனும் நம்பிக்கையுடனும் நால்வரும் விட்டுவிடவில்லை. மாறாக, அவர்கள் தட்டையான கூரையின் மீது படிகளில் ஏறி, தங்கள் நண்பனையும் அவனது படுக்கையையும் தங்களோடு கவனமாகத் தூக்கி, இயேசு போதித்துக் கொண்டிருக்கும் அறையின் கூரையை திறந்து, தங்கள் நண்பனைக் கீழே இறக்கிவிடுகிறார்கள்.23
ஒரு தீவிரமான கற்பித்தல் தருணத்தின் நடுவில் நடந்ததைக் கருத்தில் கொண்டால், இயேசு ஒரு உரசல் சத்தத்தைக் கேட்டு, மேலே பார்க்கிறார், தூசியும் ஓலையும் அறைக்குள் விழும்போது கூரையில் பெரிதாகி வரும் துளையைப் பார்க்கிறார். படுக்கையில் முடங்கிய ஒரு மனிதன் பின்னர் தரையில் இறக்கப்படுகிறான். குறிப்பிடத்தக்க வகையில், இது ஒரு குறுக்கீடு அல்ல, மாறாக முக்கியமான ஒன்று என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அவர் படுக்கையில் இருக்கும் மனிதனைப் பார்க்கிறார், பகிரங்கமாக அவனது பாவங்களை மன்னிக்கிறார், சரீர பூர்வமாக அவனைக் குணமாக்குகிறார்.24
மாற்கு 2ல் சொல்லப்பட்டதை மனதில் வைத்து பார்த்தால், இயேசு, கிறிஸ்துவாக பல முக்கியமான சத்தியங்கள் தெளிவாகின்றன. முதலாவதாக, நாம் நேசிக்கும் ஒருவர் கிறிஸ்துவிடம் வருவதற்கு நாம் உதவ முயற்சிக்கும் போது, பாவத்தின் பாரத்தை இறக்கி மன்னிக்கும் திறன் அவருக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நாம் அவ்வாறு செய்யலாம். இரண்டாவதாக, நாம் கிறிஸ்துவிடம் சரீர, உணர்ச்சி அல்லது பிற நோய்களைக் கொண்டு வரும்போது, குணப்படுத்துவதற்கும் ஆறுதலளிப்பதற்கும் அவருக்கு வல்லமை இருப்பதை அறிந்து நாம் அவ்வாறு செய்யலாம். மூன்றாவதாக, மற்றவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கு அந்த நால்வரைப் போல நாம் முயற்சி செய்யும்போது, அவர் நம்முடைய உண்மையான நோக்கங்களைக் காண்கிறார் என்பதையும், அவற்றை பொருத்தமான முறையில் மதிப்பளிப்பார் என்ற நிச்சயத்துடன் நாம் செய்யமுடியும்.
கூரையில் ஒரு துளை தோன்றியதால் இயேசுவின் போதனை தடைபட்டது என்பதை நினைவில் வையுங்கள். குறுக்கீடு செய்ய துளையிட்ட நால்வரைத் தண்டிப்பது அல்லது துரத்துவதற்கு மாறாக, “இயேசு அவர்களின் விசுவாசத்தைக் கண்டார்” என்று வேதம் நமக்குச் சொல்கிறது.25 அப்போது அந்த அதிசயத்தை கண்டவர்கள், “ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”26
சகோதர சகோதரிகளே, இரண்டு கூடுதல் அவதானிப்புகளுடன் முடிக்கிறேன். ஊழியக்காரர்கள், ஊழியர்கள், ஒத்தாசை சங்கத்தின் தலைவர்கள், ஆயர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உடன்பிறப்புகள் அல்லது நண்பர்கள் என நாம் அனைவரும் பிற்காலப் பரிசுத்தவான் சீடர்களாக மற்றவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு, நான்கு நண்பர்களால் வெளிப்படுத்தப்பட்ட குணங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை மற்றும் பின்பற்றத்தக்கவை.27 அவர்கள் தைரியமானவர்கள், மாற்றத்துக்கு ஏற்றவர்கள், மனஉறுதி, படைப்பாற்றல், பல்துறை திறன், நம்பிக்கை, உறுதிப்பாடு, விசுவாசம், நேர்மறை எண்ணம், அடக்கம், மற்றும் நிலைத்திருப்பவர்கள்.
கூடுதலாக, நான்கு நண்பர்கள் சமூகம் மற்றும் ஐக்கியம் ஆகியவற்றின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.28 கிறிஸ்துவிடம் தங்கள் நண்பனைக் கொண்டுவருவதற்காக, நான்கு பேரும் ஒவ்வொருவரும் படுக்கையின் ஒரு மூலையைத் தூக்க வேண்டும். ஒருவர் விட்டுவிட்டால், விஷயங்கள் கடினமாகிவிடும். இருவர் கைவிட்டால், வேலை திறம்பட முடியாமல் போய்விடும். தேவனுடைய ராஜ்யத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் நாம் ஆற்ற வேண்டிய ஒரு பங்கு இருக்கிறது.29 அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றி, நம் பங்கைச் செய்யும்போது, நம் மூலையைச் சுமக்கிறோம். அர்ஜென்டினா அல்லது வியட்நாம், அக்ரா அல்லது பிரிஸ்பேன், ஒரு கிளை அல்லது தொகுதி, ஒரு குடும்பம் அல்லது ஒரு ஊழிய தோழமை, நம் ஒவ்வொருவருக்கும் தூக்கிச் செல்ல ஒரு மூலை உள்ளது. நாம் செய்யும்போது, நாம் செய்தால், கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். அவர் அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்ததுபோல, நம்முடைய விசுவாசத்தைப் பார்த்து, ஒரு ஜனமாக நம்மை ஆசீர்வதிப்பார்.
வெவ்வேறு சமயங்களில் நான் ஒரு படுக்கையின் மூலையைச் சுமந்திருக்கிறேன், மற்ற நேரங்களில் நான் சுமந்து செல்லப்பட்ட ஒருவனாயிருந்திருக்கிறேன். இயேசுவின் இந்த குறிப்பிடத்தக்க கதையின் வல்லமையின் ஒரு பகுதி என்னவென்றால், சகோதர சகோதரிகளாக, கிறிஸ்துவிடம் வந்து மாற்றப்படுவதற்கு நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தேவை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
மாற்கு 2ல் இயேசுவுடன் நேரம் செலவழித்ததில் இருந்து நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் இவை.
“நாம் சருக்காமல் இருக்கவும், பயப்படாமல் இருக்கவும், ஆனால் நாம் நமது விசுவாசத்தில் வலுவாகவும், நமது வேலையில் பலமாக இருக்கவும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாம் [நமது மூலையைச் சுமக்க] முடியும்படியாக தேவன் அருள்வாராக.”30
இயேசு ஜீவிக்கிறார் என்றும், அவர் நம்மை அறிந்திருக்கிறார் என்றும், குணமடையவும், மாற்றவும், மன்னிக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.