பொது மாநாடு
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்: மன்னிப்பின் குணப்படுத்தும் பாதை
அக்டோபர் 2022 பொது மாநாடு


10:7

சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்: மன்னிப்பின் குணப்படுத்தும் பாதை

உங்கள் வாழ்வின் சாம்பலுக்கு பதில் சிங்காரம் தரும் வகையில் வாழ்வது இரட்சகரைப் பின்பற்றும் விசுவாசச் செயலாகும்.

1 சாமுவேல் புத்தகத்தில் இஸ்ரவேலின் வருங்கால தாவீது ராஜா மற்றும் அபிகாயில் என்ற பெண்ணின் அதிகம் அறியப்படாத கதை உள்ளது.

சாமுவேலின் மரணத்திற்குப் பிறகு, தாவீதும் அவனது மனுஷரும் தாவீதின் உயிரை வாங்க வகை தேடிய சவுல் ராஜாவிடமிருந்து விலகிச் சென்றனர். அவர்கள் நாபால் என்ற பொல்லாப்புடைய ஒரு செல்வந்தரின் மந்தைகளுக்கும் வேலையாட்களுக்கும் காவல் செய்தார்கள். நாபாலுக்கு வணக்கம் செலுத்தவும், மிகவும் தேவையான உணவு மற்றும் பொருட்களைக் கேட்கவும் தாவீது தனது 10 ஆட்களை அனுப்பினான்.

நாபால் தாவீதின் வேண்டுகோளுக்கு அவமானத்துடன் பதிலளித்தான் மற்றும் அவனது ஆட்களை வெறுங்கையுடன் அனுப்பினான்.

கோபமடைந்த தாவீது, நாபாலுக்கும் அவன் வீட்டாருக்கும் எதிராகப் போவதற்குத் தன் ஆட்களைத் தயார்படுத்தினான், “நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்,” என்று சொன்னான்.1 ஒரு வேலைக்காரன் நாபாலின் மனைவி அபிகாயிலிடம், தாவீதின் ஆட்களை தன் கணவன் தவறாக நடத்துவதைப் பற்றி சொன்னான். அபிகாயில் விரைவாக தேவையான உணவு மற்றும் பொருட்களை சேகரித்து, இடைமறிக்கச் சென்றாள்.

அபிகாயில் அவனைச் சந்தித்தபோது, “தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,

“அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; …

“இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை …

“இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. …

“உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், …

“அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

“நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

“அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன்” என்றான்.2

இருவரும் சமாதானமாக புறப்பட்டனர்.

இந்த விவரத்தில், அபிகாயிலை இயேசு கிறிஸ்துவின் வல்லமைவாய்ந்த மாதிரியாக அல்லது அடையாளமாகக் காணலாம்.3 அவருடைய பாவநிவாரண பலியின் மூலம், அவர் போரிடும் இருதயத்தின் பாவத்திலிருந்தும் பாரத்திலிருந்தும் நம்மை விடுவித்து, நமக்குத் தேவையான ஆதரவை வழங்குவார்.4

அபிகாயில் நாபாலின் பாவத்தைத் தன்மீது சுமக்கத் தயாராக இருந்ததைப் போலவே, இரட்சகர், புரிந்துகொள்ள முடியாத வகையில், நம்முடைய பாவங்களையும், நம்மைக் காயப்படுத்திய அல்லது புண்படுத்தியவர்களின் பாவங்களையும் அவர்மீது ஏற்றுக்கொண்டார்.5 கெத்செமனே மற்றும் சிலுவையில், அவர் இந்த பாவங்களை ஏற்றுக்கொண்டார். பழிவாங்கும் இதயத்தை விட்டுவிட அவர் நமக்கு ஒரு வழி செய்தார். அந்த “வழி” மன்னிப்பதன் மூலமாகும்—இது நாம் செய்யும் மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகவும், நாம் அனுபவிக்கும் தெய்வீக காரியங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். மன்னிப்பின் பாதையில், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை நம் வாழ்வில் வந்து, இருதயம் மற்றும் ஆத்துமாவின் ஆழமான பிளவுகளை குணப்படுத்த ஆரம்பிக்கும்.

மன்னிக்கும் திறனை இரட்சகர் நமக்கு வழங்குகிறார் என்று தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்:

“அவருடைய முடிவற்ற பாவநிவர்த்தியின் மூலம், உங்களை காயப்படுத்தியவர்களை, உங்களுக்கு அவர்கள் செய்த கொடுமைக்கு ஒருபோதும் பொறுப்பேற்காதவர்களை நீங்கள் மன்னிக்கலாம்.

“உங்களுடைய மன்னிப்பை உருக்கமாகவும் தாழ்மையுடனும் நாடுகிற ஒருவரை மன்னிப்பது வழக்கமாக எளிதாயிருக்கும். ஆனால் உங்களை எந்த விதத்திலும் தவறாக நடத்தும் எவரையும் மன்னிக்கும் திறனை இரட்சகர் உங்களுக்கு வழங்குவார். அப்படியானால் அவர்களின் புண்படுத்தும் செயல்கள் இனி உங்கள் ஆத்துமாவைக் கெடுக்காது.”6

அபிகாயில் ஏராளமாக உணவு மற்றும் பொருட்களை கொண்டு வருவது, காயப்பட்டவர்களுக்கும் புண்பட்டவர்களுக்கும் நாம் குணமடையவும், முழுமையடையவும் வேண்டிய ஆதரவும் உதவியும், இரட்சகர் அளிக்கிறார் என்பதை நமக்குக் கற்பிக்க முடியும்.7 மற்றவர்களின் செயல்களின் விளைவுகளை நாம் சொந்தமாக சமாளிக்க விடப்படவில்லை; நாமும் முழுமையடைந்து, போரிடும் இருதயத்தின் பாரத்திலிருந்தும் அதைத் தொடர்ந்து செய்யக்கூடிய செயல்களிலிருந்தும் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும்.

கர்த்தர் சொன்னார்: “கர்த்தராகிய நான் மன்னிக்க வேண்டியவர்களை மன்னிப்பேன், ஆனால் நீங்கள் சகல மனுஷரையும் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.”8 நம்முடைய நன்மைக்காக நாம் மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.9 ஆனால் அவருடைய உதவி, அன்பு, புரிதல் இல்லாமல் அதைச் செய்யும்படி அவர் கேட்கவில்லை. கர்த்தருடனான நமது உடன்படிக்கைகளின் மூலம், நாம் ஒவ்வொருவரும் மன்னிப்பதற்கும் மன்னிக்கப்படவும் தேவையான பலப்படுத்தும் வல்லமை, வழிகாட்டுதல் மற்றும் உதவியைப் பெறலாம்.

ஒருவரை மன்னிப்பது என்பது உங்களைத் தொடர்ந்து காயப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதைக் குறிக்காது என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். “ஒருவரை மன்னிக்க நாம் உழைக்க முடியும், இன்னும் அவர்களிடமிருந்து விலகி இருக்க ஆவியின் தூண்டுதலால் உணர முடியும்.”10

அபிகாயில் தாவீதுக்கு “இருதயம் புண்படாதபடி” அவனுக்குத் தேவையான உதவியைப் பெற உதவியது போல11, இரட்சகர் உங்களுக்கு உதவுவார். அவர் உங்களை நேசிக்கிறார், மேலும் அவர் உங்கள் பாதையில் “அவரது சிறகுகளில் குணப்படுத்துதலுடன்” உங்களை சந்திக்கிறார்.12 அவர் உங்கள் சமாதானத்தை விரும்புகிறார்.

போரிடும் என் இதயத்தை கிறிஸ்து குணப்படுத்திய அற்புதத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உணர்வுபூர்வ மற்றும் வாய்மொழியால் தவறான நடத்தை காரணமாக நான் எப்போதும் பாதுகாப்பாக உணராத ஒரு வீட்டில் நான் வளர்ந்தேன் என்பதை என் தந்தையின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் இளமை மற்றும் வயதுவந்த பருவத்தில், நான் என் தந்தையை எதிர்த்தேன், அந்த காயத்திலிருந்து என் இதயத்தில் கோபம் இருந்தது.

பல ஆண்டுகளாக, அந்த மன்னிப்பின் பாதையில் சமாதானத்தையும் குணமாதலையும் பெறுவதற்கான எனது முயற்சிகளில், என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்த அதே தேவகுமாரன், அதே மீட்பர், என்னை ஆழமாக காயப்படுத்திய அவர்களையும் காப்பாற்றுவார் என ஆழமாக உணர்ந்தேன். இரண்டாவதை நம்பாமல் முதல் சத்தியத்தை என்னால் உண்மையாகவே நம்ப முடியவில்லை.

இரட்சகருக்கான என் அன்பு பெருகியதால், காயத்தையும் கோபத்தையும் அவருடைய குணப்படுத்தும் தைலத்தால் மாற்ற வேண்டும் என்ற என் ஆசையும் அதிகரித்தது. இது பல வருடங்களாக நடந்து வருகிறது, தைரியம், பாதிப்பு, விடாமுயற்சி மற்றும் இரட்சகரின் தெய்வீக வல்லமையை நம்பவும் குணப்படுத்தவும் கற்றுக்கொள்வது அவசியம். இன்னும் நான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது, ஆனால் என் இருதயம் இன்னும் போர்ப்பாதையில் இல்லை. ஆழமான மற்றும் நிலையான அன்பை உணர்ந்த, என் அருகில் தங்கிய, மென்மையாகவும் பொறுமையாகவும் என்னை சிறந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற, என்னுடன் அழுத, என் துக்கம் அறிந்த ஒரு தனிப்பட்ட இரட்சகரால் எனக்கு ஒரு “புதிய இருதயம்” 13 கொடுக்கப்பட்டுள்ளது.

அபிகாயில் தாவீதுக்குத் தேவையானதைக் கொண்டு வந்தது போல் கர்த்தர் எனக்கு ஈடுசெய்யும் ஆசீர்வாதங்களை அனுப்பினார். அவர் என் வாழ்க்கையில் வழிகாட்டிகளை அனுப்பியுள்ளார். எல்லாவற்றிலும் மிகவும் இனிமையானது மற்றும் மாற்றத்தக்கது என் பரலோக பிதாவுடனான எனது உறவு. அவர் மூலம், ஒரு பரிபூரண தந்தையின் மென்மையான, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டும் அன்பை நான் நன்றியுடன் அறிந்திருக்கிறேன்.

மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் கூறினார்: “செய்யப்பட்டதை உங்களால் அழிக்க முடியாது, ஆனால் உங்களால் மன்னிக்க முடியும்.14 மன்னிப்பு பயங்கரமான, சோகமான காயங்களை குணப்படுத்துகிறது, ஏனென்றால் தேவனின் அன்பு உங்கள் இருதயத்தையும் மனதையும் வெறுப்பின் விஷத்திலிருந்து தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது. இது பழிவாங்கும் விருப்பத்திலிருந்து உங்கள் நினைவை சுத்தம் செய்கிறது. கர்த்தரின் அன்பை சுத்திகரிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும், மீட்டெடுப்பதற்கும் இது இடம் அளிக்கிறது.”15

என் பூலோக பிதாவும் சமீப வருடங்களில் ஒரு அற்புதமான இருதய மாற்றம் பெற்றார், இந்த வாழ்க்கையில் நான் எதிர்பார்த்திருக்க முடியாததாகிய கர்த்தரிடம் திரும்பினார். இயேசு கிறிஸ்துவின் முழுமையான மற்றும் மாற்றும் வல்லமைக்கு எனக்கு மற்றொரு சாட்சி.

அவர் பாவியையும் பாவம் செய்தவர்களையும் குணமாக்க வல்லவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உலகத்தின் இரட்சகரும் மீட்பருமானவர், நாம் மீண்டும் வாழ்வதற்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தவர். அவர் சொன்னார், “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்.”16 என்னை அனுப்பினார்.

இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், துக்கத்தாலோ அல்லது பாவத்தாலோ குருடராய்போனவர்களுக்கு குணப்படுத்தலையும் மீட்பையும் நொறுங்குண்டவர்களுக்கு விடுதலையையும் வழங்குகிறார். அவர் அளிக்கும் குணப்படுத்துதல் மற்றும் மீட்பு உண்மையானது என்று நான் சாட்சி கூறுகிறேன். அந்த குணப்படுத்தும் நேரம் தனிப்பட்டது, மற்றவரின் நேரத்தை நாம் தீர்மானிக்க முடியாது. குணமடைய தேவையான நேரத்தை நாமே அனுமதிப்பதும், செயல்பாட்டில் நமக்கு நாமே தயவு காட்டுவதும் முக்கியம். இரட்சகர் எப்போதும் இரக்கமும் கவனமும் கொண்டவர், மேலும் நமக்குத் தேவையான உதவியை வழங்கத் தயாராக இருக்கிறார்.17

மன்னிப்பு மற்றும் குணப்படுத்தும் பாதையில் ஆரோக்கியமற்ற முறைகள் அல்லது உறவுகளை நம் குடும்பங்களில் அல்லது வேறு இடங்களில் நிலைநிறுத்தாமல் இருக்க ஒரு தேர்வு உள்ளது. நம் செல்வாக்கிற்குள் உள்ள அனைவருக்கும், கொடுமைக்கு இரக்கத்தையும், வெறுப்புக்கு அன்பையும், சிராய்ப்புக்கு மென்மையையும், துன்பத்திற்குப் பாதுகாப்பையும், கலகத்திற்கு சமாதானத்தையும் வழங்க முடியும்.

நீங்கள் மறுக்கப்பட்டதைக் கொடுப்பது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம் தெய்வீக குணப்படுத்துதலின் வல்லமை வாய்ந்த பகுதியாகும். உங்கள் வாழ்வின் சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் என்று ஏசாயா கூறியது போல் நீங்கள் கொடுக்கும் வகையில் வாழுதல், அனைத்து துன்பங்களையும் அனுபவித்த இரட்சகரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றும் விசுவாசத்தின் செயல்.

எகிப்தின் யோசேப்பு சாம்பலுடன் வாழ்ந்தான். அவன் தனது சகோதரர்களால் வெறுக்கப்பட்டான், காட்டிக் கொடுக்கப்பட்டான், அடிமையாக விற்கப்பட்டான், தவறாக சிறையில் அடைக்கப்பட்டான், உதவி செய்வதாக உறுதியளித்த ஒருவரால் மறக்கப்பட்டான். ஆனாலும் அவன் கர்த்தரை நம்பினான். “கர்த்தர் யோசேப்புடன் இருந்தார்”19 மேலும் அவனுடைய சோதனைகளை அவனுடைய சொந்த ஆசீர்வாதத்திற்கும் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்தான், மேலும் அவரது குடும்பம் மற்றும் எகிப்து முழுவதையும் காப்பாற்றினான்.

எகிப்தில் ஒரு பெரிய தலைவராக யோசேப்பு தனது சகோதரர்களைச் சந்தித்தபோது, அவனுடைய மன்னிப்பு மற்றும் செம்மையான கண்ணோட்டம் அவன் பேசிய தயவான வார்த்தைகளில் வெளிப்பட்டது:

”என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம். ஜீவரட்சணை செய்யும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதலால் நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார். 20

இரட்சகர் மூலம், யோசேப்பின் வாழ்க்கை “சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்” ஆனது21

BYU இன் தலைவரான கெவின் ஜே. வொர்த்தன், “நம்முடைய வெற்றிகளிலிருந்து மட்டுமல்ல, நமது தோல்விகள் மற்றும் நமக்கு வலியை ஏற்படுத்தும் மற்றவர்களின் தோல்விகளிலிருந்தும் தேவன் நல்லதை வரவழைக்க முடியும். தேவன் அவ்வளவு நல்லவர் மற்றும் வல்லமை வாய்ந்தவர்.23

அன்புக்கும் மன்னிப்புக்கும் மிகப் பெரிய உதாரணம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே என்று நான் சாட்சி கூறுகிறேன், அவர் கசப்பான வேதனையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”என சொன்னார். 23

பரலோகத்திலுள்ள நம் பிதா தம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் நன்மையையும் நம்பிக்கையையும் விரும்புகிறார் என்பதை நான் அறிவேன். எரேமியாவில் நாம் வாசிக்கிறோம், “நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”24

இயேசு கிறிஸ்து உங்கள் தனிப்பட்ட மேசியா, உங்கள் அன்பான மீட்பர் மற்றும் இரட்சகர், உங்கள் இதயத்தின் மன்றாட்டுகளை அறிந்தவர். அவர் உங்கள் குணப்படுதலையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார். அவர் உங்களை நேசிக்கிறார். உங்கள் துக்கங்களில் அவர் உங்களுடன் அழுகிறார், உங்களை முழுமையாக்க மகிழ்கிறார். மன்னிப்பின் குணமாக்கும் பாதையில் நாம் நடக்கும்போது, இருதயத்தில் தாங்கி, எப்போதும் நீட்டப்பட்டுள்ள அவருடைய அன்பான கரத்தை பிடித்துக்கொள்வோமாக, 25என்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என்னுடைய ஜெபமாகும், ஆமென்.