உம்மை அறிவதே
நீங்கள் இயேசுவை அவருடைய பல நாமங்களால் அறிந்துகொள்ள வேண்டும், நீங்கள் அவரைப் போல் ஆக வேண்டும் என்பதே எனது நேர்மையான வாஞ்சை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அரிசோனாவில் உள்ள எங்கள் தொகுதியில் ஒரு திருவிருந்து கூட்டத்தின் போது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவம் கிடைத்தது. திருவிருந்து ஜெபம், “[இயேசு கிறிஸ்துவின்] நாமத்தை [நம்மீது] எடுத்துக்கொள்வதற்கான” நமது விருப்பத்தை சுட்டிக்காட்டியபடி,1 இயேசுவுக்குப் பல நாமங்கள் உள்ளன என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவூட்டினார். இந்த கேள்வி என் இருதயத்திற்கு வந்தது: “இந்த வாரம் நான் இயேசுவின் நாமங்களில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?”
இயேசுவின் மூன்று நாமங்கள் என் நினைவுக்கு வந்தன, நான் அவற்றை எழுதினேன். அந்த மூன்று நாமங்களில் ஒவ்வொன்றும் நான் இன்னும் முழுமையாக விருத்திசெய்ய விரும்பிய, கிறிஸ்துவைப் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தன. அடுத்த வாரத்தில், நான் அந்த மூன்று நாமங்களில் கவனம் செலுத்தி, அவற்றோடு தொடர்புடைய பண்புகளையும் குணங்களையும் தழுவ முயற்சித்தேன். அப்போதிருந்து, எனது தனிப்பட்ட ஆராதனையின் ஒரு பகுதியாக அந்தக் கேள்வியை நான் தொடர்ந்து கேட்டேன்: “இந்த வாரம் நான் இயேசுவின் நாமங்களில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?” அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதும், அதனுடன் தொடர்புடைய கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பதும் என் வாழ்க்கையை ஆசீர்வதித்துள்ளது.
அவருடைய பெரிய பரிந்துபேசுதல் ஜெபத்தில், இயேசு இந்த முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்தினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”2 இன்று நான் இயேசு கிறிஸ்துவை அவருடைய பல நாமங்களால் அறிந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் வல்லமையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒருவரது பெயரைக் கற்றுக்கொள்வதே, அவரை நாம் தெரிந்துகொள்ள ஒரு எளிய வழி. “ஒரு நபரின் பெயர் அந்த நபருக்கு எந்த மொழியிலும் இனிமையான மற்றும் மிக முக்கியமான ஒலி” என்று கூறப்படுகிறது.3 நீங்கள் எப்போதாவது ஒருவரை தவறான பெயர் சொல்லி அழைத்த அனுபவம் அல்லது அவர்களின் பெயரை மறந்துவிட்ட அனுபவம் உண்டா? நானும் என் மனைவி அலெக்ஸியும் எப்போதாவது எங்கள் குழந்தைகளில் ஒருவரை “லோலா” என்று அழைத்ததுண்டு. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யூகித்தபடி, லோலா எங்கள் நாய்! நல்லதோ கெட்டதோ, ஒருவரின் பெயரை மறந்தால், அவர்களை நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கிறது.
இயேசு ஜனங்களைப் பெயர் சொல்லி அழைத்தார். பூர்வகால இஸ்ரவேலரிடம் கர்த்தர் சொன்னார்: “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்.”4 ஈஸ்டர் காலையில், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பற்றிய மரியாளின் சாட்சி, இயேசு அவளைப் பெயர் சொல்லி அழைத்தபோது உறுதியானது.5 அதேபோல், தேவன் ஜோசப் ஸ்மித்தை விசுவாசத்தின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் வகையில் பெயரிட்டு அழைத்தார்.6
சில சமயங்களில், இயேசு தம் சீடர்களுக்கு அவர்களின் இயல்பு, தகுதி மற்றும் திறன் ஆகியவற்றைக் குறிக்கும் புதிய பெயர்களைக் கொடுத்தார். யெகோவா யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற புதிய பெயரைக் கொடுத்தார், அதாவது “தேவனோடு ஜெயங்கொள்பவர்” அல்லது “தேவன் ஜெயங்கொள்வாராக.”7 இயேசு யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருக்கு பொவனெர்கேஸ் என்ற பெயரைக் கொடுத்தார், அதாவது “இடிமுழக்க மக்கள்”.8 அவருடைய எதிர்காலத் தலைமையைப் பார்த்து, இயேசு சீமோனுக்கு கேபா அல்லது பேதுரு என்று பெயரிட்டார், அதாவது கன்மலை.9
இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயரால் அறிவது போல, இயேசுவை நாம் நன்கு அறிந்துகொள்ள ஒரு வழி அவருடைய பல நாமங்களைக் கற்றுக்கொள்வது. இஸ்ரவேல் மற்றும் பேதுருவின் பெயர்களைப் போலவே, இயேசுவின் பல பெயர்களும் அவருடைய பணி, நோக்கம், தன்மை மற்றும் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும் தலைப்புகளாகும். இயேசுவின் பல பெயர்களை நாம் அறிந்து கொள்ளும்போது, அவருடைய தெய்வீக ஊழியத்தையும் அவரது தன்னலமற்ற தன்மையையும் நாம் நன்கு புரிந்துகொள்வோம். அவருடைய பல பெயர்களை அறிந்துகொள்வது, நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நோக்கத்தையும் கொண்டுவரும் கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள, அவரைப் போல் ஆக நம்மைத் தூண்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் ரசல் எம். நெல்சன், தலைப்பு வழிகாட்டியில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அனைத்து வசனங்களையும் படித்தார்.10 பின்னர் இதே வசனங்களைப் படிக்க இளைஞர்களை அழைத்தார். இயேசுவின் பல நாமங்களைப் பற்றி, தலைவர் நெல்சன் கூறினார், “இயேசு கிறிஸ்து இருக்கிறவிதமாக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவருடைய பல்வேறு பட்டங்கள் மற்றும் நாமங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஜெபத்துடனும் தீவிரமாகவும் ஆராய்வதன் மூலம் அனைத்தையும் ஆய்வு செய்யுங்கள்.”11
தலைவர் நெல்சனின் அழைப்பைத் தொடர்ந்து, நான் இயேசுவின் பல நாமங்களின் பட்டியலை உருவாக்க ஆரம்பித்தேன். எனது தனிப்பட்ட பட்டியலில் இப்போது 300 க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன, மேலும் நான் இன்னும் கண்டுபிடிக்காத பல பெயர்கள் உள்ளன.
இயேசுவின் சில நாமங்கள் அவருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தாலும்,12 நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடிய ஐந்து நாமங்களையும் தலைப்புகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இயேசுவை அவருடைய பல நாமங்களால் நீங்கள் அறிந்துகொள்ளும்போது, உங்களுடைய சொந்த பட்டியலை உருவாக்க உங்களை அழைக்கிறேன். அவ்வாறு செய்யும்போது, இயேசுவின் உடன்படிக்கையின் சீடராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பும் பிற பெயர்களும்—அவற்றுடன் தொடர்புடைய கிறிஸ்துவைப் போன்ற பண்புகளும்—உள்ளதை நீங்கள் காண்பீர்கள்.13
முதலாவது இயேசுவே நல்ல மேய்ப்பன்.14 எனவே, இயேசு தனது ஆடுகளை அறிந்திருக்கிறார்.15 அவர் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, 16 மற்றும், தேவ ஆட்டுக்குட்டியாக, தனது ஆடுகளுக்காக தனது ஜீவனைக் கொடுத்தார்.17 அதேபோல், நாம் நல்ல மேய்ப்பர்களாக, குறிப்பாக நம் குடும்பங்களிலும், ஊழிய சகோதர சகோதரிகளாகவும் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இயேசுவின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி அவருடைய ஆடுகளை மேய்ப்பதாகும்.18 அலைந்து திரிந்த ஆடுகளுக்கு, காணாமல் போன ஆடுகளைக் கண்டுபிடிக்க நல்ல மேய்ப்பர்கள் வனாந்தரத்திற்குச் செல்கிறார்கள், பின்னர் அவை பாதுகாப்பாகத் திரும்பும் வரை அவற்றுடன் தங்குவார்கள்.19 நல்ல மேய்ப்பர்களாகவும், உள்ளூர் சூழ்நிலைகள் அனுமதிப்பது போலவும், ஜனங்களுக்கு அவர்களது வீடுகளில் ஊழியம் செய்வதில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். நமது ஊழியத்தில், குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை தனிப்பட்ட தொடர்பை மாற்றுவதற்கு அல்ல, மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.20
இரண்டாவதாக, வரப்போகும் நல்ல காரியங்களின் பிரதான ஆசாரியராக 21 இயேசு இருக்கிறார். தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் உள்ளன என்பதை அறிந்த இயேசு சொன்னார்: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்”22. இன்று, நம் உலகம் அடிக்கடி பிரிக்கப்பட்டு, பிளவுபட்டுள்ளதால், நேர்மறைதன்மை, சாதகமான எண்ணம் மற்றும் நம்பிக்கையைப் பிரசங்கிக்கவும் பயிற்சி செய்யவும் நமக்கு அதிக தேவை உள்ளது. கடந்த காலத்தில் எத்தகைய சவால்கள் இருந்தாலும், நம்பிக்கை எப்போதும் எதிர்காலத்தை சுட்டிக் காட்டுகிறது.23 நம்பிக்கை நிரம்பி, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற இயேசுவின் அழைப்பை நிறைவேற்ற அனுமதிக்கிறது.24 சுவிசேஷத்தின்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது வரவிருக்கும் நல்ல காரியங்களின் சீடர்களாக மாற உதவுகிறது.
இயேசுவின் மற்றொரு பட்டம், அவர், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.25 நிலைத்தன்மை என்பது கிறிஸ்துவைப் போன்ற ஒரு பண்பு. இயேசு எப்போதும் தம் பிதாவின் சித்தப்படி செய்தார்,26 இரட்சிக்கவும், உதவவும், நம்மைக் குணமாக்கவும் அவரது கரம் தொடர்ந்து நீட்டப்பட்டிருக்கிறது.27 சுவிசேஷத்தின்படி வாழ்வதில் நாம் மிகவும் நிலையானவர்களாக இருப்பதால், நாம் இயேசுவைப் போல் மாறுவோம்.28 கோட்பாட்டின் ஒவ்வொரு காற்றிலும் உலகம் அங்கும் இங்கும் தள்ளப்படுவதால் உலகம் அதன் பிரபல ஊசல்களில் பெரிய ஊசலாட்டங்களை அனுபவிக்கும் என்றாலும்,29 நிலையான சுவிசேஷ வாழ்க்கை, வாழ்வின் புயல்களின் போது உறுதியாகவும் அசைக்க முடியாமலும் இருக்க உதவுகிறது.30 “கர்த்தருக்காக நேரத்தை ஒதுக்குங்கள்” என்ற தலைவர் நெல்சனின் அழைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமும் நாம் நிலைத்தன்மையை வெளிப்படுத்தலாம்.31 சிறிய மற்றும் எளிய விஷயங்களிலிருந்து,32 “பரிசுத்த பழக்கவழக்கங்கள் மற்றும் நீதியான நடைமுறைகளை” வளர்ப்பது 33தினசரி ஜெபம், மனந்திரும்புதல், வேதப் படிப்பு மற்றும் பிறருக்கு சேவை செய்தல் போன்றவற்றால் பெரிய ஆவிக்குரிய பலம் வருகிறது.
நான்காவதாக, இயேசுவே இஸ்ரவேலின் பரிசுத்தர்.34 இயேசுவின் வாழ்க்கை பரிசுத்தத்தின் மாதிரியாக இருந்தது. நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, இஸ்ரவேலின் பரிசுத்தராக மாறலாம்.35 ஒவ்வொரு நுழைவாயிலின் மேலேயும் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும் ஆலயத்துக்குத் தவறாமல் சென்று வருவதால், நாம் பரிசுத்தத்தில் அதிகரிக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் ஆலயத்தில் வழிபடும்போது, நமது இல்லங்களை பரிசுத்த ஸ்தலங்களாக ஆக்குவதற்கு அதிக வல்லமையால் தரிப்பிக்கப்படுகிறோம்.36 பரிசுத்த ஆலயத்துக்குள் நுழைவதற்கு தற்போது பரிந்துரைக்கப்படாத எவரும், உங்கள் ஆயரை சந்தித்து, அந்த பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு அல்லது திரும்புவதற்கு உங்களை ஆயத்தப்படுத்துமாறு உங்களை அழைக்கிறேன். ஆலயத்தில் இருக்கும் நேரம் நம் வாழ்வில் பரிசுத்தத்தை அதிகரிக்கும்.
இயேசுவின் ஒரு கடைசி நாமம், அவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.37 இயேசு எப்பொழுதும் உண்மையுள்ளவராகவும், எப்போதும் சத்தியமுள்ளவராகவும் இருந்ததைப் போலவே, இந்த குணங்களை நாம் நம் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நேர்மையான ஆசை. நம்முடைய விசுவாசம் தளர்ந்தால், பேதுரு கலிலேயா கடலில் புயலால் மூழ்கத் தொடங்கும்போது கூப்பிட்டதைப்போல, “ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்று இயேசுவை கூப்பிடலாம்.38 அந்த நாளில், நீரில் மூழ்கிய சீடரை மீட்க இயேசு கையை நீட்டினார். அவர் எனக்கும் அதையே செய்திருக்கிறார், உங்களுக்கும் செய்வார். இயேசுவை ஒருபோதும் கைவிடாதீர்கள், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்!
நாம் உண்மையுள்ளவர்களாகவும் சத்தியமுள்ளவர்களாகவும் இருக்கும்போது, “என்னில் நிலைத்திருங்கள்” என்ற இயேசுவின் அழைப்பைப் பின்பற்றுகிறோம், இது “என்னுடன் இருங்கள்” என்றும் பொருள்படும்.39 நாம் கேள்விகளை எதிர்கொள்ளும்போது, நம் விசுவாசத்துக்காக நாம் கேலி செய்யப்படும்போது, உலகின் பெரிய மற்றும் விசாலமான கட்டிடங்களில் உள்ளவர்களால் இகழ்ச்சியின் விரல்கள் நம்மை நோக்கி நீட்டப்படும்போது, நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறோம், உண்மையாக இருக்கிறோம். இந்த தருணங்களில், இயேசுவின் வேண்டுதலை நாம் நினைக்கிறோம், “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே.”40 நாம் அவ்வாறு செய்யும்போது, அவருடன் தரித்திருக்கத் தேவையான விசுவாசத்தையும், நம்பிக்கையையும், பலத்தையும் அவர் என்றென்றும் நமக்குத் தருகிறார்.41
அன்பான சகோதர சகோதரிகளே, நாம் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார், ஏனென்றால் பரலோகத்தின் கீழ் உள்ள அவரது ஒரே நாமத்தினாலே நாம் இரட்சிக்கப்பட முடியும்.42 இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார், அவராலேயன்றி யாரும் பிதாவிடம் திரும்ப முடியாது.43 இயேசுவே ஒரே வழி! அதனால்தான், இயேசு அழைக்கிறார், “என்னிடத்தில் வாருங்கள்,”44 “என் பின்னே வா,”45 “என்னோடே கூட நட,”46 “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.”47
என் முழு இருதயத்தோடும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் சாட்சி கூறுகிறேன், அவர் ஜீவிக்கிறார், அவர் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களைப் பெயரால் அறிவார். அவர் தேவ குமாரன்,48 பிதாவின் ஒரே பேறானவர்.49 அவர் நமது கன்மலை, நமது கோட்டை, நமது கேடயம், நமது அடைக்கலம், மற்றும் நம்மை விடுவிப்பவர்.50 அவர் இருளில் பிரகாசிக்கிற ஒளி.51 அவரே நமது இரட்சகர்,52 நமது மீட்பர்.53 அவர் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்.54 நீங்கள் இயேசுவை அவருடைய பல நாமங்களால் அறிந்துகொள்ள வேண்டும் என்பதும், உங்கள் வாழ்க்கையில் அவருடைய தெய்வீக பண்புகளை எடுத்துக்காட்டும்போது, நீங்கள் அவரைப் போல் ஆகிவிட வேண்டும் என்பதும் என் நேர்மையான வாஞ்சை. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.