கர்த்தருடன் பங்காளியாக
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமானது, உலக வாழ்விலும் நித்தியங்களிலும், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான முழு பங்குதார கொள்கையை அறிவிக்கிறது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே என் அன்பு மனைவி இசை படிக்கும் விருப்பத்தை தெரிவித்தாள். அவளைப் பிரியப்படுத்தும் நோக்கத்தில், என் இனியவளுக்கு ஒரு பெரிய, இதயப்பூர்வமான ஆச்சரியத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். நான் ஒரு இசைக்கருவி கடைக்குச் சென்று அவளுக்கு ஒரு பியானோவை பரிசாக வாங்கினேன். நான் உற்சாகமாக வாங்கிய ரசீதை ஒரு அழகான அலங்காரத்துடன் ஒரு பெட்டியில் வைத்து அவளிடம் கொடுத்தேன், அவளுடைய மிகவும் அன்பான மற்றும் கவனிக்கிற கணவனுக்கு நன்றியுணர்வின் உற்சாகமான எதிர்வினையை எதிர்பார்த்தேன்.
அந்தச் சிறிய பெட்டியைத் திறந்து அதில் உள்ளவற்றைக் கண்டதும், அன்புடன் என்னைப் பார்த்து, “அன்பே, நீங்கள் அற்புதமானவர்! ஆனால் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: இது அன்பளிப்பா அல்லது கடனா? ஆச்சரியம் பற்றி ஒன்றாக ஆலோசனை செய்த பிறகு, வாங்குவதை ரத்து செய்ய முடிவு செய்தோம். பல இளம் புதுமணத் தம்பதிகளைப் போலவே நாங்கள் மாணவர் பட்ஜெட்டில் வாழ்ந்து வந்தோம். இந்த அனுபவம் திருமண உறவில் முழு பங்குதார கொள்கையின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் பயன்பாடு, என் மனைவியும் நானும் ஒரே இருதயமாகவும் ஒரே எண்ணமாகவும் இருக்க உதவிசெய்வதை, அறிய எனக்கு உதவியது.1
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமானது, உலக வாழ்விலும் நித்தியங்களிலும், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான முழு பங்குதார கொள்கையை அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பண்புகள் மற்றும் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகள் இருந்தாலும், அவருடைய பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கான தேவனின் திட்டத்தில் பெண்ணும் ஆணும் சமமாக பொருத்தமான மற்றும் அத்தியாவசியமான பாத்திரங்களை நிறைவேற்றுகிறார்கள்.2 “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல; ஆகையால், அவர் அவனுக்கு ஒரு ஏற்ற துணையை உருவாக்குவேன்,” என்று கர்த்தர் அறிவித்தபோது ஆரம்பத்திலிருந்தே இது தெரிந்ததுதான்.3
கர்த்தரின் திட்டத்தில், “ஏற்ற துணை” என்பது ஆதாமுடன் தோளோடு தோள் சேர்ந்து முழு பங்காளியாக நடக்கும் ஒரு துணை.4 உண்மையில், ஏவாள் ஆதாமின் வாழ்க்கையில் பரலோக ஆசீர்வாதமாக இருந்தாள். அவளுடைய தெய்வீக இயல்பு மற்றும் ஆவிக்குரிய பண்புகளின் மூலம், எல்லா மனிதகுலத்திற்கும் தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தை அடைய தன்னுடன் இணைந்து செயல்பட ஆதாமுக்கு உணர்த்தினாள்.5
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பங்காளி தன்மையை வலுப்படுத்தும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளைப் பார்ப்போமாக. “தேவனுக்கு நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்” என்பது முதல் கொள்கை.6 சுவிசேஷ கோட்பாட்டின்படி, பெண் மற்றும் ஆணுக்கு இடையேயான வேறுபாடு தேவன் தம் மகன்கள் மற்றும் மகள்களுக்காக வைத்திருக்கும் நித்திய வாக்குறுதிகளை மீறுவதில்லை. நித்தியங்களில் ஒருவரை விட சிலஸ்டியல் மகிமைக்கான பெரிய சாத்தியங்கள் மற்றொருவருக்கு இல்லை.7 இரட்சகர் தாமே, தேவனுடைய பிள்ளைகளாகிய நம் அனைவரையும், “தம்மிடம் வரும்படி, அவருடைய நன்மையில் பங்குகொள்ளும்படி அழைக்கிறார், மேலும் தம்மிடம் வரும் எவரையும் அவர் மறுதலிப்பதில்லை.”8 எனவே, இந்தச் சூழலில், நாம் அனைவரும் அவருக்கு முன் சமமாக கருதப்படுகிறோம்.
வாழ்க்கைத் துணைவர்கள் இந்தக் கொள்கையைப் புரிந்துகொண்டு இணைத்துக்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தின் தலைவராகவோ அல்லது துணைத் தலைவராகவோ தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்லை. திருமண உறவில் மேன்மையோ, தாழ்வோ இல்லை, ஒருவர் மற்றவருக்கு முன்னாகவோ பின்னாகவோ நடப்பதில்லை. அவர்கள் சமமாக, தேவனின் தெய்வீக சந்ததியாக, அருகருகே நடக்கிறார்கள். அவர்கள் நம் பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் சிந்தனை, வாஞ்சை மற்றும் நோக்கத்தில் ஒன்றாக ஆகிறார்கள், குடும்பத்தை ஒன்றாக தலைமையேற்று வழிநடத்துகிறார்கள்.9
ஒரு சமமான பங்காளியாக, “அன்பு என்பது உடைமை அல்ல, பங்கேற்பு… நமது மனித அழைப்பான அந்த இணை சிருஷ்டிப்பின் ஒரு பகுதி.”10 “உண்மையான பங்கேற்புடன், கணவனும் மனைவியும் ஒரு ‘நித்திய ஆளுகையின்’ ஒருங்கிணைந்த ஒற்றுமையில் இணைகிறார்கள், அது ‘கட்டாய வழிகள் இல்லாமல்’ அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் ‘என்றென்றும்’ ஆவிக்குரிய வாழ்க்கையுடன் வழிந்தோடும்.11
இரண்டாவது பொருத்தமான கொள்கை, மலைப்பிரசங்கத்தில் இரட்சகரால் போதிக்கப்பட்ட பொன் விதி: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”12 இந்தக் கோட்பாடு பரஸ்பரம், திரும்பச் செய்தல், ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் மனப்பான்மையைக் குறிக்கிறது மற்றும் “உன்னிடத்தில் நீ அன்புகூர்வது போலவே பிறனிடத்திலும் அன்புகூர்வாயாக” என்ற இரண்டாவது பெரிய கட்டளையை அடிப்படையாகக் கொண்டது.13 நீடிய பொறுமை, மென்மை, சாந்தம் மற்றும் தயவு போன்ற பிற கிறிஸ்தவ பண்புகளுடன் இது இணைகிறது.
இந்தக் கொள்கையின் பயன்பாட்டை நன்கு புரிந்துகொள்ள, நமது முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாளுக்கு இடையே தேவனால் நிறுவப்பட்ட பரிசுத்தமான மற்றும் நித்திய பிணைப்பை நாம் பார்க்கலாம். ஒற்றுமையின் பரிமாணத்தை உருவாக்கி, அவர்களை மரியாதையுடனும், நன்றியுடனும், அன்புடனும் ஒன்றாக நடக்க அனுமதித்து, தங்களை மறந்து, நித்தியம் நோக்கிய பயணத்தில் ஒருவருக்கொருவர் நலனை நாடுகின்ற, அவர்கள் ஒரே மாம்சமானார்கள்.14.
அதே குணாதிசயங்களைத்தான் இன்று நாம் ஒன்றுபட்ட திருமணத்தில் முயற்சிக்கிறோம். ஆலய முத்திரித்தல் மூலம், ஒரு பெண்ணும் ஒரு ஆணும் புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையில் திருமணத்தின் பரிசுத்த முறைமையில் பிரவேசிக்கிறார்கள். ஆசாரியத்துவத்தின் இந்த முறையின் மூலம், அவர்கள் செய்த உடன்படிக்கைகளின்படி அவர்கள் வாழ்வதால், அவர்களின் குடும்ப விவகாரங்களை வழிநடத்தும் நித்திய ஆசீர்வாதங்களும் தெய்வீக வல்லமையும் வழங்கப்படுகின்றன. அது முதல், அவர்கள் பரஸ்பரம் சார்ந்து, கர்த்தருடன் முழு பங்காளிகளாக முன்னேறிச் செல்கிறார்கள், குறிப்பாக அவர்களது குடும்பத்தை போஷிப்பதற்கும் தலைமை தாங்குவதற்கும் அவரவர்களுக்கு தெய்வீகமாக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்புகளிலும்.15 போஷிப்பது மற்றும் தலைமை தாங்குவது என்பது ஒன்றோடொன்று தொடர்புடைய மற்றும் இணைந்த பொறுப்புகள் ஆகும், அதாவது தாய்மார் மற்றும் தந்தைமார் “ஒருவருக்கொருவர் சமமான பங்காளிகளாக உதவ கடமைப்பட்டுள்ளனர்”16 மற்றும் அவர்களின் வீட்டில் சமநிலையான தலைமைத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“போஷிப்பது” என்பது குடும்ப உறுப்பினர்களை போஷித்தல், கற்பித்தல் மற்றும் ஆதரவளிப்பதாகும், இது அன்பின் சூழலில் “சுவிசேஷ சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை வளர்ப்பதற்கும்” உதவுவதன் மூலம் செய்யப்படுகிறது. தலைமை தாங்குவது என்பது “குடும்ப உறுப்பினர்களை மீண்டும் தேவ பிரசன்னத்தில் வாழ வழிநடத்த உதவுவதாகும். மென்மை, சாந்தம் மற்றும் பரிசுத்தமான அன்புடன் சேவை செய்வதாலும் கற்பிப்பதாலும் இது செய்யப்படுகிறது. இது “குடும்ப உறுப்பினர்களை வழக்கமான ஜெபம், சுவிசேஷ படிப்பு மற்றும் ஆராதனையின் பிற அம்சங்களில் வழிநடத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தைப் பின்பற்றி, “இந்த [இரண்டு பெரிய] பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு பெற்றோர் ஒற்றுமையாக வேலை செய்கிறார்கள்.” 17
குடும்பத்தில் உள்ள அரசாங்கம் கோத்திரபிதா முறையைப் பின்பற்றுகிறது, சில விஷயங்களில் சபையில் ஆசாரியத்துவ தலைமைத்துவத்திலிருந்து வேறுபடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.18 குடும்பத்தில் தங்கள் பரிசுத்த பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக மனைவிகள் மற்றும் கணவர்கள் நேரடியாக தேவனிடம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கோத்திரபிதா முறை குறிக்கிறது. இது ஒரு முழு பங்குதாரராக அழைப்பு விடுக்கிறது, நீதி மற்றும் பொறுப்பேற்றலின் ஒவ்வொரு கொள்கையுடனும் விருப்பத்துடன் இணங்குதல் மற்றும் அன்பு மற்றும் பரஸ்பர உதவிகரமான சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.19 இந்த சிறப்புப் பொறுப்புகள் படிநிலையைக் குறிப்பதில்லை மற்றும் எந்த விதமான துஷ்பிரயோகம் அல்லது அதிக அதிகாரத்தை பொறுப்பில்லாமல் பயன்படுத்துதலை முற்றிலும் விலக்குகிறது.
ஆதாம் மற்றும் ஏவாளின் அனுபவம், அவர்கள் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர்களது குடும்பத்தை போஷிப்பதிலும் தலைமைதாங்குவதிலும் ஒரு தாய் மற்றும் தந்தைக்கு இடையேயான ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் கருத்தை அழகாக விளக்குகிறது. மோசேயின் புத்தகத்தில் போதிக்கப்பட்டுள்ளபடி, அவர்கள் தங்கள் குடும்பத்தின் சரீர நலனுக்காக தங்கள் புருவத்தின் வியர்வையால் பூமியை உழவு செய்தனர்;20அவர்கள் குழந்தைகளை உலகிற்கு கொண்டு வந்தனர்;21அவர்கள் ஒன்றாகக் கர்த்தருடைய நாமத்தை அழைத்து, “ஏதேன் தோட்டம் நோக்கிய வழியிலிருந்து” அவருடைய சத்தத்தைக் கேட்டார்கள்;22அவர்கள் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு, அவைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு ஒன்றாக முயற்சி செய்தார்கள்.23 பின்னர் அவர்கள் “[இவற்றை] தங்கள் குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் தெரியப்படுத்தினார்கள்”24 அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ஒன்றாக “தேவனைத் தொழுதுகொள்வதை நிறுத்தவில்லை”.25
என் அன்பான சகோதர சகோதரிகளே, போஷிப்பதும் தலைமை தாங்குவதும் வாய்ப்புகள், பிரத்தியேக வரம்புகள் அல்ல. ஒரு நபருக்கு ஏதாவது ஒரு பொறுப்பு இருக்கலாம், ஆனால் அதைச் செய்யும் ஒரே நபராக இல்லாமல் இருக்கலாம். அன்பான பெற்றோர்கள் இந்த இரண்டு முக்கிய பொறுப்புகளை நன்கு புரிந்து கொள்ளும்போது, அவர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் மற்றும் உணர்வுபூர்வ நல்வாழ்வைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஒன்றாக பாடுபடுவார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நல்ல வார்த்தைகளால் அவர்களை போஷிப்பதன் மூலம் நமது நாளின் ஆவிக்குரிய ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அவர்கள் உதவுகிறார்கள்.
கணவனும் மனைவியும் தெய்வீகமாய் நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், “உடலூனம், இறப்பு அல்லது பிற சூழ்நிலைகள் தனிப்பட்ட மாறுதலை ஏற்படுத்தலாம்.”26 சில சமயங்களில் ஒரு துணை அல்லது மற்றவர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒரே நேரத்தில் இரு பாத்திரத்திலும் செயல்படும் பொறுப்பைப் பெறுவார்கள்.
இந்த நிலையில் வசிக்கும் ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரனை நான் சமீபத்தில் சந்தித்தேன். ஒற்றைப் பெற்றோராக, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப சூழ்நிலையில் மற்றும் கர்த்தருடன் கூட்டு சேர்ந்து, தங்கள் குழந்தைகளின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார கவனிப்புக்கு தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளனர். கடினமான விவாகரத்துகள் இருந்தபோதிலும், அவர்கள் கர்த்தருடன் செய்த ஆலய உடன்படிக்கைகளையும் அவருடைய நித்திய வாக்குறுதிகளையும் அவர்கள் இழக்கவில்லை. இருவரும் தங்களுடைய சவால்களைச் சகித்துக்கொண்டு உடன்படிக்கைப் பாதையில் நடக்கத் தொடர்ந்து முயல்வதால், எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியை நாடியுள்ளனர். இந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, நித்தியம் முழுமைக்கும் தங்கள் தேவைகளை கர்த்தர் கவனிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை அனுபவிக்கும் போதும்கூட இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு மென்மை, சாந்தம் மற்றும் பரிசுத்த அன்புடன் கற்பிப்பதன் மூலம் அவர்களை போஷித்தனர். எனக்குத் தெரிந்தபடி, இந்த இரண்டு ஒற்றைப் பெற்றோரும் தங்களின் துரதிர்ஷ்டங்களுக்கு தேவனைக் குறை கூறுவதில்லை. அதற்குப் பதிலாக, கர்த்தர் அவர்களுக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அவர்கள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்துடன் எதிர்நோக்குகிறார்கள்.27
சகோதர சகோதரிகளே, இரட்சகர் பரலோகத்திலுள்ள நமது பிதாவுடன் ஒற்றுமை மற்றும் கோட்பாட்டின் நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளார். அவர் தம்முடைய சீடர்களுக்காக ஜெபித்து சொன்னார், “அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கும்படி; பிதாவே, நீர் என்னிலும், நான் உம்மிலும் இருப்பது போல, அவர்களும் நம்மில் ஒன்றாக இருக்க வேண்டும்: … நாம் ஒன்றாக இருப்பது போல அவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.”28
சகோதர சகோதரிகளே, நாம், பெண்களும் ஆண்களும் உண்மையான மற்றும் சமமான பங்குதாரராக இணைந்து பணியாற்றும்போது, நமது திருமண உறவுகளில் தெய்வீக பொறுப்புகளை நிறைவேற்றும்போது, இரட்சகரால் கற்பிக்கப்பட்ட ஒற்றுமையை அனுபவிப்போம் என்று நான் உங்களுக்கு சாட்சியமளிக்கிறேன். கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன், இருதயங்கள் “ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து”29 நித்திய ஜீவனுக்கான நமது பயணத்தில் நாம் அதிக மகிழ்ச்சியைக் காண்போம், மேலும் ஒருவருக்கொருவர் மற்றும் ஒருவருக்கொருவருடன் சேவை செய்யும் திறன் கணிசமாகப் பெருகும்.30 இந்த சத்தியங்களைப்பற்றி இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.