வேதங்கள்
மோசியா 18


அதிகாரம் 18

ஆல்மா இரகசியமாய் உபதேசித்தல் – அவன் ஞானஸ்நான உடன்படிக்கையை ஏற்படுத்தி, மார்மன் தண்ணீர்களில் ஞானஸ்நானம் கொடுத்தல் – அவன் கிறிஸ்துவின் சபையை ஏற்படுத்தி, ஆசாரியர்களை நியமித்தல் – அவர்கள் தங்களைத் தாங்களே ஆதரித்து, ஜனங்களுக்குப் போதித்தல் – ஆல்மாவும் அவன் ஜனமும் நோவா ராஜாவினிடத்திலிருந்து வனாந்தரத்தினுள் ஓடிப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 145.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நோவா ராஜாவினுடைய வேலைக்காரரிடமிருந்து ஓடிப்போன ஆல்மா, தன் பாவங்களிலிருந்தும் அக்கிரமங்களிலிருந்தும் மனந்திரும்பி, ஜனங்களுக்குள்ளே இரகசியமாய்ச் சென்று, அபிநாதியின் வார்த்தைகளைப் போதிக்கத் தொடங்கினான்.

2 ஆம், வரவிருக்கிறவைகளைக் குறித்தும், மரித்தோருடைய உயிர்த்தெழுதலையும், கிறிஸ்துவினுடைய வல்லமையாலும், பாடுகளாலும் மரணத்தினாலும் சம்பவிக்க இருக்கிற, ஜனத்தின் மீட்பையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் மற்றும் பரலோகத்திற்கு ஏறிச்சென்றதைப்பற்றியுமாகும்.

3 அவன் தன் வார்த்தைகளைக் கேட்ட அநேகருக்கும் போதித்தான். ராஜா அறியாமலிருக்க அவர்களுக்கு இரகசியமாய் போதித்தான். அநேகர் இவனுடைய வார்த்தைகளை விசுவாசித்தார்கள்.

4 அந்தப்படியே, அவனை விசுவாசித்த அனைவரும், சில சமயங்களிலோ அல்லது பருவங்களிலோ, காட்டுமிருகங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, தேசத்தின் எல்லைப்பகுதிகளிலே இருந்த, ராஜாவினிடமிருந்து பெற்ற பெயரைக் கொண்ட, மார்மன் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார்கள்.

5 இப்பொழுதும் மார்மனிலே தெளிந்த தண்ணீரைக்கொண்ட ஒரு நீருற்று இருந்தது. பகலிலே ராஜாவினுடைய தேடுதல்களிலிருந்து தன்னை மறைத்துக்கொண்ட, அந்த தண்ணீர்களண்டையிலிருந்த புதர்களிலே ஆல்மா புகுந்தான்.

6 அந்தப்படியே, அவனை விசுவாசித்த அனைவரும், அவனுடைய வார்த்தைகளைக் கேட்க அங்கே சென்றார்கள்.

7 அந்தப்படியே, அநேக நாட்கள் கழிந்த பின்பு, மார்மன் என்ற இடத்திலே ஆல்மாவினுடைய வார்த்தைகளைக் கேட்க அதிகமானோர் ஏகமாய்க் கூடியிருந்தார்கள். ஆம், அவனுடைய வார்த்தைகளை விசுவாசித்த யாவரும் அவனுடைய வார்த்தைகளைக் கேட்க ஏகமாய்க் கூடியிருந்தார்கள். அவன் அவர்களுக்குப் போதித்து, மனந்திரும்புதலையும் மீட்பையும், கர்த்தர்மீது விசுவாசத்தையும் அவர்களுக்கு உபதேசித்தான்.

8 அந்தப்படியே, அவன் அவர்களை நோக்கி: இதோ மார்மன் தண்ணீர்கள், (அவைகள் அப்படி அழைக்கப்பட்டன) நீங்கள் இப்போது, தேவனுடைய மந்தையினுள் வந்து, அவருடைய ஜனமென்று அழைக்கப்பட விருப்பம்கொண்டவர்களாயும், ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, லகுவாக்க மனமுடையவர்களாகவும் இருக்கிறீர்கள்;

9 ஆம், துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும், நித்திய ஜீவனைப் பெறும்படிக்கு, தேவனால் மீட்கப்பட்டு, முதலில் உயிர்த்தெழுவோரோடு கூட எண்ணப்படும்படிக்கும், மரணம் சம்பவிக்குமட்டும், சதாகாலங்களிலும் எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனுக்கு சாட்சிகளாய் நிற்கவும் சித்தமாயிருக்கிறீர்கள்.

10 இப்பொழுதும் இதுவே உங்களுடைய உள்ளங்களின் விருப்பமெனில், கர்த்தர் தம் ஆவியை உங்கள் மீது நிறைவாய் ஊற்றும்படிக்கு, அவரைச் சேவித்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவீர்கள், என்று அவரோடு கூட உடன்படிக்கையினுள் பிரவேசித்ததாக, அவருக்கு முன்பாய் சாட்சி சொல்லும் பொருட்டு, கர்த்தருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற என்ன தடையிருக்கிறது? என்று உங்களைக் கேட்கிறேன், என்றான்.

11 இப்பொழுதும் ஜனங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்கள் மகிழ்ச்சியால் கைகளைத் தட்டி, இதுவே எங்களுடைய இருதயங்களின் விருப்பமாயிருக்கிறது, என்றார்கள்.

12 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா, முதலாவதாயிருந்த ஏலாமைக் கூட்டிக்கொண்டு தண்ணீரிலே நின்று, கர்த்தாவே, உமது தாசன் இந்த கிரியையை பரிசுத்த உள்ளத்தோடு செய்யும்படிக்கு, அவன் மீது உம்முடைய ஆவியானவரை ஊற்றும், என்றான்.

13 இந்த வார்த்தைகளை அவன் உச்சரித்தவுடனே, கர்த்தருடைய ஆவி அவன்மீது இறங்கிற்று. அவன் ஏலாமே, அழிவிற்கேதுவான சரீரத்தினுடைய மரணம் மட்டும் அவரைச் சேவிக்க ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசித்தாய் என்று, சாட்சியமாயிருக்க சர்வவல்ல தேவனிடத்திலிருந்து பெற்ற அதிகாரத்தினாலே, உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். கர்த்தருடைய ஆவி உன்மீது ஊற்றப்பட்டு, உலக அஸ்திபாரம் முதல் அவர் ஆயத்தப்படுத்தின கிறிஸ்துவினுடைய மீட்பின் மூலம், நித்திய ஜீவனை உனக்கு அருளுவாராக, என்றான்.

14 இந்த வார்த்தைகளை ஆல்மா சொன்ன பின்பு, ஆல்மாவும் ஏலாமும் ஜலத்திலே மூழ்கி, எழுந்து ஆவியினாலே நிரப்பப்பட்டவர்களாய் களிகூர்ந்து, ஜலத்திலிருந்து வெளியேறினார்கள்.

15 மறுபடியும், ஆல்மா மற்றொருவனைக் கூட்டிக்கொண்டு, இரண்டாந்தரம் ஜலத்தினுள் சென்று, தான் மட்டும் ஜலத்தினுள் மூழ்காமல், முதலாமவனைப் போலவே, இவனுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான்.

16 இவ்விதமாய், மார்மன் என்ற இடத்திற்குப்போன ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் எண்ணிக்கையில் இருநூற்று நான்கு ஆத்துமாக்களாய் இருந்தார்கள். ஆம், அவர்களுக்கு மார்மன் தண்ணீர்களிலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, தேவனுடைய கிருபையாலே நிரப்பப்பட்டார்கள்.

17 அந்தச் சமயம் முதற்கொண்டு அவர்கள் தேவனுடைய சபை என்றும், கிறிஸ்துவினுடைய சபை என்றும் வழங்கலாயினர். அந்தப்படியே, தேவனுடைய வல்லமையாலும், அதிகாரத்தாலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பெற்ற யாவரும் சபையிலே சேர்க்கப்பட்டார்கள்.

18 அந்தப்படியே, ஆல்மா தேவனிடத்திலிருந்து அதிகாரத்தைப்பெற்று ஆசாரியர்களை நியமனம் செய்தான்; அவர்களுக்கு பிரசங்கிக்கவும், தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏதுவானவைகளைக் குறித்து அவர்களுக்கு உபதேசம்பண்ணவும், ஐம்பதுபேருக்கு ஒரு ஆசாரியனை நியமனம் செய்தான்.

19 அவன் தான் போதித்தவைகளையும், பரிசுத்த தீர்க்கதரிசிகளின் நாவினால் பேசப்பட்டவைகளையும் தவிர, அவர்கள் வேறெந்த காரியத்தைக் குறித்தும் போதிக்கக்கூடாது, என்று கட்டளையிட்டான்.

20 தம் ஜனத்தை மீட்டுக்கொண்டவரான, கர்த்தர் பேரில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலைத் தவிர, வேறொன்றும் அவர்கள் பிரசங்கிக்கக் கூடாதென்று கட்டளையிட்டான்.

21 ஒருவரோடொருவர் பிணக்கு பண்ணாமலும், ஆனால் அன்னியோனியத்திலே அவர்களுடைய இருதயங்கள் ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து, ஒரே விசுவாசத்தையும், ஞானஸ்நானத்தையும் உடையவர்களாய், ஒருமனப்பட்டவர்களாய் எதிர் நோக்கி இருக்கவேண்டுமெனக் கட்டளையிட்டான்.

22 அந்தப்படியே அவர்கள் பிரசங்கிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். இப்படியாக அவர்கள் தேவனுடைய பிள்ளைகளானார்கள்.

23 அவர்கள் ஓய்வுநாளை ஆசரித்து, பரிசுத்தமாய் கைக்கொண்டு, தேவனாகிய தங்களின் கர்த்தருக்கு நாள்தோறும் நன்றிகளை ஏறெடுக்கவேண்டுமென, கட்டளையிட்டான்.

24 தான் நியமனம் செய்த ஆசாரியர்கள் தங்களைத் தாங்களே ஆதரித்துக்கொள்ள, தங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைகளைச் செய்யவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

25 அவர்கள் ஏகமாய்க்கூடி, ஜனங்களுக்குப் போதிக்கவும், கர்த்தராகிய தங்கள் தேவனைத் தொழுதுகொள்ளவும், தங்கள் திராணிக்கேற்றபடி ஒன்றாய் அடிக்கடி கூடவும், வாரத்திலே ஒரு நாள் ஒதுக்கப்பட்டது.

26 ஆசாரியர்கள் தங்களை ஆதரித்துக்கொள்ள ஜனங்களைச் சார்ந்திருக்கக் கூடாது, ஆனால் தங்கள் பிரயாசங்களுக்காக, ஆவியிலே பெலவான்களாகி, தேவ ஞானத்தைக்கொண்டு, தேவனிடத்திலிருந்து பெற்ற அதிகாரத்தினாலும் வல்லமையினாலும் போதித்து, தேவனுடைய கிருபையைப் பெற வேண்டும்,

27 மேலும் சபை மக்கள் ஒவ்வொருவரும் தான் வைத்திருப்பதற்கேற்ப, அதிகமாய் பெற்றிருப்பவன் அதிகமாகவும், கொஞ்சமாய் பெற்றிருப்பவன் கொஞ்சமாகவும், இல்லாதவனுக்குக் கொடுக்க, தங்களின் பொருளைக் கொடுக்கவேண்டுமென ஆல்மா கட்டளையிட்டான்.

28 இவ்விதமாய், அவர்கள் தங்கள் பொருட்களை, தங்கள் சுய சித்தத்தின்படியும், தேவனிடத்தில் வைத்திருக்கிற நல் வாஞ்சைகளின்படியேயும், தேவையிலிருக்கும் ஆசாரியர்களுக்கும், தேவையிலிருக்கிற, வஸ்திரமில்லாத ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும்.

29 தேவனால் அவன் கட்டளையிடப்பட்டதினால் இதை அவர்களுக்குச் சொன்னான். அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்குத் தக்கதாய், ஆவிக்குரியவைகளிலும், உலகப் பிரகாரமானவைகளிலும் ஒருவருக்கொருவர் அளித்து, தேவனுக்கு முன்பாய் தலைநிமிர்ந்து நடந்தார்கள்.

30 இப்பொழுதும், அந்தப்படியே, மார்மன் தண்ணீர்கள் அருகேயிருந்த வனாந்தரத்தில், மார்மன் தண்ணீர்களண்டையில், மார்மன் என்னும் இடத்தில், இவை யாவும் சம்பவித்தன; ஆம், அங்கே தங்கள் மீட்பரைப்பற்றிய ஞானத்திற்கு வந்தவர்களுடைய கண்களுக்கு, மார்மன் என்கிற இடமும், மார்மன் தண்ணீர்களும், மார்மன் வனாந்தரமும் எவ்வளவு அழகாயிருக்கின்றன; ஆம், அவர்கள் அவரை என்றென்றைக்குமாய் துதித்து கீர்த்தனம் பண்ணுவதினிமித்தம், அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்.

31 ராஜாவுக்கு இது தெரியாத வண்ணம், இந்தக் காரியங்கள் தேசத்தின் எல்லைகளிலே நடத்தப்பட்டன.

32 ஆனால் இதோ, அந்தப்படியே, ராஜா, ஜனங்கள் மத்தியிலே ஒரு சலசலப்பைக்கண்டு அவர்களைக் கண்காணிக்கும்படி தன்னுடைய காவற்காரர்களை அனுப்பினான். இப்படியாக கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க, அவர்கள் ஏகமாய்க் கூடின நாளிலே ராஜாவினால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

33 இப்பொழுதும் தனக்கு விரோதமாய் எழும்ப, ஜனங்களை ஆல்மா தூண்டிவிடுகிறான் என்று ராஜா கூறி, அவர்களை அழித்துப்போட தன் சேனையை அனுப்பினான்.

34 அந்தப்படியே, ஆல்மாவும், கர்த்தருடைய ஜனமும் ராஜாவினுடைய சேனையின் வருகையைக் குறித்து தெரிவிக்கப்பட்டார்கள்; ஆதலால் அவர்கள் தங்கள் கூடாரங்களுடன், தங்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டு வனாந்தரத்தினுள் புறப்பட்டுப் போனார்கள்.

35 அவர்கள் எண்ணிக்கையிலே நானூற்றி ஐம்பது ஆத்துமாக்களாயிருந்தார்கள்.