வேதங்கள்
மோசியா 24


அதிகாரம் 24

அமுலோன் ஆல்மாவையும், அவன் ஜனத்தையும் துன்பப்படுத்துதல் – அவர்கள் ஜெபிப்பார்களெனில் கொலை செய்யப்படுவார்கள் – கர்த்தர் அவர்களுடைய பாரங்களை லகுவாகத் தோன்றச் செய்தல் – அவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து நீங்கலாக்குதல். அவர்கள் சாரகெம்லாவிற்கு திரும்பிப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 145–120.

1 அந்தப்படியே, அமுலோன் லாமானியர்களின் ராஜாவினுடைய கண்களிலே தயவுபெற்றான்; ஆதலால் சேம்லோன் தேசத்திலும், சீலோம் தேசத்திலும், அமுலோன் தேசத்திலுமிருந்த தன் சகல ஜனத்திற்கும் அவனும் அவன் சகோதரர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படும்படி, லாமானியர்களின் ராஜா அனுமதித்தான்.

2 லாமானியர்கள் இந்த தேசத்தையெல்லாம் சுதந்தரித்ததினாலே, இந்த சகல தேசங்கள்மீதும் லாமானியர்களின் ராஜா, ராஜாக்களை நியமித்தான்.

3 இப்பொழுதும் லாமானியர்களின் ராஜாவினுடைய பெயர், தன் தகப்பனுடைய பெயரின் படியே லாமான் என்றழைக்கப்பட்டான். எனவே அவன் லாமான் ராஜா என்றழைக்கப்பட்டான். அவன் அதிகமான ஜனங்களுக்கு ராஜாவாயிருந்தான்.

4 அவன் தன்னுடைய ஜனத்தால் சுதந்தரிக்கப்பட்ட ஒவ்வொரு தேசத்திலும் அமுலோனின் சகோதரர்களை ஆசிரியர்களாக நியமித்தான்; இவ்வாறாக, நேபியின் பாஷை, சகல லாமானியர்களுக்குள்ளும் போதிக்கப்பட்டது.

5 அவர்கள் ஒருவரோடொருவர் நட்பாய் பழகுகிற ஜனமாயிருந்தார்கள்; இருப்பினும் தேவனை அவர்கள் அறியவில்லை, அவர்களுக்கு அமுலோனுடைய சகோதரர்களும் கர்த்தரைக்குறித்தோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தையோ, அபிநாதியின் வார்த்தைகளையோ, போதிக்கவில்லை.

6 அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதும்பொருட்டு, தங்களின் பதிவேட்டை எழுதும்படிக்கு போதித்தார்கள்.

7 லாமானியர்கள் ஐஸ்வர்யத்திலே விருத்தியடைந்து, ஒருவரோடொருவர் வணிகம் செய்யத் துவங்கி பெலமடைந்தார்கள், உலகத்தினுடைய ஞானத்திற்கேற்ப, புத்தியும் தந்திரமும் புத்தியுமுள்ளவர்களாயிருக்கத் தொடங்கினார்கள். ஆம், அவர்கள் தங்களின் சொந்த சகோதரர்கள்தவிர, பிறரிடத்தில் எல்லாவிதமான துன்மார்க்கத்திலேயும், கொள்ளையடிப்பதிலும் களிகூர்ந்து, மிகவும் வஞ்சனையுள்ள ஜனமாயிருந்தார்கள்.

8 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மாவின் மீதும் அவன் சகோதரர்களின் மீதும், அமுலோன் அதிகாரத்தைச் செலுத்தவும் துன்புறுத்தவும் தொடங்கி, அவர்களுடைய பிள்ளைகளை தன் பிள்ளைகள் துன்புறுத்தும்படியும் செய்யத் துவங்கினான்.

9 ராஜாவினுடைய ஆசாரியர்களில் ஒருவனாயிருந்தானென்றும், அவன் அபிநாதியின் வார்த்தைகளை விசுவாசித்து ராஜாவுக்கு முன்பாக துரத்தப்பட்டானென்றும், அமுலோன் ஆல்மாவை அறிந்திருந்ததினாலே, அவனோடு குரோதம் கொண்டான். ஆதலால் அவன் லாமான் ராஜாவிற்குக் கீழ்ப்படிந்திருந்தும், அவன் அவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி, வேலைகளைச் சுமத்தி, அவர்கள் மீது விசாரணைக்காரர்களைப் போட்டான்.

10 அந்தப்படியே, அவர்களுடைய உபத்திரவங்கள் மிகவும் அதிகரித்தபடியால், அவர்கள் தேவனிடத்திலே ஊக்கமாய் கூக்குரலிடத் தொடங்கினார்கள்.

11 அவர்கள் தங்களின் கூக்குரல்களை நிறுத்தவேண்டுமென்று அமுலோன் கட்டளையிட்டான்; அவர்களில், தேவனை அழைக்கிறவர்களை கொலை செய்யும்படி, அவர்களைக் கண்காணிக்க காவற்காரர்களை நியமித்தான்.

12 ஆல்மாவும் அவனுடைய ஜனமும் கர்த்தராகிய தங்கள் தேவனிடத்தில் தங்களுடைய சத்தங்களை உயர்த்தாமல், தங்கள் இருதயங்களை அவரிடத்தில் ஊற்றினார்கள்; அவர் அவர்களுடைய எண்ணங்களை அறிந்திருந்தார்.

13 அந்தப்படியே, அவர்களுடைய உபத்திரவங்களிலே கர்த்தருடைய சத்தம் அவர்களுக்கு உண்டாகி, என்னிடத்திலே நீங்கள் செய்த உடன்படிக்கையை நான் அறிந்திருக்கிறபடியால், உங்கள் சிரசுகளை உயர்த்தி, நன்கு ஆறுதலடையுங்கள்; நான் என் ஜனத்தோடு உடன்படிக்கை செய்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன்.

14 நீங்கள் அடிமைத்தனத்தில் இருக்கும்போதே, உங்களின் தோள்களிலே சுமத்தப்படுகிற சுமைகளை நீங்கள் உணராமலிருக்குமளவிற்கு அவைகளை லகுவாக்குவேன். இந்நாள் முதற்கொண்டு நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருக்கும்பொருட்டும், தன் ஜனத்தை அவர்களுடைய உபத்திரவங்களிலே சந்திக்கிற கர்த்தராகிய தேவன் நானே என்று அதினிமித்தம் நிச்சமாய் அறிந்துகொள்வீர்களென்றும், இவைகளைச் செய்வேன்.

15 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மாவின் மீதும், அவனுடைய சகோதரர்களின் மீதும் சுமத்தப்பட்ட சுமைகள் லகுவாக்கப்பட்டன; ஆம், அவர்கள் நிர்விசாரமாய் தங்களுடைய பாரங்களைச் சுமக்க கர்த்தர் பெலப்படுத்தினார், அவர்களும் கர்த்தருடைய சித்தத்திற்கு மகிழ்ச்சியோடும் பொறுமையாயும் கீழ்ப்படிந்தார்கள்.

16 அந்தப்படியே, அவர்களின் விசுவாசமும், பொறுமையும் மிகுதியாய் இருந்தபடியாலே, கர்த்தருடைய சத்தம் மறுபடியும் அவர்களுக்கு உண்டாகி, நாளை உங்களை அடிமைத்தனத்திலிருந்து நான் தப்புவிக்கப்போவதால் நன்கு ஆறுதலடையுங்கள், என்றது.

17 அவர் ஆல்மாவை நோக்கி: நீ இந்த ஜனத்தை வழிநடத்துவாயாக, நான் உன்னுடனே வந்து, இந்த ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து தப்புவிக்கப்பண்ணுவேன், என்றார்.

18 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மாவும், அவனுடைய ஜனமும், இரவிலே தங்களுடைய மந்தைகளையும், தானியங்களையும் ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்தார்கள்: ஆம், இராமுழுவதும் அவர்கள் தங்கள் மந்தைகளை ஏகமாய்க்கூட்டிச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.

19 கர்த்தர் விடியற்காலத்திலே லாமனியர்களின்மீது ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார். ஆம், அவர்களுடைய விசாரணைக்காரர் அனைவரும் ஆழ்ந்த நித்திரையிலே இருந்தார்கள்.

20 ஆல்மாவும் அவனுடய ஜனமும் வனாந்தரத்தினுள்ளே புறப்பட்டுச் சென்றார்கள்; அவர்கள் நாள் முழுவதும் பயணம் பண்ணின பின்பு, ஒரு பள்ளத்தாக்கிலே பாளையமிறங்கினார்கள். ஆல்மா அவர்களை வனாந்தரத்திலே வழி நடத்தினதாலே, அந்த பள்ளத்தாக்கை ஆல்மா என்றழைத்தார்கள்.

21 ஆம், தேவன் தங்களுக்கு இரக்கமாயிருந்து, தங்களுடைய சுமைகளை லகுவாக்கி, அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்டபடியினாலே, அவருக்கு நன்றிகளை அந்த ஆல்மா பள்ளத்தாக்கிலே ஏறெடுத்தார்கள். ஏனெனில், அவர்கள் அடிமைத்தனத்திலிருந்தபோது, கர்த்தராகிய அவர்களுடைய தேவனைத் தவிர வேறொருவராலும் அவர்களை விடுவிக்க முடியவில்லை.

22 அவர்களின் சகல புருஷரும், ஸ்திரீகளும், பேசத்தெரிந்த அவர்களுடைய பிள்ளைகள் யாவரும் தங்களுடைய தேவனைத் துதித்து, தங்களின் சத்தத்தை உயர்த்தி, தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

23 இப்பொழுதும் கர்த்தர் ஆல்மாவை நோக்கி: லாமானியர்கள் விழித்தெழும்பி, உங்களைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஆதலால் இந்த தேசத்தைவிட்டு சீக்கிரமாய் விரைந்தோடுங்கள்; இந்த தேசத்தை விட்டு வெளியேறுங்கள். இந்த ஜனத்தை லாமானியர்கள் இன்னும் தொடர்ந்து வராதபடி, இந்த பள்ளத்தாக்கிலேயே நான் அவர்களைத் தடுத்து நிறுத்துவேன், என்றார்.

24 அந்தப்படியே, அவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தினுள் தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

25 அவர்கள் வனாந்தரத்திலே பன்னிரண்டு நாட்களிருந்த பின்னர், சாரகெம்லா தேசத்தை அடைந்தார்கள்; மோசியா ராஜாவும் அவர்களை மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொண்டான்.