அதிகாரம் 2
பென்யமீன் ராஜா தன் ஜனத்திற்கு பிரசங்கித்தல் – தன் ஆட்சியிலே நிலவுகிற நீதி, நேர்மை மற்றும் ஆவிக்குரியவைகளைப்பற்றி விவரித்தல் – அவன் அவர்களின் பரலோக ராஜாவை சேவிக்கும்படி அவர்களுக்கு ஆலோசனை கூருதல் – தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்கிறவர்கள் அவியாத அக்கினி போன்ற வியாகுலத்தினால் துன்பப்படுவார்கள். ஏறக்குறைய கி.மு. 124.
1 அந்தப்படியே, மோசியா தன் தகப்பன் தனக்கு கட்டளையிட்டிருந்தபடி செய்து, தேசமெங்கிலுமுள்ள ஜனங்கள் ஆலயத்திற்குப் போய் தங்களுக்கு பென்யமீன் ராஜா பேசவிருக்கிற வார்த்தைகளைக் கேட்கும்படி ஏகமாய் கூடும்படிக்கு தேசமுழுவதிலும் அறிவித்தான்.
2 அவர்கள் அதிகமாய் பெருகி தேசத்திலே மிகுதியாய் பலுகியிருந்ததால், அதிக எண்ணிக்கையில் இருந்தபடியாலே அவர்களை எண்ணக்கூடாமற் போயிற்று.
3 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே பலிகளையும் தகனபலிகளையும் செலுத்தும்படிக்கும்;
4 அவர்கள் களிகூர்ந்து தேவனிடத்திலும் எல்லா மனுஷரிடத்திலும் அன்பால் நிறைக்கப்பட்டிருக்கும்பொருட்டு, தேவனுடைய கட்டளைகளை அவர்கள் கைக்கொள்ளும்படி போதித்தவரும் சாரகெம்லா தேசத்தில் அமைதியை நிலவச் செய்தவருமான, ஒரு நியாயவானை அவர்களின் ராஜாவாக நியமித்தவரும், அவர்களை எருசலேம் தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு வந்தவரும், அவர்களின் சத்துருக்களின் கைகளுக்கு அவர்களைத் தப்புவித்தவரும், நியாயவான்களை அவர்களின் ஆசிரியர்களாகவும் நியமித்தவரான கர்த்தராகிய தங்களின் தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கவும், தங்கள் மந்தைகளிலே முதற்பலன்களையும் எடுத்துச் சென்றார்கள்.
5 அந்தப்படியே, அவர்கள் ஆலயத்திற்கு வந்தபோது, ஒவ்வொரு மனுஷனும், தன் தன் மனைவி, மூத்தவர் தொடங்கி இளையவர் வரைக்குமான தன் தன் குமாரர்கள், குமாரத்திகள் மற்றும் அவர்களின் குமாரர்கள் குமாரத்திகள் அடங்கிய, தன் தன் குடும்பத்திற்குத் தக்கதாக மற்ற குடும்பத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமும் தனித்திருக்கும்படி, தங்களின் கூடாரங்களைச் சுற்றிலும் போட்டார்கள்.
6 அவர்கள் கூடாரங்களிலே இருந்துகொண்டே பென்யமீன் ராஜா பேசவிருக்கிற வார்த்தைகளைக் கேட்கும்பொருட்டு, ஒவ்வொரு மனுஷனும் தன் தன் கூடாரத்தின் வாசல், ஆலயத்தை நோக்கியிருக்கும்படி, ஆலயத்தைச் சுற்றிலும் தங்களின் கூடாரங்களைப் போட்டார்கள்.
7 திரள்கூட்டம் அதிகமாய் இருந்ததாலே பென்யமீன் ராஜாவால் ஆலயத்தின் மதில்களின் உட்புறத்திலிருந்து அவர்கள் அனைவருக்கும் போதிக்க முடியாமற்போயிற்று, ஆகவே தன் ஜனம் தான் அவர்களிடம் பேசவிருக்கும் வார்த்தைகளைக் கேட்கும்படி ஒரு கோபுரத்தைக் கட்டச்செய்வித்தான்.
8 அந்தப்படியே, அவன் கோபுரத்திலிருந்து தன் ஜனங்களுடன் பேச ஆரம்பித்தான்; திரள்கூட்டம் அதிகமாய் இருந்ததினாலே அவர்கள் அனைவரும் அவனுடைய வார்த்தைகளை கேட்க முடியாமற்போயிற்று; ஆதலால் அவன் தன் சத்தம் எட்டாதவர்கள் எல்லோரும் தன் வார்த்தைகளைப் பெறும்படிக்கு, அவன் தான் பேசும் வார்த்தைகள் எழுதப்படவும் அவர்களுக்குள்ளே அனுப்பப்படவும் செய்தான்.
9 அவன் பேசி எழுதும்படிச் செய்த வார்த்தைகள் இவைகளே: என் சகோதரரே, நான் இத்தினத்திலே உங்களுக்கு பேசவிருக்கும் வார்த்தைகளைக் கேட்க ஏகமாய் கூடியிருக்கும் நீங்களெல்லோரும், நான் பேசப்போகும் வார்த்தைகளை அற்பமாய் எண்ண இங்கே கூட கட்டளையிடாமல், நீங்கள் எனக்கு செவிகொடுத்து கேட்கும்படி உங்கள் செவிகளையும், புரிந்துகொள்ளும்படி உங்கள் இருதயங்களையும், உங்கள் பார்வைக்கு தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்படிக்கு உங்கள் மனங்களையும் திறந்து வைக்கக் கட்டளையிடுகிறேன்.
10 எனக்கு நீங்கள் அஞ்சவோ, மரிக்கும் அநித்திய மனுஷனிலும் என்னை மேன்மையானவன், என்று எண்ணவோ இங்கே வரவேண்டுமென்று, நான் உங்களுக்கு கட்டளையிடவில்லை.
11 நானும் உங்களைப்போல சரீரத்திலும், மனதிலும் சகல வித பெலவீனங்களுக்கும் உட்பட்டவனாய் இருந்தும், இந்த ஜனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு என் தகப்பனால் அபிஷேகம்பண்ணப்பட்டு, இந்த ஜனத்தின்மீது ராஜாவாகவும், அதிகாரியாகவும் இருக்கும்படி கர்த்தரின் கரத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்குக் கர்த்தர் அருளிய சகல ஊக்கத்தோடும், மனதோடும் பெலத்தோடும் உங்களுக்கு சேவை செய்ய அவருடைய இணையற்ற வல்லமையினால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.
12 நான் உங்களுக்குச் சொல்வது என்னவெனில், இச்சமயம்வரைக்கும் உங்களுடைய சேவையிலே நாட்களைக் கழிக்க நான் அனுமதிக்கப்பட்டேன்; உங்களின் எவ்விதமான சம்பத்துக்களையோ, பொன்னையோ, வெள்ளியையோ நான் நாடவில்லை.
13 நீங்கள் காவற்கிடங்கியிலே அடைபடும்படியோ, ஒருவரையொருவர் அடிமைகளாக கொண்டிருக்கவோ, நீங்கள் கொலை, அபகரிப்பு, திருட்டு, விபச்சாரம் புரியவோ உங்களை நான் அனுமதிக்கவில்லை; நீங்கள் எவ்விதமான துன்மார்க்கத்தைச் செய்யவும் நான் அனுமதிக்கவில்லை; சகல காரியங்களிலும் கர்த்தர் உங்களுக்கு கட்டளையிட்ட, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டுமென போதித்தேன்.
14 நீங்கள் வரிகளால் சுமத்தப்படக்கூடாதென்றும், சகிப்பதற்கு கடுமையானதொன்றும் உங்களின்மீது வராதபடிக்கும் நான் உங்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு என் சொந்த கரங்களாலே பிரயாசப்பட்டேன், நான் பேசின இந்த எல்லாக் காரியங்களுக்கும் நீங்களே இந்நாளிலே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
15 ஆயினும் என் சகோதரரே, நான் மேன்மை பாராட்டும்படிக்கு இந்தக் காரியங்களைச் செய்யவில்லை; நான் இந்தக் காரியங்களைச் சொல்வதின் மூலமாக உங்களைக் குற்றப்படுத்தவும் இவற்றைச் சொல்லவில்லை; ஆனால் இந்நாளிலே, தேவனுக்கு முன்பாக தெளிந்த மனசாட்சியோடு பதிலளிக்க என்னால் இயலுமென்று, நீங்கள் அறியும்படிக்கே இந்தக் காரியங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16 இதோ, உங்களுக்குச் சேவை செய்வதில் என் நாட்களைக் கழித்தேன் என்று உங்களுக்குச் சொன்னதினிமித்தம் நான் மேன்மை பாராட்ட விரும்பவில்லை; ஏனெனில் நான் தேவனுடைய சேவையில் மாத்திரமே இருந்திருக்கிறேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 இதோ, நீங்கள் ஞானத்தைக் கற்கவும், உங்கள் சகமனுஷருக்கு நீங்கள் சேவை செய்யும்போது, தேவனுக்கே சேவை செய்கிறீர்களென்று நீங்கள் கற்றுக்கொள்ளவுமே, இந்தக் காரியங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18 இதோ, என்னை உங்களுடைய ராஜா என்று அழைத்தீர்கள்; உங்கள் ராஜா என்று நீங்கள் அழைக்கிற நான், உங்களுக்குச் சேவை செய்ய பிரயாசப்படுகிறேன் என்றால், நீங்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்ய பிரயாசப்படக்கூடாதா?
19 இதோ, நீங்கள் ராஜா என்று அழைக்கிற நான், உங்கள் சேவையிலே என் நாட்களைக் கழித்திருந்தும், தேவனுடைய சேவையிலே இருப்பதால், உங்களின் நன்றிக்கு உரித்தானவனாயிருக்கிறேன், நீங்கள் உங்கள் பரலோக ராஜாவிற்கு எவ்வளவாய் நன்றி செலுத்த வேண்டும்!
20 என் சகோதரரே, உங்களுக்கு நான் சொல்வது என்னவெனில், உங்களை சிருஷ்டித்து, உங்களைக் கவனித்து, பாதுகாத்து, நீங்கள் களிகூரும்படிச் செய்து, நீங்கள் ஒருவரிலொருவர் சமாதானமாய் வாழ அருளிய, அந்த தேவனுக்கு உங்கள் முழு ஆத்துமா பெற்றிருக்கக் கூடிய வல்லமையாலே சகல நன்றியையும், துதியையும் செலுத்தினாலும்,
21 நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், பூர்வத்திலே உங்களைச் சிருஷ்டித்து, நீங்கள் ஜீவித்து இயங்கி உங்களின் சுயசிந்தனையின் பிரகாரமாய் நீங்கள் நடக்க உங்களுக்குப் பிராணனைக் கடனாய் அளித்து ஒவ்வொரு கணமும், அவ்வப்போது உங்களை ஆதரிக்கிறவரை, உங்களுடைய முழு ஆத்துமாக்களோடு நீங்கள் சேவித்தாலும், நீங்கள் பிரயோஜனமற்ற ஊழியர்களாகவே இருப்பீர்கள் என்று நான் சொல்கிறேன்
22 இதோ, அவர் உங்களிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டுமென்பதே; அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களெனில் நீங்கள் தேசத்திலே விருத்தியடைவீர்கள், என்று உங்களிடத்தில் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்; தாம் சொன்னதிலிருந்து அவர் என்றும் மாறாதவர்; ஆதலால் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களெனில் அவர் உங்களை ஆசீர்வதித்து விருத்தியடையச் செய்கிறார்.
23 இப்பொழுதும் முதலாவதாக, அவர் உங்களைச் சிருஷ்டித்து, உங்களுக்கு உங்கள் பிராணனை அருளினார், அதற்காக அவருக்கு நீங்கள் கடன்பட்டவர்களாயிருக்கிறீர்கள்.
24 இரண்டாவதாக, அவர் உங்களுக்கு தாம் கட்டளையிட்டபடியே நீங்கள் செய்யவேண்டுமென விரும்புகிறார்; அப்படிச் செய்வீர்களெனில் உடனுக்குடன் உங்களை ஆசீர்வதிக்கிறார், ஆகவே உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இதினிமித்தம் நீங்கள் அவருக்கு இப்பொழுதும் இனி என்றென்றுமாயும் கடன்பட்டவர்களாயிருக்கிறீர்கள்; ஆதலால், எதைக் குறித்து நீங்கள் மேன்மை பாராட்டுவீர்கள்?
25 இப்பொழுதும் உங்களைக் குறித்து நீங்கள் ஏதேனும் சொல்லக்கூடுமா என்று கேட்கிறேன். இல்லை, என்று உங்களுக்குப் பதிலளிக்கிறேன். நீங்கள் பூமியின் தூசியால் சிருஷ்டிக்கப்பட்டிருந்தும், பூமியினுடைய தூசிக்கு ஒப்பானவர்கள் என்று நீங்கள் சொல்லக்கூடாமற் போகிறது. ஆனால் இதோ, அதுவும் உங்களைச் சிருஷ்டித்தவருக்கு சொந்தமானதே.
26 உங்களின் ராஜாவென்று அழைக்கப்படுகிற நானும் உங்களிலும் மேன்மையானவனல்ல. ஏனெனில் நானும் தூசியினாலானவனே. இதோ நான் முதிர்வயதானவன் என்றும், இந்த நித்தியமற்ற சரீரத்தை அதன் தாய் பூமிக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன் என்றும், நீங்கள் காண்கிறீர்கள்.
27 ஆதலால் நான் உங்களுக்குச் சேவை செய்தேன் என்று உங்களுக்குச் சொன்னதுபோல, தேவனுக்கு முன்பாக தெளிந்த மனசாட்சியோடு நடந்து, அதனாலே அவரால் நியாயம் விசாரிக்க நிற்கும்போது, உங்களைப்பற்றி தேவன் எனக்குக் கட்டளையிட்ட காரியங்களைக்குறித்து, நான் குற்றமற்றவனாய் காணப்படவும் உங்களின் இரத்தப்பழி என்மீது சுமத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இச்சமயத்திலே, நீங்கள் ஏகமாய்க் கூடும்படிச் செய்தேன்.
28 நான் உங்களுக்குச் சொல்வது என்னவெனில், என் கல்லறைக்கு போகவிருக்கிற இச்சமயத்திலே, நான் சமாதானமாய் போகவும், நியாயமுள்ள தேவனை உன்னதத்தில் துதித்துப்பாடுகிற கீர்த்தனைக்காரரோடே என் நித்திய ஆவி சென்று சேரவும், என் வஸ்திரத்தில் இருந்து உங்களுடைய இரத்தத்தை நீக்கிப்போடவுமே, நீங்கள் ஏகமாய்க் கூடும்படிச் செய்தேன்.
29 அன்றியும் நான் இனிமேலும் உங்களின் ஆசிரியராகவும், ராஜாவாகவும் இருக்க இயலாது என்று உங்களுக்கு அறிவிக்கவே நீங்கள் ஏகமாய்க்கூடும்படிச் செய்தேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
30 இச்சமயத்திலும், நான் உங்களிடத்தில் பேச முயற்சிக்கையில் என் சரீரம் வெகுவாய் நடுங்குகிறது; ஆனாலும் கர்த்தராகிய தேவன் எனக்கு உறுதுணையாயிருந்து, உங்களை நோக்கி என் குமாரனாகிய மோசியா உங்களின் ராஜாவாகவும், அதிகாரியாகவும் இருக்கிறான் என்று, இத்தினத்திலே உங்களுக்கு அறிவிக்க எனக்கு கட்டளையிட்டு, நான் உங்களிடம் பேசும்படி செய்தார்.
31 இப்பொழுதும் என் சகோதரரே, இதுவரைக்கும் நீங்கள் செய்துவந்ததுபோல, செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். என் கட்டளைகளையும் என்னுடைய தகப்பனின் கட்டளைகளையும் கைக்கொண்டதினிமித்தம் நீங்கள் விருத்தியடைந்து, உங்களின் சத்துருக்களின் கைகளுக்குள் விழாமல் தப்புவிக்கப்பட்டதுபோல, என் குமாரனின் கட்டளைகளையோ, அல்லது உங்களுக்கு அவன் மூலமாய்க் கொடுக்கப்படும் தேவனுடைய கட்டளைகளையோ, நீங்கள் கைக்கொண்டால் தேசத்திலே விருத்தியடைவீர்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களின் மீது வல்லமை கொள்ளாதிருப்பார்கள்.
32 ஆனால், என் ஜனமே, உங்களுக்குள்ளே பிணக்குகள் எழாமலும், என் தகப்பனாகிய மோசியாவால் பேசப்பட்ட, அந்த அசுத்த ஆவிக்கு நீங்கள் கீழ்ப்படியாதபடிக்கும் ஜாக்கிரதையாயிருங்கள்.
33 இதோ, தன் இஷ்டப்படியே அந்த ஆவிக்கு கீழ்ப்படிகிறவனுக்கு மகா தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது; அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்து, தன் பாவங்களிலே நிலைத்திருந்து மரிப்பானெனில், அவன் தன் சொந்த ஆத்துமாவிற்கு ஆக்கினையைத் தேடிக்கொள்ளுகிறான். தன் சொந்த புத்திக்கு விரோதமாய், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறினதினாலே, தன் சம்பளமாய் நித்திய தண்டனையைப் பெறுவான்.
34 நான் உங்களுக்குச் சொல்வது என்னவெனில், உங்கள் சிறுபிள்ளைகளைத் தவிர, இந்தக் காரியங்களைக் குறித்துப் போதிக்கப்படாதவர்கள் உங்களில் யாருமில்லை; உங்கள் பரலோக பிதாவிற்கு நீங்கள் நித்தியமாய்க் கடன்பட்டு, உங்களையும், நீங்கள் வைத்திருக்கிற எல்லாவற்றையும் அவருக்குக் கொடுக்கவேண்டுமென்று எதை அறிகிறீர்கள்; நம் தகப்பனாகிய லேகி எருசலேமை விட்டு வந்த காலத்திலிருந்து பரிசுத்த தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருக்கிற பதிவேடுகளைக் குறித்தும்;
35 இதுவரைக்கும் நம் பிதாக்கள் பேசின எல்லாவற்றையும் குறித்தும் போதிக்கப்பட்டீர்கள். இதோ, அவர்கள் கர்த்தரால் தங்களுக்கு கட்டளையிடப்பட்டவைகளையும் சொன்னார்கள். ஆகவே அவை நியாயமும், சத்தியமுமானவைகள்.
36 இப்பொழுதும் என் சகோதரரே, நான் உங்களிடத்தில் சொல்வது என்னவெனில், நீங்கள் இந்த சகல காரியங்களைக் குறித்து போதிக்கப்பட்டு, அறிந்த பின்னரும் பேசப்பட்டவைகளுக்கு விரோதமாய்ப்போய், அக்கிரமத்தைச் செய்வீர்களெனில், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, விருத்தியடைந்து, பாதுகாக்கப்படும்படி ஞானத்தின் பாதைகளிலே உங்களை நடத்துவதற்கு, கர்த்தருடைய ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் கொள்ளாதபடி நீங்கள் அவரிடமிருந்து விலகிப்போகிறீர்கள்.
37 நான் உங்களிடத்தில் சொல்வது என்னவெனில், இப்படிச் செய்கிற மனுஷன் தேவனுக்கு விரோதமாய் வெளிப்படையாய் கலகத்தினுள் இறங்குகிறான்; ஆகையால் அவன் அசுத்த ஆவிக்கு கீழ்ப்படிகிறவன், நீதியான யாவற்றுக்கும் சத்துருவாகிறான். ஆகையால் அசுத்த ஆலயங்களிலே வாசம் கொள்ளாததினிமித்தம், அவனுக்குள் கர்த்தர் தரித்திருப்பதில்லை.
38 ஆகையால், அந்த மனுஷன் மனந்திரும்பாமலிருந்து தேவனுக்கு பகையாளியாயிருந்து மரிப்பானெனில், தெய்வீக நீதியின் தேவைகள் தன்னுடைய சொந்த குற்றத்தின் தெளிந்த உணர்ச்சிக்கு அவனுடைய அழியாத ஆத்துமாவை எழுப்புகிறது; அது கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அவனை விலகச்செய்து, என்றென்றைக்குமாய் எழும்புகிற ஜூவாலைகளைக்கொண்ட அவியாத அக்கினியைப்போன்ற, குற்றமும், வேதனையும், வியாகுலமும் அவன் மார்பை நிறைக்கிறது.
39 இப்பொழுதும் நான் உங்களுக்குச் சொல்வது என்னவெனில், அந்த மனுஷனுக்கு இரக்கத்தின் உரிமையில்லை. ஆகவே முடிவற்ற வேதனையைச் சகிப்பதே அவனுடைய கடைசி அழிவாயிருக்கும்.
40 என் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய முதியோரே, வாலிபரே, சிறுபிள்ளைகளே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் தெளிவாய்ப் பேசியுள்ளேன். மீறுதலில் விழுந்தவர்களின் அஞ்சத்தக்க நிலைமையை நினைவுகூர நீங்கள் விழித்தெழ ஜெபிக்கிறேன்.
41 மேலும் தன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுபவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில் இதோ, ஆவிக்குரியதும் லௌகீகமானதுமான சகல காரியங்களிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் முடிவுபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். கர்த்தராகிய தேவன் இதைப் பேசியிருப்பதாலே, இந்தக் காரியங்கள் சத்தியமானவை என்று நினைவுகூருங்கள், நினைவுகூருங்கள்.