அதிகாரம் 3
பென்யமீன் ராஜா தன் செய்தியைத் தொடருதல் – சர்வவல்லமையுள்ள கர்த்தர் களிமண்ணாலான கூடாரத்தில் மனுஷருக்குள்ளே ஊழியம் செய்வார் – உலகத்தின் பாவங்களுக்காக அவர் பாவநிவர்த்தி செய்யும்போது, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வெளிவரும் – அவரின் நாமத்தினால் மாத்திரமே இரட்சிப்பு வருகிறது – மனுஷர் பாவநிவர்த்தியின் மூலம் சுபாவ மனுஷனை அகற்றி, பரிசுத்தவான்களாகக்கூடும் – அக்கினி மற்றும் கந்தகக்கடல்போல துன்மார்க்கரின் வேதனையும் இருக்கும். ஏறக்குறைய கி.மு. 124.
1 என் சகோதரரே, உங்களிடத்தில் இன்னும் சற்றே அதிகமாக பேச வேண்டியிருப்பதினாலே உங்கள் கவனத்தை செலுத்துமாறு அழைக்கிறேன். ஏனெனில் இதோ, வரப்போகிற காரியங்களைக் குறித்து நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதிருக்கிறது.
2 உங்களிடத்தில் நான் சொல்லவிருக்கும் காரியங்கள் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தூதனால் எனக்கு அறிவிக்கப்பட்டன. அவன் என்னை நோக்கி விழித்தெழு என்றான்; நான் விழித்தெழுந்தேன். இதோ அவன் என் முன்பாக நின்றான்.
3 அவன் என்னை நோக்கி: விழித்தெழு. நான் சொல்லவிருக்கிற வார்த்தைகளைக் கேள்; ஏனெனில் இதோ, மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தியை உனக்கு அறிவிக்கவே வந்திருக்கிறேன், என்றான்.
4 ஏனெனில் கர்த்தர் உனது விண்ணப்பங்களைக் கேட்டு, உனது நீதியைப்பற்றி தீர்மானித்து, நீ களிகூர்ந்திருக்கும்படி உனக்கு அறிவிக்கவும்; உனது ஜனமும் சந்தோஷத்தினால் நிறையும்படி அவர்களுக்கு நீ அறிவிக்கவும், என்னை அனுப்பினார்.
5 ஏனெனில் இதோ அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கிறவரும், இருந்தவரும், ராஜரீகம்பண்ணுகிறவருமான, சர்வவல்ல கர்த்தர் வல்லமையோடு பரலோகத்திலிருந்து மனுபுத்திரர்களிடையே இறங்கிவந்து, களிமண்ணிலான கூடாரத்திலே வாசம்பண்ணி, மனுஷருக்குள்ளே சென்று, வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்தி, மரித்தோரை எழும்பப்பண்ணி, சப்பாணிகளை நடக்கச்செய்து, குருடர்களை பார்வையடையும்படிச் செய்து, செவிடரைக் கேட்கச்செய்து, சகல நோய்களையும் சுகப்படுத்தி, பலத்த அற்புதங்களையும், நடப்பிக்கும் காலம் தூரமாயல்லாமல் சமீபமாயிருக்கிறது.
6 அவர் மனுபுத்திரரின் இருதயங்களிலே வாசமாயிருக்கிற அசுத்த ஆவிகளான பிசாசுகளைத் துரத்துவார்.
7 இதோ, மரணத்தைத் தவிர, மனுஷன் படக்கூடிய துன்பங்களைக் காட்டிலும், அதிகமாய் அவர் சோதனைகளாலும், சரீர வேதனைகளாலும், பசியாலும், தாகத்தாலும், சோர்வினாலும் பாடனுவிப்பார், ஏனெனில் இதோ, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வெளிவரும், தன் ஜனத்தினுடைய துன்மார்க்கம் மற்றும், அருவருப்புக்காகவும், அவர் படும் வியாகுலம் மிகவும் அதிகமாயிருக்கும்.
8 அவர் இயேசு கிறிஸ்துவென்றும், தேவனுடைய குமாரனென்றும், வானம் மற்றும் பூமியின் பிதாவென்றும், ஆதியிலிருந்தே சகல காரியங்களின் சிருஷ்டிகரென்றும், அழைக்கப்படுவார்; அவருடைய தாய் மரியாள் என்று அழைக்கப்படுவாள்.
9 இதோ அவருடைய நாமத்தின் மீதான விசுவாசத்தின் மூலம், மனுபுத்திரர்களுக்கு இரட்சிப்பு வரும்பொருட்டு தம்முடைய சொந்தமானோருக்குள்ளே வருகிறார். இவ்வனைத்திற்கும் பின்பும், அவர்கள் அவரை மனுஷனென்று எண்ணி, பிசாசு பிடித்தவன் என்று சொல்லி, சவுக்கால் அடித்து, அவரை சிலுவையிலறைவார்கள்.
10 அவர் மரித்தோரிலிருந்து மூன்றாம் நாளிலே எழும்புவார்; இதோ, உலகத்தை நியாயம் விசாரிக்க அவர் நிற்கிறார்; இதோ, மனுபுத்திரர் மேல் ஒரு நீதியுள்ள விசாரணை வரும்படிக்கே இந்தக் காரியங்கள் யாவும் செய்யப்படுகின்றன.
11 இதோ, ஆதாமின் மீறுதலினாலே வீழ்ந்தவர்களுடைய பாவங்களுக்காகவும், தங்களைக் குறித்த தேவனுடைய சித்தத்தை அறியாமல் மரித்தோருடைய பாவங்களையும், அல்லது அறியாமையினால் பாவம் செய்தோருடைய பாவங்களையும், அவருடைய இரத்தம் நிவர்த்தியாக்குகிறது.
12 ஆனால், அறிந்தே, தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணுகிறவனுக்கு ஐயோ! ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கிற விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலினாலேயன்றி இரட்சிப்பு வராது.
13 கிறிஸ்து வருவாரென்று விசுவாசிப்பவர்கள் எவரோ அவர்களே தங்களின் பாவங்களுக்காக மன்னிப்பை பெற்று, அவர் தங்களுக்குள்ளே அப்போதே வந்திருந்ததைப்போல மிகுந்த சந்தோஷத்தினால் களிகூரத்தக்கதாக, இந்தக் காரியங்களை சகல இனத்திற்கும், தேசத்திற்கும், பாஷைக்காரருக்கும் அறிவிக்க மனுபுத்திரர் யாவருக்குள்ளும் கர்த்தராகிய தேவன் தம் பரிசுத்த தீர்க்கதரிசிகளை அனுப்பியிருக்கிறார்;
14 இருப்பினும் தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஜனம் ஒரு வணங்காக்கழுத்துள்ள ஜனம் எனக்கண்டு அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தை, மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்தினார்.
15 தம் வருகையைக்குறித்து அவர்களுக்குள்ளே அநேக அறிகுறிகளையும், அற்புதங்களையும், முன்னடையாளங்களையும், நிழலாட்டங்களையும் காண்பித்தார்; அவருடைய வருகையைக்குறித்து பரிசுத்த தீர்க்கதரிசிகளும் அவர்களுடனே பேசினார்கள்; ஆகிலும் தங்கள் இருதயங்களை அவர்கள் கடினப்படுத்தினார்கள்; அவருடைய இரத்தத்தின் பாவநிவர்த்தியின் மூலமேயன்றி மோசேயின் நியாயப்பிரமாணம் ஒன்றுக்கும் உதவாது, என்று அறியாதிருந்தார்கள்.
16 சிறுபிள்ளைகளும் பாவம் செய்யக்கூடுமேயானால் அவர்கள் இரட்சிக்கப்படக்கூடாமற்போம்; ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; ஏனெனில் இதோ, ஆதாமிலோ அல்லது சுபாவத்தினாலோ அவர்கள் வீழ்ந்தாலும், கிறிஸ்துவினுடைய இரத்தம் அவர்களின் பாவங்களை நிவர்த்தியாக்குகிறது.
17 அன்றியும் சர்வவல்ல கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தினாலும் அவர் மூலமுமேயன்றி மனுபுத்திரருள் இரட்சிப்பு வர மற்ற எந்த நாமமோ, வழியோ, மார்க்கமோ கொடுக்கப்படவில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18 ஏனெனில் இதோ அவர் நியாயம் விசாரிக்கிறார்; அவருடைய தீர்ப்பு நியாயமானது; தன் பாலியத்திலே மரிக்கிற குழந்தை அழிந்துபோவதில்லை; ஆனால் மனுஷர் தங்களையே தாழ்த்தி, சிறுபிள்ளைகளைப் போலாகி, சர்வவல்ல கர்த்தராகிய கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தினாலும், அதன் மூலமும் இரட்சிப்பு உண்டாயிருந்ததென்றும், உண்டாயிருக்கிறதென்றும், உண்டாயிருக்குமென்றும் விசுவாசியாமற் போவார்களெனில் தங்கள் சொந்த ஆத்துமாவிற்கென ஆக்கினையை பானம் பண்ணுவார்கள்.
19 ஏனெனில் பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களுக்கு இடங்கொடுத்து, சுபாவ மனுஷனை அகற்றி, கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் பரிசுத்தவானாகி, சிறுபிள்ளையைப்போலாகி, கீழ்ப்படிந்து, சாந்தமாயும், தாழ்மையாயும், பொறுமையாயும், அன்பால் நிறைந்து, ஒரு பிள்ளை தன் தகப்பனுக்கு கீழ்ப்படிவதுபோல, அவன் மீது சுமத்த தகுதியானது என கர்த்தர் காண்கிற அனைத்திலும் கீழ்ப்படிய சித்தமாயிராவிட்டால், ஆதாமின் வீழ்ச்சி தொடங்கி இருந்திருக்கிறவாறே, சுபாவ மனுஷன் தேவனுக்கு சத்துருவாக இருக்கிறான், என்றென்றைக்கும் இருப்பான்.
20 மேலும், எல்லா தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்காரருக்கும் மற்றும் ஜனத்திற்கும் இரட்சகரைக் குறித்த ஞானம் பிரசித்திபெறும் காலம் வருமென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 இதோ, அச்சமயம் வரும்போது, சிறுபிள்ளைகளைத் தவிர சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தின்மேல் விசுவாசித்து மனந்திரும்பினவர்களேயன்றி, வேறொருவரும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் காணப்படமாட்டார்கள்.
22 இச்சமயத்திலேயும் தேவனாகிய உன் கர்த்தர் உனக்கு கட்டளையிட்ட காரியங்களை நீ உன் ஜனத்திற்குப் போதித்த பின்பு, நான் உன்னிடத்தில் பேசின வார்த்தைகளின்படி மாத்திரமே, அவர்கள் இனியும் தேவனுடைய பார்வையில் குற்றமற்றவர்களாய் காணப்படுவதில்லை.
23 இப்பொழுதும் தேவனாகிய கர்த்தர் எனக்கு கட்டளையிட்ட வார்த்தைகளையே பேசினேன்.
24 கர்த்தர் சொல்வது என்னவெனில்: அவைகள் நியாயத்தீர்ப்பின் நாளிலே இந்த ஜனத்திற்கு விரோதமாய் பிரகாசமான சாட்சியமாய் நிற்கும்; அவைகளின்படி, ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய நன்மையான அல்லது தீமையான கிரியைகளுக்குத் தக்கதாக நியாயம் விசாரிக்கப்படுவான்.
25 அவைகள் பொல்லாதவைகளாய் இருக்குமெனில், அவர்கள் தங்கள் குற்றவுணர்ச்சியையும், அருவருப்புகளையும் எண்ணிப்பார்த்து அஞ்சும்படிக்கு ஒப்படைக்கப்படுவார்கள்; அது அவர்களைக் கர்த்தருடைய பிரசன்னத்தினின்று நீங்கலாக்கி, துர்பாக்கியமும் நித்திய வேதனையைக் கொண்டதும், மீளக்கூடாததுமான நிலைக்குப் பின்வாங்கச் செய்கிறது, அதினிமித்தம் அவர்கள் தங்கள் சொந்த ஆத்துமாக்களுக்கு ஆக்கினையை பானம் பண்ணியிருக்கிறார்கள்.
26 ஆதலால், தேவ உக்கிரத்தின் பாத்திரத்தில் அவர்கள் பானம் பண்ணியிருக்கிறார்கள், தவிர்க்கப்பட்ட கனியை ஆதாம் புசித்ததினாலே அவன் வீழ்ந்துபோவதை மறுக்க முடியாதது போல, அந்த நீதி அவர்களுக்கும் மறுக்கப்பட முடியாது. ஆதலால் என்றென்றைக்கும் இரக்கம் அவர்கள் மேல் ஒருபோதும் உரிமை பாராட்ட முடியாது.
27 அவர்களின் வேதனை அக்கினியும், கந்தகமுமான கடலைப்போலவும் இருக்கும். அதன் ஜூவாலைகள் அவியாததாயும் அதன் புகை என்றென்றைக்குமாய் எழும்புகிறதாயுமிருக்கும். இவைகளையே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். ஆமென்.