வேதங்கள்
மோசியா 4


அதிகாரம் 4

பென்யமீன் ராஜா தன் உரையைத் தொடருதல் – இரட்சிப்பு பாவநிவர்த்தியினிமித்தம் வருகிறது – இரட்சிக்கப்படுவதற்கு தேவனை விசுவாசிக்கவேண்டும் – விசுவாசமாயிருப்பதன் மூலம் உங்கள் பாவமன்னிப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள் – தரித்திரருக்கு உங்களின் பொருட்களைப் பகிர்ந்தளியுங்கள் – சகல காரியங்களையும் ஞானமாயும், சீராயும் செய்யுங்கள். ஏறக்குறைய கி.மு. 124.

1 இப்பொழுதும், அந்தப்படியே, கர்த்தருடைய தூதன் தனக்குக் கொடுத்த வார்த்தைகளை பென்யமீன் ராஜா பேசி முடித்த பின்பு அவன் திரளானோரை சுற்றிலும் தன் கண்களை ஏறெடுத்தான்; இதோ அவர்கள் மேல் கர்த்தரின் பயம் வந்ததினாலே, பூமியிலே விழுந்து கிடந்தார்கள்.

2 அவர்கள் தங்களின் சொந்த மாம்சமான நிலையை பூமியின் தூசியைக் காட்டிலும் மோசமானதெனவும் கண்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சத்தமாய் கூக்குரலிட்டு, இரக்கமாயிரும்; நாங்கள் எங்கள் பாவங்களுக்கென்று மன்னிப்பைப் பெற்று, எங்களுடைய இருதயம் சுத்திகரிக்கப்படும் பொருட்டு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தை பூசும். ஏனெனில் வானத்தையும் பூமியையும் சகலவற்றையும் சிருஷ்டித்தவரும், மனுபுத்திரர் நடுவில் இறங்கிவரப்போகிறவரும், தேவகுமாரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையாயிருக்கிறோம், என்றார்கள்.

3 அந்தப்படியே, இந்த வார்த்தைகளை அவர்கள் பேசின பின்பு, கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார்; பென்யமீன் ராஜா அவர்களுக்கு பேசின வார்த்தைகளின்படியே, வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவின்மேல் அவர்கள் மிகுதியாய் விசுவாசம் வைத்ததினிமித்தம், தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பையும் மன சமாதானத்தையும், பெற்று சந்தோஷத்தால் நிரப்பப்பட்டார்கள்.

4 மறுபடியுமாய் பென்யமீன் ராஜா தன் வாயைத் திறந்து, அவர்களிடத்தில் பேசத் துவங்கிச் சொன்னதாவது: என் சிநேகிதர்களும், என் சகோதரர்களுமானவர்களே, என் கோத்திரத்தாரும், என் ஜனமுமானவர்களே, நான் உங்களிடத்தில் பேசவிருக்கிற, என் வார்த்தைகளின் மீதியானவற்றை நீங்கள் கேட்டு உணரும்படிக்கு, உங்கள் கவனத்தைச் செலுத்துமாறு மறுபடியும் அழைக்கிறேன்.

5 ஏனெனில் இதோ, இச்சமயத்தில் தேவனுடைய நன்மையைப்பற்றிய அறிவு உங்களை ஒன்றுமில்லாதவர்கள் என்ற உணர்ச்சிக்கும், உங்களின் தகுதியற்றதும், வீழ்ந்ததுமான நிலையைப்பற்றி, உங்களை விழித்தெழும்பச் செய்துள்ளதென்றால்,

6 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுபுத்திரர்கள் மேல் தேவனுடைய நன்மை, அவரின் இணையற்ற வல்லமை, அவரின் ஞானம், அவரின் பொறுமை, அவரின் நீடிய சாந்தம், மற்றும் உலகத்தின் அஸ்திபாரத்திலிருந்தே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற பாவநிவர்த்தி, கர்த்தரிடத்தில் தன் விசுவாசத்தை வைத்து கட்டளைகளைக் கைக்கொள்வதில், கருத்தாயிருந்து நித்தியமற்ற சரீரமாகிய தன் ஜீவனின் முடிவுபரியந்தமும் விசுவாசத்திலே தரித்திருக்கிறவனிடத்திலே இரட்சிப்பு வரும், என்ற ஞானத்தைப் பெற்றால்,

7 ஆதாமின் வீழ்ச்சியிலிருந்து, ஜீவிக்கிற, உலக முடிவுபரியந்தமும் ஜீவிக்கவிருக்கிற சகல மனுக்குலத்திற்கும் உலகத்தின் அஸ்திபாரத்திலிருந்தே ஆயத்தம் பண்ணப்பட்ட பாவநிவர்த்தியின் மூலம் இரட்சிப்பை இம்மனுஷனே பெறுகிறான் என்று நான் சொல்லுகிறேன்.

8 இரட்சிப்பு வருவதற்கு இதுவே வழியாயிருக்கிறது. பேசப்பட்ட இதைத் தவிர வேறெந்த இரட்சிப்புமில்லை. நான் உங்களுக்குச் சொன்ன நிபந்தனைகளைத் தவிர மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு வேறெந்த நிபந்தனைகளுமில்லை.

9 தேவனிலே விசுவாசியுங்கள்; அவர் இருக்கிறார் என்றும், அவரே பரலோகத்திலும் பூலோகத்திலும் சகல காரியங்களையும் சிருஷ்டித்தார் என்றும் விசுவாசியுங்கள்; பரலோகத்திலும் பூலோகத்திலும் அவருக்கு சகல ஞானமும், சகல வல்லமையுமிருக்கிறதென்று விசுவாசியுங்கள்; கர்த்தரால் புரிந்துகொள்ளக்கூடிய காரியங்கள் யாவையும் மனுஷனால் புரிந்துகொள்ள இயலாது, என்று விசுவாசியுங்கள்.

10 மறுபடியும், உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவைகளை விட்டுவிட்டு, தேவனுக்கு முன்பாக உங்களையே தாழ்த்தவேண்டுமென விசுவாசியுங்கள்; உண்மையான இருதயத்தோடு அவர் உங்களை மன்னிக்கும்படி கேளுங்கள்; இப்பொழுதும், இவைகள் யாவையும் நீங்கள் விசுவாசிப்பீர்களெனில் அவைகளை செயலாக்கவும் பார்த்துக்கொள்ளுங்கள்.

11 நான் உங்களுக்கு முன்பு சொன்னது போலவே மறுபடியும் சொல்வது என்னவென்றால், தேவனுடைய மகிமையைப்பற்றிய ஞானத்திற்கு நீங்கள் வந்து, அவருடைய நன்மையை அறிந்து, அவருடைய அன்பை ருசிபார்த்து, உங்களின் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெறுவீர்களெனில், அது உங்கள் ஆத்துமாக்களிலே மிகவும் அதிகமாய் சந்தோஷத்தை ஏற்படச்செய்து, அதினிமித்தம் தேவனுடைய மகத்துவத்தையும் உங்களின் சொந்த வெறுமைத்தன்மையையும் தகுதியற்ற சிருஷ்டிகளாகிய உங்களின்மீது அவர் வைத்திருக்கிற நன்மையையும் நீடிய பொறுமையையும், எப்போதும் நினைவில் வைத்து, அனுதினமும் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டு, தாழ்மையின் ஆழங்களிலே நீங்கள் தாழ்ந்திருக்கும்படி நினைவுகூரவும், வரப்போகிறவைகள் என்று தூதன் நாவினால் பேசினவைகளில் விசுவாசமாயும், திடமனதாயிருக்கவும், விரும்புகிறேன்.

12 இதோ, நான் உங்களுக்குச் சொல்வதென்னவெனில், இதை நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் எப்பொழுதும் களிகூர்ந்து தேவனுடைய அன்பினால் நிரப்பப்பட்டு, உங்களின் பாவங்களின் மன்னிப்பை எப்பொழுதும் பெற்றிருப்பீர்கள், உங்களை சிருஷ்டித்தவரின் மகிமையைப்பற்றிய அறிவிலும், அல்லது நியாயமும், சத்தியமுமான அறிவிலும் வளருவீர்கள்.

13 ஒருவருக்கொருவர் காயப்படுத்திக்கொள்ள மனமில்லாதவர்களாய், ஆனால் சமாதானமாய் ஜீவித்து, ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுக்குரியதைக் கொடுப்பீர்களாக.

14 உங்கள் பிள்ளைகள் பட்டினியாய் செல்லவும் வஸ்திரமில்லாதவர்களாயிருக்கவும் நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள்; தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அவர்கள் மீறி ஒருவரோடொருவர் சண்டையிட்டு, கலகம் செய்து, பாவத்தின் எஜமானும், சகல நீதிக்கும் விரோதியாயிருப்பவனும், நம் பிதாக்களால் பேசப்பட்ட அசுத்த ஆவியுமான அந்த பிசாசை சேவிக்கவும் நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள்.

15 ஆனால் சத்தியமும் தெளிந்த புத்தியுமான பாதைகளிலே அவர்களுக்கு நடக்க போதிப்பீர்கள்; ஒருவரோடொருவர் அன்புகூரவும், ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் போதிப்பீர்கள்.

16 மேலும் உங்களின் உதவியை நாடி நிற்போருக்கு நீங்களே உதவிசெய்வீர்கள்; தேவைப்படுபவனுக்கு உங்களின் பொருட்களை கொடுப்பீர்கள்; தரித்திரன் உங்களிடத்தில் வீணாய் வேண்டாமலும், அவன் அழிந்து போகாதபடிக்கும் பார்த்துக்கொள்வீர்கள்.

17 அந்த மனுஷன் துர்பாக்கியத்தை தன்மீது தானே வரப்பண்ணினான்; ஆகையால் அவனுடைய தண்டனைகள் நியாயமானதாயிருக்கிறபடியாலே நான் கரத்தை நீட்டாமல், என் ஆகாரத்தை அவனுக்கு கொடாமலும், அவன் துன்பப்படும்படிக்கு என் பொருளை அவனுக்கு அளிக்காமலும் இருப்பேன், என்று ஒருவேளை நீ சொல்லலாம்.

18 ஆனால், மனுஷனே, இதைச் செய்கிற எவராயிருப்பினும் மனந்திரும்புவது மிகவும் அவசியமானது; தான் செய்தவற்றிலிருந்து மனந்திரும்பாமல் போவானேயானால், என்றென்றுமாய் அழிந்து போவான், மற்றும் தேவ ராஜ்யத்தில் அவனுக்குப் பங்கில்லை, என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

19 ஏனெனில் இதோ, நாம் அனைவரும் யாசகர்கள் அல்லவா? நாம் வைத்திருக்கும் எல்லா பொருட்களுக்காகவும், ஆகாரத்துக்காகவும், வஸ்திரங்களுக்காகவும், பொன்னுக்காகவும், வெள்ளிக்காகவும், நாம் வைத்திருக்கும் சகலவிதமான ஐஸ்வரியங்களுக்காகவும், நாம் யாவரும் தேவனாகிய அவரை சார்ந்திருக்கிறோம் அல்லவா?

20 இதோ, இந்த சமயத்திலேயும் அவர் நாமத்தை அழைத்து, உங்களின் பாவங்களுக்காக மன்னிப்பை யாசிக்கிறீர்கள். நீங்கள் வீணாய் யாசிக்கும்படிக்கு அவர் உங்களை விட்டுவிட்டாரோ? இல்லையே. அவர் தன் ஆவியை உங்கள்மீது ஊற்றி, உங்கள் இருதயங்களை சந்தோஷத்தினால் நிரப்பி, உங்களின் சந்தோஷம் மிகவும் அதிகமானதாயிருந்தபடியாலே, நீங்கள் பேசமுடியாதபடிக்கு உங்கள் நாவுகளை அவர் அடைக்கப்பண்ணினார்.

21 இப்பொழுதும் உங்களைச் சிருஷ்டித்தவரும், நீங்கள் வைத்திருக்கிற சகலவற்றிற்காகவும், நீங்கள் சார்ந்திருக்கிற அந்த தேவனிடத்தில் பெறுவோம் என்று நம்பி, விசுவாசத்தோடு நியாயமான யாதொன்றையும் நீங்கள் கேட்கையில் தேவன் உங்களுக்கு அருளினால், நீங்கள் வைத்திருக்கிற பொருளை ஒருவருக்கொருவர் கொடுப்பது எவ்வளவு அவசியமானதாயிருக்கிறது.

22 தான் அழிந்துபோகாதபடி உங்களுடைய பொருளை வேண்டிக்கேட்கிற மனுஷனை நீங்கள் கடிந்துகொண்டு, அவனை நிதானிப்பீர்களெனில், உங்கள் ஜீவனுக்கு சொந்தக்காரராயிருக்கிற தேவனுக்கே சொந்தமானதும், உங்களுக்கு சொந்தமில்லாததுமான அப்பொருளை, நீங்கள் பகிர்ந்துகொள்ளாததினிமித்தம், உங்களின் ஆக்கினைத்தீர்ப்பு எவ்வளவு நியாயமுள்ளதாயிருக்கும்; இருப்பினும் நீங்கள் விண்ணப்பம் செய்யாமலும், நீங்கள் செய்தவற்றிற்காக மனந்திரும்பாமலும் இருக்கிறீர்கள்.

23 அந்த மனுஷனுக்கு ஐயோ, ஏனெனில் அவனுடைய பொருள் அவனுடனே அழிந்துபோகுமே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; இப்போதும் உலகத்திற்கேதுவானவைகளில் ஐஸ்வரியவான்களாய் இருப்பவர்களுக்கு இந்த காரியங்களை சொல்லுகிறேன்.

24 மேலும் எளியோருக்கு நான் சொல்லுகிறேன், உங்களிடத்தில் இல்லை, இருப்பினும் அன்றாடமும் ஜீவிப்பதற்கு போதுமான அளவு பெற்றிருக்கிறீர்கள். எளியோரும் தங்களிடத்தில் இல்லாததினிமித்தம் தரித்திரரை மறுத்தவர்கள் என நான் எண்ணிய நீங்கள் எல்லோரும், உங்களிடத்தில் இல்லாததினிமித்தம் நீங்கள் கொடுக்கவில்லை. என்னிடத்தில் இல்லாததால் கொடுக்கவில்லை, ஆனால் என்னிடத்தில் இருந்திருந்தால் நான் கொடுத்திருப்பேன், என்று உங்கள் இருதயங்களிலே சொல்வீர்கள் என, நான் விரும்புகிறேன்.

25 இப்பொழுதும் இதை உங்களின் இருதயங்களிலே சொல்லிக்கொள்வீர்களெனில், நீங்கள் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள், இல்லையெனில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் பெறாதவைகளை இச்சிப்பதினிமித்தம், உங்களின் ஆக்கினைத்தீர்ப்பு நியாயமானதாயிருக்கும்.

26 இப்பொழுதும் நான் பேசின இந்தக் காரியங்களினிமித்தம், அதாவது தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடக்கும்பொருட்டு, அனுதினமும் உங்களின் பாவங்களின் மன்னிப்பைப் பெற்றிருக்க, ஒவ்வொரு மனுஷனும் தன்னிடத்தில் வைத்திருப்பதற்கேற்ப, பசியுள்ளோருக்கு போஜனமளிக்கவும், வஸ்திரமில்லாதோருக்கு வஸ்திரமுடுத்தவும், வியாதியஸ்தரை சந்தித்து, அவர்களின் தேவைகளுக்குத் தக்கதாய் ஆவிக்குரிய விதமாகவும் உலகப் பிரகாரமாகவும், அவர்களின் நிவாரணத்துக்காக பணிவிடை செய்து, எளியோருக்கு தங்களின் பொருளைப் பங்கிட வேண்டுமென நான் விரும்புகிறேன்.

27 இந்தக் காரியங்கள் யாவும் ஞானத்திலும், ஒழுங்கிலும் செய்யப்படுகிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் ஒரு மனுஷன் தன் பெலத்தைக் காட்டிலும் அதிவேகமாய் ஓட வேண்டுமென்பது தேவையற்றதாயிருக்கிறது. அவன் வெகுமதியை பெறும்படிக்கு கருத்துள்ளவனாயிருப்பது அவசியமானதாயிருக்கிறது; ஆகையால் சகல காரியங்களும் ஒழுங்காய் செய்யப்படவேண்டும்.

28 நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், உங்களில் எவனாகிலும் தன் அயலானிடத்திலிருந்து ஒரு பொருளை கடனாய்ப் பெறுவானேயாகில், அவன் தான் ஒப்புக்கொள்கிறபடியே அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். இல்லாவிடில் நீ பாவம் செய்வாய்; ஒருவேளை உனது அயலானையும்கூட பாவம் செய்யும்படிச் செய்வாய்.

29 முடிவாக, நீங்கள் பாவம் செய்யக்கூடிய யாவையும் குறித்து உங்களுக்கு நான் சொல்ல இயலாது; ஏனெனில் நான் அவைகளை எண்ணக்கூடாத அளவிற்கு பல வழிகளும் வகைகளுமிருக்கின்றன.

30 உங்களின் வாழ்வின் முடிவுபரியந்தமும், நீங்கள் கேள்விப்பட்ட, நம்முடைய கர்த்தரின் வருகையைக் குறித்து விசுவாசமாய்த் தரித்திருந்து, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, உங்கள் எண்ணங்களையும், உங்கள் வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும், உங்களையும் நீங்கள் காத்துக்கொள்ளாவிடில், அழிந்துபோவீர்கள் என்றுமட்டும் உங்களுக்கு நான் சொல்லக்கூடும். இப்பொழுதும் மனுஷனே, நினைவில் கொண்டிரு. அழிந்துபோகாதே.