வேதங்கள்
2 நேபி 11


அதிகாரம் 11

யாக்கோபு தன் மீட்பரைக் கண்டான் – மோசேயின் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவை மாதிரியாக்கி, அவர் வருவார் என நிரூபித்தல். ஏறக்குறைய கி.மு. 559–545

1 இப்பொழுதும், யாக்கோபு என் ஜனத்திற்கு, அந்தச் சமயத்தில், அநேக பல காரியங்களைப் பேசினான். ஆயினும் நான் எழுதிய காரியங்களே எனக்குப் போதுமானதாய்த் தோன்றியபடியால், இவைகளை மாத்திரம் நான் எழுதினேன்.

2 இப்பொழுது நேபியாகிய நான், ஏசாயாவின் அநேக வார்த்தைகளை எழுதுகிறேன். ஏனெனில் என் ஆத்துமா அவனது வார்த்தைகளில் களிகூருகிறது. ஆதலால், நான் அவனது வார்த்தைகளை என் ஜனத்திற்கு ஒப்பிட்டு, அவைகளை என் பிள்ளைகளெல்லோருக்கும் அனுப்புவேன். ஏனெனில் நான் அவரைக் கண்டது போலவே, அவனும் மெய்யாகவே என் மீட்பரைக் கண்டான்.

3 நான் அவரைக் கண்டது போலவே என் சகோதரன் யாக்கோபும், அவரைக் கண்டிருக்கிறான்; ஆகையால் என் வார்த்தைகளை மெய்யென நிரூபிக்க, என் பிள்ளைகளுக்கு அவர்களின் வார்த்தைகளை அனுப்புவேன். ஆதலால் மூவரின் வார்த்தைகளால், நான் என் வார்த்தையை நிலைநிறுத்துவேன், என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆயினும் தேவன் அநேக சாட்சிகளை அனுப்பி, தமது வார்த்தைகள் யாவையும் நிரூபிக்கிறார்.

4 இதோ, கிறிஸ்துவின் வருகையின் உண்மையை என் ஜனத்திற்கு நிரூபிப்பதில் என் ஆத்துமா களிகூருகிறது. ஏனெனில், இந்தக் காரணத்திற்காகவே மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகத்தின் தொடக்கத்திலிருந்தே, தேவனால் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட எல்லா காரியங்களும், அவரை மனுஷனுக்கு மாதிரியாக்குவதாகவே இருக்கிறது.

5 எங்கள் பிதாக்களுடன் கர்த்தர் செய்த அவரின் உடன்படிக்கைகளில் என் ஆத்துமா களிகூருகிறது. ஆம், மரணத்திலிருந்து விடுவிக்கக்கூடிய சிறப்பான, நித்திய திட்டத்தில் உள்ள அவரது கிருபையிலும், அவரின் நியாயத்திலும், வல்லமையிலும், இரக்கத்திலும் என் ஆத்துமா களிகூருகிறது.

6 கிறிஸ்து வந்தாலொழிய, எல்லா மனுஷரும் அழிய வேண்டும், என்று என் ஜனத்திற்கு நிரூபிப்பதில் என் ஆத்துமா களிகூருகிறது.

7 ஏனெனில், கிறிஸ்து இல்லையெனில் தேவன் இல்லை; தேவன் இல்லையெனில் நாமோ, சிருஷ்டிப்போ இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் தேவன் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கிறிஸ்து, அவர் தன் சொந்த காலத்தின் நிறைவில் வருவார்.

8 இந்த வார்த்தைகளைப் பார்க்கிற என் ஜனம், தங்கள் இருதயங்களை உயர்த்தி, எல்லா மனுஷருக்காகவும் களிகூரத்தக்கதாக, ஏசாயாவின் சில வார்த்தைகளை நான் இப்பொழுது எழுதுகிறேன். இப்பொழுது அந்த வார்த்தைகள் இவைகளே. நீங்கள் அதை உங்களுக்கும் எல்லா மனுஷருக்கும் ஒப்பிடலாம்.