வேதங்கள்
2 நேபி 15


அதிகாரம் 15

கர்த்தரின் திராட்சைத்தோட்டம் (இஸ்ரவேல்) வெறுமையாக்கப்பட்டு, அவருடைய ஜனம் சிதறடிக்கப்படுதல் – அவர்கள் மதமாறுபாடடைந்து, சிதறடிக்கப்பட்ட நிலையிலே துன்பங்கள் ஆட்கொள்ளும் – கர்த்தர் ஒரு கொடியை உயர்த்தி இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பார் – ஏசாயா 5ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இப்பொழுது, நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் குறித்து, என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன். என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத் தோட்டம் உண்டு.

2 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே சிறந்த திராட்சை செடிகளை நட்டு, அதன் நடுவிலே ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று காத்திருந்தார், அதுவோ கசப்பான திராட்சைப் பழங்களைத் தந்தது.

3 இப்பொழுது, எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்குமிடையே நியாயந்தீருங்கள், என உங்களை வேண்டுகிறேன்.

4 என் திராட்சைத் தோட்டத்தில் நான் செய்யாத எந்த வேலையை அதற்கு செய்திருக்கலாம்? ஆகையால் அது திராட்சைப் பழங்களைக் கொடுக்கும், என நான் பார்த்திருக்கும்போது, அது கசப்பான திராட்சைப் பழங்களைத் தந்தது.

5 அங்கு சென்று என் திராட்சைத் தோட்டத்திற்கு என்ன செய்யப்போகிறேன், என்று உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள். அதன் வேலியை எடுத்துப்போடுவேன். அது மேய்ந்து போடப்படும், அதன் அடைப்பைத் தகர்ப்பேன். அது மிதியுண்டுபோம்.

6 அதை நான் பாழாக்குவேன் அது கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலுமிருக்கும். அதனால் முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும், நான் அதன்மேல் மழைபெய்யாதபடிக்கு மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.

7 சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத் தோட்டம் இஸ்ரவேலின் வீட்டாரே, அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே, அவர் நியாயத்திற்குக் காத்திருந்தார். இதோ கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், ஆனால் இதோ முறைப்பாடு.

8 பூமியின் நடுவே அவர்கள் மாத்திரம் வாசமாயிருக்கும்படி ஒரு இடமும் இல்லாமற்போகுமளவும், வீட்டை வீட்டோடு சேர்க்கிறவர்களுக்கு ஐயோ!

9 என் செவிகளில் சேனைகளின் கர்த்தர் சொன்னதாவது, மெய்யாகவே அநேக வீடுகள் பாழாகும், பெரிய மற்றும் சவுந்தரியமுள்ள நகரங்களும் குடியில்லாமற் போகும்.

10 ஆம், திராட்சைத் தோட்டத்தின் பத்தேர், ஒரு படிதேரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.

11 மதுபானத்தை நாடி அதிகாலமே எழுந்து இரவுவரைக்கும் தொடர்ந்து தங்களைத் திராட்சைரசம் சூடாக்கும்படி குடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ!

12 சுரமண்டலமும், தம்புராவும், மேளமும், நாகசுரமும், மதுபானமும் வைத்து விருந்து கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை, அவர் கரத்தின் செய்கையை சிந்திக்கிறதுமில்லை.

13 ஆகையால், என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப் போகிறார்கள். அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியால் தொய்ந்துபோகிறார்கள். அவர்களின் திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

14 ஆகையால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது. அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவனும் அதற்குள் இறங்கிப் போவார்கள்.

15 கீழ்மையானவன் தாழ்த்தப்படுவான். பராக்கிரமசாலி தாழ்ச்சியடைவான். மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம்.

16 ஆனால் சேனைகளின் கர்த்தர் நியாயந்தீர்ப்பினால் உயர்த்தப்படுவார். பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தமாக்கப்படுவார்.

17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும், கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள்.

18 மாயைக் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும், இழுத்துக்கொண்டுவந்து,

19 நாம் பார்க்கும்படி, அவர் தீவிரித்துத் தமது கிரியைகளைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும், சொல்லுகிறவர்களுக்கு ஐயோ

20 தீமையை நன்மையென்றும், நன்மையை தீமையென்றும் அழைப்பவர்களுக்கும், வெளிச்சத்திற்கு இருளையும், இருளுக்கு வெளிச்சத்தையும் பாவிப்பவர்களுக்கும், தித்திப்புக்கு கசப்பையும், கசப்புக்கு தித்திப்பையும் வைக்கிறவர்களுக்கும், ஐயோ!

21 தங்கள் சொந்தக் கண்களில் ஞானியாயும், தங்கள் சொந்தப் பார்வையில் புத்திமானாயும் இருக்கிறவர்களுக்கு ஐயோ!

22 திராட்சை ரசத்தைக் குடிக்க பராக்கிரமசாலியும், மதுபானத்தைக் கலக்க பெலமுள்ள மனுஷராயிருந்து,

23 பரிதானத்திற்காகத் துன்மார்க்கனை நியாயவானாக்கி, நீதிமானுடைய நீதியை அவனிடத்திலிருந்து எடுக்கிறவர்களுக்கோ, ஐயோ!

24 அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளினதாலும், மற்றும் இஸ்ரவேலின் பரிசுத்தரின் வார்த்தையை நிந்தித்தனிமித்தமும், அக்கினி அரிதாளைப் பட்சிப்பதைப்போலவும், அக்கினி ஜூவாலை பதரை விழுங்கிப்போவதைப் போலவும், அவர்களின் வேர் அழுகிப்போவதைப்போலவும், அவர்களின் மலர்கள் தூசியைப்போலவே மேலே எழும்பும்.

25 ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது, அவர்களுக்கு விரோதமாய் அவர் தன் புயத்தை நீட்டி, அவர்களை அடித்தார். பர்வதங்கள் அதிர்ந்தன. அவர்களின் பிணங்கள் வீதிகளின் நடுவே கிழிக்கப்பட்டன. இருப்பினும் அவர் கோபம் ஆறாமல், அவர் புயம் இன்னும் நீட்டினபடியே இருக்கிறது.

26 அவர் தூரத்திலுள்ள தேசத்தாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார். அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள். அவர்களுக்குள் ஒருவனும் சோர்வடைவதுமில்லை, இடறலடைவதுமில்லை.

27 ஒருவனும் தூங்குகிறதுமில்லை. உறங்குகிறதுமில்லை. அவர்களின் அரைக்கச்சைகள் அவிழ்வதுமில்லை. அவர்களின் பாதரட்சைகளின் வார் அறுந்துபோவதுமில்லை.

28 அவர்களின் அம்புகளோ கூர்மையாகவும், அவர்களின் எல்லா வில்லுகளும் நாணேற்றினவைகளாகவும், அவர்களின் குதிரைகளின் குளம்புகள் கன்மலையாக எண்ணப்பட்டவைகளாகவும், அவர்களின் சக்கரங்கள் சுழல்காற்றைப்போலவும், சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலவுமிருக்கும்.

29 அவர்கள் பால சிங்கத்தைப்போல கெர்ச்சிப்பார்கள்; ஆம் அவர்கள் கெர்ச்சித்து இரையைப் பிடித்து பத்திரமாய் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எவரும் விடுவிப்பதில்லை.

30 அந்நாளில் சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இவர்கள் இரைவார்கள். அவர்கள் பூமியைப் பார்த்தால், இதோ, அந்தகாரமும், வியாகுலமும்தான். அதன் வானத்தின் வெளிச்சம் இருண்டிருக்கிறது.