வேதங்கள்
2 நேபி 5


அதிகாரம் 5

நேபியர்கள், லாமானியர்களிடத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ளுதல், மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் மற்றும் ஆலயத்தைக் கட்டுதல் – அவிசுவாசத்தினால், லாமானியர்கள், கர்த்தரின் பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு, சபிக்கப்பட்டு, நேபியர்களுக்குச் சவுக்காயிருத்தல். ஏறக்குறைய கி.மு. 588–559.

1 இதோ, அந்தப்படியே, நேபியாகிய நான், என் சகோதரர்களுடைய கோபத்தினிமித்தம், என் கர்த்தராகிய தேவனை நோக்கி அதிகம் கூக்குரலிட்டேன்.

2 ஆனாலும் இதோ, அவர்கள் என் ஜீவனை வாங்கத்தேடுமளவிற்கு, எனக்கெதிராக அவர்களது கோபம் என்மேல் அதிகரித்தது.

3 ஆம், அவர்கள் எனக்கெதிராக முறுமுறுத்து, நம் இளைய சகோதரன் நம்மீது ஆளுகை செய்ய நினைக்கிறான்; அவன் நிமித்தம் நாம் அநேக பாடுகளை அனுபவித்தோம்; ஆகையால் அவனது வார்த்தைகளினிமித்தம், நாம் அதிக உபத்திரவம் அடையாதபடிக்கு, நாம் இப்பொழுது அவனைக் கொன்று போடுவோம். ஏனெனில் இதோ, அவன் நமக்கு அதிகாரியாய் இருக்க அனுமதியோம்; நாம் மூத்த சகோதரர்களாய் இருப்பதால், இந்த ஜனங்களை ஆளுகை செய்வது நமக்குரியதாய் இருக்கிறது.

4 இப்பொழுதும், அவர்கள் எனக்கெதிராக முறுமுறுத்துச் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நான் இந்தத் தகடுகளின் மேல் எழுதவில்லை; அவர்கள் என் ஜீவனை வாங்கத் தேடினார்கள், என்று மாத்திரம் சொல்வது எனக்குப் போதுமானதாயிருக்கிறது.

5 அந்தப்படியே, நேபியாகிய நானும், என்னுடன் கூட வருகிறவர்கள் அனைவரும், அவர்களிடமிருந்து வனாந்தரத்தினுள் ஓடிப்போக வேண்டுமெனக் கர்த்தர் என்னை எச்சரித்தார்.

6 ஆனபடியால் நேபியாகிய நான், என் குடும்பத்தாரையும், சோரமையும், அவனுடைய குடும்பத்தாரையும், என் மூத்த சகோதரனாகிய சாமையும், அவனுடைய குடும்பத்தாரையும், யாக்கோபு, யோசேப்பு ஆகிய என் இளைய சகோதரர்களையும், என் சகோதரிகளையும், என்னுடன் வருபவர்கள் அத்தனை பேரையும் அழைத்துச் சென்றேன். என்னுடன் வரும் அத்தனை பேரும் தேவனுடைய எச்சரிக்கைகளையும், வெளிப்படுத்தல்களையும் விசுவாசித்தவர்களாய் இருந்தார்கள்; ஆகையால் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தார்கள்.

7 நாங்கள் எங்கள் கூடாரங்களையும், எங்களால் எடுத்துச் செல்ல முடிந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு, வனாந்தரத்தில் அநேக நாட்கள் பயணம் செய்தோம்; நாங்கள் அநேக நாட்களவும் பயணம் செய்தபிறகு, பாளயமிறங்கினோம்.

8 என் ஜனங்கள் அந்த இடத்தை நேபி என்றழைக்க வேண்டுமென விரும்பினார்கள்; ஆகையால் நாங்கள் அதை நேபி என்றழைத்தோம்.

9 என்னுடன் இருந்தவர்கள் அத்தனை பேரும் தங்களை நேபியின் ஜனங்கள் என்றழைக்க முடிவு செய்தார்கள்.

10 நாங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே, எல்லாவற்றிலும் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளையும், நியமங்களையும் கட்டளைகளையும் கைக்கொண்டு ஆசரித்தோம்.

11 கர்த்தர் எங்களோடிருந்தார்; நாங்கள் மிகவும் விருத்தியடைந்தோம்; ஏனெனில் நாங்கள் விதைகளை நட்டு, ஏராளமாய் அறுவடை செய்தோம்; மேலும் நாங்கள் ஆட்டுமந்தைகளையும், கால்நடைக் கூட்டங்களையும், எல்லா இன விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினோம்.

12 நேபியாகிய நான், பித்தளைத்தகடுகளின் மேல் பதிக்கப்பட்டிருந்த பதிவேடுகளையும், எழுதப்பட்டிருக்கிறவைகளின்படியே, கர்த்தருடைய கரத்தினால் என் தகப்பனுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட உருண்டை அல்லது திசைகாட்டியையும் கொண்டுவந்தேன்.

13 அந்தப்படியே, நாங்கள் மிகவும் விருத்தியடைந்து தேசத்தின் மேல் பெருகத் தொடங்கினோம்.

14 இப்பொழுது, லாமானியர்கள் என்றழைக்கப்படுகிற அந்த ஜனம், எந்த விதத்திலாவது எங்கள் மீது வருவார்களெனில், எங்களை அழித்துப்போடாதபடிக்கு, நேபியாகிய நான், லாபானுடைய பட்டயத்தை எடுத்து, அந்த மாதிரியின்படியே அநேக பட்டயங்களைச் செய்தேன்; ஏனெனில் என் மீதும், என் பிள்ளைகள் மீதும், என் ஜனங்கள் என்றழைக்கப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கிருந்த வெறுப்பை நான் அறிவேன்.

15 நான் என் ஜனங்களுக்குக் கட்டிடங்களைக் கட்டவும், எல்லா வகையான மரங்களிலும், இரும்பிலும், செம்பிலும், பித்தளையிலும், உருக்கிலும், தங்கத்திலும், வெள்ளியிலும், மிகவும் ஏராளமாயிருந்த விலையேறப்பெற்ற கனிமப் பொருட்களிலும், வேலைகளைச் செய்யக் கற்றுக் கொடுத்தேன்.

16 நேபியாகிய நான், ஒரு ஆலயத்தை எழுப்பினேன். அது அநேக விலையேறப்பெற்ற பொருட்களால் கட்டப்படவில்லையே தவிர, அதை சாலொமோன் ஆலயப் பிரகாரமாய்க் கட்டினேன். ஏனெனில் விலையுயர்ந்த பொருட்கள் இத்தேசத்திலே காணப்படாததினிமித்தம், சாலொமோன் ஆலயம் போல கட்டப்பட முடியவில்லை. ஆனால் சாலொமோனுடைய ஆலயத்தைப்போலவே, இதன் கட்டிட அமைப்பு இருந்தது; அதனுடைய வேலைப்பாடு மிகவும் நேர்த்தியாயிருந்தது.

17 அந்தப்படியே, நேபியாகிய நான், என் ஜனங்கள் காரியசமர்த்தர்களாயும், தங்கள் கைகளினால் பிரயாசப்படும்படியும் செய்தேன்.

18 அந்தப்படியே, நான் அவர்களுடைய ராஜாவாயிருக்கும்படி அவர்கள் விரும்பினார்கள்; ஆனால் நேபியாகிய நான், அவர்களுக்கு ராஜாவாக ஒருவனும் இருக்கக்கூடாதென வாஞ்சித்தேன்; ஆயினும் என்னிலிருந்த பெலத்தின்படியே நான் அவர்களுக்குச் செய்தேன்.

19 இதோ, நான் அவர்களை ஆளுகிறவனாயும், ஆசிரியனாயும் இருக்கவேண்டும், என்று அவர்களைக் குறித்துப் பேசப்பட்ட, கர்த்தருடைய வார்த்தைகள் என் சகோதரரிடத்தில் நிறைவேறிற்று; ஆகையால், அவர்கள் என் ஜீவனை வாங்கத்தேடும் சமயமளவும், கர்த்தருடைய கட்டளைகளின்படியே நான் அவர்களை ஆளுகிறவனாயும், ஆசிரியனாயும் இருந்தேன்.

20 ஆகையால், உன் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடாமல் போகும் அளவில் அவர்கள் கர்த்தரின் பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போவார்கள் என்று என்னிடம் சொன்ன, கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறிற்று; இதோ, அவர்கள் அவருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போனார்கள்.

21 அவர்களின் அக்கிரமத்தினிமித்தம், அவர்கள் மீது ஒரு கொடிய சாபமாகிய, சாபத்தை அவர் வரப்பண்ணினார். ஏனெனில், இதோ, அவர்கள், தங்கள் இருதயங்களை அவருக்கு விரோதமாய்க் கடினமாக்கியதால், அவர்கள் ஒரு கன்மலையைப் போலானார்கள்; ஆதலால், அவர்கள் வெண்மையாகவும், மிகவும் சவுந்தரியமுள்ளவர்களாகவும் விரும்பத்தக்கவர்களாகவும் இருந்தபடியால், அவர்கள் என் ஜனத்திற்கு வசீகரமாய் இல்லாதபடிக்கு, கர்த்தராகிய தேவன் அவர்கள் மீது கருமையான சருமத்தை வரப்பண்ணினார்.

22 கர்த்தராகிய தேவன் சொல்வதாவது: அவர்கள் தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பினாலொழிய நான், என் ஜனத்திற்கு அவர்களை அருக்களிப்புள்ளவர்களாய் இருக்கச் செய்வேன்.

23 அவர்கள் சந்ததியோடு தன் சந்ததியை சேர்த்துக்கொள்ளுகிறவன் சபிக்கப்படுவான். அவர்களும் அதே சாபத்தால் சபிக்கப்படுவார்கள். இதைக் கர்த்தர் பேசினார். அது அப்படியே நடந்தது.

24 அவர்கள் மீது இருந்த சாபத்தினிமித்தம் அவர்கள் ஒரு சோம்பலுள்ள ஜனமாகவும், தீங்கு மற்றும் சூழ்ச்சி நிறைந்தவர்களாகவும் மாறினார்கள். இரையாகும் விலங்குகளை வனாந்தரத்தில் தேடினார்கள்.

25 கர்த்தராகிய தேவன் என்னிடத்தில் சொன்னதாவது: என்னை நினைவுகூரும்படியாய்த் தூண்டுவதற்கு அவர்கள் உன் சந்ததிக்குச் சவுக்காய் இருப்பார்கள், அவர்கள் என்னை நினைவுகூராமலும், என் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் போகிற அளவில் அவர்களை அழிக்குமட்டும் இவர்கள் சவுக்காலடிப்பார்கள்.

26 அந்தப்படியே, நேபியாகிய நான், யாக்கோபையும், யோசேப்பையும் என் ஜனத்தின் மீது ஆசாரியர்களாயும், ஆசிரியர்களாயும் இருக்கும்படி பிரதிஷ்டை பண்ணினேன்.

27 அந்தப்படியே, நாங்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவந்தோம்.

28 நாங்கள் எருசலேமை விட்டு வந்த காலத்திலிருந்து முப்பது வருஷங்கள் கழிந்தன.

29 நேபியாகிய நான், இதுவரை என் ஜனத்தைப்பற்றிச் செய்த பதிவுகளை, நான் செய்த தகடுகளின் மீது எழுதினேன்.

30 அந்தப்படியே, கர்த்தராகிய தேவன், மற்ற தகடுகளை செய்து, அதன்மீது, உன் ஜனத்தின் பிரயோஜனத்திற்காக, என் பார்வைக்கு நல்லதாய்ப்படுகிற அநேக காரியங்களை அவைகள் மீது நீ பொறிப்பாயாக, என்று என்னிடம் உரைத்தார்.

31 ஆகையால், நேபியாகிய நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படிக்கு, போய் நான் இந்தக் காரியங்களைப் பொறித்த இந்த தகடுகளைச் செய்தேன்.

32 தேவனுக்குப் பிரியமானவற்றை நான் பொறித்தேன். மேலும், என் ஜனம் தேவனுடைய காரியங்களிலும் பிரியமாய் இருப்பார்களெனில், அவர்கள் இந்தத் தகடுகள் மீது நான் பொறித்தவைகளையும் விரும்புவார்கள்.

33 என் ஜனத்தின் வரலாற்றின் அதிக விசேஷித்த பாகத்தை, அறியவேண்டுமென்று என் ஜனம் விரும்பினால், அவர்கள் என் மற்ற தகடுகளை ஆராய வேண்டும்.

34 நாற்பது வருஷம் கழிந்தது எனவும், இதற்குள்ளாகவே எங்கள் சகோதரரிடம், நாங்கள் யுத்தங்கள் மற்றும் பிணக்குகளை ஏற்கனவே செய்தோம், என்றும் சொல்லுவது எனக்குப் போதுமானதாய் இருக்கிறது.