வேதங்கள்
2 நேபி 29


அதிகாரம் 29

அநேக புறஜாதியார் மார்மன் புஸ்தகத்தைப் புறக்கணிப்பார்கள் – இன்னும் வேறு வேதாகமம் எங்களுக்குத் தேவையில்லை, என்று அவர்கள் சொல்வார்கள் – கர்த்தர் அநேக தேசங்களிடத்தில் பேசுதல் – எழுதப்படும் புஸ்தகங்களின்படி அவர் உலகத்தை நியாயந்தீர்ப்பார். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஆனால் இதோ, அங்கே அநேகரிருப்பார்கள், அவர்களிடையே அற்புதமான கிரியையை செய்ய நான் தொடங்கும் நாளிலே, மனுபுத்திரரிடத்திலே நான் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நான் நினைவுகூரவும், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனத்தை மறுபடியும் இரண்டாம் விசை மீட்கவும்;

2 உன் சந்ததியை நினைவுகூருவேன் என்றும், உன் சந்ததியைக் குறித்த வார்த்தைகள், என் வாயிலிருந்து உன் சந்ததிக்குப் புறப்பட்டுப்போகும் என்றும், நேபியாகிய உன்னிடத்திலும், உன் தகப்பனிடத்திலும் நான் செய்த வாக்குத்தத்தங்களை நினைவுகூரவும், என் வார்த்தைகள் உன் சந்ததிக்கு என் வாயிலிருந்து புறப்பட்டுப் போகும். இஸ்ரவேல் வீட்டாரான என் ஜனத்திற்குள்ளே ஒரு கொடியாயிருக்க பூமியின் கடையாந்திரம் வரைக்கும் என் வார்த்தைகள் பயில்காட்டி அழிக்கும்.

3 என் வார்த்தைகள் இரைச்சலிடுவதினால் அநேக புறஜாதிகள், வேதாகமம்! வேதாகமம்! எங்களிடத்தில் ஒரு வேதாகமம் இருக்கிறது, இதற்கு மேலும் எந்த வேதாகமும் இருக்கமுடியாது, என்பார்கள்.

4 ஆனாலும் தேவனாகிய கர்த்தர் உரைப்பதாவது: மதியீனரே, எனது பூர்வ உடன்படிக்கையின் ஜனங்களான யூதர்களிடத்திலிருந்து வந்த ஒரு வேதாகமத்தை வைத்திருப்பார்கள். யூதர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வேதாகமத்திற்காக, அவர்களுக்கு எந்த வழிகளில் நன்றி செலுத்துகிறார்கள்: ஆம், புறஜாதியார் என்றால் என்ன, புறஜாதியாருக்குள்ளே இரட்சிப்பைக் கொண்டுவருவதில் யூதர்கள் பட்ட கஷ்டங்களையும், பிரயாசங்களையும், வேதனைகளையும், என்னிடம் கருத்தாய் நடந்துகொண்டதையும் நினைவுகூருகிறார்களா?

5 புறஜாதிகளே, என் பூர்வ உடன்படிக்கையின் ஜனங்களாகிய யூதர்களை நீங்கள் நினைவுகூர்ந்தீர்களா? இல்லையே, நீங்கள் அவர்களைச் சபித்து, அவர்களை வெறுத்தீர்கள், அவர்களை மீட்டுக்கொள்ளும்படி முயற்சிக்கவில்லை. ஆனால் இதோ, இந்தக் காரியங்கள் அனைத்தையும் உங்கள் தலையின்மேல் சரிக்கட்டுவேன்; ஏனெனில் கர்த்தராகிய நான் என் ஜனத்தை மறக்கவில்லை.

6 ஒரு வேதாகமம், ஒரு வேதாகமத்தை வைத்திருக்கிறோம். மேலும் எங்களுக்கு வேறு எந்த வேதாகமும் தேவையில்லை, என்று சொல்லும் மதியீனனே, யூதர் இடத்திலிருந்தல்லாமல் வேறு எங்கிருந்து வேதாகமத்தைப் பெற்றுக்கொண்டாய்?

7 ஒன்றைக் காட்டிலும் அதிகமான தேசங்களிருக்கிறதென்பதை நீங்கள் அறியீர்களா? உங்கள் தேவனாகிய கர்த்தராகிய, நான் சகல மனுஷரையும் சிருஷ்டித்திருக்கிறேன் என்றும், சமுத்திரத்தின் தீவுகளிலிருப்பவர்களையும் நினைவுகூருகிறேன் என்றும், நான் மேலே வானங்களிலும், கீழே பூமியிலும், ராஜரீகம்பண்ணுகிறேன் என்றும், பூமியின் எல்லா தேசங்களுக்குள்ளும் இருக்கிற, ஆம், மனுபுத்திரருக்கும் என் வார்த்தைகளைக்கொண்டு வருகிறேன், என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

8 அதிகமான என் வார்த்தைகளைப் பெறுவதினிமித்தம் நீங்கள் முறுமுறுக்கிறதென்ன? இரண்டு தேசங்களின் சாட்சி, நானே தேவன் என்பதற்கும், நான் ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தைப்போலவே எண்ணுகிறேன் என்பதற்கும், - சாட்சியாயுள்ளது என்று அறியீர்களா? ஆகையால் ஒரு தேசத்தாரிடத்தில் பேசுகிற அதே வார்த்தைகளையே மற்றவரிடமும் பேசுகிறேன். மேலும் ஒரே காலத்தில் இரண்டு தேசத்தார் ஒன்றாய் இருக்கும்போது, இரண்டு தேசத்தாரின் சாட்சியமும் அப்படியேயிருக்கும்.

9 நான் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறேன் என்பதை அநேகருக்கு நிரூபிக்கும்படி இப்படிச் செய்கிறேன், என் சுயவிருப்பத்தின்படியே நான் என் வார்த்தைகளைப் பேசுகிறேன். நான் ஒரு வார்த்தையைப் பேசினதினிமித்தம், நான் மற்றெதையும் பேசமாட்டேன், என்று நீங்கள் எண்ணிக்கொள்ளவேண்டாம். ஏனெனில் என் கிரியை இன்னும் முற்றுப்பெறவில்லை. அது மனுஷனின் முடிவுவரை மட்டும் அல்ல. அந்த நாள் முதல் என்றென்றைக்கும் முற்றுப்பெறாது.

10 ஆகையால், உங்களிடம் வேதாகமம் இருப்பதினிமித்தம் அது என்னுடைய எல்லா வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது, என்று நீங்கள் எண்ணிக்கொள்ளாமலும், அதிகமாய் எழுதப்படுவதற்கு நான் ஏதுவாயிரேன், என்று எண்ணிக்கொள்ளாமலுமிருங்கள்.

11 கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், சமுத்திரத்தின் தீவுகளிலும் இருக்கிற சகல மனுஷரும் நான் அவர்களிடம் பேசுகிற வார்த்தைகளை எழுதவேண்டுமெனக் கட்டளையிடுகிறேன். ஏனெனில் உலகத்தை, எழுதப்படவிருக்கும் புஸ்தகங்களைக் கொண்டும், மனுஷர் ஒவ்வொருவரையும் எழுதப்பட்டிருக்கிறவற்றின்படியும், அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாயும் நியாயந்தீர்ப்பேன்.

12 இதோ, நான் யூதரிடத்தில் பேசுவேன், அவர்கள் அதை எழுதுவார்கள்; நான் நேபியரிடத்திலும் பேசுவேன், அவர்கள் அதை எழுதுவார்கள், நான் புறம்பே நடத்திக்கொண்டுபோன இஸ்ரவேல் வம்சத்தாராகிய மற்ற கோத்திரத்தாரிடமும் பேசுவேன். அவர்கள் அதை எழுதுவார்கள், மேலும் பூமியின் சகல தேசத்தாரிடமும் பேசுவேன், அவர்கள் அதை எழுதுவார்கள்.

13 யூதர்கள் நேபியரின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மேலும் நேபியர்கள், யூதரின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள். நேபியரும் யூதரும், தொலைந்துபோன இஸ்ரவேல் கோத்திரத்தாரின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள். தொலைந்துபோன இஸ்ரவேல் கோத்திரத்தார் நேபியரின் வார்த்தைகளையும், யூதர்களின் வார்த்தைகளையும் வைத்திருப்பார்கள்.

14 இஸ்ரவேல் வீட்டாராகிய என் ஜனங்கள் காணியாட்சியான தங்கள் தேசங்களில் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். என்னுடைய வார்த்தைகளும் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்படும். மேலும் என்னுடைய வார்த்தைகளுக்கு விரோதமாயும், இஸ்ரவேல் வீட்டாராகிய என் ஜனங்களுக்கு விரோதமாயும் யுத்தம் செய்கிறவர்களுக்கு, நான் தேவனென்றும், நான் ஆபிரகாமோடே உடன்படிக்கை செய்திருக்கிறேன் என்றும், அவனுடைய சந்ததியை என்றென்றைக்குமாய் நினைவுகூருவேன், என்றும் காட்டுவேன்.