வேதங்கள்
2 நேபி 8


அதிகாரம் 8

ஏசாயாவிலிருந்து யாக்கோபு வாசித்தலைத் தொடருகிறான்: கடைசிக் காலங்களில், கர்த்தர் சீயோனைத் தேற்றி, இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பார் – மீட்கப்பட்டவர்கள் சீயோனுக்கு மகா சந்தோஷத்துடனே வருவார்கள் – ஏசாயா 51, 52:1–2ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 நீதியைப் பின்பற்றுகிறவர்களே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் வெட்டியெடுக்கப்பட்ட பாறையையும், உங்களைத் தோண்டியெடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப் பாருங்கள்.

2 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்றெடுத்தவளாகிய சாராளையும் நோக்கிப்பாருங்கள்; ஏனெனில் அவனைத் தனியே அழைத்து, அவனை ஆசீர்வதித்தேன்.

3 கர்த்தர் சீயோனைத் தேற்றி, அவளின் பாழான ஸ்தலங்கள் யாவையும் தேறுதல் அடையச் செய்து, அவளின் எல்லா வனாந்தரத்தையும் ஏதேனைப் போலவும், அவளின் பாலைவனத்தைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் செய்வார். அதிலே சந்தோஷமும் மகிழ்ச்சியும், நன்றி செலுத்துதலும், கீதசத்தமும் காணப்படும்.

4 என் ஜனமே, எனக்குச் செவிகொடு. என் தேசமே என் வாக்கைக் கவனி; ஏனெனில் ஒரு நியாயப்பிரமாணம் என்னிலிருந்து புறப்படும், என் நியாயத்தீர்ப்பு என்னுடைய ஜனத்திற்கு ஒளியாக நிலைக்கும்படிச் செய்வேன்.

5 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு புறப்பட்டது; என் புயம் ஜனத்தை நியாயந்தீர்க்கும். தீவுகள் எனக்காகக் காத்திருந்து, என் புயத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும்.

6 வானத்திற்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுங்கள்; கீழே பூமியை நோக்கிப்பாருங்கள்; ஏனெனில் வானங்கள் புகையைப்போல மறையும், பூமி வஸ்திரத்தைப்போல பழசாய்ப்போம், அதில் வாசமாயிருப்பவர்களும் அதே விதமாய் மரிப்பார்கள். ஆனால் என் இரட்சிப்பு என்றென்றைக்கும் இருக்கும். என் நீதி அற்றுப்போவதில்லை.

7 என்னுடைய நியாயப்பிரமாணத்தை இருதயத்திலே நான் எழுதிய ஜனமாயும், நீதியை அறிந்தவர்களுமானவர்களே, எனக்குச் செவி கொடுங்கள். நீங்கள் மனுஷனுடைய நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்களின் தூஷணத்திற்குக் கலங்காமலும் இருங்கள்.

8 பொட்டுப் பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல அரிக்கும். புழு அவர்களை ஆட்டு மயிரைப்போல் தின்னும். ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும். என் இரட்சிப்பு தலைமுறை, தலைமுறை தோறும் இருக்கும்.

9 விழித்தெழும்பு, விழித்தெழும்பு! கர்த்தரின் புயமே, பூர்வ காலத்தில் இருந்ததைப்போல விழித்தெழுந்து, பெலனைத் தரித்துக்கொள். இராகாபைத் துண்டித்ததும், வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய, சமுத்திரத்தை வற்றப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடக்க சமுத்திரத்தின் ஆழங்களை, வழியாகச் செய்தவரும் நீர்தானல்லவோ?

11 அப்படியே, கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் பாடிக்கொண்டே சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய களிப்பும், பரிசுத்தமும் அவர்கள் சிரசின்மீது இருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியையும், களிப்பையும் பெறுவார்கள்; சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம்.

12 நானே அவர்; ஆம், உங்களைத் தேற்றுகிறவராய் இருக்கிறேன். இதோ, மரிக்கிற மனுஷனுக்கும், புல்லைப்போல செய்யப்பட்ட மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறவனாகிய நீ யார்?

13 பூமிக்கு அஸ்திபாரமிட்டவரும், பரலோகங்களை விரித்தவருமாகிய உன் சிருஷ்டிகராகிய கர்த்தரை மறந்து விட்டீரோ? ஒடுக்குகிறவன் அழிக்க ஆயத்தப்படுவதுபோல அவனின் மூர்க்கத்தினிமித்தம், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பயப்பட்டீர்களோ? ஒடுக்குகிறவனின் மூர்க்கம் எங்கே?

14 புறம்பே அகற்றப்பட்ட சிறைப்பிடிக்கப்பட்டவன் துரவிலே சாகாதபடிக்கும், தன்னுடைய ஆகாரம் குறைந்து போகாமலிருக்கவும், தான் விடுதலையாகும்படி துரிதப்படுகிறான்.

15 அலைகளைக் கொந்தளிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவன் நானே; சேனைகளின் கர்த்தர் என்பது என் நாமம்.

16 பூமியை அஸ்திபாரப்படுத்தவும், பரலோகங்களை நட்டவும், சீயோனை நோக்கி இதோ, நீ என் ஜனம் என்று சொல்லவுமே, உன் வாயிலே நான் என் வார்த்தைகளைப் போட்டு, என் புயத்தின் நிழலினால் உன்னை நான் மறைத்தேன். சீயோனை நோக்கி சொல்கிறேன், நீ என் ஜனம்.

17 விழித்தெழு, விழித்தெழு, கர்த்தரின் கரத்திலிருந்து அவரின் மூர்க்கத்தின் பாத்திரத்தைக் குடித்த எருசலேமே, எழுந்து நில், நடுங்கச் செய்கிற, பாத்திரத்தின் பிழிந்தெடுத்த வண்டல்களை நீ குடித்து வெறித்தாய்.

18 அவள் பெற்றெடுத்த எல்லா குமாரரிலும், அவளை வழிநடத்தவும், அவள் வளர்த்த எல்லா குமாரரில் அவளைக் கைக்கொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

19 உனக்குச் சம்பவித்த பாழ்க்கடிப்புக்கும், சங்காரத்துக்கும், பஞ்சத்துக்கும், பட்டயத்துக்கும், உனக்காகப் பரிதபிக்கிற, இந்த இரண்டு குமாரர்கள் உன்னிடம் வந்திருக்கின்றனர். யாரைக்கொண்டு உன்னை நான் தேற்றுவேன்?

20 இவர்கள் இருவரைத்தவிர, உன் குமாரர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள் எல்லா வீதிகளின் முனையிலும் கிடக்கிறார்கள்; வலையில் அகப்பட்ட காட்டு மாட்டைப்போல அவர்கள் கர்த்தரின் மூர்க்கத்தாலும், உன் தேவனின் அதட்டலாலும் நிரம்பியிருக்கிறார்கள்.

21 ஆனபடியாலும், உபத்திரப்பட்டவளே, திராட்சைரசம் அல்லாமல், குடித்து வெறித்தவளே இப்பொழுது இதைக் கேள்:

22 கர்த்தராகிய உன் ஆண்டவரும், தம்முடைய ஜனத்திற்காக வழக்காடுகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறதாவது: இதோ, என் மூர்க்கத்தின் பாத்திரத்தினுடைய வண்டல்களாகிய நடுங்கச்செய்கிற, பாத்திரத்தை உன் கரத்திலிருந்து நீக்கிப்போட்டேன்; இனி நீ அதை ஒருபோதும் குடிப்பதில்லை.

23 ஆனால் உன் ஆத்துமாவை நோக்கி, நாங்கள் ஏறிச்செல்லும்படி குனியென்று சொல்லி, ஏறிப்போகிறவர்களுக்கு உன் சரீரத்தைத் தரையும், வீதியுமாக்கும்படி, உன்னை உபத்திரவப்படுத்தினவர்களின் கையிலே அதைக் கொடுப்பேன், என்றார்.

24 விழித்தெழும்பு, விழித்தெழும்பு, சீயோனே உன் பெலனைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அழகான வஸ்திரங்களை உடுத்திக்கொள்; அதனிமித்தம் விருத்த சேதனமில்லாதவனும், அசுத்தமானவனும் இனி உன்னிடத்தில் வரான்.

25 தூசியை உன்னிலிருந்து உதறிவிடு; எருசலேமே எழுந்து கீழே வீற்றிரு; சிறைப்பிடிக்கப்பட்டுப்போன, சீயோன் குமாரத்தியே உன் கழுத்தின் கட்டுக்களிலிருந்து உன்னையே அவிழ்த்துக்கொள்.