அதிகாரம் 12
ஏசாயா பிற்கால ஆலயத்தையும், இஸ்ரவேலின் சேர்க்கையையும், ஆயிரம் வருஷ நியாயத்தீர்ப்பு மற்றும் சமாதானத்தைக் காணுதல் – இரண்டாம் வருகையின்போது பெருமைமிக்கவர்களும், துன்மார்க்கரும் தாழ்த்தப்படுவார்கள் – ஏசாயா 2ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.
1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதா மற்றும் எருசலேமைக் குறித்துக் கண்ட தரிசனம்.
2 கடைசி நாட்களில், பர்வதங்களின் கொடுமுடியிலே, கர்த்தருடைய பர்வதத்தின் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்பொழுது எல்லா தேசங்களும் அதற்குள் ஓடி வருவார்கள்.
3 நாம் கர்த்தருடைய பர்வதத்திற்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் செல்வோம், வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார். நாம் அவருடைய பாதைகளிலே நடப்போம் என்று அநேக ஜனங்கள் போய்ச் சொல்லுவார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து நியாயப்பிரமாணமும், எருசலேமிருந்து கர்த்தருடைய வார்த்தையும் வெளிப்படும்.
4 அவர் தேசங்களுக்குள்ளும் நியாயந்தீர்த்து, அநேக ஜனங்களைக் கடிந்து கொள்வார். அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை கிளைநறுக்கிகளாகவும் அடிப்பார்கள்; தேசத்துக்கு விரோதமாய் தேசம், பட்டயங்களை உயர்த்துவதுமில்லை. அவர்கள் இனி யுத்தத்தைக் கற்பதும் இல்லை.
5 யாக்கோபின் வீட்டாரே, கர்த்தருடைய ஒளியில் நடப்போம் வாருங்கள். ஏனெனில் நீங்கள் வழிதப்பி, அவனவன் தன்தன் துன்மார்க்க வழிகளிலே போனீர்கள். எனவே வாருங்கள்.
6 ஆதலால், அவர்கள் கீழ்திசையாரின் போதகத்தால் நிரப்பப்பட்டவர்களாயும், பெலிஸ்தர்களைப்போல, குறிசொல்லுவோருக்குச் செவிகொடுத்தும், அவர்கள் அன்னிய பிள்ளைகளில் பிரியங்கொள்கிறவர்களாயும் இருப்பதினிமித்தம், கர்த்தாவே, யாக்கோபின் வீட்டாராகிய உமது ஜனத்தை நீர் கைவிட்டீர்.
7 அவர்களின் தேசத்திலே வெள்ளியும், பொன்னும் நிரம்பியிருக்கிறது. அவர்களின் பொக்கிஷங்களுக்கோ அங்கே முடிவில்லை; அவர்கள் தேசத்திலே குதிரைகள் நிறைந்துள்ளது. அவர்களின் இரதங்களுக்கோ அங்கே முடிவில்லை.
8 அவர்களின் தேசத்தில், விக்கிரகங்களோ நிரம்பியுள்ளது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்.
9 கீழ்மையானவன் கீழே குனிவதுமில்லை; பெரியவன் தன்னேயே தாழ்த்துவதுமில்லை. ஆதலால் அவனை மன்னிக்க வேண்டாம்.
10 துன்மார்க்கனே, பாறையினுள் புகுந்து, புழுதியில் உன்னை மறைத்துக்கொள். ஏனெனில் கர்த்தருடைய பயமும், அவரது மகத்துவத்தின் மகிமையும் உன்னை அடிக்கும்.
11 மனுஷனின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷர்களின் வீராப்பு அடக்கப்படும். அந்த நாளில் கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார்.
12 ஏனெனில் எல்லா தேசங்கள் மீதும், ஆம், பெருமையானவர்கள், மேட்டிமையானவர்கள் மற்றும் உயர்த்தப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் அடக்கப்படும் பொருட்டு சேனைகளின் கர்த்தருடைய நாள் அவர்கள் மீது சீக்கிரமாய் வரும்.
13 ஆம், கர்த்தருடைய நாள் லீபனோனின் கேதுருக்கள் ஓங்கி உயர்த்தப்பட்டிருப்பதால், அவைகளெல்லாவற்றின் மீதும், பாசானின் எல்லா கருவேல மரங்களின் மீதும்;
14 எல்லா உயர்ந்த பர்வதங்களின் மீதும், எல்லா மலைகளின் மீதும், உயர்த்தப்பட்டிருக்கிற எல்லா தேசங்களின் மீதும், ஒவ்வொரு ஜனத்தின் மீதும்,
15 ஒவ்வொரு உயர்ந்த கோபுரத்தின் மீதும், ஒவ்வொரு வேலியடைத்த மதில்களின் மீதும்,
16 சமுத்திரத்தின் எல்லாக் கப்பல்களின் மீதும், தர்ஷீசின் கப்பல்கள் யாவின் மீதும், எல்லா விதமான சித்திரப்படங்களின் மீதும் வரும்.
17 மனுஷனின் மேட்டிமை அடக்கப்படும்; மனுஷர்களின் இறுமாப்பு தாழ்த்தப்படும்; அந்நாளிலே கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார்.
18 அவர் விக்கிரகங்களை முழுவதும் அழித்துப்போடுவார்.
19 அவர் பூமியை பயங்கரமாய் தத்தளிக்கப்பண்ண எழும்பும்போது, அவர்கள் பாறைகளின் துவாரங்களிலும், பூமியின் குகைகளிலும் புகுந்து கொள்வார்கள். ஏனெனில் கர்த்தரைப்பற்றிய பயம் அவர்கள் மேல் வரும். மேலும் அவருடைய மகிமைப் பிரதாபம் அவர்களை அடிக்கும்.
20 அந்நாளிலே மனுஷன் ஆராதிப்பதற்குத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், அகலெலிக்கும், துரிஞ்சில்களுக்கும் எறிவான்.
21 பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயம் அவர்கள் மேல் வருவதாலும், அவருடைய மகிமைப்பிரதாபம் அவர்களை அடிப்பதாலும், அவர்கள் பாறைகளின் வெடிப்புகளினுள்ளும், பீறலான பாறைகளின் கொடுமுடியினுள்ளும், புகுந்து கொள்வார்கள்.
22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள், ஏனெனில் அவன் எண்ணப்படுவதற்கு எம்மாத்திரம்?