வேதங்கள்
2 நேபி 16


அதிகாரம் 16

ஏசாயா கர்த்தரைக் காணுதல் – ஏசாயாவின் பாவங்கள் மன்னிக்கப்படுதல் – அவன் தீர்க்கதரிசனமுரைக்க அழைக்கப்படுதல் – கிறிஸ்துவின் போதனைகளை யூதர்கள் மறுதலித்ததைக் குறித்து அவன் தீர்க்கதரிசனமுரைத்தல் – மீதியானவர்கள் திரும்பி வருவார்கள் – ஏசாயா 6ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்கலால் ஆலயம் நிறைந்திருந்தது.

2 அதன்மேலே சேராபீன்கள் நின்றார்கள். ஒவ்வொருவனுக்கும் ஆறு செட்டைகளிருந்தன; அவன் தன் இரண்டு செட்டைகளால் தன் முகத்தை மூடி, தன் இரண்டு செட்டைகளால் பாதங்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து,

3 ஒருவன் மற்றொருவனை நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்றான்.

4 கூப்பிடுகிறவனின் சத்தத்தால், கதவுகளின் நிலைகள் நகர்ந்து ஆலயம் புகையினால் நிரம்பிற்று.

5 அப்பொழுது நான் சொன்னதாவது: நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷனாயிருப்பதின் நிமித்தம், எனக்கு ஐயோ. நான் அசுத்த உதடுளுள்ள ஜனங்கள் மத்தியில் வாசமாயிருக்கிறேன். என் கண்கள் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைக் கண்டன, என்றேன்.

6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன், பலிபீடத்திலிருந்து குறட்டால் அவன் எடுத்த ஒரு நெருப்புத் தழலை, தன் கையிலே வைத்து என்னிடம் பறந்து வந்து,

7 அதை என் வாயின்மீது வைத்து, இதோ, இது உன் உதடுகளைத் தொட்டது. உன் அக்கிரமம் எடுக்கப்பட்டது. உன் பாவம் சுத்திகரிக்கப்பட்டது என்றான்.

8 நான் யாரை அனுப்புவேன், நமக்காகப் போகிறவன் யார்? என்று கர்த்தருடைய சத்தத்தை நான் கேட்டேன். பின்பு நான், இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும், என்றேன்.

9 அவர், நீ போய் இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் மெய்யாகவே கேட்டீர்கள். ஆனால் புரிந்து கொள்ளவில்லை; நீங்கள் மெய்யாகவே கண்டீர்கள். ஆனால் அவர்கள் அறியாமலிருக்கிறார்கள், என்று சொல், என்றார்.

10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளால் கேளாமலும், தங்கள் இருதயத்தால் அறியாமலும், மனமாறி சுகப்படாமலும் இருக்கும்பொருட்டு, இவர்களின் இருதயங்களைக் கொழுத்ததாக்கி, அவர்களின் காதுகளை மந்தமாக்கி, அவர்களின் கண்களை மூடிப்போடு, என்றார்.

11 அப்பொழுது நான், ஆண்டவரே எதுவரைக்கும், என்று கேட்டேன். அதற்கு அவர், பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷ சஞ்சாரமில்லாமலும், பாழாகி பூமி அவாந்தர வெளியாகி,

12 கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும் வரைக்குமே.

13 ஆகிலும் பத்தில் ஒரு பாகம் இருப்பார்கள். அவர்கள் திரும்புவார்கள். பட்சிக்கப்படுவார்கள். கர்வாலி மரமும், அரச மரமும், தங்கள் இலைகளை உதிர்த்த பின்னரும் அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, பரிசுத்த சந்ததியார் அதன் அடிமரமாய் இருப்பார்கள், என்றார்.