அதிகாரம் 23
இரண்டாம் வருகையின்போது ஏற்படும் அழிவிற்குப் பாபிலோனின் அழிவு மாதிரியாயுள்ளது – அது உக்கிரத்தைக் கொண்டதாயும் பழிவாங்குதலின் நாளாகவும் இருக்கும் – பாபிலோன் (உலகம்) என்றென்றைக்குமாய் வீழ்ந்திருக்கும் – ஏசாயா 13ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.
1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.
2 உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள், அவர்களுக்கு உரத்த சத்தமிடுங்கள். பிரபுக்களின் வாசல்களுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.
3 என் பரிசுத்தமானவர்களை நான் கட்டளையிட்டேன். என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன். ஏனெனில் என் மகத்துவத்திலே களிகூருகிறவர்கள் மீது எனது கோபமிராது.
4 பர்வதங்களிலுள்ள திரளான ஜனங்களின் சத்தம், வெகு கூட்டம் மற்றும் ஒன்றாய்க் கூட்டப்பட்ட தேசங்களின் ராஜ்யங்கள் செய்யும் அமளியான இரைச்சல்போல இருக்கிறது. சேனைகளின் கர்த்தர் யுத்தத்தின் சேனைகளைக் கூட்டுகிறார்.
5 வானத்தின் கடையாந்திரத்திலிருந்தும், தூர தேசத்திலிருந்தும், ஆம் முழு தேசத்தையும் அழிக்கக் கர்த்தரும், அவரின் கோபாக்கினையின் ஆயுதங்களும் வருகிறது.
6 அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. அது சர்வவல்லவரிடத்திலிருந்து சங்காரமாய் வரும்.
7 ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.
8 அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பார்கள், அவர்களுடைய முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.
9 இதோ, தேசத்தைப் பாழாக்குவதற்காக கர்த்தருடைய நாள் கடூரத்தையும், மூர்க்கத்தையும், உக்கிரகோபத்தையும் கொண்டதாய் வருகிறது. மேலும் அதிலுள்ள பாவிகளையும் அவர் அழிப்பார்.
10 வானத்தின் நட்சத்திரங்களும், அதிலுள்ள ராசிகளும், அவைகளின் ஒளியைக் கொடாதிருக்கும். தன் போக்கில் சூரியன் இருண்டுபோம். மேலும் சந்திரன் ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணாதிருக்கும்.
11 பாவத்தினிமித்தம் உலகத்தையும் அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் கர்வத்தைத் தாழ்த்துவேன்.
12 நான் ஓப்பீரின் தங்க ஆப்பைக் காட்டிலும் மனுஷனை அபூர்வமடையவும், பசும்பொன்னைக்காட்டிலும் மனுஷனை விலைமிக்கவனுமாக்குவேன்.
13 ஆதலால், சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால், அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே, நான் பரலோகங்களை அதிரப்பண்ணுவேன். பூமி அவள் இடத்தைவிட்டு நகர்ந்துபோம்.
14 துரத்தப்பட்ட வெளிமானைப் போலும் இருக்கும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலுமிருக்கும், அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப்போகத் திரும்பி அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
15 பெருமையாய் இருப்பவனெவனும் குத்துண்டு, ஆம், துன்மார்க்கருடன் சேர்ந்திருப்பவனெவனும் பட்டயத்தால் விழுவான்.
16 அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும், அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
17 இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன், அவர்கள் வெள்ளியையும், பொன்னையும் மதியாமல், அதில் களிகூராமலுமிருப்பார்கள்.
18 அவர்களின் வில்லுகள், இளைஞரைச் சிதைத்துவிடும். கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை. அவர்களின் கண்கள் பிள்ளைகளைத் தப்பவிடுவதில்லை.
19 ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய, பாபிலோனானது, தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.
20 இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை. தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை, அங்கே மேய்ப்பர் ஆட்டுகிடையைச் செய்வதுமில்லை.
21 காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும், ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும், காட்டாடு அங்கே துள்ளும்.
22 அவர்களுடைய பாழான மாளிகைகளில், தீவுகளின் வனவிலங்குகளும், வலுசர்ப்பங்கள் செல்விக்கையான அரண்மனைகளிலும் ஓலமிடும். அவள் காலம் சீக்கிரமாய் வரும். அவளது காலம் நீடித்திராது. ஏனெனில் நான் சீக்கிரமாய் அவளை அழிப்பேன். ஆம், ஏனென்றால், என் ஜனத்திற்கு நான் இரங்கி, துன்மார்க்கரை அழிப்பேன் என்கிறார்.