அதிகாரம் 14
ஆயிரவருஷ காலத்திலே சீயோனும், அவள் குமாரத்திகளும் மீட்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள் – ஏசாயா 4ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.
1 அந்த நாளிலே, ஏழு ஸ்திரீகள் ஒரு மனுஷனைப் பிடித்து: நாம் நம்முடைய சொந்த ஆகாரத்தைப் புசித்து நம்முடைய சொந்த ஆடையை அணிவோம். எங்களுடைய நிந்தை நீங்கும்படிக்கு உன்னுடைய நாமத்தில் மாத்திரம் நாங்கள் அழைக்கப்படுவோமாக, என்பார்கள்.
2 அந்த நாளிலே கர்த்தருடைய கிளையோ, அழகாகவும், மகிமையுமாயிருக்கும். இஸ்ரவேலரில் தப்பினவர்களுக்குப் பூமியின் கனி நேர்த்தியாகவும், ஏற்றதாயும் இருக்கும்.
3 கர்த்தர் சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, எருசலேமின் இரத்தப்பழியை, அதனுடைய நடுவிலிருந்து, நியாயத்தீர்ப்பின் ஆவியாலும், சுட்டெரிக்கிற ஆவியாலும் பவித்திரமாக்கும்போது,
4 சீயோனில் விடப்பட்டவர்களும், எருசலேமில் மீதியாயிருப்பவர்களும், எருசலேமில் ஜீவிப்பவர்களுடன் கணக்கிடப்பட்டிருக்கிற ஒவ்வொருவனும், பரிசுத்தனென்று அழைக்கப்படுவான்.
5 கர்த்தர், சீயோன் பர்வதத்தின் ஒவ்வொரு வாசஸ்தலத்தின் மீதும், அவளுடைய ஜனத்திரளின் மீதும், பகலிலே மேகத்தையும், புகையையும், இரவிலே கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப் பிரகாசத்தையும் உண்டாக்குவார்; சீயோனின் மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும், மழைக்கும் அடைக்கலமாகவும், ஒதுக்கிடமாகவும் ஒரு வாசஸ்தலம் உண்டாயிருக்கும்.