வேதங்கள்
2 நேபி 17


அதிகாரம் 17

எப்பிராயீமும் சீரியாவும், யூதாவுக்கு விரோதமாய் யுத்தம் புரிதல் – கிறிஸ்து ஒரு கன்னிகையினிடத்தில் பிறத்தல் – ஏசாயா 7ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 அந்தப்படியே, உசியாவினுடைய குமாரனாகிய, யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதா தேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், ஆனால் அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று.

2 சீரியா எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறது, என்று தாவீதின் வீட்டாருக்குச் சொல்லப்பட்டது. அவன் இருதயமும், அவன் ஜனத்தின் இருதயமும், காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல அசைந்தன.

3 அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி, நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக, வண்ணார் வெளியின் நெடுஞ்சாலையிலுமுள்ள, மேற்குளத்து மதகின் கடைசிமட்டும், ஆகாஸூக்கு எதிர்கொண்டுபோய்,

4 அவனை நோக்கி ஜாக்கிரதையாயும், அமைதியாயும் இரு. இந்தப் புகைகிற கொள்ளிக்கட்டைகளின் இரண்டு வால்களான, சீரியரோடு வந்த ரேத்சீனும், ரெமலியா மகனும், கொண்ட உக்கிர கோபத்தின் நிமித்தம் பயப்படவும்வேண்டாம். இருதயம் துவளவும் வேண்டாம், என்று சொல்.

5 ஏனென்றால் சீரியாவும், எப்பிராயீம் மற்றும் ரெமலியாவின் குமாரனும் உனக்கு விரோதமாய் துர் ஆலோசனைபண்ணி,

6 நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய் அதை கிலேசப்படுத்தி நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, ஆம் தபேயாலின் குமாரனை அதன் நடுவே ராஜாவாக ஏற்படுத்துவோம் என்றனர், என்றார்.

7 கர்த்தராகிய தேவன், அது நிலைத்து நிற்பதுமில்லை, அது சம்பவிக்கப் போவதுமில்லை, என்று உரைக்கிறார்.

8 ஏனெனில் சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன், இன்னும் அறுபந்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்.

9 எப்பிராயீமின் தலை சமாரியா. சமாரியாவின் தலை ரெமலியாவின் குமாரன். நீங்கள் விசுவாசிக்காவிட்டால், மெய்யாகவே நீங்கள் நிலைபெறமாட்டீர்கள்.

10 பின்னும் கர்த்தர் ஆகாஸை நோக்கி:

11 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அறிகுறியை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள், என்று சொன்னார்.

12 ஆகாஸோ நான் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன், என்றான்.

13 அவன் சொன்னான், தாவீதின் வம்சத்தாரே கேளுங்கள், நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று, என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறது எளிதான காரியமோ?

14 ஆதலால், ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அறிகுறியைக் கொடுப்பார், இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

15 தீமையை வெறுத்து, நன்மையைத் தெரிந்துகொள்ள, அறியும் வயது மட்டும், அவர் வெண்ணையையும் தேனையும் சாப்பிடுவார்.

16 அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்கு முன்னே, நீ அருவருக்கிற நிலம் அதின் இரண்டு ராஜாக்களாலும் விட்டுவிடப்படும்.

17 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள் முதல், வராத நாட்களைக் கர்த்தர் உன் மேலும், உன் ஜனத்தின் மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின் மேலும் அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.

18 அந்நாட்களில் கர்த்தர் எகிப்தின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருந்து தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.

19 அவைகள் வந்து, அவைகள் அனைத்தும் பாழான பள்ளத்தாக்குகளிலும், பாறையின் வெடிப்புகளிலும், எல்லா முட்செடிகளின் மீதும், எல்லா செடிகளின் மீதும் தங்கும்.

20 அதே நாளில் கர்த்தர் வாடகைக்கு வாங்கிய சவரகன் கத்தியால், நதியின் அக்கரையிலுள்ள அசீரீயா ராஜாவினால் தலைமயிரையும், கால்மயிரையும் சிரைப்பிப்பார், அது தாடியையும் வாங்கிப்போடும்.

21 அந்நாளில் ஒருவன் ஒரு இளம் பசுவையும், இரண்டு ஆடுகளையும் பராமரிப்பான்.

22 அவைகள் பூரணமாய் பால் கறக்கிறபடியினால், வெண்ணையைச் சாப்பிடுவான், தேசத்தில் மீதியாயிருப்பவனெவனும், வெண்ணையையும், தேனையும் சாப்பிடுவான்.

23 அந்நாளிலே ஆயிரம் வெள்ளிக்காசு பெறும், ஆயிரம் திராட்சைச் செடியிருந்த நிலமெல்லாம், முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.

24 தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதால், மனுஷர் அங்கே அம்புகளுடனும், வில்லுகளுடனும் வருவார்கள்.

25 மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகளில், முட்செடிகளும் நெரிஞ்சில்களும் வருமோவென்ற பயமில்லை. ஆனால் அது மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும்.