வேதங்கள்
2 நேபி 26


அதிகாரம் 26

கிறிஸ்து நேபியர்களுக்கு ஊழியம் செய்வார் – நேபி தன் ஜனத்தின் அழிவை முன்காணுதல் – அவர்கள் தூசியிலிருந்து பேசுவார்கள் – புறஜாதியார் பொய்யான சபைகளையும், இரகசியச் சங்கங்களையும் ஏற்படுத்துவார்கள் – மனுஷர் ஆசாரிய வஞ்சனையைக் கைக்கொள்வதிலிருந்து கர்த்தர் தடை செய்தல். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 என் பிள்ளைகளும், என் அன்புச் சகோதரருமானவர்களே, கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழும்பின பின்பு, அவர் தன்னை உங்களுக்குக் காண்பிப்பார். அவர் உங்களிடத்தில் பேசுகிற வார்த்தைகள், நீங்கள் கைக்கொள்ளவேண்டிய நியாயப்பிரமாணமாயிருக்கும்.

2 ஏனெனில் இதோ, அநேக தலைமுறைகள் கடந்து போவதையும், என் ஜனத்தின் மத்தியிலே மகா யுத்தங்களும், பிணக்குகளும் சம்பவிப்பதையும் நான் கண்டேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 மேசியா வந்த பின்பு என் ஜனத்திற்கு அவரின் பிறப்பு, அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றிய அறிகுறிகள் கொடுக்கப்படும்; துன்மார்க்கருக்குப் பெரிதும், பயங்கரமுமாய் அந்நாளிருக்கும். ஏனெனில் அவர்கள் நிர்மூலமாவார்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளையும், பரிசுத்தவான்களையும், புறம்பே தள்ளி, அவர்களைக் கொலை செய்ததினிமித்தம் அவர்கள் நிர்மூலமாவார்கள். ஆதலால் அவர்களுக்கு விரோதமாய், பரிசுத்தவான்களின் இரத்தத்தினுடைய கூக்குரல் தேவனிடத்தில் சேரும்படியாய், பூமியிலிருந்து மேலெழும்பும்.

4 ஆதலால், வரப்போகிற அந்நாள் செருக்காயுள்ள யாவரையும், பொல்லாப்பானதை செய்கிறவர்களையும் சுட்டெரிக்கும், என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். அவர்கள் தாளடிகளைப் போலிருப்பார்கள்.

5 தீர்க்கதரிசிகளையும், பரிசுத்தவான்களையும், கொலை செய்கிறவர்களையும், பூமியின் ஆழங்கள் விழுங்கும், என சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; பர்வதங்கள் அவர்களை மூடும்; சுழல் காற்று அவர்களைத் தூக்கிச்செல்லும்; கட்டடங்கள் அவர்கள்மீது விழுந்து, அவர்களைத் துண்டுதுண்டாக நொறுக்கிப் பொடியாகுமட்டும், தூளாக அரைக்கும்.

6 கர்த்தருடைய கோபாக்கினையின் அக்கினி அவர்களுக்கு எதிராகக் கொளுத்திவிடப்பட்டிருப்பதால், அவர்கள் இடிமுழக்கத்தாலும், மின்னல்களாலும் பூமியதிர்ச்சிகளாலும், எல்லா வகையான அழிவுகளாலும் விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் தாளடி போலாவார்கள்; வரப்போகிற நாள் அவர்களைப் பட்சித்துப்போடும், என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

7 என் ஜனத்தின் கொலையுண்டவர்களின் இழப்பால் என் ஆத்துமா வேதனையடைந்து வியாகுலப்படுகிறது. நேபியாகிய நான், அதைக் கண்டபடியால் அது கிட்டத்தட்ட கர்த்தரின் சமுகம் முன்பாக, என்னைப் பட்சிக்கிறது. ஆயினும், உமது வழிகள் நியாயமானவை, என நான் தேவனை நோக்கிக் கூக்குரலிடவேண்டும்.

8 ஆனால் இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவர்களை அழிக்காமல், எல்லாத் துன்பங்களையும் பொருட்படுத்தாமல், கொடுக்கப்பட்ட அறிகுறிகளுக்காகத் திடமனதோடு, கிறிஸ்துவை நோக்கிப்பார்க்கிற நீதிமான்களே, நிர்மூலமாகாதவர்கள்.

9 நீதியின் குமாரன் அவர்களிடத்தில் தோன்றுவார்; மூன்று தலைமுறைகள் கடந்து செல்லும்வரைக்கும், அவர் அவர்களைச் சுகமாக்குவார். அவர்கள் அவர்களுடன் சமாதானமாயிருப்பார்கள். நான்காவது தலைமுறையில் அநேகர் நீதியிலே கடந்து செல்வார்கள்.

10 இவை கடந்து போன பின்பு, என் ஜனத்திற்கு அழிவு சீக்கிரமாய் வரும். ஏனெனில் என் ஆத்துமாவின் வேதனையைப் பொருட்படுத்தாமல், அதை நான் கண்டிருக்கிறேன்; ஆகையால் அது இவ்வாறு சம்பவிக்கும், என நான் அறிவேன். ஒன்றுமில்லாதவைக்கு அவர்கள் தங்களையே விற்பார்கள், அவர்களின் அகந்தைக்கும், மதியீனத்திற்கும் பலனாக அழிவை அறுவடை செய்வார்கள். பிசாசுக்குத் தாங்கள் இணங்கினதாலும், வெளிச்சத்திற்குப் பதிலாக இருளின் கிரியைகளைத் தேர்ந்தெடுத்ததாலும், அவர்கள் பாதாளத்திற்குச் செல்லவேண்டும்.

11 ஏனெனில், கர்த்தருடைய ஆவியானவர் எப்பொழுதும் மனுஷருடன் கிரியை செய்வதில்லை. ஆவியானவர் மனுஷருடன் கிரியை செய்வதிலிருந்து நின்றால், அழிவு சீக்கிரமாய் வரும். இது என் ஆத்துமாவை சஞ்சலப்படுத்துகிறது.

12 இயேசுதான் மெய்யான கிறிஸ்து, என்று யூதர்களுக்கு உணர்த்தியதைக் குறித்து நான் பேசினதாலே, புறஜாதியாரும், இயேசுதான் நித்திய தேவனாகிய கிறிஸ்துவென்று உணர்ந்துகொள்ளவேண்டும்

13 அவர் பரிசுத்த ஆவியானரின் வல்லமையினால், தன்னில் விசுவாசிக்கிற அனைவருக்கும் தன்னையே வெளிப்படுத்தி, ஆம், ஒவ்வொரு தேசத்துக்கும், இனத்திற்கும், பாஷைக்கும், ஜனத்திற்கும், மனுபுத்திரர் மத்தியில் அவர்களின் விசுவாசத்தின்படியே பலத்த அற்புதங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்கிறார்.

14 ஆனாலும் இதோ, கர்த்தராகிய தேவன் இந்தக் காரியங்களை மனுபுத்திரருக்கு கொண்டுவருகிற காலங்களாகிய, கடைசிக் காலத்தைக் குறித்து நான் உங்களுக்கு தீர்க்கதரிசனமுரைக்கிறேன்.

15 என் சந்ததியாரும் என் சகோதரரின் சந்ததியாரும் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து புறஜாதியாரால் அடிக்கப்பட்டப் பின்னரும், ஆம் அவர்களுக்கு விரோதமாய்க் கர்த்தராகிய தேவன் சுற்றிலும் பாசறையிட்டு, அவர்களுக்கு விரோதமாய் மலைகளால் முற்றுகைபோட்டு, அவர்களுக்கு விரோதமாய் கொத்தளங்களை எழுப்பிய பின்னரும், அவர்கள் இல்லாமற் போகுமளவும் தூசிக்கு சமானமாய் தாழ்வாக்கப்பட்ட பின்னரும், நீதிமானின் வார்த்தைகள் எழுதப்படும். விசுவாசமுள்ளவர்களின் ஜெபங்கள் கேட்கப்படும். மேலும் அவிசுவாசத்திலே படிப்படியாக நலிந்தவர்களெல்லோரும் மறக்கப்பட்டுப்போவதில்லை.

16 அழிக்கப்படவிருப்பவர்கள் தரையிலிருந்து அவர்களிடத்தில் பேசுவார்கள். அவர்களின் பேச்சு புழுதியிலிருந்து பணிவானதாயும், தெரிந்த ஆவியின் சத்தம் போலவும் இருக்கும், அவன் அவர்களைக் குறித்து தரையிலிருந்து முணுமுணுப்பதைப்போல, உரைக்கக் கர்த்தராகிய தேவன், அவனுக்கு வல்லமையைக் கொடுப்பார். அவர்களின் பேச்சு புழுதியிலிருந்து முனகும்.

17 இவ்விதமாக கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்: தங்கள் மத்தியில் செய்யப்படுபவைகளை அவர்கள் எழுதுவார்கள். அவைகள் எழுதப்பட்டு, ஒரு புஸ்தகத்திலே முத்திரையிடப்படும், அவிசுவாசத்திலே படிப்படியாக நலிந்தவர்கள் அவற்றைப் பெறமாட்டார்கள். அவர்கள் தேவனுடைய காரியங்களை அழிக்க வகைதேடுகிறார்கள்.

18 ஆகையால், அழிக்கப்பட்டுப் போனவர்கள் துரிதமாய் அழிக்கப்பட்டார்கள். பயங்கரமானவர்களின் திரள் பறக்கும் பதர்களத்தனையாக இருக்கும். ஆம், அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும், என்று கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்.

19 அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்தவர்கள், புறஜாதியாரின் கையினால் அடிக்கப்படுவார்கள்.

20 தங்கள் கண்களின் செருக்கால் புறஜாதியார் உயர்த்தப்படுகிறதாலும், பெரும் தடைக்கல்லினிமித்தம் இடறியதாலும், அவர்கள் அநேக சபைகளைக் கட்டியுள்ளார்கள்; இருப்பினும் தாங்கள் ஆதாயத்தைப் பெறவும், சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கவுமே, தங்கள் சொந்த கல்வியையும், தங்கள் ஞானத்தையும், தங்களுக்குள்ளே பிரசங்கித்து, தேவனுடைய அற்புதங்களையும், வல்லமையையும் இகழ்கிறார்கள்.

21 பொறாமைகளையும் வாக்குவாதங்களையும், துர்க்குணத்தையும் விளைவிக்கிற அநேக சபைகள் கட்டப்பட்டுள்ளன.

22 அங்கே பூர்வகாலத்தில் இருந்ததைப் போலவே, பிசாசின் கூட்டத்தாரைப் போன்ற இரகசிய சங்கங்கள் இருந்தன. ஆம், அவன்தான் இவைகள் அனைத்தையும் தோற்றுவித்தவன். ஆம், கொலையையும், இருளின் கிரியைகளையும், தோற்றுவித்தவன், தம் வலிய கயிற்றால் என்றென்றைக்கும் அவர்களை அவன் கட்டிப்போடும்வரைக்கும், அவர்களது கழுத்தை சணல் கயிற்றால் கட்டி நடத்துகிறான்.

23 ஏனெனில் இதோ, என் அன்புச் சகோதரரே, கர்த்தராகிய தேவன் அந்தகாரத்தில் கிரியை செய்வதில்லையென, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24 அவர் உலகத்தின் நன்மைக்கு ஏதுவானவையே அல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யார்; எல்லா மனுஷரையும் தம்மிடம் அழைத்துக்கொள்ள தன் சொந்த ஜீவனைக் கொடுக்குமளவிற்கு அவர் இந்த உலகத்தை நேசித்தார். ஆதலால், தன் இரட்சிப்பில் பங்கு பெறக்கூடாது, என ஒருவருக்கும் அவர் கட்டளையிடுவதில்லை.

25 இதோ, என்னைவிட்டுப் போ, என்று யாரிடத்திலாவது அவர் கூக்குரலிடுகிறாரா? இதோ அப்படியல்லவே, என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆனால் அவரோ: பூமியின் கடையாந்தரத்தில் இருப்போரே, எல்லோரும் என்னிடத்தில் வந்து, பாலையும், தேனையும் பணமுமின்றி, விலையுமின்றி பெற்றுக்கொள்ளுங்கள், என்கிறார்.

26 இதோ, அவர் யாரையாகிலும் ஜெபஆலயங்களிலிருந்து அல்லது வழிபாட்டு ஸ்தலங்களிலிருந்து வெளியே போ, என்று கட்டளையிட்டிருக்கிறாரா? இதோ உங்களை நோக்கி அப்படியல்லவே என்கிறேன்.

27 அவரின் இரட்சிப்பைப் புசிக்கக்கூடாது, என்று அவர் யாரையாகிலும் கட்டளையிட்டிருக்கிறாரா? இதோ நான் உங்களை நோக்கி அப்படியல்ல, என்கிறேன். ஆனால் அதை எல்லா மனுஷருக்கும் அவர் இலவசமாய்க் கொடுத்தார்; எல்லா மனுஷரையும் மனந்திரும்புதலுக்கு இணங்கச்செய்ய வேண்டும், என்று அவர் தன் ஜனத்திற்குக் கட்டளையிட்டார்.

28 இதோ தன் நன்மையைப் புசிக்கக்கூடாது, என யாரையாகிலும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரா? இதோ உங்களை நோக்கி அப்படியல்ல, என்கிறேன், ஆனால் ஒருவனைப்போல மற்றொருவனுமாக, மனுஷர் யாவரும் சிலாக்கியம் பெற்றவர்களே. ஒருவனும் விலக்கப்பட்டவனல்ல.

29 ஆசாரிய வஞ்சகங்கள் இருக்கக்கூடாது, என அவர் கட்டளையிடுகிறார். ஏனெனில் இதோ மனுஷர் சீயோனின் சுகவிருத்தியை நாடாமல், உலகத்தின் பலனையும், கீர்த்தியையும் பெறவே, அவர்கள் போதித்து, உலகத்திற்குத் தங்களையே ஒளியாக உயர்த்துவதே ஆசாரியவஞ்சகம்.

30 இதோ, கர்த்தர் இந்தக் காரியத்தைச் செய்யத்தகாததென்று தடைபண்ணினார்; ஆதலால் கர்த்தராகிய தேவன் எல்லா மனுஷரிடத்திலும் தயாளம் இருத்தல் வேண்டுமென ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளார். அந்த தயாளத்துவமென்பது அன்பு. அவர்களில் தயாளத்துவம் இல்லையெனில் அவர்கள் ஒன்றுமில்லை. ஆதலால், அவர்களில் தயாளத்துவம் இருக்குமாயின் அவர்கள் சீயோனில் பிரயாசப்படுபவனை அழிந்து போகும்படி விடமாட்டார்கள்.

31 ஆனால் சீயோனின் ஊழியக்காரன், சீயோனுக்காகப் பிரயாசப்படுவான்; ஏனெனில் அவர்கள் பணத்திற்காகப் பிரயாசப்படுவார்களெனில் சங்கரிக்கப்படுவார்கள்.

32 மறுபடியும், கர்த்தராகிய தேவன் மனுஷர் கொலைசெய்யக்கூடாதென்றும், அவர்கள் பொய் உரைக்கக்கூடாதென்றும், அவர்கள் திருடக்கூடாதென்றும், அவர்கள் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கக்கூடாதென்றும், அவர்கள் பொறாமை கொள்ளக்கூடாதென்றும், அவர்கள் துர்க்குணம் கொள்ளக்கூடாதென்றும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்யக்கூடாதென்றும், அவர்கள் வேசித்தனம் செய்யக்கூடாதென்றும், அவர்கள் இந்தக் காரியங்களில் ஒன்றும் செய்யக்கூடாதென்றும், கட்டளையிட்டிருக்கிறார். அவைகளைச் செய்கிறவர்கள் அழிவார்கள்.

33 இந்த அக்கிரமங்களில் ஒன்றும் கர்த்தரால் வருபவை அல்ல. மனுபுத்திரர் மத்தியில் நன்மையானவற்றையே அவர் செய்கிறார். அவர் மனுபுத்திரரிடத்தில் தெளிவானதாய் இருப்பதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. அவர்கள் அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார். தம்மிடம் வரும் ஒருவரையும் வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் மறுப்பதில்லை. அவர் புற ஜாதியானையும் நினைவுகூருகிறார். யூதனாகிலும், புறஜாதியானாகிலும் அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே.