அதிகாரம் 28
கடைசிக் காலங்களில் அநேக கள்ளச் சபைகள் கட்டப்படும் – அவர்கள் பொய்யான, வீணான, மதியீனத்தனமான உபதேசங்களைப் போதிப்பர் – கள்ள ஆசிரியர்களினால், மதமாறுபாடு பெருகும் – பிசாசு மனுபுத்திரரின் இருதயங்களிலே சினமூட்டுவான் – அவன் எல்லாவிதமான கள்ள உபதேசங்களையும் போதிப்பான். ஏறக்குறைய கி.மு. 559–545.
1 இப்பொழுது, இதோ, என் சகோதரரே, என்னை நெருக்கி ஏவிய ஆவியானவரின்படியே, நான் உங்களிடத்தில் பேசினேன். ஆதலால் அவைகள் மெய்யாகவே சம்பவிக்கும், என நான் அறிவேன்.
2 இந்தப் புஸ்தகத்தைக்கொண்டு, எழுதப்படுகிற காரியங்கள், மனுபுத்திரருக்குள்ளே, மிகவும் குறிப்பாக இஸ்ரவேலின் வீட்டாரின் மீதியானவர்களாகிய, நம் சந்ததியாருக்கும் மிக மதிப்புடையதாக இருக்கும்.
3 ஏனெனில் அந்நாளிலே கர்த்தருக்குள்ளாக அல்லாமல், கட்டப்பட்ட சபைகளில் ஒன்று மற்றவையினிடத்தில், இதோ, நானே கர்த்தருடையதென்று சொல்லும்; மற்றவைகள் நானே கர்த்தருடையது, என்றும் சொல்லும். கர்த்தருக்காக அல்லாமல், கட்டப்பட்ட சபைகள் யாவரும் இப்படியே சொல்லுவார்கள்.
4 அவர்கள் ஒருவருக்கொருவர் விவாதம் செய்வார்கள்; அவர்களின் போதகர்கள் ஒருவருக்கொருவர் விவாதம் செய்வார்கள். அவர்கள் தங்களின் கல்வியை வைத்துப் போதித்து, வார்த்தையைக் கொடுக்கிற பரிசுத்தாவியானவரை நிராகரிப்பார்கள்.
5 அவர்கள், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய தேவனுடைய வல்லமையை நிராகரித்து, ஜனங்களை நோக்கி: எங்களுக்குச் செவிகொடுங்கள். எங்களின் அறிவுரையைக் கேளுங்கள். ஏனெனில், இதோ, கர்த்தராகிய மீட்பர் தன் கிரியையை முடித்து தன் வல்லமையை மனுஷருக்கு அவர் கொடுத்திருக்கிறபடியால், தேவன் இன்று இல்லை என்றும்,
6 இதோ, என் அறிவுரைக்குச் செவிகொடுங்கள். கர்த்தருடைய கரத்தினால் அங்கே ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டது, என்று அவர்கள் சொல்வார்களெனில், அதை நம்பவேண்டாம். ஏனெனில் இத்தினத்திலே, அவர் அற்புதங்களின் தேவன் அல்ல; அவர் தன் கிரியையை செய்து முடித்தாரென்றும்,
7 ஆம், நாளை நாம் மரித்துப்போவோமென்பதால், புசித்து, குடித்து, பூரிப்பாயிரு, அது நமக்கு நலமாயிருக்குமென்று, அநேகர் சொல்லுவார்கள்.
8 புசித்து, குடித்து, பூரிப்பாயிரு; ஆயினும் தேவனுக்குப் பயப்படு. சிறிய பாவம் செய்வதை அவர் நியாயமெனத் தீர்ப்பார்; கொஞ்சம் பொய் சொல். ஒருவனுடைய வார்த்தைகளைக்கொண்டு, அதை சாதகமாக்கிக்கொள். உன் அயலானுக்கு ஒரு துரவை வெட்டு. அதனாலே எந்தக் கேடும் வராது. நாம் நாளை மரித்துப்போகிறதினிமித்தம், இந்தக் காரியங்களனைத்தையும் செய். நாம் குற்றவாளிகளாயிருந்தாலும், தேவன் நம்மைக் கொஞ்சம் அடித்து, இறுதியிலே தேவனுடைய ராஜ்யத்திலே இரட்சிக்கப்படுவோமென்றும், அநேகர் சொல்லுவார்கள்.
9 ஆம், தங்கள் ஆலோசனைகளைக் கர்த்தரிடத்திலிருந்து மறைக்கத் தீவிரமாய் தேடுகிறவர்கள், தங்கள் இருதயங்களிலே பெருமைகொண்டு, தவறான, வீணான, மதியீன உபதேசங்களுக்குத்தக்கதாய் போதிக்கிறவர்கள் அநேகர் இருப்பார்கள். மேலும் அவர்களுடைய கிரியைகள் அந்தகாரத்திலிருக்கும்.
10 பரிசுத்தவான்களின் இரத்தம் பூமியிலிருந்து அவர்களுக்கு விரோதமாய் கதறும்.
11 ஆம், அவர்கள் அனைவரும் வழிதப்பிப்போனார்கள்; அவர்கள் கெட்டுப்போனார்கள்.
12 அகந்தை கொண்டதினாலும், கள்ள ஆசிரியர்களாலும் மற்றும் கள்ள உபதேசங்களினாலும், அவர்களுடைய சபைகள் சீர்குலைந்து, அவர்களின் சபைகளில் செருக்குண்டானது; பெருமையினிமித்தம் அவர்கள் வீம்புள்ளவர்களானார்கள்.
13 அவர்கள் சிறுமையானவர்களை, தங்களின் அருமையான ஆராதிக்குமிடங்களினிமித்தம் வஞ்சிக்கிறார்கள். சிறுமையானவர்களை தங்களின் அருமையான வஸ்திரத்தினிமித்தம் வஞ்சிக்கிறார்கள். அவர்கள் பெருமையிலே வீம்புகொண்டதினிமித்தம், சாந்தகுணமுள்ளோரையும், இருதயத்திலே எளிமையுள்ளோரையும் துன்பப்படுத்துகிறார்கள்.
14 அவர்கள் வணங்காக் கழுத்துக்களையும், பெருமையுடைய தலைகளையும் கொண்டிருக்கிறார்கள்; ஆம், கிறிஸ்துவினுடைய தாழ்மையான சிலரைத்தவிர, பெருமையாலும், துன்மார்க்கத்தாலும், அருவருப்புகளினாலும், வேசித்தனத்தாலும் மற்ற அனைவரும் வழிதப்பிப்போனார்கள். அவர்கள் வழிநடத்தப்பட்டபோதிலும், மனுஷரின் அறிவுரைகளால் போதிக்கப்பட்டதினிமித்தம், பலதடவைகளில் தவறுசெய்கிறார்கள்.
15 கல்விமான்களுக்கும், செல்வந்தர்களுக்கும், தங்களின் இருதயங்களின் கர்வத்தினால், வீம்புகொண்டிருக்கிற ஞானிகளுக்கும், கள்ள உபதேசங்களைப் பிரசங்கிக்கிற யாவருக்கும், வேசித்தனங்களைச் செய்கிற எல்லோருக்கும், கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுகிறவர்களுக்கும், ஐயோ, ஐயோ, ஐயோ, என்று சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன் உரைக்கிறார். ஏனெனில் அவர்கள் பாதாளத்திலே தள்ளப்படுவார்கள்.
16 பயனற்ற பொருளைப்போல நியாயமுள்ளவர்களைத் தள்ளுகிறவர்களுக்கும், நல்லவர்களுக்கு விரோதமாய்த் தூஷித்து, அது மதிப்பற்றதென்று சொல்லுகிறவர்களுக்கும் ஐயோ! கர்த்தராகிய தேவன் பூமியின் குடிகளை சீக்கிரமாய் சந்திக்கும் நாள் வரும். அந்நாளிலே, அக்கிரமத்திலே முழுவதுமாய் பழுத்திருக்கிறவர்கள் அழிந்துபோவார்கள்.
17 ஆனால் இதோ, பூமியின் குடிகள் தங்கள் அக்கிரமத்திலிருந்தும், அருவருப்புகளிலிருந்தும், மனந்திரும்பினால் அழிக்கப்படமாட்டார்கள், என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.
18 ஆனால் இதோ பூமியனைத்தின் வேசியான, அந்தப் பெரிதும் அருவருப்புமான சபை, பூமியில் விழுந்து நொறுங்கும். அதன் வீழ்ச்சி பயங்கரமானதாயிருக்கும்.
19 பிசாசின் ராஜ்யம் குலுங்கும். அதைச் சார்ந்திருப்போர் மனந்திரும்புதலுக்கு ஏவப்படவேண்டும். இல்லாவிடில் பிசாசு தன் நித்திய சங்கிலிகளால் அவர்களைப் பற்றிப்பிடிப்பான். அவர்கள் கோபத்திற்கு ஏவப்பட்டு, அழிந்துபோவார்கள்.
20 ஏனெனில் இதோ, அந்நாளில் அவன் மனுபுத்திரர் இருதயங்களில் சினம் கொள்ளச்செய்து, அவர்களை நன்மைக்கு விரோதமாய் கோபமடைய ஏவுவான்.
21 மற்றவர்களை அவன் சாந்தப்படுத்தி, ஆற்றி, சீயோனில் அனைத்தும் நலமே; ஆம், சீயோன் விருத்தியடைகிறது, யாவும் நலமே, என்று சொல்லும்படியாக மாம்ச பாதுகாப்பிற்குள் போகவைப்பான். இவ்வாறாகப் பிசாசு அவர்களின் ஆத்துமாக்களை ஏமாற்றி, பத்திரமாகப் பாதாளத்திற்குள் அவர்களை நடத்திச் செல்வான்.
22 இதோ, மற்றவர்களிடம் இச்சகமாய்ப் பேசி பாதாளம் இல்லையென்று சொல்லுகிறான். அவன் அவர்களை நோக்கி: நான் ஒன்றும் பிசாசு அல்ல, அப்படி யாரும் இல்லை, என்று சொல்லி தப்பித்துப்போக முடியாதபடி, தன்னுடைய பயங்கரமான சங்கிலிகளால் பற்றிப் பிடிக்கும்வரை, அவன் இவ்விதமாய் அவர்களின் காதுகளிலே முணுமுணுத்துப் பேசுகிறான்.
23 ஆம், அவர்கள் மரணத்தாலும் பாதாளத்தாலும் பிடிக்கப்பட்டனர். மரணமும், பாதாளமும், பிசாசும் அதனுடன் ஆக்கிரமிக்கப்பட்ட யாவரும், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்று, தங்களின் கிரியைக்குத் தக்கதாய் நியாயந்தீர்க்கப்பட்டு, அவ்விடத்திலிருந்து அவர்களுக்காய் ஆயத்தம்பண்ணப்பட்ட முடிவற்ற வேதனையாகிய, அக்கினியும் கந்தகக் கடலுமான இடத்திற்குள் அவர்கள் போகவேண்டும்.
24 ஆதலால், சீயோனிலே சுகவாழ்வாய் ஜீவிக்கிறவனுக்கு ஐயோ!
25 யாவும் நலமே, என்று ஓலமிடுபவனுக்கு, ஐயோ!
26 ஆம், மனுஷரின் அறிவுரைகளுக்குச் செவிகொடுத்து, தேவனுடைய வல்லமையையும், பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும் மறுக்கிறவனுக்கு, ஐயோ!
27 ஆம், நாங்கள் பெற்றுக்கொண்டோம். இன்னமும் எங்களுக்குத் தேவையில்லை, என்று சொல்பவனுக்கு, ஐயோ!
28 முடிவாக, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் கோபம்கொள்கிற, நடுங்குகிற அனைவருக்கும், ஐயோ! இதோ பாறையின்மீது கட்டப்பட்டவன் அதை மனமகிழ்ச்சியோடே பெற்றுக்கொள்கிறான், மணலான அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டவன் விழுந்துவிடுவோமோ, என்று நடுக்கம் கொள்கிறான்.
29 நாங்கள் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் நிறைவாய் வைத்திருப்பதனாலே, இன்னமும் எங்களுக்குத் தேவனுடைய வார்த்தை தேவையில்லை, என்று சொல்லுபவர்களுக்கு, ஐயோ!
30 இதோ வரிவரியாயும், கட்டளை கட்டளையாயும், இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமாக, மனுபுத்திரருக்கு நான் கொடுப்பேன்; என் அறிவுரைக்குச் செவிகொடுத்து, என் ஆலோசனைக்குக் காது கொடுப்பவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நான் அதிகமாய்க் கொடுப்பேன். நாங்கள் நிறைவாய் வைத்திருக்கிறோம் என்று சொல்லுபவர்களிடத்திலிருந்து அவர்கள் வைத்திருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும், என்று கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்.
31 மனுஷரில் நம்பிக்கை வைத்து, மாம்சத்தைத் தன் புயபலமாகக்கொண்டு, மனுஷருடைய அறிவுரைகளுக்குச் செவிகொடுத்து, அவர்களின் கட்டளைகள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் கொடுக்கப்பட்டதாய் இல்லாவிடில், அவன் சபிக்கப்படுவான்.
32 புறஜாதியாருக்கு ஐயோ, என்று சேனைகளின் கர்த்தராகிய தேவன் உரைக்கிறார். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் என் புயத்தை அவர்களுக்கு நீட்டினாலும், அவர்கள் என்னை நிராகரிப்பார்கள். ஆயினும் அவர்கள் மனந்திரும்பி, என்னிடத்தில் வருவார்களெனில் நான் அவர்களுக்கு இரக்கமுள்ளவராயிருப்பேன், என்று கர்த்தராகிய தேவன் உரைக்கிறார். என் புயம் நாள் முழுவதும் நீண்டுள்ளது, என்று சேனைகளின் கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்.