வேதங்கள்
2 நேபி 2


அதிகாரம் 2

பரிசுத்த மேசியாவின் மூலம் மீட்பு வருதல் – தெரிந்து கொள்ளும் சுதந்திரம் (சுயாதீனம்) ஜீவிப்பதற்கும், முன்னேறிச் செல்வதற்கும் அத்தியாவசியமாய் இருத்தல் – மனுஷர் நிலைநிற்கும்படிக்கே, ஆதாம் வீழ்ந்தான் – மனுஷர், சுதந்திரத்தையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்தரமாயிருத்தல். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 இப்பொழுதும், யாக்கோபே, நான் உன்னிடம் பேசுகிறேன். நீயே வனாந்தரத்தில் என் உபத்திரவங்களின் காலங்களிலே எனக்கு முதற்பிறந்தவனாய் இருக்கிறாய். இதோ, உன் சகோதரரின் மூர்க்கத்தனத்தினாலே, உன் இளம்பிராயத்திலே உபத்திரவங்களாலும், அநேக துன்பங்களாலும் பாடுபட்டிருக்கிறாய்.

2 ஆயினும், வனாந்தரத்திலே எனக்கு முதற்பிறந்தவனாகிய யாக்கோபே, நீ தேவனுடைய மேன்மையை அறிந்திருக்கிறாய், அவர் உன் உபத்திரவங்களை, உனது ஆதாயத்திற்கென மாற்றுவார்.

3 ஆகையால், உனது ஆத்துமா ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும், நீ உன் சகோதரனாகிய நேபியோடே பாதுகாப்பாய் ஜீவிப்பாய். உன் நாட்கள் உனது தேவனுடைய ஊழியத்திலே செலவிடப்படும். ஆகவே, மீட்பருடைய நீதியினிமித்தம் மீட்கப்பட்டிருக்கிறாய், என நான் அறிவேன். ஏனெனில் மனுஷருக்குள்ளே இரட்சிப்பைக்கொண்டுவர, காலங்களின் நிறைவிலே, உனது மீட்பர் வருவார் என்று, நீ கண்டிருக்கிறாய்.

4 உன் வாலிபப்பிராயத்திலேயே அவருடைய மகிமையைக் கண்டிருக்கிறாய். மாம்சத்திலே அவர் ஊழியம் செய்யவிருப்பவர்கள் போலவே, நீயும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். ஏனெனில், ஆவியானவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவர். மனுஷனுடைய வீழ்ச்சி முதற்கொண்டே வழி ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது, இரட்சிப்பும் இலவசம்.

5 மனுஷர் தீமையினின்று, நன்மையை அறியும் பொருட்டுப் போதுமான அளவு உபதேசிக்கப்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாணமும் மனுஷருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு மாம்சமும் நியாயப்பிரமாணத்தினாலே நியாயவானாக்கப்படுவதுமில்லை, அல்லது நியாயப்பிரமாணத்தினாலே மனுஷர் அறுப்புண்டு போவதுமில்லை. ஆம், உலகத்தின் நியாயப்பிரமாணத்தினாலே அவர்கள் அறுப்புண்டு போனார்கள். ஆவிக்குரிய நியாயப்பிரமாணத்தினாலே அவர்கள் நன்மையினின்று கெட்டுப்போய் என்றென்றுமாய், பரிதபிக்கப்படத் தக்கவர்களானார்கள்.

6 ஆகையால், மீட்பு பரிசுத்த மேசியாவிலும், அவர் மூலமுமே வருகிறது. ஏனெனில் அவர் கிருபையிலும், சத்தியத்திலும் நிறைந்திருக்கிறார்.

7 இதோ, நொறுங்குண்ட இருதயமும், நருங்குண்ட ஆவியுமுள்ள யாவருக்குமாய், நியாயப்பிரமாணத்தினுடைய நிறைவேறுதல்களுக்குப் பதிலளிக்க, அவர் தம்மைத்தாமே பாவத்திற்குரிய பலியாக ஒப்புக்கொடுக்கிறார். மற்ற எதனாலும் நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலுக்குப் பதிலளிக்க இயலாது.

8 எழும்புவோரில் முதலானவராய், மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணும்படி, மாம்சத்தின்பிரகாரமாய் தனது ஜீவனை ஒப்புக்கொடுத்து, அதை ஆவியின் வல்லமையினாலே மறுபடியுமாய் பெற்றுக்கொண்ட, பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம், கிருபை ஆகியவைகளின் மூலமேயன்றி, தேவனுடைய பிரசன்னத்திலே எந்த ஒரு மாம்சமும் வாசமாயிருக்கலாகாது, என்று பூமியின் குடிகள் அறியும்படிக்கு, இவைகளை அவர்களுக்கு அறிவிப்பதின் முக்கியத்துவம் எவ்வளவு மேன்மையானதாயிருக்கிறது.

9 ஆகையால், அவர் மனுபுத்திரர் யாவருக்குமாய் பரிந்துபேசவிருப்பதாலே, தேவனுக்கு முதற்பலனானார். அவரில் விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

10 அனைவருக்காகவும் பரிந்துபேசுகிறதினிமித்தம், மனுஷர் யாவரும் தேவனிடத்திலே வருகிறார்கள். ஆதலால், அவரில் இருக்கிற சத்தியம் மற்றும் பரிசுத்தத்தின்படியேயும் நியாயம் விசாரிக்கப்படும் பொருட்டு, அவரது பிரசன்னத்திலே நிற்கிறார்கள். ஆதலால், பரிசுத்தர் நியாயப்பிரமாணத்தின் முடிவுகளைக் கொடுத்திருக்கிறார். அந்த நியாயப்பிரமாணமோ அதனைச் சார்ந்த தண்டனையைச் சுமத்துகிறது. அந்த தண்டனையோ, பாவநிவர்த்தியின் முடிவுகளுக்குப் பதிலளிக்க நியாயப்பிரமாணத்தைச் சார்ந்த மகிழ்ச்சிக்கு எதிராக இருக்கிறது.

11 எல்லாவற்றிலும் எதிர்ப்பு இருப்பது அவசியமாயிருக்கிறது. அப்படியில்லையெனில் வனாந்தரத்தில் எனக்கு முதற் பிறந்தவனே, நீதியோ, துன்மார்க்கமோ, பரிசுத்தமோ, துர்ப்பாக்கியமோ, நன்மையோ, தீமையோ செய்யக்கூடாமற்போயிருக்கும். ஆகையால் சகலமும் ஒரு கூட்டாய் இருக்க வேண்டும். அவை ஒன்றாய் இருக்குமேயானால், ஜீவனோ, மரணமோ, அழிவோ, அழியாமையோ, மகிழ்ச்சியோ, துர்ப்பாக்கியமோ, உணர்வோ, உணர்வில்லாமையோ இல்லாமல் உயிரற்றவைகளாயிருக்கும்.

12 ஆகவே, அது பயனில்லாமல் படைக்கப்பட்டதாயிருக்க வேண்டுமே. இப்படியாய் அதன் சிருஷ்டிப்பின் முடிவிலே யாதொரு நோக்கமும் இருந்திருக்காது. இதனிமித்தம், தேவனுடைய ஞானமும், நித்திய தீர்மானங்களும் மட்டுமல்லாமல், தேவனுடைய வல்லமையும், இரக்கமும் நியாயமும் அழிய வேண்டியிருக்கும்.

13 நியாயப்பிரமாணம் இல்லை என்பீர்களானால், யாதொரு பாவமும் இல்லை என்றும் சொல்வீர்கள். பாவம் இல்லை என்பீர்களானால், நீதி இல்லை என்றும் சொல்வீர்கள். நீதியில்லையானால் மகிழ்ச்சியிராதே. நீதியோ, மகிழ்ச்சியோ இல்லையெனில், தண்டனையும் துர்ப்பாக்கியமும் இராது. இவைகளனைத்தும், இல்லாமற்போனால், தேவனுமில்லை. தேவன் இல்லையெனில் நாமோ, பூமியோ இல்லை. செயல்படவோ, செயல்படுத்தப்படவோ, சிருஷ்டிப்பும் இருந்திருக்காதே. ஆகையால் சகலமும் மறைந்தே போயிருக்கும்.

14 இப்பொழுதும், என் குமாரரே, நீங்கள் பிரயோஜனப்படவும், கற்றுக்கொள்ளவுமே இவைகளைப் பேசுகிறேன். தேவன் ஒருவர் இருப்பதாலே, அவரே எல்லாவற்றையும், வானத்தையும், பூமியையும், அதிலே செயல்படவும், செயல்படுத்தப்படும்படியாகவும், அதிலுள்ள அனைத்தையும் சிருஷ்டித்தார்.

15 அவர் நம்முடைய முதற் பெற்றோரையும், வெளியின் மிருகஜீவன்களையும், ஆகாயத்தின் பட்சிகளையும், கடைசியில் சகலத்தையும் சிருஷ்டித்த பின்பு, மனுஷனுடைய அந்தியத்திலே தம்முடைய நித்திய தீர்மானங்களைக் கொண்டுவரத்தக்கதாக, அங்கே மாறுபாடான ஒன்று இருக்கவேண்டியதாயிற்று. அதுவே ஜீவவிருட்சத்துக்கு மாறான கசப்பான தவிர்க்கப்பட்ட கனி, ஒன்று இனிப்பானது, மற்றொன்று கசப்பானது.

16 ஆகையால், கர்த்தராகிய தேவன், மனுஷன் தானாகவே செயல்படும்படிக்கு அருளினார். அதனிமித்தம், மனுஷன் ஒன்றாலோ, மற்றொன்றாலோ தூண்டப்பட்டாலொழிய அவன் தானாக செயல்பட முடியாது.

17 லேகியாகிய நான், வாசித்திருப்பவைகளின்படி, எழுதப்பட்டிருக்கிறபடியே ஒரு தேவதூதன், பரலோகத்திலிருந்து வீழ்ந்தான், என நம்பவேண்டும், ஆகவே தேவனுக்கு முன்பாகத் தீமையை தேடி, அவன் பிசாசானான்.

18 அவன் பரலோகத்திலிருந்து வீழ்ந்து என்றென்றைக்குமாய் துர்ப்பாக்கியவனாய்ப் போனதினிமித்தம், மனுக்குலம் யாவும் துர்ப்பாக்கியமடைய வகைதேடினான். ஆகையால், பொய்களின் பிதாவும், ஆதி சர்ப்பமுமான அந்தப் பிசாசு, ஏவாளை நோக்கி, சொன்னான்: தவிர்க்கப்பட்ட கனியை நீ புசி, நீ சாகமாட்டாய், ஆனால் நன்மையையும், தீமையையும் அறிகிற தேவனைப்போலாவாய்.

19 ஆதாமும், ஏவாளும் தவிர்க்கப்பட்ட கனியைப் புசித்த பின்பு, பூமியைப் பண்படுத்தும்படி, ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

20 அவர்கள் பூமியனைத்திலுமுள்ள குடிகளாகிய பிள்ளைகளைப் பெற்றார்கள்.

21 மனுஷர் மாம்சத்திலிருக்கும்போதே மனந்திரும்பும்பொருட்டு தேவனுடைய சித்தத்திற்கேற்ப, மனுபுத்திரர்களின் ஜீவகாலம் நீடிக்கப்பட்டது. ஆதலால் அவர்களுடைய நிலை சோதிக்கப்பெறும் ஒரு நிலையாக்கப்பட்டது. கர்த்தராகிய தேவன் மனுபுத்திரருக்குக் கொடுத்த கட்டளைகளின்படியே, அவர்களுடைய காலமும் நீடிக்கப்பட்டது. ஏனெனில், சகலமானோரும் மனந்திரும்பவேண்டுமென்ற ஒரு கட்டளையை அவர் கொடுத்தார். ஏனெனில் மனுஷர் யாவரும் தங்களின் பெற்றோரின் மீறுதலினிமித்தம் வீழ்ந்துபோனார்கள், என்று அவர்களுக்குக் காண்பித்தார்.

22 இப்பொழுதும், இதோ, ஆதாம் மீறுதலுக்கு உட்படாமல் இருந்திருப்பானேயானால், அவன் வீழ்ச்சியடையாமல், ஏதேன் தோட்டத்திலே இருந்திருப்பான். படைக்கப்பட்ட யாவும், படைக்கப்பட்ட பின்பு இருந்த நிலையிலேயே இருந்திருக்கும். அவைகள் முடிவற்றவையாய், என்றென்றைக்கும் நிலைத்திருந்திருக்கும்.

23 அவர்கள் பிள்ளைகளையும் பெறாமலிருந்திருப்பார்கள்; ஆகையால் துர்ப்பாக்கியத்தை அறியாததினிமித்தம் சந்தோஷமும் இல்லாமல், பாவத்தை அறியாததினிமித்தம், நன்மையானதைச் செய்யாமலும், அறியாமையின் நிலையிலேயே இருந்திருப்பார்கள்.

24 ஆனால் இதோ, சர்வத்தையும் அறிந்திருக்கிறவரின் ஞானத்தின்படியே சகலமும் நடப்பிக்கப்பட்டது.

25 மனுஷன் பிழைத்திருப்பதற்காகவே ஆதாம் வீழ்ந்துபோனான்; சந்தோஷமாயிருக்கவே மனுஷன் இருக்கிறான்.

26 காலங்களின் நிறைவிலே மேசியா மனுபுத்திரரை வீழ்ச்சியிலிருந்து மீட்கும்பொருட்டு வருகிறார். மேலும் அவர்கள் வீழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்டதினிமித்தம், தீமையிலிருந்து நன்மையை அறிகிற சுதந்திரவாளிகளாய் என்றென்றும் இருந்து. தங்களுக்குத் தாங்களே செயல்படவும், தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளின்படியே அந்தப் பெரிதும், கடைசியுமான நாளிலே, நியாயப்பிரமாணத்தின் தண்டனைகளைத்தவிர, வேறொன்றாலும் அவர்கள் செயல்பட வைக்கப்படமாட்டார்கள்.

27 ஆதலால் மாம்சத்தின்பிரகாரமாய், மனுஷர் சுதந்திரவாளிகளாய் இருக்கிறார்கள். மனுஷனுக்குத் தேவையான யாவும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. மனுஷர் யாவருக்கும், மகத்துவமுள்ள மத்தியஸ்தரானவரின் மூலம் சுதந்திரத்தையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்க, அந்தப் பிசாசின் சிறைத்தனத்தினாலும், வல்லமையாலும், அடிமைத்தனத்தையும்; மரணத்தையும் தேர்ந்தெடுக்கவும் அவர்கள் சுதந்திரவாளிகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எல்லா மனுஷரும் தன்னைப் போலவே துர்பாக்கியவான்களாக இருக்கும்படிக்கு, அவன் வகைதேடுகிறான்.

28 இப்பொழுதும், என் குமாரரே, நீங்கள் அந்த மகத்துவமுள்ள மத்தியஸ்தரை ஏறெடுத்துப்பார்த்து, அவருடைய மகா கட்டளைகளுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அவரின் பரிசுத்த ஆவியின் சித்தத்தின்படியே அவருடைய வார்த்தைகளுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்து, நித்திய ஜீவனைத் தேர்ந்தெடுங்கள்.

29 தன் சொந்த ராஜ்யத்திலே உங்களை ஆளுகை செய்யும்படிக்கு, உங்களை நரகத்திலே தள்ள, உங்களை அடிமைகளாக்க, பிசாசின் ஆவிக்கு வல்லமையைக் கொடுக்கிற மாம்சத்தின் சித்தத்தினாலும், அதன் பொல்லாப்பின்படியேயும், நித்திய மரணத்தைத் தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

30 என் குமாரரே, என்னுடைய சோதனைக்காலத்தின் கடைசி நாட்களிலே இந்தச் சில வார்த்தைகளை உங்களனைவருக்கும் பேசினேன். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படியே, நான் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டேன். என் நோக்கம் யாவும் உங்கள் ஆத்துமாவின் நீடித்த நலனே தவிர வேறொன்றுமில்லை. ஆமென்.