அதிகாரம் 33
நேபியின் வார்த்தைகள் உண்மையானவை – அவை கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர்தல் – கிறிஸ்துவில் விசுவாசிக்கிறவர்கள், நேபியின் வார்த்தைகளையும் விசுவாசிப்பார்கள், நியாயவிசாரணைக்கூண்டு முன்பாக அது சாட்சியாக நிற்கும். ஏறக்குறைய கி.மு. 559–545.
1 இப்பொழுதும் நேபியாகிய நான், என் ஜனங்கள் மத்தியில் போதிக்கப்பட்ட எல்லாக் காரியங்களையும் எழுத முடியாது; பேசுவதைப்போல எழுதுவதில் நான் வல்லமைபடைத்தவனுமல்ல; ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் ஒருவன் பேசும்பொழுது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை, அதை மனுபுத்திரரின் இருதயங்களுக்குள் கொண்டு செல்லுகிறது.
2 ஆனாலும் இதோ, பரிசுத்த ஆவிக்கு இடமில்லாமற்போகுமட்டும், அதற்கு எதிராகத் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிற அநேகர் இருக்கிறார்கள். ஆகையால் எழுதப்பட்டிருக்கிற அநேக காரியங்களை அவர்கள் புறம்பே தள்ளி அவைகளை பிரயோஜனமற்றவைகளாய் எண்ணுகிறார்கள்.
3 ஆனால், எழுதியவைகள், நேபியாகிய என்னால் எழுதப்பட்டவையே. நான் அதைக் குறிப்பாக என் ஜனங்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவைகளெனக் கருதுகிறேன்; ஏனென்றால், நான் அவர்களுக்காக நித்தமும் பகலில் ஜெபித்து, அவர்கள் நிமித்தம், என் கண்ணீர் இரவு நேரத்தில் என் தலையணையை நனைக்கிறது; நான் விசுவாசத்தோடு என் பிதாவை நோக்கிக் கூக்குரலிடுகிறேன். அவர் என் கூக்குரலைக் கேட்பார், என நான் அறிந்திருக்கிறேன்.
4 கர்த்தராகிய தேவன், என் ஜெபங்களை என் ஜனங்களின் பிரயோஜனத்திற்காக பரிசுத்தப்படுத்துவார் என நான் அறிந்திருக்கிறேன்; நான் பெலவீனத்தில் எழுதிய காரியங்கள், அவர்களுக்காகப் பெலனுடையவைகளாக்கப்படும்; ஏனெனில் அது அவர்களை நன்மை செய்யும்படி தூண்டுகிறது, அது அவர்கள் பிதாக்களைக் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கிறது. அது இயேசுவைக் குறித்துப் பேசி, அவரில் விசுவாசமாயிருக்க உணர்த்தி, முடிவுபரியந்தம் நிலைத்து நிற்க வற்புறுத்துகிறது; இதுவே நித்திய ஜீவன்.
5 அது சத்தியத்தின் தெளிவின்படியே, பாவத்திற்கு எதிராகக் கடினமாய்ப் பேசுகிறது; ஆகையால் ஒருவன் பிசாசின் ஆவியுடையவனாய் இருந்தாலொழிய, நான் எழுதிய வார்த்தைகளைக் குறித்துக் கோபம் கொள்ளான்.
6 நான் தெளிவானவைகளில் மகிமை பாராட்டுகிறேன்; நான் சத்தியத்தில் மகிமை பாராட்டுகிறேன்; என் இயேசு பாதாளத்திலிருந்து என் ஆத்துமாவை மீட்டுக்கொண்டதினிமித்தம் அவரில் மகிமைப் படுகிறேன்.
7 நான் என் ஜனங்களிடத்தில் தயாளத்துவம் கொண்டவனாயிருக்கிறேன்; அவருடைய நியாயாசனத்தின் முன்பு, அநேக ஆத்துமாக்களைக் கறையற்றவர்களாகச் சந்திப்பேன், என கிறிஸ்துவில் மிகுந்த நம்பிக்கையுடையவனாயிருக்கிறேன்.
8 நான் யூதரிடத்திலும் தயாளத்துவம் கொண்டவனாயிருக்கிறேன், அவர்களிலிருந்து நான் வந்தேன், என நான் பொருள்கொள்வதினிமித்தம், யூதன் என்கிறேன்.
9 புறஜாதிகளிடத்திலும் நான் தயாளத்துவமுடையவனாயிருக்கிறேன். ஆனாலும் இதோ, அவர்கள் கிறிஸ்துவோடு ஒப்புரவாகி, இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசித்து, ஜீவனைப் பெறும்படியாய் அழைத்துச் செல்லுகிற நெருக்கமான வழியிலே நடந்து, சோதனையின் காலம் முடியுமளவும் அந்த வழியிலே தொடர்ந்து நடந்தாலொழிய, இவர்கள் ஒருவர்மீதும் நான் நம்பிக்கை கொள்ள முடியாது.
10 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, யூதர்களே, பூமியின் கடையாந்திரங்களிலும் இருப்பவர்களே, இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, கிறிஸ்துவை விசுவாசியுங்கள்; நீங்கள் இந்த வார்த்தைகளை விசுவாசியாவிட்டாலும் கிறிஸ்துவை விசுவாசியுங்கள், மேலும் நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால், இந்த வார்த்தைகளை விசுவாசிப்பீர்கள்; ஏனெனில் அவைகள் கிறிஸ்துவின் வார்த்தைகளாயிருக்கின்றன. அவர் அவைகளை எனக்குத் தந்தார். நன்மையானவைகளைச் செய்யவேண்டுமென அவைகள் மனுஷர் யாவருக்கும் போதிக்கின்றன.
11 அவைகள் கிறிஸ்துவின் வார்த்தைகளாயிராவிட்டால், நீங்களே நிதானித்துப் பாருங்கள். ஏனெனில் கடைசி நாளிலே, அவைகள் தம்முடைய வார்த்தைகளென, கிறிஸ்து வல்லமையோடும், மகத்துவமான மகிமையோடும் உங்களுக்குக் காண்பிப்பார். அவருடைய நியாயவிசாரணைக்கூண்டுக்கு முன்பாக, நீங்களும் நானும் முகமுகமாய் நிற்போம்; என்னிடம் பெலவீனங்களிருப்பினும், நான் இவைகளை எழுதும்படி அவரால் கட்டளையிடப்பட்டிருந்தேன், என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
12 எல்லோரும் இல்லாவிட்டாலும், நம்மில் அநேகர், பெரிதும், கடைசியுமான அந்த நாளிலே, அவருடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படவேண்டும், என நான் பிதாவை, கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன்.
13 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, பூமியின் கடையாந்திரங்களே, தூசிலிருந்து கூக்குரலிடுகிறவனின் சத்தத்தைப்போல, நான் உங்களுடனே பேசுகிறேன். பெரிதான அந்த நாள் வரும்வரைக்கும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
14 இதோ, தேவனுடைய இந்த நன்மையில் பங்குகொள்ளாமலும், யூதர்களின் வார்த்தைகளையும், என்னுடைய வார்த்தைகளையும், தேவாட்டுக்குட்டியின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளையும், மதியாமலிருக்கிறவர்களிடமிருந்து நித்தியமாய் விடைபெற்றுக்கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தைகள், உங்களைக் கடைசி நாளிலே குற்றவாளிகளெனத் தீர்க்கும்.
15 ஏனெனில், நான் பூமியில் முத்திரையிடுகிறவைகள் எவைகளோ, அவைகள் உங்களுக்கு எதிராக, நியாயத்தீர்ப்பின் கூண்டிலே கொண்டுவரப்படும். ஏனெனில் கர்த்தர் எனக்கு இவ்விதமாய்க் கட்டளையிட்டிருக்கிறார். நான் கீழ்ப்படியவேண்டும். ஆமென்.