வேதங்கள்
2 நேபி 4


அதிகாரம் 4

லேகி ஆலோசனை கூறுதல் மற்றும் தன் சந்ததியை ஆசீர்வதித்தல் – அவன் மரித்து, அடக்கம் பண்ணப்படுதல் – நேபி, தேவனின் நன்மையில் மகிமைப்படுதல் – நேபி, தன் விசுவாசத்தை என்றென்றுமாய் கர்த்தர்மீது வைத்தல். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 இப்பொழுது, நேபியாகிய நான், எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட யோசேப்பைப்பற்றி என் தகப்பன் கூறிய தீர்க்கதரிசனங்களைக் குறித்துப் பேசுகிறேன்.

2 ஏனெனில் இதோ, தமது சந்ததியார் எல்லோரைக்குறித்தும் அவர் மெய்யாகவே தீர்க்கதரிசனம் உரைத்தார்; மேலும் அவர் எழுதிய தீர்க்கதரிசனங்களைவிட அங்கே அதிக முக்கியம் வாய்ந்தவைகள் இல்லை; மேலும் அவர் எங்களையும் எங்கள் எதிர்காலத் தலைமுறைகளைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்தார்; அவைகள் பித்தளைத்தகடுகள் மேல் எழுதப்பட்டிருக்கின்றன.

3 ஆகையால், யோசேப்பின் தீர்க்கதரிசனங்களைக் குறித்தவற்றை, என் தகப்பன் பேசி முடித்தபின்பு, அவர் லாமானுடைய பிள்ளைகளாகிய, அவனது குமாரர்களையும், அவனது குமாரத்திகளையும் அழைத்து, அவர்களை நோக்கி: இதோ, என் முதற்பேறானவனின் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிற என் குமாரரும், குமாரத்திகளுமானவர்களே, நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

4 ஏனெனில் கர்த்தராகிய தேவன், என் கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில், நீங்கள் தேசத்திலே விருத்தியடைவீர்கள்; நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிற அளவில், என் சமுகத்திலிருந்து அறுப்புண்டு போவீர்கள், என்று சொல்லியிருக்கிறார்.

5 ஆனாலும் இதோ, என் குமாரரும், குமாரத்திகளுமானவர்களே, உங்கள்மேல் ஒரு ஆசீர்வாதத்தை விட்டுச்செல்லாமல், நான் என் கல்லறைக்குள் போவது கூடாத காரியமாயிருக்கிறது; ஏனெனில் இதோ, நீங்கள் போகவேண்டிய வழியிலே வளர்க்கப்பட்டிருந்தால், நீங்கள் அதை விட்டு விலகாதிருப்பீர்கள், என்பதை நான் அறிவேன்.

6 ஆகையால், நீங்கள் சபிக்கப்பட்டால், அந்தச் சாபம் உங்களிலிருந்து எடுக்கப்பட்டு, அது உங்கள் பெற்றோர்களின் தலைகளின் மேல் சுமரும்படியாக, இதோ, என் ஆசீர்வாதத்தை உங்கள் மேல் வைக்கிறேன்.

7 ஆதலால், என் ஆசீர்வாதத்தின் நிமித்தமாக நீங்கள் அழிந்து போகும்படி, கர்த்தராகிய தேவன் உங்களை விடமாட்டார்; ஆகையால் அவர் உங்கள் மேலும், உங்கள் சந்ததியார் மேலும் என்றென்றைக்குமாய் இரக்கமுள்ளவராய் இருப்பார்.

8 அந்தப்படியே, என் தகப்பன் லாமானுடைய குமாரரோடும், குமாரத்திகளோடும் பேசிமுடித்த பின்பு, லெமுவேலின் குமாரரும், குமாரத்திகளும் தமக்கு முன்பாகக் கொண்டுவரப்படும்படிச் செய்தார்.

9 அவர் அவர்களோடு பேசிச் சொன்னதாவது: இதோ, என் இரண்டாவது குமாரனின் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிற என் குமாரர், குமாரத்திகளே, இதோ, லாமானுடைய குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் கொடுத்த அதே ஆசீர்வாதத்தையே உங்களுக்கும் நான் கொடுக்கிறேன்; ஆகையால், நீங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுப் போவதில்லை; ஆனால் முடிவிலே உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

10 அந்தப்படியே, இதோ, என் தந்தை அவர்களிடம் பேசி முடித்தபொழுது, அவர் இஸ்மவேலின் குமாரர்களிடமும், ஆம், அவனுடைய சகல குடும்பத்தாரோடும் பேசினார்.

11 அவர் அவர்களிடம் பேசி முடித்த பின்பு, சாமிடம் சொன்னதாவது; நீயும் உன் சந்ததியும் பாக்கியவான்கள், ஏனெனில் உன் சகோதரனாகிய நேபியைப் போல, நீயும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வாய்; மேலும் உன் சந்ததி, அவன் சந்ததியோடு சேர்த்து எண்ணப்படும்; நீ உன் சகோதரனைப் போலவே இருப்பாய்; உன் சந்ததி, அவன் சந்ததியைப் போலவே இருக்கும்; நீ உன் சகல நாட்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

12 அந்தப்படியே, என் தந்தையாகிய லேகி, தமது இருதயத்தின் உணர்ச்சிகளின்படியும், அவருள் இருந்த கர்த்தருடைய ஆவியின்படியும், தம்முடைய குடும்பத்தார் எல்லோருடனும் பேசின பிறகு, முதுமையடைந்தார். அந்தப்படியே, அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டார்.

13 அந்தப்படியே, அவர் மரித்து, சில நாட்களுக்குள்ளாகவே, கர்த்தருடைய புத்திமதிகளினிமித்தம், லாமானும், லெமுவேலும், இஸ்மவேலின் குமாரர்களும், என்மேல் கோபமடைந்தார்கள்.

14 ஏனெனில் நேபியாகிய நான், அவருடைய வார்த்தையின்படியே, அவர்களிடம் பேசும்படி நெருக்கி ஏவப்பட்டேன்; ஏனெனில் நான் அநேக காரியங்களை அவர்களிடத்தில் பேசினேன்; என் தகப்பனும் தம் மரணத்திற்கு முன் அவ்வாறே செய்தார். சொல்லப்பட்டவைகளின் அநேகம், என்னுடைய மற்ற தகடுகளில் எழுதப்பட்டுள்ளன; ஏனெனில், அநேக வரலாற்றுப் பகுதிகள் என்னுடைய மற்ற தகடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன.

15 இவைகளின் மேல் நான் என் ஆத்துமத்துக்குரிய காரியங்களையும், பித்தளைத் தகடுகளின் மேல் பதிக்கப்பட்டிருக்கிற அநேக வேதவாக்கியங்களையும் எழுதுகிறேன்; ஏனெனில் என் ஆத்துமா வேதவாக்கியங்களில் களிகூருகிறது; என் உள்ளம் அவைகளைத் தியானித்து, என் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கும், அவர்கள் பிரயோஜனத்திற்குமாய் அவைகளை எழுதுகிறது.

16 இதோ, கர்த்தருக்குரியவைகளில் என் ஆத்துமா களிகூருகிறது; நான் கண்டும், கேட்டுமிருக்கிறவைகளைக் குறித்து என் இருதயம் எப்பொழுதும் தியானமாயிருக்கிறது.

17 அதுமட்டுமல்லாமல் அவருடைய பெரிதும், மகத்துவமுமான கிரியைகளை எனக்குக் காண்பிப்பதில், கர்த்தருடைய மகா நன்மை இருப்பினும், நிர்ப்பந்தமான மனுஷனாக இருக்கிறேனே, என்று என் இருதயம் ஓலமிடுகிறது. ஆம், என் மாம்சத்தினிமித்தம் என் இருதயம் வருத்தமடைகிறது; என் அக்கிரமங்களினிமித்தம் என் ஆத்துமா துக்கமடைகிறது.

18 என்னை எளிதாக வேதனைக்குள்ளாக்கக்கூடிய சோதனைகளினிமித்தமும், பாவங்களினிமித்தமும் நான் சூழப்பட்டிருக்கிறேன்.

19 நான் களிகூர விரும்புகையில், என் பாவங்களினிமித்தம், என் இருதயம் புலம்புகிறது; ஆயினும் நான் விசுவாசித்தவர் இன்னார் என்று அறிவேன்.

20 என் தேவன் எனக்கு ஆதரவாய் இருந்திருக்கிறார்; அவர் வனாந்தரத்தில் என் உபத்திரவங்களினூடாக என்னை வழிநடத்தினார்; அவர் மகா ஆழத்தின் தண்ணீர்களின் மேல் என்னைப் பாதுகாத்தார்.

21 என் மாம்சம் அழிந்து போகுமளவும், அவர் என்னைத் தம்முடைய அன்பினால் நிரப்பினார்.

22 என் சத்துருக்கள் எனக்கு முன் நடுங்கும்படிச்செய்து, அவர்களைத் தாறுமாறாக்கினார்.

23 இதோ, பகலிலே அவர் என் கூக்குரலைக் கேட்டார்; இராக்காலத்தில் அவருடைய தரிசனங்கள் மூலம், எனக்கு ஞானத்தைத் தந்தருளினார்.

24 நான், பகலிலே வல்லமையான ஜெபத்தினால் அவருக்குமுன் தைரியமாய்த் தரித்திருந்தேன். ஆம், நான் என் சத்தத்தை உயர அனுப்பினேன்; தூதர்கள் இறங்கிவந்து எனக்குப் பணிவிடை செய்தார்கள்.

25 அவருடைய ஆவியானவரின் சிறகுகளின் மேல், என் சரீரம் மிகவும் உயர்ந்த மலைகளின் மேலே கொண்டு செல்லப்பட்டது; மேலும் மனுஷருக்கு மிகவும் மகத்துவமுள்ளவைகளான, மகத்துவமான காரியங்களை என் கண்கள் கண்டன; ஆதலால் நான் அவைகளை எழுதக் கூடாதென்று தடை செய்யப்பட்டேன்.

26 பின்பு, அப்படியானால், நான் அநேக மகத்துவமான காரியங்களைக் கண்டிருப்பினும், கர்த்தர் மனுபுத்திரரிடத்தில் சித்தமிறங்கி மனுஷரை மிக இரக்கத்தோடு சந்தித்தாரெனில், ஏன் என் உபத்திரவங்களினிமித்தம், என் இருதயம் அழுது என் ஆத்துமா வருத்தத்தின் பள்ளத்தாக்கில் தங்கி வாசமாயிருந்து, என் மாம்சம் அழிந்துபோய், என் பெலன் குறைந்து போகவேண்டும்?

27 என் மாம்சத்தினிமித்தம் நான் ஏன் பாவத்திற்கு உட்படவேண்டும்? ஆம், சமாதானத்தை அழித்து, என் ஆத்துமாவைத் துன்புறுத்தும்படி, பொல்லாதவனுக்கு என் இருதயத்தில் இடம் கொடுக்கும்படிக்கு, ஏன் நான் சோதனைக்கு வழிகொடுக்க வேண்டும்? என் சத்துருவினிமித்தம் நான் ஏன் கோபப்படுகிறேன்?

28 என் ஆத்துமாவே, விழித்தெழு! பாவத்தில் இனிமேலும் தளர்ந்திராதே; என் இருதயமே, களிகூரு. என் ஆத்துமாவின் சத்துருவுக்கு இனிமேலும் இடங்கொடாதே.

29 என் சத்துருக்களினிமித்தம் மறுபடியும் கோபங்கொள்ளாதே; என் உபத்திரவங்களினிமித்தம் என் பெலனைக் குன்றிப்போகச் செய்யாதே.

30 என் இருதயமே, களிகூரு; உன் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டு, கர்த்தாவே, நான் உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்; ஆம், என் தேவனும் என் இரட்சிப்பின் கன்மலையுமானவரே, என் ஆத்துமா உம்மில் களிகூரும், என்று சொல்.

31 கர்த்தாவே, என் ஆத்துமாவை நீர் மீட்டுக் கொள்வீரா? என் சத்துருக்களின் கைகளிலிருந்து என்னை நீர் விடுவித்தருளுவீரா? பாவத்தின் தோற்றத்திலேயே, நான் நடுங்கும்படி என்னை நீர் செய்தருளுவீரா?

32 என் இருதயம் நொறுங்குண்டதாயும், என் ஆவி நருங்குண்டதாயும் இருப்பதினிமித்தம், பாதாளத்தின் வாசல்கள் எப்பொழுதும் எனக்கு முன்பாக மூடியிருப்பதாக! கர்த்தாவே, நான் தாழ்வான பள்ளத்தாக்கின் பாதைகளில் நடக்கும்படியாகவும், நான் சமமான வழிகளிலே இருக்கும்படியாகவும், எனக்கு முன்பாக நீதியின் வாசல்களை மூடாதிருப்பீரா!

33 கர்த்தாவே, உம்முடைய நீதியின் அங்கியால் என்னைப்போர்த்துவீரா! என் சத்துருக்களுக்கு முன்பாக நான் தப்புவதற்கு ஒரு வழியை ஆயத்தப்படுத்துவீரா! என் பாதைகளை எனக்கு முன்பாக நேர்ப்படுத்துவீரா; என் வழியில் இடறுவதற்கேதுவான தடையை வைக்காமல் இருப்பீரா! ஆனால் எனக்கு முன்பாக வழியைத் தடைபண்ணாதபடிக்கு, என் வழிகளை அடைக்காமல், என் சத்துருக்களின் வழிகளை அடைத்துப் போடும்.

34 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்; நான் உம்மில் என்றென்றைக்கும் நம்பிக்கையாயிருப்பேன்; நான் மாம்ச புயத்தில் என் நம்பிக்கையை வைக்கமாட்டேன்; ஏனெனில், மாம்ச புயத்தின் மேல் நம்பிக்கையை வைப்பவன் சபிக்கப்பட்டவன் என்பதை நான் அறிவேன்; ஆம், மனுஷன் மீது நம்பிக்கை வைத்தவனோ அல்லது மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொள்கிறவனோ, சபிக்கப்பட்டவன்.

35 ஆம், தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்குத் தேவன் தாராளமாய்க் கொடுப்பார் என்பதை நான் அறிவேன். ஆம், நான் தவறாய்க் கேட்காமலிருந்தால் என் தேவன் எனக்குக் கொடுப்பார்; ஆகையால் நான் என் சத்தத்தை உம்மைநோக்கி உயர்த்துகிறேன்; ஆம், என் தேவனும், நீதியின் கன்மலையுமானவரே, நான் உம்மிடத்தில் கூக்குரலிடுவேன்; இதோ, என் கன்மலையும், என்றுமுள்ள தேவனுமானவரே, என் சத்தம் என்றென்றைக்கும் உம்மை நோக்கி எழும்பும். ஆமென்.