வேதங்கள்
ஆல்மா 10


அதிகாரம் 10

மனாசே கோத்திரத்திலிருந்து லேகி வந்தான் – அமுலேக், தான் ஆல்மாவை பராமரிக்கவேண்டுமென்று தூதன் கட்டளையிட்டதை சொல்லுதல் – நீதிமான்களின் விண்ணப்பங்கள் ஜனங்களைத் தப்புவிக்கப்பண்ணுகிறது – அநீதியுள்ள நியாயசாஸ்திரிகளும், நியாயாதிபதிகளும் ஜனங்களின் அழிவிற்கு அஸ்திபாரமிடுதல். ஏறக்குறைய கி.மு. 82.

1 இப்பொழுது அம்மோனிகா தேசத்திலிருந்த ஜனங்களுக்கு அமுலேக் பிரசங்கித்த வார்த்தைகளாவன:

2 அமிநாதியின் சந்ததியான, இஸ்மவேலின் குமாரனாகிய, கித்தியோன்னா என்பவனின் குமாரனாகிய, அமுலேக் என்பவன் நானே, அதே அமிநாதி ஆலயத்தின் சுவரில் தேவனுடைய விரலால் எழுதப்பட்டவைகளின் அர்த்தத்தை மொழிபெயர்த்தவன்.

3 தன் சகோதரரால் எகிப்து தேசத்தினுள் விற்கப்பட்ட, யோசேப்பு என்பவனுடைய குமாரனாகிய, மனாசேயின் சந்ததியானும், எருசலேம் தேசத்திலிருந்து வெளிவந்தவனுமாகிய, லேகியினுடைய குமாரனாகிய, நேபியின் சந்ததியானே அமிநாதி.

4 இதோ, என்னை அறிந்தவர் மத்தியிலே நான் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன்; ஆம், இதோ, எனக்கு அநேக உறவினர்களும், சிநேகிதர்களும் உண்டு. என் கரங்களின் கடின உழைப்பினிமித்தம் அதிக ஐஸ்வரியத்தைப் பெற்றிருக்கிறேன்.

5 இவை அனைத்துமிருந்தும், நான் கர்த்தருடைய அதிக வழிகளையும், இரகசியங்களையும், அதிசயமான வல்லமையையும் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இவைகளைக்குறித்து நான் அதிகமாய் அறியவில்லை என்று சொன்னேன். ஆனால் இதோ, நான் பிழை செய்தேன். ஏனெனில் நான் அதிகமான அவரது இரகசியங்களையும், அவரது அதிசயமான வல்லமையையும் கண்டிருக்கிறேன். ஆம், இந்த ஜனத்தின் வாழ்க்கையை பாதுகாத்ததிலும் கூட.

6 நான் பலமுறை அழைக்கப்பட்டிருப்பினும், கேட்காதவனாய் என் இருதயத்தைக் கடினப்படுத்தினேன்; ஆதலால் இவைகளைப்பற்றி நான் அறிந்திருந்தாலும், அவைகளை அறியமாட்டேன். என் இருதயத்தின் துன்மார்க்கத்திலே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் பத்தாம் வருஷத்தில், ஏழாவது மாதத்தின் நான்காம் நாள் வரைக்கும் தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்து வந்தேன்.

7 நான் மிக நெருங்கிய ஓர் உறவினரைப் பார்க்க பிரயாணம் பண்ணுகையில், கர்த்தருடைய தூதன் என்னிடத்தில் தோன்றி, அமுலேக்கே நீ கர்த்தருடைய தீர்க்கதரிசியொருவரை போஷிக்கவேண்டியதிருப்பதால் உன் சொந்த வீட்டிற்கு திரும்பிப்போ, ஆம், அவன் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஓர் பரிசுத்த மனுஷன்; அவன் இந்த ஜனங்களின் பாவங்களுக்காய் அநேக நாட்கள் உபவாசமிருந்ததால், அவன் பசியாயிருக்கிறான். நீ உன் வீட்டிலே அவனை ஏற்றுக்கொண்டு போஷிப்பாயாக. அவன் உன்னையும், உன் வீட்டாரையும் ஆசீர்வதிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதம் உன் மேலும், உன் வீட்டார் மேலும் தங்கும், என்றான்.

8 அந்தப்படியே, நான் தூதனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வீட்டுக்குத் திரும்பினேன். நான் அப்படி போய்கொண்டிருக்கும்போது, உன் வீட்டினுள் ஏற்றுக்கொள்வாயாக, இதோ உன்னிடத்தில் தேவனுடைய காரியங்களைப் பேசினவன் அவனே, என்று தூதன் சொன்ன மனுஷனைக் கண்டேன்.

9 தூதன் என்னை நோக்கி, அவன் பரிசுத்தவான் என்றான்; தேவனுடைய தூதன் அப்படிச் சொன்னதினிமித்தம் அவன் பரிசுத்தவான் என்று அறிவேன்.

10 பின்னும் அவன் சாட்சி கொடுத்த அனைத்தும் சத்தியமானவை, என்று அறிந்திருக்கிறேன்; அவர் தம் தூதனை அனுப்பி எனக்கு இவைகளை வெளிப்படுத்தியதும் உண்மை, என்று கர்த்தர் ஜீவிப்பதால் உங்களிடத்தில் சொல்லுகிறேன்; இந்த ஆல்மா என் வீட்டிலே வாசம்பண்ணினபோது இவைகளை அவன் செய்தான்.

11 இதோ, அவன் என் வீட்டையும், என்னையும், என் ஸ்திரீகளையும், என் பிள்ளைகளையும், என் தகப்பனையும், என் உறவினர்களையும், ஆம், எனது உற்றார் அனைவரையும் ஆசீர்வதித்தான். அவன் பேசின வார்த்தைகளின்படியே கர்த்தருடைய ஆசீர்வாதம் எங்கள் மீது தங்கிற்று.

12 இப்பொழுதும் அமுலேக் இந்த வார்த்தைகளை பேசியபோது, ஜனங்களைக் குற்றவாளிகளெனத் தீர்த்த காரியங்களையும், அவர்களுக்குள் இருக்கிற தீர்க்கதரிசன ஆவியின்படியே வரப்போகிறவைகளையும் குறித்து சாட்சி கொடுக்க, ஒன்றுக்கும் அதிகமான சாட்சிகள் இருப்பதைக் கண்டு, அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

13 இருப்பினும் அவர்களில் சிலர் தங்களுடைய தந்திர உபாயங்களைக்கொண்டு அவர்களை அவர்களின் வார்த்தைகளாலே பிடித்து, அவர்களுக்கு விரோதமாய் சாட்சிகளை கண்டுபிடிக்கும்படிக்கும், சட்டத்திற்கேற்ப தங்களுடைய நியாயாதிபதிகள் அவர்களை நியாயந்தீர்க்கும்படி ஒப்படைக்கவும், அவர்களுக்கு விரோதமாய் தோன்றி அல்லது சாட்சி சொல்ல, அவர்கள் கொல்லப்படவோ சிறையில் தள்ளப்படவோ வேண்டி, அவர்களை வினவ நினைத்தார்கள்.

14 விசாரணை சமயங்களிலேயும், நியாயாதிபதிகளுக்கு முன்பாக ஜனங்களின் குற்றங்களுக்குத் தக்கதாக விசாரணை நடைபெறும்போதும், சட்டத்தை நிலை நிறுத்த ஜனங்களாலே அமர்த்தப்பட்டவர்கள், அல்லது நியமனம் செய்யப்பட்டவர்களுமாகிய நியாயசாஸ்திரிகளே அவர்களை நிர்மூலமாக்க வகைதேடியவர்கள்.

15 இந்த நியாயசாஸ்திரிகள் தங்களுடைய பணியிலே திறமையானோராய் விளங்க சாத்தியமாக்க, மனுஷனுடைய திறமைகளையும், தந்திரங்களையும் அறிந்திருந்தார்கள்.

16 அந்தப்படியே, அமுலேக்கை அவன் பேசவிருக்கிற வார்த்தைகளுக்கு முரண்பாடாய் அல்லது மாற்றி ஏதேனும் சொல்லவைக்க, அவனிடம் வினவத் தொடங்கினார்கள்.

17 தங்களுடைய உபாயங்களை அமுலேக் அறிந்திருந்தான், என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆனால், அந்தப்படியே, அவர்கள் அவனை வினவத் தொடங்கியபோது, அவர்களுடைய எண்ணங்களை அவன் உணர்ந்தவனாய் அவர்களை நோக்கி: துன்மார்க்கரும் மாறுபாடுமுள்ள தலைமுறையே, நியாயசாஸ்திரிகளே, மாய்மாலக்காரரே, நீங்கள் பிசாசின் அஸ்திபாரத்தைப் போடுகிறீர்கள். ஏனெனில் தேவனுடைய பரிசுத்தவான்களை பிடிக்க கண்ணிகளையும், வலைகளையும் விரிக்கிறீர்கள்.

18 நீங்கள் நீதிமானின் வழிகளை மாறுபாடுள்ளதாக்கி இந்த ஜனம் முழுவதுமாய் அழிந்து போகும்படிக்கு உங்கள் சிரசுகளிலே தேவனுடைய உக்கிரத்தை வருவிக்க திட்டம் தீட்டுகிறீர்கள்.

19 நம்முடைய கடைசி ராஜாவாகிய மோசியா தனது ராஜ்யத்தை ஒப்புவிக்க இருந்தபோது தன் ராஜ்யத்தை ஒப்புவிக்க எவரும் இல்லாமையினால் ஜனங்கள் அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப ஆளப்படவேண்டுமென்று, ஆம், அவர் சரியாய் சொன்னார். ஆம், அந்த ஜனங்களின் குரல் தங்கள் அக்கிரமத்தைத் தெரிந்துகொள்ளும் சமயம் வருமானால், அதாவது இந்த ஜனம் மீறுதலுக்குள்விழும் நேரம் வருமானால், அவர்கள் அழிவிற்கு ஏற்றவர்களாய் இருப்பார்கள், என்று அவன் சரியாய் சொல்லியிருக்கிறானே.

20 இப்பொழுதும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தர் உங்கள் அக்கிரமங்களை நன்றாகவே நியாயந்தீர்க்கிறார். அவர் தம்முடைய தூதர்களின் சத்தத்தினாலே, இந்த ஜனங்களுக்கு மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்திலிருக்கிறது, என்று நன்றாகவே கூக்குரலிடுகிறார்.

21 ஆம், அவர் தமது தூதர்களின் சத்தத்தினாலே: நான் என் ஜனத்திற்குள்ளே நேர்மையையும், நியாயத்தையும் என் கைகளில்கொண்டு வருவேன், என்று அவர் நன்றாகவே கூக்குரலிடுகிறார்.

22 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இத்தேசத்திலே இப்பொழுது ஜீவிக்கிற நீதிமான்களின் ஜெபங்கள் இல்லையெனில், நோவாவின் காலத்திலே ஜனங்களை அழித்துப்போட்ட அந்த பிரளயம் போல் அல்லாமல், ஆனால் நீங்கள் பஞ்சத்தாலும் கொள்ளை நோயினாலும், பட்டயத்தாலும் வரும் பூரண அழிவினால் விசாரிக்கப்படுவீர்கள்.

23 ஆனால் நீதிமான்களுடைய ஜெபங்களாலே நீங்கள் தப்புவிக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஆகையால் நீங்கள் உங்கள் மத்தியிலிருந்து நீதிமான்களை புறம்பே தள்ளுவீர்களெனில், பின்னும் கர்த்தர் தம் புயத்தை நீட்டாமலிரார்; ஆனால் அவர் தம்முடைய உக்கிர கோபத்தோடு உங்களுக்கு விரோதமாய் வருவார்; நீங்கள் மனந்திரும்பாவிடில் பஞ்சத்தினாலும், கொள்ளைநோய்களாலும், பட்டயத்தினாலும், அடிக்கப்படும் காலம் சமீபத்திலிருக்கிறது.

24 இப்பொழுதும், அந்தப்படியே, ஜனங்கள் அமுலேக்கின்மேல் கோபம்கொண்டு, இந்த மனுஷன் நம்முடைய நியாயமான சட்டங்களையும் நாம் தெரிந்துகொண்ட ஞானமிக்க நியாயசாஸ்திரிகளையும் தூஷிக்கிறான், என்று கூக்குரலிட்டார்கள்.

25 ஆனால் அமுலேக் தன் கரத்தை நீட்டி அவர்களை நோக்கி, அதி சத்தமாய்: துன்மார்க்கமும், மாறுபாடுமுள்ள தலைமுறையே, உங்களுடைய இருதயங்களை சாத்தான் ஏன் இறுகப்பிடித்துக்கொண்டான்? பேசப்பட்ட வசனங்களின் சத்தியத்தை நீங்கள் அறியாதிருக்கும்படி அவன் உங்கள் மேல் அதிகாரம்கொண்டு, உங்கள் கண்களை குருடாக்கும்படி ஏன் உங்களை அவனுக்கு உடன்படுத்துகிறீர்கள்?

26 இதோ, நான் உங்களுடைய சட்டத்திற்கு விரோதமாகவா சாட்சி பகர்ந்தேன்? நீங்கள் புரிந்துகொள்ளவில்லை, நான் உங்களுடைய சட்டத்திற்கு எதிராய் பேசினேன், என்கிறீர்கள். நான் உங்கள் சட்டத்தை எதிர்த்துப் பேசாமல், உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிற உங்களுடைய சட்டத்தை மேன்மை பாராட்டியே பேசினேன்;

27 இப்பொழுது இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய நியாயசாஸ்திரிகள் மற்றும் நியாயாதிபதிகளுடைய அநீதியாலே இந்த ஜனங்களின் அழிவுக்குரிய அஸ்திபாரம் போடப்பட்டு வருகிறது.

28 இப்பொழுதும், அந்தப்படியே, அமுலேக் இவ்வார்த்தைகளை பேசியபோது ஜனங்கள் அவனுக்கு விரோதமாய் கூக்குரலிட்டு, இப்பொழுது இவன் பிசாசின் பிள்ளை என்று அறிவோம். ஏனெனில் நம்மிடம் பொய்யுரைத்திருக்கிறான். ஏனெனில் நம்முடைய சட்டத்திற்கு விரோதமாய் பேசியிருக்கிறான். இப்போது அதற்கு எதிராய் பேசவில்லையென்று சொல்லுகிறான்.

29 பின்னும் இவன் நம்முடைய நியாயசாஸ்திரிகளையும் நியாயாதிபதிகளையும் தூஷித்தான்.

30 அந்தப்படியே, அவனுக்கு விரோதமாக இந்தக் காரியங்களை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென்று, நியாயசாஸ்திரிகள் அவர்களுடைய இருதயத்தில் வைத்தார்கள்.

31 அவர்களுள் சீஸ்ரம் என்று பெயர்கொண்ட ஒருவனும் இருந்தான். இவன் அவர்களில் மிகவும் திறமைசாலியாயும், ஜனங்களுக்குள்ளே அதிக காரியங்களை புரிபவனான, இவனே அமுலேக்கையும் ஆல்மாவையும் குற்றம் சாட்டுவதில் முதலாவதாய் இருந்தவன்.

32 ஆதாயம் பெறுவதே இந்த நியாயசாஸ்திரிகளின் குறிக்கோள்; தங்களுடைய வேலைகளுக்குத் தக்கதாக இவர்கள் ஆதாயம் பெற்றுக்கொண்டார்கள்.