தேவ வசனத்துக்காக மோசியாவின் குமாரர்கள் ராஜ்யங்களுக்குரிய தங்கள் உரிமைகளைப் புறக்கணித்து, லாமானியரிடம் பிரசங்கிக்க நேபியின் தேசத்திற்குப் போனார்கள், அவர்கள் பட்ட கஷ்டங்களும் விடுவிப்பும் – ஆல்மாவின் பதிவேட்டின் படியானது.
அதிகாரங்கள் 17 முதல் 27 உள்ளிட்டவை.
அதிகாரம் 17
மோசியாவின் குமாரர்கள் தீர்க்கதரிசன மற்றும் வெளிப்படுத்தலின் ஆவியை பெற்றிருத்தல் – அவர்கள் லாமானியருக்கு வசனத்தை அறிவிக்க பற்பல வழிகளில் செல்லுதல் – இஸ்மவேலின் தேசத்திற்கு அம்மோன் போய் லாமோனி ராஜாவின் வேலைக்காரனாகுதல் – ராஜாவின் மந்தைகளை காப்பாற்றி, சிபஸ் தண்ணீரண்டையில் அம்மோன், ராஜாவின் விரோதிகளை வெட்டிப்போடுதல். வசனங்கள் 1–3. ஏறக்குறைய கி,மு. 77; வசனம் 4. ஏறக்குறைய கி,மு. 91–77; வசனங்கள் 5–39. ஏறக்குறைய கி.மு. 91.
1 இப்பொழுதும், அந்தப்படியே, கிதியோன் தேசத்திலிருந்து தெற்கு நோக்கியும், மேன்தி தேசத்திலிருந்து தூரமாயும் ஆல்மா பிரயாணம் பண்ணுகையில், இதோ, அவன் ஆச்சரியம் அடையத்தக்கதாக சாரகெம்லா தேசத்தை நோக்கி பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்த மோசியாவின் குமாரர்களைச் சந்தித்தான்.
2 ஆல்மாவுக்கு முதலாந்தரம் தூதன் தரிசனமானபோது, அவனுடனே மோசியாவின் குமாரர்களாகிய இவர்களும் இருந்தார்கள்; ஆகவே தன் சகோதரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தான்; அவர்கள் கர்த்தரில் இன்னும் தன் சகோதரர்களாயிருப்பது, அவனது ஆனந்தத்தை பெருகப்பண்ணிற்று. அவர்கள் மிகுந்த விவேகிகளாயும், தேவனுடைய வசனத்தை அறியும்பொருட்டு, வேதங்களை கருத்தாய் ஆராய்ந்தவர்களாயும் இருந்ததினிமித்தம், அவர்கள் சத்தியத்தின் ஞானத்தில் பெலன்கொண்டிருந்தார்கள்.
3 இது மாத்திரமல்ல; அவர்கள் அதிகமாய் ஜெபித்து உபவாசித்தார்கள்; ஆகவே அவர்கள் தீர்க்கதரிசன ஆவியையும் வெளிப்படுத்துதலின் ஆவியையும் பெற்றிருந்தார்கள். அவர்கள் போதித்தபோது, தேவனுடைய வல்லமையோடும் அதிகாரத்தோடும் போதித்தார்கள்.
4 அவர்கள் லாமானியருக்குள்ளே பதினான்கு வருஷமளவும் தேவ வசனத்தைப் போதித்து, அதிகமானோரை சத்திய ஞானத்திற்குள் கொண்டு வருவதில் ஜெயம்கொண்டார்கள்; ஆம், அவர்களுடைய வார்த்தைகளின் வல்லமையால், அநேகர் தேவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளவும், அவருக்கு முன்பாக தங்கள் பாவங்களை அறிக்கைபண்ணவும், அவருடைய பீடத்திற்கு முன்பாக கொண்டு வரப்பட்டார்கள்.
5 அவர்களுடைய பிரயாணங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிலவியது. அவர்கள் பட்டினியாலும், விடாய்த்தும், சோர்ந்துபோயுமிருந்து, சரீரத்திலும் மனதிலும் அதிகமாய் பாடனுபவித்து, உபத்திரவப்பட்டார்கள், அவர்கள் ஆவியிலும் மிகுந்த பிரயாசப்பட்டார்கள்.
6 அவர்களுடைய பிரயாணங்களாவன: தங்களுடைய தகப்பனாகிய மோசியாவை விட்டுப் பிரிந்து, நியாயாதிபதிகளின் முதலாம் வருஷத்தில் தங்களுடைய தகப்பன் தங்கள்மீது சூட்ட விரும்பின ராஜ்யபாரத்தை புறக்கணித்தார்கள், இதுவே ஜனங்களுடைய விருப்பமாயும் இருந்தது.
7 ஆயினும் வனாந்தரத்தில் சஞ்சரிக்கும்போது, தங்களுடைய உணவைச் சேகரிக்க தங்களுடைய பட்டயங்களையும், ஈட்டிகளையும் விற்களையும், அம்புகளையும், கவண்களையும் எடுத்துக்கொண்டு சாரகெம்லா தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.
8 இப்படியாய் நேபியின் தேசத்திற்குப் போய், லாமானியருக்கு தேவ வார்த்தையைப் பிரசங்கிக்க தாங்கள் தெரிந்துகொண்டவர்களுடனே, வனாந்தரத்தினுள்ளே புறப்பட்டுப்போனார்கள்.
9 அந்தப்படியே, அவர்கள் அநேக நாட்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணினார்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய லாமானியருக்கு, அவர்களுடைய தகப்பன்மார்களின் பாரம்பரியம் முறையற்றதும் துன்மார்க்கமுமானது என்று உணர்த்தவும், சத்தியஞானத்திற்கு அவர்களைக் கொண்டுவரக்கூடுமேயானால், தாங்கள் தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாய் விளங்க, கர்த்தர் தம் ஆவியானவரின் ஓர் பங்கை தங்களுக்கு அருளி, தங்களிடம் அதை தரித்திருக்கச்செய்யும்படி அதிகமாய் உபவாசித்து ஜெபித்தார்கள்.
10 அந்தப்படியே, கர்த்தர் தம் ஆவியானவராலே அவர்களை அணுகி அவர்களை நோக்கி: திடன்கொள்ளுங்கள், என்றார். அவர்களும் ஆறுதலடைந்தார்கள்.
11 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: உங்கள் சகோதரராகிய லாமானியரிடத்தில் போய், என் வார்த்தையை நிலைவரப்படுத்துங்கள்; நீங்கள் என்னில் உதாரணங்களாக, அவர்களுக்கு இருக்கும்பொருட்டு, நீடிய சாந்தமாயும், உபத்திரவத்தில் பொறுமையாயும் இருங்கள். அநேக ஆத்துமாக்கள் இரட்சிப்புக்குள்ளாக வர, என் கரங்களில் உங்களை ஒரு கருவியாக்குவேன், என்றார்.
12 அந்தப்படியே, மோசியாவின் குமாரர் மற்றும் அவர்களுடனே இருந்தவர்களின் இருதயங்களும், தேவ வசனத்தை லாமானியருக்கு அறிவிக்க அவர்களுக்குள்ளே போக திடன்கொண்டன.
13 அந்தப்படியே, லாமானிய தேசத்தின் எல்லைகளை வந்தடைந்தபோது அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து சென்று, தங்கள் அறுவடைகளுக்குப் பின்பு மறுபடியும் சந்திப்போம் என்று கர்த்தரில் நம்பிக்கை வைத்தார்கள்; ஏனெனில் அவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வேலை மகத்தானது என்று கருதினார்கள்.
14 மூர்க்கமாயும், கடினமாயும், கொடிய ஜனங்களுமாயிருந்து, நேபியர்களைக் கொலைசெய்வதிலும், களவாடுவதிலும், சூறையாடுவதிலும், களிகூர்ந்து, தங்கள் இருதயங்களை ஐஸ்வரியங்கள்மேல், குறிப்பாக பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள் ஆகியவைகள் மேல் வைத்து, அவைகளைப் பெற தங்கள் கைகளினால் பிரயாசப்படாமல், கொலை செய்வதினாலும், சூறையாடுவதினாலும் அவைகளைப் பெற்றுக்கொள்ள வகை தேடுகிற ஜனங்களுக்கு தேவ வசனத்தை பிரசங்கிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி, உண்மையாகவே பெரியதேயாகும்.
15 இப்படியாக அவர்கள் சோம்பேறித்தனமுள்ள ஜனமாயும், அவர்களில் அநேகர் விக்கிரகங்களை வணங்குபவர்களாயுமிருந்தார்கள். அவர்களுடைய பிதாக்களின் பாரம்பரியங்களினிமித்தம் தேவனுடைய சாபம் அவர்கள்மீது விழுந்தது; இருப்பினும் அவர்கள் மனந்திரும்புதலின் நிபந்தனைகளுக்கேற்ப கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்குத் தரப்பட்டது.
16 ஆகவே, அவர்களை ஒருவேளை மனந்திரும்புதலுக்குள்ளாகவும், மீட்பின் திட்டத்தை அறியவும் கொண்டுவரும் நோக்கத்திற்காகவே, மோசியாவின் குமாரர்கள் அந்த வேலையை மேற்கொண்டார்கள்.
17 ஆதலால் அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து, அவனவன் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த தேவ வசனம் மற்றும் வல்லமையின்படியே, ஒவ்வொருவனும் தனித்தனியே, அவர்களுக்குள்ளே போனார்கள்.
18 அம்மோன் அவர்களுக்கு தலைவனாய் இருந்து, அல்லது பணிவிடை செய்து, அவர்களுக்கு தேவ வசனத்தை கற்பித்து, அல்லது அவர்களுடைய தகுதிக்குத் தக்கதாய் அவர்களை ஆசீர்வதித்த பின்பு, அவன் அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றான்; அவர்கள் இவ்விதமாக தேசமெங்கிலும் பற்பல பிரயாணங்களை மேற்கொண்டனர்.
19 லாமானியர்களாய் மாறிப்போன, இஸ்மவேலின் புத்திரர்களுடையதாக அழைக்கப்பட்ட, இஸ்மவேலின் தேசத்திற்கு அம்மோன் போனான்.
20 அம்மோன் இஸ்மவேலின் தேசத்தில் பிரவேசித்தபோது, லாமானியர் அவனைப் பிடித்து கட்டிப் போட்டார்கள். ஏனெனில் தங்கள் கைகளினுள் அகப்படும் நேபியர் எல்லோரையும் கட்டி ராஜ சமுகத்திற்கு அழைத்துக்கொண்டு போவது அவர்களின் வழக்கமாய் இருந்தது. இப்படியாக அவர்களைக் கொலை செய்வதும், சிறைத்தனத்தில் வைப்பதும், சிறையினுள்ளே போடுவதும், அல்லது ராஜாவினுடைய சித்தம் மற்றும் விருப்பத்தின்படி தேசத்திற்கு வெளியே துரத்தப்பட்டனர்.
21 இவ்விதமாக அம்மோன், இஸ்மவேல் தேசத்தின் ராஜாவிற்கு முன்னே தூக்கிக்கொண்டு போகப்பட்டான்; அவன் பெயர் லாமோனி என்பதாகும்; அவன் இஸ்மவேலின் சந்ததியாய் இருந்தான்.
22 தேசத்தில் லாமானியர்களிடையே, அல்லது தன் ஜனத்திடையே வாசம் செய்வது அம்மோனுக்கு இஷ்டமா, என்று ராஜா விசாரித்தான்.
23 அம்மோன் அவனை நோக்கி: ஆம், நான் சாகும் நாள் வரைக்கும், இந்த ஜனத்திற்குள்ளே வாசமாயிருக்க வாஞ்சையாயிருக்கிறேன், என்றான்.
24 அந்தப்படியே, லாமோனி ராஜாவிற்கு அம்மோன் மீது பிரியமுண்டாகி, அவன் கட்டுக்கள் அவிழ்க்கப்படும்படிச் செய்தான்; அவன் தன் குமாரத்திகளில் ஒருத்தியை அம்மோன் மனைவியாகக் கொள்ள வேண்டுமென்று விருப்பப்பட்டான்.
25 ஆனால் அம்மோன் அவனை நோக்கி: இல்லை, ஆனால் நான் உமது ஊழியக்காரனாய் இருப்பேன், என்றான். லாமோனி ராஜாவிற்கு அம்மோன், வேலைக்காரனானான். அந்தப்படியே, அவன் லாமானியரின் வழக்கப்படி லாமோனியின் மந்தைகளைக் காக்கும்படி மற்ற வேலையாட்களுடனே அமர்த்தப்பட்டான்.
26 அவன் ராஜாவின் சேவையில் மூன்று நாட்கள் இருந்த பின்னர், சிபஸ் தண்ணீர் என்று அழைக்கப்பட்ட தண்ணீர்களண்டைக்கு தங்கள் மந்தைகளை நடத்திச் சென்ற லாமானிய வேலையாட்களுடன் அவனும் இருந்தான். லாமானியர் அனைவரும் தங்கள் மந்தைகள் தண்ணீர் குடிக்கும்படி அவைகளை அங்கே நடத்திச் சென்றார்கள்.
27 ஆகவே, அம்மோனும் ராஜாவின் வேலையாட்களும் இந்த தண்ணீர்களண்டைக்கு தங்கள் மந்தைகளை நடத்திக் கொண்டு போகும்போது, இதோ, தண்ணீரண்டை தங்கள் மந்தைகளுடன் வந்த லாமானியரில் சிலர், அம்மோனின் மந்தையையும், ராஜாவினுடைய வேலையாட்களின் மந்தைகளையும் சிதறடித்துப்போட்டார்கள். அவர்கள் அவைகளை பல வழியாய் ஓடும்படி சிதறடித்தார்கள்.
28 ராஜாவின் வேலையாட்கள் முணுமுணுத்துச் சொன்னதாவது: இந்த மனுஷர்களின் பொல்லாப்பினாலே நமது சகோதரருடைய மந்தைகள் சிதறடிக்கப்பட்டுப்போய், அதினிமித்தம் அவர்களை ராஜா கொன்றுபோட்டதைப்போல, இப்போது நம்மையும் கொன்றுபோடுவார். அவர்கள் மிகுதியாய் அழுது சொன்னதாவது: இதோ, நம்முடைய மந்தைகள் சிதறடிக்கப்பட்டுப்போயின.
29 தாங்கள் கொல்லப்படுவோமோ என்ற பயத்தினால் அவர்கள் அழுதார்கள். இப்போது அம்மோன் இதைக் கண்டபோது அவன் இருதயம் அவனுள் சந்தோஷத்தினால் பூரித்தது; ஏனெனில் அவன் சொன்னான், நான் ராஜாவிற்கென்று திரும்பவும் இந்த மந்தைகளைச் சேர்ப்பதில் என்னுள்ளே இருக்கிற வல்லமையை, அல்லது என் வல்லமையை, என் உடன்வேலையாட்களுக்கு தெரியப்பண்ணி, அவர்களுடைய உள்ளங்களை ஆதாயப்படுத்தி, என் வார்த்தைகளை விசுவாசிக்க அவர்களை வழிநடத்துவேன்.
30 இப்பொழுது அம்மோன் தன் சகோதரர் என்று சொன்னவர்களுடைய உபத்திரவங்களைக் கண்டபோது, இவைகளே அவனுடைய சிந்தனையாயிருந்தது.
31 அந்தப்படியே, அவன் தன் வார்த்தைகளாலே அவர்களை இச்சகப்படுத்திச் சொன்னதாவது: என் சகோதரரே திடன் கொள்ளுங்கள், நாம் மந்தைகளைத் தேடிப்போய் அவைகளை ஒன்றாய்க்கூட்டி, திரும்பவும் அவைகளை தண்ணீருள்ள ஸ்தலத்திற்குக் கொண்டு வருவோம்; இப்படியாய் ராஜாவிற்கென்று மந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வோம். அவர் நம்மைக் கொன்று போடுவதில்லை, என்றான்.
32 அந்தப்படியே, அவர்கள் மந்தைகளைத் தேடிப்போனார்கள். அவர்கள் அம்மோனைப் பின்பற்றி அதிக துரிதமாய்ப் போய், ராஜாவின் மந்தைகளுக்கு முன்னிட்டுப்போய் திரும்பவும் அவைகளை தண்ணீருள்ள ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி ஒன்றாய் திரட்டினார்கள்.
33 அந்த மனுஷர் மீண்டும் அவர்களுடைய மந்தைகளைச் சிதறடிக்க நின்றார்கள். ஆனால் அம்மோன் தன் சகோதரரை நோக்கி: மந்தைகள் சிதறி ஓடாதபடிக்கு அதைச் சுற்றியும் நில்லுங்கள், நான் போய் நம்முடைய மந்தைகளை சிதறடிக்கிற அந்த மனுஷருடன் சண்டையிட்டு வருகிறேன், என்றான்.
34 ஆதலால் அவர்கள் அம்மோன் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அவன் போய் சிபஸ் தண்ணீர்களண்டையில் நின்றவர்களோடே சண்டைபோட நின்றான்; அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் இல்லை.
35 ஆகவே, அவர்கள் அம்மோனுக்குப் பயப்படாமல், தங்கள் மனுஷரில் ஒருவன் அவனைத் தங்கள் விருப்பத்தின்படியே கொன்றுபோடக்கூடும், என்று எண்ணியிருந்தார்கள். அவர்களோ, கர்த்தர் மோசியாவினிடத்தில் பண்ணின வாக்குத்தத்தமான, அவர்களுடைய கைகளுக்கு உன் புத்திரரைத் தப்புவிப்பேன், என்பதை அறியாதிருந்தார்கள்; கர்த்தரைப்பற்றியும் அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை; ஆகவே அவர்கள் தங்கள் சகோதரரின் சங்காரத்தில் களித்திருந்தார்கள்; இந்த நோக்கத்திற்காகவே அவர்கள் ராஜாவின் மந்தைகளை சிதறடிக்க நின்று கொண்டிருந்தார்கள்.
36 அம்மோன் நின்றுகொண்டு அவர்கள்மீது தன் கவணைக்கொண்டு கற்களை எறிந்தான்; ஆம், பலத்த வல்லமையுடனே அவர்கள் மீது கற்களை எறிந்தான்; இப்படியாக அவன் அவர்களில் சிலரை கொன்றுபோட்டான். அவர்கள் இவன் வல்லமையைக் கண்டு திகைத்துப் போனார்கள். ஆயினும், அவர்கள் தங்கள் சகோதரர் கொன்று போடப்பட்டதால் கோபமடைந்து அவன் மடிந்து போகவேண்டுமென தீர்மானித்தார்கள்; ஆகவே, அவனைத் தங்கள் கற்களால் அடிக்க முடியாது, என்று அறிந்து, அவனைக் கொன்றுபோட தடிகளோடு வந்தார்கள்.
37 இதோ அம்மோனை மடங்கடிக்க தன் தடியை உயர்த்திய, ஒவ்வொருவனுடைய கையையும், அவன் தன் பட்டயத்தினால் வெட்டிப் போட்டான்; அவன் அவர்களுடைய கைகளை தன் பட்டயத்தின் கருக்கினால் வெட்டிப்போட்டு அவர்களின் அடிகளை எதிர்த்து நின்றான். அவர்கள் திகைத்துப்போய் அவனுக்கு முன்பிருந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆம், அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களில்லை, இவன் தன் புயத்தின் வல்லமையால் அவர்களை ஓடப்பண்ணினான்.
38 அவர்களில் ஆறுபேர் கவணினால் மடிந்து போனார்கள். அவன் அவர்களுடைய தலைவனையேயன்றி வேறொருவரையும் தன் பட்டயத்தினால் கொன்று போடவில்லை; அவன் தனக்கு விரோதமாய் உயர்த்தப்பட்ட அவர்களுடைய கைகளனைத்தையும் வெட்டிப்போட்டான். அவர்கள் குறைவானவர்கள் இல்லை.
39 அவன் அவர்களைத் தூரமாய்த் துரத்திவிட்ட பின்பு திரும்பினான். அவர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு தண்ணீர் காட்டி ராஜாவின் புல்வெளிக்கு அவைகளைத் திரும்பக் கொண்டு போனார்கள். சிலர் அம்மோனைக் கொன்றுபோட வகைதேடின, அவனால் வெட்டப்பட்ட அவர்களுடைய கைகளை தூக்கிக் கொண்டு ராஜாவினிடத்தில் போனார்கள். அவர்கள் செய்த காரியங்களுக்கு சாட்சியமாக அவைகளை ராஜாவினிடத்தில் காண்பித்தார்கள்.