வேதங்கள்
ஆல்மா 19


அதிகாரம் 19

லாமோனி நித்திய ஜீவனுடைய வெளிச்சத்தைப் பெறுதல், மீட்பரைக் காணுதல் – அவனுடைய குடும்பத்தார் கனநித்திரையில் ஆழ்தலும் அநேகர் தூதர்களைக் காணுதலும் – அம்மோன் அற்புதமாக பாதுகாக்கப்படுதல் – அவன் அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்து, அவர்களுக்குள்ளே ஓர் சபையை நிறுவுதல். ஏறக்குறைய கி.மு. 90.

1 அந்தப்படியே, இரண்டு இராப்பகலுக்குப் பின்னர், அவர்கள் அவனுடைய சரீரத்தைக் கொண்டுபோய் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ண தாங்கள் வெட்டிய கல்லறையில், அடக்கம்பண்ண இருந்தார்கள்.

2 இப்பொழுது அம்மோனுக்கு உண்டான கீர்த்தியை ராஜஸ்திரீ கேள்விப்பட்டதால், அவனைத் தன்னிடத்தே அழைத்துவர விரும்பி ஆட்களை அனுப்பினாள்.

3 அந்தப்படியே, அம்மோன் தனக்கு கட்டளையிடப்பட்டபடியே ராஜஸ்திரீயிடத்தே போய் தான் செய்யவேண்டுமென அவள் விரும்புவதை அறிய வாஞ்சித்தான்.

4 அதற்கு அவள் அவனை நோக்கி: நீர் பரிசுத்த தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், அவருடைய நாமத்தில் அநேக பராக்கிரமமான கிரியைகளைச் செய்ய உமக்கு வல்லமையுண்டு என்றும், என் புருஷனின் வேலையாட்கள் எனக்குத் தெரியப் பண்ணினார்கள்.

5 ஆகையால், இப்படியிருக்குமாயின் நீர் போய் என் புருஷனைப் பார்க்க வேண்டுமென மனதாயிருக்கிறேன். ஏனெனில் அவர் இரண்டு இராப்பகலாய் படுத்த படுக்கையாயிருக்கிறார். சிலர் அவர் மரித்துப்போகவில்லை என்றும், மற்ற சிலர் அவர் மரித்துப்போனார் என்றும், அவர் உடல் நாற்றமெடுக்கிறதென்றும், கல்லறையிலே அடக்கம் பண்ணவேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்; ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அவர் நாறவில்லை, என்றாள்.

6 இப்பொழுது, அம்மோன் வாஞ்சித்திருந்ததுவும் இதுவே. ஏனெனில், தேவனுடைய வல்லமையால் லாமோனி ராஜா ஆட்கொள்ளப்பட்டிருந்தான், என அறிந்தான்; அவனுடைய மனதிலிருந்த அவிசுவாசமாகிய கருந்திரை நீக்கப்பட்டுக்கொண்டிருந்ததென்றும், தேவனுடைய கடாட்சியத்தைப்பற்றிய அற்புதமான மகிமையின் ஒளியாகிய, தேவ மகிமையின் ஒளியும், அவனுடைய மனதை வெளிச்சமடையச் செய்கிறது என்றும் அறிந்தான். ஆம், இந்த வெளிச்சம் அவனுடைய ஆத்துமாவில் மிகுந்த சந்தோஷத்தை ஊற்றெடுக்கப்பண்ணி, காரிருள் அகற்றப்பட்டு, அவனுடைய ஆத்துமாவில் நித்திய ஜீவ ஒளி ஏற்றப்பட்டது. ஆம், இதுவே அவனுடைய சரீரத்தை மேற்கொண்டிருக்கிறது, தேவனால் ஆட்கொள்ளப்பட்டான், என்று அறிந்திருந்தான்.

7 ஆகவே, ராஜஸ்திரீ தன்னிடத்தில் வாஞ்சித்ததே, அவனுடைய வாஞ்சையாயும் இருந்தது. ஆகவே ராஜஸ்திரீ தன்னிடம் வேண்டிக்கொண்டபடியே, அவன் ராஜாவைப் பார்க்கப் போனான்; அவன் ராஜாவைப் பார்த்தான். அவன் மரித்துப் போகவில்லை, என்று அறிந்து கொண்டான்.

8 அவன் ராஜஸ்திரீயை நோக்கி: அவர் மரித்துப் போகவில்லை. தேவனில் உறங்குகிறார். அவர் மறுபடியும் நாளை எழுந்திருப்பார்; ஆகவே அவரைப் புதைக்க வேண்டாம், என்றான்.

9 பின்னும் அம்மோன் அவளை நோக்கி: இதை நீர் விசுவாசிக்கிறீரா? என்று கேட்டான். அதற்கு அவள் அவனை நோக்கி: உம்முடைய வார்த்தையும், நம் வேலையாட்களின் வார்த்தையுமேயல்லாமல் வேறொரு சாட்சியும் என்னிடத்தில் இல்லை; ஆகிலும் நீர் சொன்னபடியே நடக்கும் என்று, நான் விசுவாசிக்கிறேன், என்றாள்.

10 அதற்கு அம்மோன் அவளை நோக்கி: உம் மிகுந்த விசுவாசத்தினிமித்தம் நீர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்; ஸ்திரீயே, நான் உம்மிடத்தில் சொல்லுகிறேன், நேபிய ஜனங்கள் யாவருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசம் இருந்ததில்லை, என்றான்.

11 அந்தப்படியே, அவள் அதுமுதற்கொண்டு, மறுநாள் அவன் எழுவான் என்று, அம்மோன் குறித்துச் சொன்ன சமயம் மட்டும், தன் புருஷனின் படுக்கையையே கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

12 அந்தப்படியே, அம்மோனின் வார்த்தைகளின்படியே அவன் எழுந்தான்; அவன் எழும்போதே தன் கரங்களை அந்த ஸ்திரீக்கு நேராய் நீட்டிச் சொன்னதாவது: தேவனுடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக, நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.

13 மெய்யாகவே நீ ஜீவித்திருப்பதுபோலவே, நான் என் மீட்பரைக் கண்டேன்; அவர் வந்து ஒரு ஸ்திரீயினிடத்தில் பிறந்து, தம் நாமத்தை விசுவாசிக்கிற மனுக்குலம் முழுவதையும் மீட்டுக்கொள்வார். இவ்வார்த்தைகளை அவன் சொன்ன போது, அவனது இருதயம் அவனுள்ளே பூரிப்படைந்து சந்தோஷத்தால் விழுந்தான்; ராஜஸ்திரீயும், ஆவியானவரால் மேற்கொள்ளப்பட்டு கீழே விழுந்தாள்.

14 தங்கள் அக்கிரமங்களாலும், தங்கள் பாரம்பரியத்தினாலும் நேபியர்களுக்குள்ளும், அல்லது சகல தேவ ஜனத்திற்குள்ளும் துக்கம் ஏற்பட காரணமாய் அமைந்த தன் சகோதரராகிய லாமானியர்கள்மேல், தன் ஜெபத்திற்குத் தக்கதாய் கர்த்தருடைய ஆவி ஊற்றப்பட்டதை அம்மோன் கண்டபோது, அவன் தன் முழங்காலில் விழுந்து, தன் சகோதரருக்கு தேவன் செய்தவற்றிற்காக அவரிடத்தில் தன் ஆத்துமாவை ஜெபத்திலும், நன்றிகளோடும் ஊற்றினான்; அவன் சந்தோஷத்தால் மேற்கொள்ளப்பட்டான்; இப்படியாய் அவர்கள் மூவரும் பூமியிலே விழுந்தார்கள்.

15 அவர்கள் விழுந்து போவதை ராஜாவின் வேலையாட்கள் கண்டபோது, கர்த்தருடைய பயம் அவர்கள் மீதும் வந்ததால், அவர்களும் தேவனிடத்தில் கூக்குரலிடத் துவங்கினார்கள். ஏனெனில், அவர்கள்தான் இராஜ சமுகத்தில் நின்று, அம்மோனுடைய மகா வல்லமையைக் குறித்து, சாட்சி கொடுத்தவர்கள்.

16 அந்தப்படியே, அவர்கள் பூமியிலே விழுந்து போகும் மட்டும், கர்த்தருடைய நாமத்தை தங்கள் பலத்தோடு தொழுதார்கள். ஒரே ஒரு லாமானிய ஸ்திரீ மட்டும் விழாதிருந்தாள். ஆபிஷ் என்று பெயர்கொண்ட அந்த ஸ்திரீ, தன் தகப்பன் கண்ட ஒரு விசேஷமான தரிசனத்தினிமித்தம், அநேக வருஷங்களாய் கர்த்தருக்குள்ளே மனமாறியவளாய் இருந்து வந்தாள்.

17 இவ்விதமாய் கர்த்தருக்குளே மனமாறிய அவள், அதை யாருக்கும் அறிவியாதிருந்தாள். இப்பொழுது அவள், லாமோனின் வேலையாட்களும், தன் எஜமானியான ராஜஸ்திரீயும், ராஜாவும் பூமியிலே விழுந்து கிடப்பதையும், அம்மோன் சாஷ்டாங்கமாய் பூமியிலே விழுந்து கிடப்பதையும் கண்டபோது, இது தேவனின் வல்லமையினால் என்று தெரிந்துகொண்டாள்; நடந்ததென்ன என்று ஜனங்களுக்குச் சொல்லி அவர்கள் அந்த காட்சியைக் காண்பார்களெனில், அது அவர்களில் தேவ வல்லமையை விசுவாசிக்கச் செய்யும் தருணம் இதுவே என்று எண்ணி, அவள் வீடுதோறும் ஓடி அதை ஜனங்களுக்கு அறிவித்தாள்.

18 ராஜாவின் வீட்டிலே அவர்கள் கூட ஆரம்பித்தார்கள். அங்கே திரள்கூட்டம் கூடி, ராஜாவும், ராஜஸ்திரீயும், அவர்களுடைய வேலையாட்களும், பூமியிலே சாஷ்டாங்கமாயும் மரித்தோரைப்போல கிடப்பதையும் கண்டு திகைத்துப்போனார்கள்; அவர்கள் அம்மோனையும் கண்டார்கள். இதோ, அவன் ஒரு நேபியன்.

19 ஜனங்கள் தங்களுக்குள்ளே முறுமுறுக்கத் துவங்கினார்கள்; அவர்களில் சிலர் ராஜா தேசத்தில் அந்த நேபியனை இருக்கச் செய்ததினிமித்தம், இந்த மகா பொல்லாப்பு அவர்கள் மீது, அல்லது ராஜா மற்றும் அவன் வீட்டாரின் மீது வந்ததென்று சொன்னார்கள்.

20 மற்றவர்கள் அவர்களைக் கடிந்துகொண்டு, ராஜா சிபஸ் தண்ணீரண்டையில், தங்கள் மந்தைகளை சிதறடிக்கப்பண்ணின வேலையாட்களை வெட்டிப்போட்டதினிமித்தமே, இந்த பொல்லாப்பை தன் வீட்டார் மீது வரவழைத்துக்கொண்டான், என்று சொன்னார்கள்.

21 சிபஸ் தண்ணீரண்டையில் நின்று, ராஜாவின் மந்தைகளை சிதறடித்துப்போட்ட மனுஷரால் அவர்கள் தூஷிக்கப்பட்டனர். ஏனெனில் அம்மோன் ராஜாவின் மந்தைகளைக் காக்கும்போது, சிபஸ் தண்ணீரண்டையில் அவர்களுடைய சகோதரர் அநேகரைக் கொன்று போட்டதினிமித்தம், அவன் மேல் கோபம் கொண்டார்கள்.

22 இப்போது, அவர்களில் ஒருவனுடைய சகோதரனை அம்மோன் பட்டயத்தினால் கொன்றுபோட்டிருந்தபடியால், அவன் அம்மோன் மேல் மிகவும் ஆத்திரமடைந்து, தன் பட்டயத்தை உருவி அதை அம்மோன்மீது போட்டு, கொல்லச் சென்றான்; அவன் அடிக்க பட்டயத்தை உயர்த்தியபோது, கீழே விழுந்து மடிந்து போனான்.

23 அம்மோனைக் கொன்றுபோடுவது முடியாத காரியம் என்று நாம் பார்க்கிறோம். ஏனெனில், கர்த்தர் அவன் தகப்பனாகிய மோசியாவை நோக்கி: உன் விசுவாசத்தினிமித்தம், நான் அவனைத் தப்புவிப்பேன் என்றதினாலே, மோசியா அவனை கர்த்தருக்கு ஒப்படைத்தான்.

24 அந்தப்படியே, அம்மோனைக் கொல்ல பட்டயத்தை உயர்த்திய மனுஷன் கீழே விழுந்து மடிந்து போனதைக் கூட்டம் கண்டபோது, அவர்கள் யாவரும் பயந்து, அவன் மீதும், அங்கே விழுந்து கிடந்த ஒருவர் மீதும் தங்கள் கைகளைப் போட பயந்தார்கள்; அவர்கள் யாவரும் இக்காரியங்களை நடப்பித்த அந்த மகா வல்லமையையும், அவை எதைக் குறிக்கின்றன என்றும், தங்களுக்குள்ளே மறுபடியும் ஆச்சரியப்படத் தொடங்கினார்கள்.

25 அந்தப்படியே, அவர்களுள் அநேகர், அம்மோன் அந்த மகா அரூபி என்றும், வேறு சிலர் அவன் அந்த பெரிய ஆவியால் அனுப்பப்பட்டவன் என்றும், சொன்னார்கள்.

26 மற்றவர்கள் இவர்களெல்லோரையும் தூஷித்து, நம்மைத் துன்பப்படுத்த நேபியரிடமிருந்து அனுப்பப்பட்ட வேதாளம் என்றார்கள்.

27 சிலர் அந்த அம்மோன் அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர்களைத் துன்புறுத்த அந்த மகா அரூபியாலே அனுப்பப்பட்டவனென்றும், நேபியர்களுடனே நித்தமும் அந்த மகா அரூபி துணையிருந்து, அவர்களை எப்பொழுதும் இவர்களுடைய கைகளுக்குத் தப்புவித்ததென்றும், லாமானியரான அவர்களுடைய சகோதரரில் அநேகர் இந்த பெரிய ஆவியாலே சங்கரிக்கப்பட்டனர் என்றும் சொன்னார்கள்.

28 இதைப்பற்றி அவர்களுக்குள்ளே மிகுந்த பிணக்கு மூண்டது. அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கையில், திரளான கூட்டம் கூட காரணமாய் இருந்த அந்த வேலைக்கார ஸ்திரீ அங்கே வந்தாள். அவள் திரளானோருக்குள்ளே நடந்த பிணக்கைக் கண்டபோது மிகவும் விசனமடைந்து கண்ணீர் விட்டாள்.

29 அந்தப்படியே, அவள் போய் ராஜஸ்திரீயை பூமியிலிருந்து எழச் செய்ய, கைலாகு கொடுக்கப் போனாள்; அவள் அவளுடைய கையைத் தொட்டமாத்திரமே, அவள் காலூன்றி நின்று உரத்த சத்தமாய்ச் சொன்னதாவது: என்னை அந்த பயங்கரமான பாதாளத்திலிருந்து மீட்ட இயேசுவே ஸ்தோத்திரம். ஸ்தோத்திரிக்கப்படத்தக்க தேவனே, இந்த ஜனத்தின் மேல் இரக்கமாயிரும்.

30 அவள் இதைச் சொன்னபோது, தன் கைகளைக் கூப்பி, சந்தோஷத்தால் நிரப்பப்பட்டு, புரிந்துகொள்ள முடியாத அநேக வார்த்தைகளைப் பேசினாள். இப்படிச் செய்த பின்பு, அவள் ராஜாவாகிய லாமோனிக்கு கைலாகு கொடுத்தாள். இதோ, அவன் எழுந்து காலூன்றி நின்றான்.

31 அவன் தன் ஜனத்திற்குள்ளே பிணக்கைக் கண்ட உடனே, அவர்களைக் கடிந்துகொண்டு, அம்மோன் வாயிலிருந்து தான் கேட்ட வார்த்தைகளை அவர்களிடம் பேசத் துவங்கினான்; அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட யாவரும் விசுவாசித்து, கர்த்தருக்குள்ளாக மனம் மாறினார்கள்.

32 அவர்களில் அநேகர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை; அவர்கள் தங்கள் வழியே போனார்கள்.

33 அந்தப்படியே, அம்மோன் எழுந்தபோது, அவனும், லாமோனியின் வேலையாட்கள் யாவரும் அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். அவர்கள் அனைவரும் அதே காரியங்களை ஜனங்களுக்கு அறிவித்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் மாற்றம் பெற்றன; பொல்லாப்பை இனியும் செய்ய வாஞ்சையில்லாதவர்களாயிருந்தார்கள்.

34 இதோ, அநேகர் தாங்கள் தூதர்களைக் கண்டதாகவும், அவர்களுடனே சம்பாஷித்ததாகவும், ஜனங்களிடம் சொன்னார்கள்; இப்படியாய் அவர்கள் தேவனைப்பற்றிய காரியங்களையும், அவருடைய நீதியையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.

35 அந்தப்படியே, அநேகர் அவர்களுடைய வார்த்தைகளை விசுவாசித்தார்கள். விசுவாசித்தவரெல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது; அவர்கள் நீதியுள்ள ஜனமானார்கள், அவர்கள் தங்கள் மத்தியில் ஒரு சபையை ஸ்தாபித்தார்கள்.

36 இப்படியாய் கர்த்தருடைய கிரியை லாமானியருக்குள்ளே துவங்கியது; இவ்விதமாய் கர்த்தர் தமது ஆவியை அவர்கள் மீது ஊற்றத் துவங்கினார்; மனந்திரும்பி அவருடைய நாமத்தை விசுவாசிக்கிற யாவர் மீதும் அவர் கரம் நீட்டப்பட்டிருக்கிறதை நாம் காண்கிறோம்.