அதிகாரம் 23
மத சுதந்திரம் அறிவிக்கப்படுதல் – ஏழு தேசங்களிலும் நகரங்களிலுமுள்ள லாமானியர் மனம் மாற்றப்படுதல் – அவர்கள் தங்களைத் தாமே அந்தி-நேபி-லேகியர் என்றழைத்தல், அவர்கள் சாபத்திலிருந்து விடுதலையாக்கப்படுதல் – அமலேக்கியரும், அமுலோனியரும் சத்தியத்தை நிராகரித்தல். ஏறக்குறைய கி.மு. 90–77.
1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, தேவ வசனத்தைப் பிரசங்கிக்கச் செல்லுகிற அம்மோனும், ஆரோனும் ஓம்னரும், ஈம்னியும் அவர்களுடைய சகோதரரும் தேசத்தின் எப்பகுதியிலும், எவ்விடத்திலிருந்தாலும், அவர்கள் மீது தங்கள் கைகளைப் போடக்கூடாதென்று, லாமானியரின் ராஜா தன் ஜனத்திற்குள்ளே ஒரு பிரகடனத்தை அனுப்பினான்.
2 அவர்கள் இவர்களைக் கட்டிப்போடும்படியாகத் தங்கள் கைகளைப்போடவும், இவர்களைச் சிறையினுள் தள்ளவும், இவர்கள் மீது உமிழவும், அடிக்கவும், தங்கள் ஜெப ஆலயங்களிலிருந்து இவர்களைத் துரத்தவும், சவுக்கால் அடிக்கவும், இவர்கள் மீது கல்லெறியவும் கூடாதென்றும், தங்களுடைய வீடுகளுக்குள்ளும், ஆலயங்களுக்குள்ளும், பரிசுத்த ஸ்தலங்களுக்குள்ளும் சுதந்திரமாகச் செல்லலாம், என்ற தாக்கீதை அவர்களுக்குள்ளே அவன் அனுப்பினான்.
3 ராஜாவும், அவன் வீட்டாரும் கர்த்தருக்குள்ளாக மனம்மாற்றப்பட்டதினால், அவர்கள் போய் தங்கள் வாஞ்சைகளின்படியே வசனத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்றும், தேவ வசனம் தடையின்றி தேசமெங்கும் போகவும், தன் ஜனங்கள் தங்களுடைய தகப்பன்மார்களின் பாரம்பரியங்கள் துன்மார்க்கமானவை என்று உணரவும், தாங்கள் யாவரும் சகோதரர் என்று அறியவும், கொலையோ, கொள்ளையோ செய்யாமலும் திருடாமலும், விபசாரம் பண்ணாமலும், எவ்வித துன்மார்க்கத்தைப் புரியாமலும் இருக்கவேண்டி அவன் இந்தப் பிரகடனத்தை தன் ஜனங்களுக்காக தேசமுழுவதும் அனுப்பினான்.
4 இப்பொழுதும், அந்தப்படியே, இப்பிரகடனத்தை ராஜா அனுப்பிய போது, ஆரோனும் அவன் சகோதரரும் நகரம் விட்டு நகரம் போய், ஒரு தொழுகை ஸ்தலத்தைவிட்டு மற்றொன்றுக்குப் போய், சபைகளை ஸ்தாபித்து, லாமானியருக்குள்ளே தேவ வசனத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் அவர்கள் மத்தியில் தேசமுழுவதிலுமாய் ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் நியமனம் பண்ணினார்கள்; இப்படியாக அவர்கள் மகா ஜெயத்தைப் பெறத் துவங்கினார்கள்.
5 கர்த்தருடைய ஞானத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கொண்டு வரப்பட்டார்கள். ஆம், ஆயிரக்கணக்கானோர் நேபியரின் பாரம்பரியத்தில் விசுவாசிக்கும்படியாக கொண்டுவரப்பட்டார்கள்; இக்காலம் வரைக்குமாய், கைமாறிவந்த பதிவேடுகளைப்பற்றியும், தீர்க்கதரிசனங்களைப்பற்றியும் போதிக்கப்பட்டார்கள்.
6 கர்த்தர் ஜீவிக்கிறது எவ்வளவு உண்மையோ அதுபோல, தங்களுக்குள் அற்புதத்தைக் கிரியை செய்யும் தேவ வல்லமையினாலும், வெளிப்படுத்தல் மற்றும் தீர்க்கதரிசன ஆவியோடும், அம்மோனும் அவன் சகோதரரும் பிரசங்கம் பண்ணுவதின் மூலமாய், அநேகர் சத்திய ஞானத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள். ஆம், அவர்களுடைய உபதேசங்களை விசுவாசித்த லாமானியர் அநேகரும், கர்த்தருக்குள்ளே மனம்மாறி பின்வாங்கிப் போகாதிருந்தார்கள் என்று, கர்த்தர் ஜீவிக்கிறபடியே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 அவர்கள் நீதியுள்ள ஜனமாக மாறி, தங்கள் கலக ஆயுதங்களைக் கீழே போட்டார்கள்; அதற்குப் பின்பு அவர்கள் தேவனுக்கு விரோதமாயும், தங்கள் சகோதரருக்கு விரோதமாயும் யுத்தம் பண்ணவில்லை.
8 இப்பொழுது கர்த்தருக்குள்ளாக மனம் மாறியவர்கள் இவர்களே.
9 இஸ்மவேலின் தேசத்திலிருந்த லாமானிய ஜனங்களும்;
10 மித்தோனி தேசத்திலிருந்த லாமானிய ஜனங்களும்;
11 நேபியின் பட்டணத்திலிருந்த லாமானிய ஜனங்களும்;
12 சீலோம் தேசத்திலும், செம்லோன் தேசத்திலும், லெமுவேல் பட்டணத்திலும், சிம்னிலாம் பட்டணத்திலுமிருந்த லாமானிய ஜனங்களுமாவார்கள்.
13 இவைகளே கர்த்தருக்குள்ளாக மனம்மாறின லாமானிய பட்டணங்களின் பெயர்கள். இவர்களே தங்கள் கலக ஆயுதங்களையும், ஆம், தங்களுடைய சகல யுத்த ஆயுதங்களையும் விட்டுவிட்டவர்கள்; அவர்கள் அனைவரும் லாமானியர்கள்.
14 அமலேக்கியரில் ஒருவனைத் தவிர யாரும் மனம்மாறவில்லை; அமுலோனியரில் எவருமே மனம் மாறவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் இருதயங்களையும், ஆம், அந்த தேசத்திலுள்ள தங்கள் கிராமங்களிலும், தங்கள் பட்டணங்களிலும் குடியிருந்த லாமானியரின் இருதயங்களையும் கடினப்படுத்தினார்கள்.
15 ஆகவே, மனந்திரும்பி சத்திய ஞானத்திற்கு வந்து, மனம்மாறிய லாமானியரின் பட்டணங்களை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.
16 இப்பொழுதும், அந்தப்படியே, ராஜாவும் மனம்மாறினவர்களும், தாங்கள் தங்களின் சகோதரரிடமிருந்து வேறுபட்டிருக்க ஒரு பெயரைத் தங்கள்மேல் தரித்துக் கொள்ளவேண்டுமென்று வாஞ்சையாயிருந்தார்கள். ஆதலால் அவர்கள் வேறுபடுத்தப்படும்படிக்கு, ராஜா ஆரோனுடனும், அவர்களுடைய ஆசாரியர்களில் அநேகருடனும், தங்கள் மீது என்ன பெயரை வைத்துக் கொள்ளவேண்டுமென்று ஆலோசித்தான்.
17 அந்தப்படியே, அவர்கள் தங்கள் பெயர்களை அந்தி-நேபி-லேகியர் என்று அழைக்கலாயினர்; அவர்கள் இந்த நாமத்தினால் அழைக்கப்பட்டனர். அதன்பின்பு அவர்கள் லாமானியர் என்று அழைக்கப்படவேயில்லை.
18 அவர்கள் மிகவும் பிரயாசப்படுகின்ற ஜனமாய் இருக்கத் துவங்கினார்கள். ஆம், அவர்கள் நேபியருடனே நட்பாயிருந்தார்கள்; ஆதலால் அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள், தேவ சாபம் அவர்களை இனிமேலும் தொடரவில்லை.