அதிகாரம் 29
தேவதூதர்களின் உற்சாகத்துடன் மனந்திரும்புதலை கூக்குரலிடவேண்டுமென ஆல்மா வாஞ்சித்தல் – கர்த்தர் சர்வ தேசங்களுக்கும் ஆசிரியர்களை கொடுத்தல் – ஆல்மா, கர்த்தருடைய ஊழியத்திலும், அம்மோனும் அவன் சகோதரரும் பெற்ற ஜெயத்திலும் மகிமைப்படுதல். ஏறக்குறைய கி.மு. 76.
1 நான் தூதனாயிருந்தால், என் இருதயத்தின் வாஞ்சையின்படியே, போய் தேவ எக்காளத்தோடு, பூமியை அதிரப்பண்ணுகிற சத்தத்தால் பேசி, மனந்திரும்புதலை எல்லா ஜனங்களுக்கும் கூக்குரலிட்டிருக்க வேண்டும்.
2 ஆம், பூமியின் பரப்பின் மேலெங்கும் இன்னும் அதிக துக்கம் இராதபடிக்கு, ஒவ்வொரு ஆத்துமாவும் மனந்திரும்பி, தேவனிடத்தில் வரும்படியாக அவைகளிடத்தில் மனந்திரும்புதலையும் மீட்பின் திட்டத்தையும், இடிமுழக்கத்தின் சத்தம்போல அறிவிப்பேன்.
3 ஆனால் இதோ, நான் ஒரு மனுஷன், நான் விரும்பியே பாவம் செய்கிறேன்; ஏனெனில் கர்த்தர் எனக்கு அருளிய காரியங்களில் நான் திருப்தியாயிருக்கவேண்டும்.
4 என் வாஞ்சைகளினிமித்தம் நியாயமான தேவனின் உறுதியான கட்டளையை நான் குலையப்பண்ணக்கூடாது. ஏனெனில் மனுஷருடைய வாஞ்சைப்படி மரணமோ அல்லது ஜீவனோ, அவர் அவர்களுக்கு அருளுவார் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆம், மனுஷருடைய சித்தங்களின்படி, இரட்சிப்பாயிருந்தாலும் அல்லது அழிவாயிருந்தாலும், அவர் அவர்களுக்கு அருளுகிறார், ஆம், மாற்றக்கூடாத கட்டளைகளை அவர்களுக்கு விதிக்கிறார், என்று நான் அறிந்திருக்கிறேன்;
5 ஆம், நன்மையும், தீமையும் சகல ஜனங்களுக்கும் வந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறேன்; தீமையினின்று நன்மையை அறியாதவன் குற்றமற்றவனாயிருக்கிறான்; ஆனால் தீமையையும் நன்மையையும் அறிகிறவனுக்கோ, அவன் வாஞ்சிக்கிறதெதுவோ, நன்மையோ, அல்லது தீமையோ, ஜீவனோ, அல்லது மரணமோ, சந்தோஷமோ, அல்லது மனச்சாட்சியின் குற்றவுணர்வோ அது அவனுக்கு அருளப்படும்.
6 இப்பொழுது, இவைகளை நான் அறிந்திருக்கிறேன் என்று கண்டும், அழைக்கப்பட்ட வேலையிலும் அதிகமாய்ச் செய்ய நான் ஏன் வாஞ்சிக்க வேண்டும்?
7 நான் பூமியின் சகல கடையாந்தரங்களுக்கும் பேசும்படி, ஒரு தூதனாயிருக்கவேண்டுமென, நான் ஏன் வாஞ்சிக்கவேண்டும்?
8 ஏனெனில், இதோ, கர்த்தர் சகல தேசங்களுக்கும், அவரது வார்த்தையைப் போதிக்க, ஆம், தேவையென்று தாம் பொருத்தமாய் காண்கிற யாவையும், அவர்களுடைய சொந்த தேசம் மற்றும், பாஷையின்படியே, ஞானமாய் அருளுகிறார்; ஆதலால் கர்த்தர் நியாயம் மற்றும் சத்தியத்தின்படியே ஞானமாய் ஆலோசனை வழங்குகிறதை நாம் பார்க்கிறோம்.
9 கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டதை அறிந்திருக்கிறேன். நான் அதில் மேன்மை பாராட்டுகிறேன். நான் என்னில் அல்ல, எனக்கு கர்த்தர் கட்டளையிட்டவைகளிலேயே மேன்மை பாராட்டுகிறேன், ஆம், நான் சில ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்குள்ளாகக் கொண்டுவருகிற ஒரு கருவியாய் கர்த்தரின் கரங்களில் இருக்கக்கூடும், என்பதில் மேன்மைபாராட்டுகிறேன்; இதுவே என் மகிழ்ச்சியாயிருக்கிறது.
10 இதோ, என் சகோதரரில் அநேகர் மனத்தாழ்ச்சியாய் கர்த்தராகிய தங்கள் தேவனிடத்தில் வருகிறதை நான் காணும்போது, என் ஆத்துமா சந்தோஷத்தால் நிரம்புகிறது; அப்போது கர்த்தர் எனக்கு செய்தவற்றையும், ஆம், என் ஜெபத்தைக் கேட்டார் என்பதையும் நினைவு கூருகிறேன்; ஆம், எனக்கு நேராய் அவர் நீட்டிய அவருடைய இரக்கமுள்ள புயத்தை நினைவுகூருகிறேன்.
11 ஆம், என் பிதாக்களின் சிறைத்தனத்தையும் நினைவு கூருகிறேன்; ஏனெனில் கர்த்தர் அவர்களுடைய சிறைத்தனத்திலிருந்து விடுவித்து, அதனால் தமது சபையை ஸ்தாபித்தார், என்பதை நான் மெய்யாகவே அறிந்திருக்கிறேன். ஆம், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தராகிய தேவனே அவர்களை அடிமைத்தனத்திலிருந்து தப்புவித்தார்.
12 ஆம், என் பிதாக்களின் சிறைத்தனத்தை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன்; அவர்களை எகிப்தியரின் கைகளுக்குத் தப்புவித்த அதே தேவன், அவர்களை அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்தார்.
13 ஆம், அதே தேவன் தமது சபையை அவர்களுக்குள்ளே ஸ்தாபித்தார்; ஆம், நான் இந்த ஜனங்களுக்கு வசனத்தைப் பிரசங்கிக்க, அதே தேவன் என்னை ஒரு பரிசுத்த அழைப்பினால் அழைத்து எனக்கு அதிக ஜெயத்தைக் கொடுத்தார். அதினிமித்தம் என் சந்தோஷம் பூரணப்பட்டிருக்கிறது.
14 ஆனால் என் ஜெயத்திற்காக மாத்திரம் நான் சந்தோஷமடைவதில்லை, என் சந்தோஷம் நேபியரின் தேசத்திற்கு போன, என் சகோதரரின் ஜெயத்தினிமித்தம் அதிக பூரணப்பட்டிருக்கிறது.
15 இதோ, அவர்கள் மிகுதியாய் பிரயாசப்பட்டு, அதிகக் கனியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்; அவர்களுடைய பலன் எவ்வளவு பெரிதாயிருக்கும்!
16 இப்பொழுது, இந்த சகோதரரின் ஜெயத்தை எண்ணும்போது, என் ஆத்துமா சரீரத்திலிருந்து பிரிந்து போகும் மட்டுமாய் எடுத்துச் செல்லப்படுவதுபோல், என் சந்தோஷம் மிகுதியாயிருக்கிறது.
17 இப்பொழுதும், என் சகோதரராகிய இவர்களும் அவர்களுடைய பிரயாசங்களின் கனியாயிருப்போர் யாவரும், இனி புறம்பே போகாமல், ஆனால் தேவனை என்றென்றுமாய் துதிக்கும்படி தேவ ராஜ்யத்தில் அமர அவர் அருளுவாராக. நான் பேசின பிரகாரமாய், என் வார்த்தையின்படியே அது நடக்க தேவன் அருளுவாராக. ஆமென்.