வேதங்கள்
ஆல்மா 31


அதிகாரம் 31

ஆல்மா மதமாறுபாடடைந்த சோரமியரை திரும்பக்கொண்டுவர ஒரு ஊழியத்துக்கு தலைமை தாங்குதல் – சோரமியர் கிறிஸ்துவை மறுதலித்து, தேர்தலைப்பற்றிய தவறான கொள்கையில் நம்பிக்கை வைத்து, வடிவமைக்கப்பட்ட ஜெபங்களோடு தொழுதல் – ஊழியக்காரர்கள் பரிசுத்த ஆவியால் நிறைக்கப்படுதல் – அவர்களுடைய உபத்திரவங்கள், கிறிஸ்துவைப்பற்றிய சந்தோஷத்தால் விழுங்கப்பட்டுப் போகுதல். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்பொழுது, அந்தப்படியே, கோரிகோரின் முடிவிற்குப் பின்னர், சோரமியர் கர்த்தருடைய வழிகளைப் புரட்டிப் போடுகிறார்களென்றும், அவர்களுடைய தலைவனான சோரம், வாய் பேசாத விக்கிரகங்களை நமஸ்கரிக்க ஜனங்களினுடைய இருதயங்களை நடத்துகிறான் என்ற செய்தியை ஆல்மா கேள்விப்பட்டபோது, ஜனங்களினுடைய அக்கிரமத்தினிமித்தம் அவன் உள்ளம் திரும்பவும் துக்கமடையத் துவங்கியது.

2 ஏனெனில் தன் ஜனத்திற்குள்ளே இருக்கும் அக்கிரமத்தைப்பற்றி ஆல்மா அறிந்தது, மிகவும் துக்கிக்கக் காரணமாயிற்று; ஆதலால் நேபியரிடமிருந்து சோரமியர் பிரிந்து போனதினிமித்தம், அவன் உள்ளம் மிகவும் துக்கித்தது.

3 சோரமியர், சாரகெம்லா தேசத்திற்குக் கிழக்காயும், கிட்டத்தட்ட கடற்கரைக்கு எல்லையாயிருந்த, எருசோன் தேசத்திற்குத் தெற்காயும், லாமானியரால் நிறைந்திருந்த தென் வனாந்தரத்தையும் எல்லைகளாகக் கொண்டு, அந்தியோனம் என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஒரு தேசத்தில் அவர்கள் ஒன்றாய்க் கூடியிருந்தார்கள்.

4 இப்போது சோரமியர், லாமானியருடனே தொடர்பு வைத்துக் கொள்ளுவார்கள் என்று நேபியர் பயந்தார்கள். அது நேபியருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

5 இப்போதும் நியாயமானதைச் செய்யும்படி ஜனங்களை வழிநடத்துகிற மகத்தான தன்மை, வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்ததாலும், ஆம், பட்டயம் அல்லது, ஜனங்களுக்கு ஏற்பட்ட யாதொன்றைக் காட்டிலும், அது ஜனங்களின் மனதில் ஒரு வல்லமையான தாக்கத்தை உண்டாக்குவதினாலும் தேவ வார்த்தையின் நன்மையை அவர்கள் பரீட்சிக்க வேண்டியது அவசியமென ஆல்மா நினைத்தான்.

6 ஆகவே அவன் அம்மோனையும், ஆரோனையும், ஓம்னரையும் கூட்டிக்கொண்டு, ஈம்னியை சாரகெம்லாவிலிருந்த சபையில் விட்டுச் சென்றான்; ஆனால் முன்னே குறிப்பிட்ட மூன்று பேரையும், மீலேக்கில் உள்ள அமுலேக்கையும், சீஸ்ரமையும், அவன் தன்னுடைய இரண்டு குமாரரையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு போனான்.

7 அவன் தன் குமாரர்களில் மூத்தவனை தன்னோடு கூட்டிச் செல்லவில்லை. அவனுடைய பெயர் ஏலமன் என்பதாகும்; அவன் தன்னோடு கூட கூட்டிச் சென்றவர்களின் பெயர்கள் சிப்லோன் மற்றும் கொரியாந்தன் என்பவைகளாகும். இவைகளே அவனோடு கூட சோரமியர் மத்தியிலே வசனத்தைப் பிரசங்கிக்கச் சென்றவர்களினுடைய பெயர்கள்.

8 சோரமியர் நேபியரிலிருந்து பிரிந்து போனவர்கள்; ஆகவே அவர்களுக்கு தேவ வசனம் பிரசங்கிக்கப்பட்டிருந்தது.

9 ஆனால் அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி தேவனுடைய கட்டளைகளையும், அவருடைய ஒழுங்குகளையும் ஆசரியாததினிமித்தம், பெரும் தவறுக்குள் வீழ்ந்தார்கள்.

10 தாங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு சபையினுடைய ஆசரிப்புகளாகிய ஜெபத்திலும், தேவனிடத்தில் தினசரி மன்றாட்டுகளிலும் தரித்திராமல் அவைகளைக் கைக்கொள்ளாதே போனார்கள்.

11 ஆம், சுருங்கச் சொன்னால் அவர்கள் அநேக தடவைகளில் கர்த்தருடைய வழிகளைப் புரட்டினார்கள்; இதினிமித்தம் ஆல்மாவும், அவன் சகோதரரும் அவர்களுக்கு வசனத்தைப் பிரசங்கிக்கும் பொருட்டு தேசத்தினுள் போனார்கள்.

12 இப்பொழுது அவர்கள் தேசத்திற்குள் வந்தபோது, இதோ, அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போகும்படியாய் சோரமியர் ஜெப ஆலயங்களைக் கட்டியிருப்பதையும், வாரத்தின் ஒரு நாளை அவர்கள் கர்த்தருடைய நாளென்று அழைத்து, அந்த நாளின்போது ஒன்றாய் கூடுகிறதையும் கண்டார்கள்; ஆல்மாவும் அவன் சகோதரரும் இதற்கு முன்னே காணாத முறையிலே அவர்கள் தொழுது கொண்டார்கள்.

13 அவர்கள் தங்கள் ஜெப ஆலயங்களின் நடுவே, நிற்பதற்காக ஒரு இடத்தை தலையின் உயரத்திற்கு மேலாக, கட்டியிருந்தார்கள்; அதன் உச்சியில் ஒருவன் மாத்திரம் நிற்க முடியும்.

14 ஆதலால், தொழுதுகொள்ள வாஞ்சையுடையவனெவனும் அதன் உச்சிக்குப்போய், தன் கைகளை வானத்திற்கு நேராய் நீட்டி, உரத்த சத்தமாய்:

15 பரிசுத்தர், பரிசுத்த தேவன்; நீரே தேவனென்று விசுவாசிக்கிறோம்; நீரே பரிசுத்தரென்றும், நீர் ஆவியாய் இருந்தீரென்றும், ஆவியாயிருக்கிறீரென்றும், இனி என்றென்றைக்குமாயும் ஆவியாய் இருப்பீரென்றும் விசுவாசிக்கிறோம்.

16 பரிசுத்த தேவனே, நீர் எங்களை எங்களுடைய சகோதரரிடமிருந்து பிரித்தீரென்றும் விசுவாசிக்கிறோம்; தங்களுடைய பிதாக்களின் குழந்தைத்தனத்தினால், எங்கள் சகோதரருக்கு கையளிக்கப்பட்ட அவர்களுடைய பாரம்பரியத்தை நாங்கள் விசுவாசிப்பதில்லை; ஆனால் நீரே எங்களை உம்முடைய பரிசுத்தமுள்ள பிள்ளைகளாகத் தெரிந்துகொண்டீரென்றும், கிறிஸ்து என்றொருவர் இருக்கமாட்டாரென்று, நீர் எங்களுக்குத் தெரியப்பண்ணினீரென்றும், நாங்கள் விசுவாசிக்கிறோம்.

17 ஆனால் நீரே நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறீர்; எங்களைச் சுற்றியுள்ள யாவரையும் நீர் உமது கோபாக்கினையால் பாதாளத்தில் தள்ளும்படி தெரிந்துகொண்டிருக்க, நீர் எங்களை இரட்சிக்கும்படி தெரிந்து கொண்டிருப்பதற்காய், பரிசுத்தமுள்ள தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம்; எங்களுடைய சகோதரரை கிறிஸ்துவின் நம்பிக்கையினால் பிணைத்து, தேவனே உம்மைவிட்டு அவர்களுடைய இருதயங்களை தூர விலக்கிக்கொண்டு போகிற அவர்களின் மூடபாரம்பரியங்களினால் நாங்களும் வழிநடத்தப்படாதபடிக்கு, நீர் எங்களைத் தெரிந்துகொண்டதற்காகவும், உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

18 தேவனே, நாங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட, பரிசுத்த ஜனமாயிருப்பதற்காகவும், உமக்கு மறுபடியும் நன்றிகளை ஏறெடுக்கிறோம், ஆமென்.

19 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மாவும், அவனுடைய சகோதரரும், அவனுடைய குமாரர்களும், இந்த ஜெபங்களைக் கேட்டபோது, அவர்கள் அளவிலா அதிர்ச்சியடைந்தார்கள்.

20 ஏனெனில் இதோ, இப்படியாக ஒவ்வொருவனும் போய், இந்த ஜெபங்களையே ஏறெடுத்தான்.

21 இப்போது அந்த இடம் அவர்களால் ராமியம்தோம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு பரிசுத்த மேடை என்று அர்த்தமாம்.

22 அவர்கள் ஒவ்வொருவரும் அந்த மேடையிலிருந்து, அதே ஜெபத்தை தேவனுக்கு ஏறெடுத்து, தாங்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டதற்காகவும், தங்களுடைய சகோதரரின் பாரம்பரியத்தின்படியே தங்களையும் அவர் நடத்தாதற்காகவும், வரப்போகிறவைகளாகிய, தாங்கள் ஒன்றும் அறியாத காரியங்களைத் தங்கள் இருதயங்கள் விசுவாசிக்கும்படியாக வஞ்சிக்கப்படாததினிமித்தமும், தங்கள் தேவனுக்கு நன்றிகளை ஏறெடுத்தார்கள்.

23 ஜனங்கள் யாவரும் இந்த முறையில், நன்றிகளைச் செலுத்திய பின்பு, அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்களின் முறையின்படி நன்றிகளைச் செலுத்த திரும்பவும் அந்த பரிசுத்த மேடைக்கு வரும்படி ஏகமாய்க் கூடும்வரைக்கும், தங்களின் தேவனைப்பற்றி மறுபடியும் பேசுவதேயில்லை.

24 இப்பொழுது ஆல்மா இதைக் கண்டபோது, அவன் இருதயம் துக்கித்தது; ஏனெனில் அவன் அவர்கள் துன்மார்க்கரும், மாறுபாடுள்ள ஜனமெனவும் கண்டான்; ஆம், அவர்களின் இருதயங்கள் பொன்னிலும், வெள்ளியிலும், சகலவிதமான மேன்மையான பொருட்களிலும் வாஞ்சித்தன.

25 ஆம், அவர்களுடைய பெருமையினிமித்தம், அவர்களின் உள்ளம் மேன்மை பாராட்டும்படியாய் உயர்த்தப்பட்டிருந்ததையும், அவன் கண்டான்.

26 அவன் தன் சத்தத்தை வானத்திற்கு உயர்த்தி, கூக்குரலிட்டுச் சொன்னதாவது, கர்த்தாவே, இங்கே கீழே மாம்சத்தில் வாசமாயிருந்து, மனுபுத்திரருக்குள்ளே இப்படிப்பட்ட கொடிய துன்மார்க்கத்தை எதுவரைக்கும் உம்முடைய ஊழியக்காரர் காணும்படி அனுமதிப்பீர்?

27 இதோ தேவனே, அவர்கள் உம்மை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய இருதயங்கள் அவர்களின் பெருமையினால் விழுங்கப்பட்டிருக்கிறது. இதோ, தேவனே, உலகத்தின் வீணான காரியங்களால் மிகுந்த மேட்டிமையாயிருந்து, அவர்கள் தங்கள் வாயினாலே உம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறார்கள்.

28 தேவனே, அவர்களுடைய விலையுயர்ந்த வஸ்திரத்தையும், அவர்களின் சிறு மோதிரங்களையும், அஸ்தகடகங்களையும், அவர்களின் பொன்னாபரணங்களையும், அவர்கள் தங்களுடைய விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பாரும். இதோ, அவர்களுடைய இருதயங்களோ அவைகள் மீது இருக்கின்றன. இருப்பினும் அவர்கள் உம்மை நோக்கி கூக்குரலிட்டு, தேவனே மற்றவர்கள் கெட்டுப் போகிறார்கள், நாங்கள் உமக்கென்று தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாயிருக்கிறதற்காக, உமக்கு நன்றிகளை ஏறெடுக்கிறோம், என்கிறார்கள்.

29 ஆம், நீர் அவர்களுக்குக் கிறிஸ்து இல்லை, என்று தெரியப்படுத்தியதாகவும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

30 தேவனாகிய கர்த்தாவே, எதுவரைக்கும் இந்த ஜனத்திற்குள்ளே துன்மார்க்கமும், அவிசுவாசமும் இருக்க நீர் பொறுத்திருப்பீர்? கர்த்தாவே, நான் என் பெலவீனங்களை சகித்திருக்க, நீர் எனக்குப் பெலனைக் கொடுப்பீரா. நானோ பெலவீனன். இந்த ஜனத்திற்குள் இருக்கிற இப்படிப்பட்ட துன்மார்க்கம் என் ஆத்துமாவை வேதனைப்படுத்துகிறது.

31 கர்த்தாவே என் இருதயம் மிகவும் துக்கிக்கிறது; நீர் என் ஆத்துமாவை கிறிஸ்துவுக்குள் தேற்றுவீரா. நான் என் பெலனைப் பெறவும், இந்த ஜனத்தினுடைய அக்கிரமத்தினிமித்தம் என்மீது வருகிற இந்த உபத்திரவங்களை நான் பொறுமையாய் சகித்திருக்கவும், கர்த்தாவே, நீர் எனக்கு அருளுவீரா.

32 கர்த்தாவே நீர் என் ஆத்துமாவைத் தேற்றி எனக்கும் என்னோடிருக்கிற என் உடன் ஊழியர்களாகிய அம்மோனுக்கும், ஆரோனுக்கும், ஓம்னருக்கும், அமலேக்கிக்கும், சீஸ்ரமுக்கும், என் இரு குமாரருக்கும் ஜெயத்தை அருளுவீரா, ஆம் கர்த்தாவே இவர்கள் எல்லோரையும் நீர் தேற்றுவீரா. ஆம், நீர் அவர்களின் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் தேற்றுவீரா.

33 அவர்கள் பெலனைப் பெறவும், இந்த ஜனத்தின் அக்கிரமங்களினிமித்தம் அவர்கள் மீது வரவிருக்கிற அவர்களுடைய உபத்திரவங்களை அவர்கள் சகித்திருக்க, அவர்களுக்கு அருளுவீரா.

34 கர்த்தாவே மீண்டும் உம்மிடத்திலே அவர்களைக் கிறிஸ்துவுக்குள் சேர்ப்பதில், நாங்கள் ஜெயம் பெறும்படியாய் நீர் எங்களுக்கு அருளுவீரா.

35 கர்த்தாவே, இதோ, அவர்களுடைய ஆத்துமாக்கள் விலையேறப்பெற்றவை. அவர்களில் பலர் எங்களுடைய சகோதரர்கள். ஆதலால் கர்த்தாவே, நாங்கள் எங்கள் சகோதரர்களைத் திரும்பவும் உம்மிடத்தில் கொண்டு வரும்படியாய், நீர் எங்களுக்கு வல்லமையையும் ஞானத்தையும் தாரும்.

36 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மா இவ்வார்த்தைகளைச் சொல்லியபின்பு, அவன் தன் கைகளைத் தன்னோடிருந்தவர்கள் மேல் வைத்தான். இதோ, அவர்கள் மீது அவன் தன் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள்.

37 அதற்கு பின்னர் அவர்கள் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம், என்று தங்களுக்காகக் கவலைப்படாமல் ஒருவருக்கொருவர் பிரிந்து சென்றார்கள்.

38 அவர்கள் பசியாயும், விடாய்த்தும் இருக்காதபடி கர்த்தர் அவர்களைப் போஷித்தார்; கிறிஸ்துவைப்பற்றிய சந்தோஷத்தினால் விழுங்கப்பட்டுப் போவதைத் தவிர, மற்ற எந்த உபத்திரவங்களாலும் அவர்கள் கஷ்டப்படக்கூடாதென்று அவர் அவர்களுக்குப் பெலன் கொடுத்தார். இப்பொழுது ஆல்மாவின் ஜெபத்தின்படியே இது நடந்தது; இது அவன் விசுவாசமாய் ஜெபித்ததினிமித்தமே.