ஆல்மா தன் குமாரனாகிய ஏலமனுக்குக் கொடுத்த கட்டளைகள்.
அதிகாரங்கள் 36, 37 உள்ளிட்டவை.
அதிகாரம் 36
ஒரு தூதனைக் கண்ட பிறகு தன் மனமாற்றத்தைக் குறித்து ஏலமனுக்கு ஆல்மா சாட்சி கொடுத்தல் – ஆக்கினைக்குட்பட்ட ஆத்துமா படுகிறபாட்டை, அவன் அனுபவித்தான், அவன் இயேசு என்னும் நாமத்தை தொழுது கொண்ட பிறகே, தேவனால் ஜெனிப்பிக்கப்படுதல் – இனிமையான சந்தோஷம் அவன் ஆத்துமாவை நிரப்புதல் – தூதர்களின் சேனை தேவனைத் துதிப்பதை அவன் கண்டான் – மனமாறியவர்கள் அநேகர், அவன் ருசித்து கண்டது போலவே, ருசித்து கண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய கி.மு. 74.
1 என் குமாரனே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நீ தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில், நீ தேசத்திலே விருத்தியடைவாய் என்று, உன்னிடத்தில் நான் வாக்குறுதியளிக்கிறேன்.
2 நம்முடைய பிதாக்கள் அடிமைத்தனத்திலிருந்ததை நினைவுகூர்ந்து, நான் செய்ததைப்போலவே நீயும் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன்; ஏனெனில் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்தார்கள். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவரால் மாத்திரமேயொழிய, வேறொருவராலும் அவர்களை விடுவிக்க முடியவில்லை. அவர் மெய்யாகவே அவர்களை அவர்களுடைய உபத்திரவங்களிலிருந்து விடுவித்தார்.
3 இப்பொழுதும், என் குமாரனாகிய ஏலமனே, இதோ, நீ உன் வாலிபப் பிராயத்தில் இருக்கிறாய். ஆதலால் நீ என் வார்த்தைகளைக் கேட்டு, என்னிடத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று உன்னைக் கெஞ்சுகிறேன். ஏனெனில் தேவனில் தன் நம்பிக்கையை வைக்கிற எவரும் அவர்களுடைய சோதனைகளிலும், அவர்களுடைய பிரச்சினைகளிலும், அவர்களுடைய உபத்திரவங்களிலும் ஆதரிக்கப்பட்டு, கடைசி நாளின்போது உயர்த்தப்படுவார்கள் என நான் அறிவேன்.
4 நானாகவே அறிந்துகொண்டேன் என்று நீ எண்ணிக்கொள்ளவேண்டும், என நான் விரும்பவில்லை, உலகப்பிரகாரமானவைகளால் அல்ல, ஆவிக்குரியவைகளால், மாம்ச சிந்தனையினாலல்ல, தேவனாலேயே.
5 இப்பொழுதும் இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் தேவனால் பிறப்பிக்கப்படாமல் போயிருப்பேனேயானால் இந்தக் காரியங்களை அறியாதிருந்திருப்பேன்; ஆனால் தேவன், தமது பரிசுத்த தூதனின் வாயின் மூலமாய் இவைகளை எனக்கு அறிவித்திருப்பது, எனக்கு எந்த தகுதியினாலும் அல்ல.
6 ஏனெனில் மோசியாவின் குமாரரோடு தேவ சபையை நிர்மூலமாக்க சுற்றித் திரிந்தேன்; ஆனால் இதோ, தேவனோ எங்களை வழியிலே தடுத்து நிறுத்த தமது பரிசுத்த தூதனை அனுப்பினார்.
7 இதோ, இடிமுழக்கத்தைப் போல அவன் எங்களிடத்தில் பேசினான், பூமி அனைத்தும் எங்கள் பாதங்களுக்குக் கீழ் நடுங்கினது; கர்த்தருடைய பயம் எங்கள் மீது வந்ததினாலே, நாங்கள் எல்லோரும் பூமியில் விழுந்தோம்.
8 ஆனால் இதோ, சத்தம் என்னை நோக்கி: எழுந்திரு, என்றது. நான் எழுந்து நின்று, ஒரு தூதனைக் கண்டேன்.
9 அவன் என்னை நோக்கி: உன்னை நீயே அழித்துப்போட்டாலும், இனி ஒருபோதும் தேவ சபையை அழிக்க வகை தேடாதே, என்றான்.
10 அந்தப்படியே, நான் பூமியில் விழுந்தேன்; மூன்று பகலும் இராத்திரியுமாய் என் வாயைத் திறக்கவும், என் கைகால்களை பயன்படுத்தவும் முடிவில்லை.
11 தூதன் இன்னும் அநேக காரியங்களைப் பேசினான், அவைகள் என் சகோதரர்களால் கேட்கப்பட்டன, ஆனால் நானோ கேட்கவில்லை; உன்னை நீயே அழித்துக்கொண்டாலும் இனி ஒருபோதும் தேவசபையை அழிக்கவகைதேடாதே, என்ற வார்த்தைகளை நான் கேட்டபோது, நான் அழிந்துபோய் விடுவேனோ, என்ற மிகுந்த பயத்தினாலும், அதிர்ச்சியாலும் ஆட்கொள்ளப்பட்டு, பூமியில் விழுந்தேன். அதற்குப் பின்பு நான் எதையும் கேட்கவில்லை.
12 ஆனால் நான் நித்திய வேதனையில் அலைக்கழிக்கப்பட்டேன். ஏனெனில் என் ஆத்துமா பெருமளவும் நொந்துபோய், என் பாவங்கள் அனைத்தினாலும் அலைக்கழிக்கப்பட்டது.
13 நான் என் சகல பாவங்களையும், அக்கிரமங்களையும் நினைவு கூர்ந்தேன்; அதற்காக நான் பாதாள வேதனையுடன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டேன்; ஆம், நான் தேவனுக்கு விரோதமாய்க் கலகம் செய்ததையும், அவருடைய பரிசுத்த கட்டளைகளைக் கைக்கொள்ளாததையும் கண்டுகொண்டேன்.
14 ஆம், நான் அவருடைய பிள்ளைகளில் அநேகரைக் கொலை செய்தேன்; அல்லது அநேகரை அழிவுக்குள்ளாக வழிநடத்திச் சென்றேன்; ஆம், முடிவாக என் அக்கிரமங்கள் அநேகமாய் இருந்தபடியால், தேவசமுகத்தில் பிரவேசிக்கவேண்டுமென்ற அந்த எண்ணமே, என் ஆத்துமாவை சொல்லமுடியாத திகிலால் அலைக்கழித்தது.
15 என் கிரியைகளைக் குறித்து நியாயந்தீர்க்கப்படும்படிக்கு, நான் தேவ சமுகத்தில் நிற்க கொண்டுவரப்படுவதைக் காட்டிலும், நான் நாடு கடத்தப்பட்டு, என் ஆத்துமாவும், சரீரமும் இல்லாமற் போயிருக்கலாம், என எண்ணினேன்.
16 இப்போதும், மூன்று பகலும், மூன்று இராத்திரியுமாக, நான் ஆக்கினைக்குட்பட்ட ஆத்துமா படுகிற வேதனையால், அலைக்களிக்கப்பட்டேன்.
17 அந்தப்படியே, நான் வேதனையால் அலைக்களிக்கப்பட்டு, என் அநேக பாவங்களின் நினைவால் மனஸ்தாபப்பட்டபோது, இதோ, உலகத்தின் பாவங்களை நிவர்த்தியாக்க, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்பவருடைய வரவைக் குறித்து, ஜனங்களுக்கு என் தகப்பன் தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டதை நினைவுகூர்ந்தேன்.
18 இப்பொழுது என் மனம் இந்த நினைவில் சிக்கிக்கொண்டபோது, நான் இருதயத்தினுள்ளே அழுது, தேவ குமாரனாகிய இயேசுவே, கசப்பான பிச்சிலிருந்து, மரணத்தின் நித்திய சங்கிலிகளால் சூழப்பட்டிருக்கிற என் மேல் இரக்கமாயிரும், என்றேன்.
19 இதோ, இதை நான் எண்ணினபோதோ, என் வேதனைகளை அதற்குமேல் நினைவுகூரவே இல்லை; ஆம், அதற்குப் பின்பு நான் பாவங்களின் நினைவால் அலைக்கழிக்கப்படவேயில்லை.
20 என்ன சந்தோஷம், என்ன மகத்துவமான ஒளியை நான் கண்டுகொண்டேன்; ஆம், கஷ்டத்தின் மிகுதியைப்போலவே, சந்தோஷத்தின் மிகுதியால் என் ஆத்துமா நிரப்பப்பட்டது!
21 ஆம், என் குமாரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், என் வேதனையைப்போல மிகக் கொடிய, கசப்பான, வேறெதுவும் இருக்கமுடியாது. ஆம், என் குமாரனே மறுபடியும் உனக்கு நான் சொல்லுகிறேன், மாறாக, என் சந்தோஷத்தைப்போல மிக அற்புதமான, இனிமையான வேறெதுவும் இருக்கமுடியாது.
22 ஆம், தேவன் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும், அவரைச் சுற்றி எண்ணிறைந்த தூதர்களின் சேனைகள் தங்களுடைய தேவனைப் பாடுவதும், துதிப்பதுமாக இருக்கக் கண்ட, நம்முடைய தகப்பனாகிய லேகியைப்போலவே எனக்கும் தோன்றியது. ஆம், அங்கே இருக்கவேண்டுமென என் ஆத்துமா வாஞ்சித்தது.
23 இதோ, என் கைகால்கள் மறுபடியும் தங்கள் பெலனைப் பெற்றன. நான் காலூன்றி நின்று, நான் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டேன், என்று ஜனங்களுக்குத் தெரிவித்தேன்.
24 ஆம், நான் ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்குள் கொண்டுவரவும், அவர்களும் நான் ருசித்துப் பார்த்த அந்த மிகுந்த சந்தோஷத்தை ருசிக்கவும், தேவனால் ஜெனிப்பிக்கப்படவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படவும், அப்போது முதல் இப்போது வரைக்கும் இடைவிடாமல் பிரயாசப்பட்டிருக்கிறேன்.
25 ஆம், என் குமாரனே, இதோ, கர்த்தர் என் பிரயாசங்களின் பலனாக மிகுந்த சந்தோஷத்தை அருளுகிறார்.
26 அவர் எனக்கு அளித்த வார்த்தையினிமித்தம், இதோ அநேகர் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, நான் ருசித்ததைப் போலவே ருசித்தும், நான் கண்ணாரக்கண்டது போலவே கண்டுமிருக்கிறார்கள்; ஆதலால் நான் பேசின இவைகளை நான் அறிகிறது போலவே அவர்களும் அறிகிறார்கள்; நான் பெற்ற அறிவோ, தேவனால் உண்டானது.
27 நான் சகலவிதமான சோதனைகளிலும், சங்கடங்களிலும், பலமாதிரியான உபத்திரவங்களிலும் ஆதரிக்கப்பட்டிருக்கிறேன், ஆம், தேவன் என்னைச் சிறையிலிருந்தும், கட்டுக்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவித்திருக்கிறார்; ஆம், நான் அவரில் என் நம்பிக்கையை வைக்கிறேன். அவர் என்னைத் தொடர்ந்து விடுவிப்பார்.
28 கடைசி நாளின்போது, அவரோடு கூட மகிமையில் நான் வாசமாயிருக்கும்படி என்னை எழும்பப் பண்ணுவார் என்று நான் அறிவேன்; ஆம், அவர் எகிப்தியரைச் சிவந்த சமுத்திரத்தில் விழுங்கிப் போட்டதினாலும், நம்முடைய பிதாக்களை எகிப்திலிருந்து கூட்டிவந்து, அவர்களைத் தமது வல்லமையினால் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் வழிநடத்தினதாலும், அவர்களை அவ்வப்போது அடிமைத்தனத்திலிருந்தும், சிறைத்தனத்திலிருந்தும் விடுவித்ததினிமித்தமும், அவரை நான் என்றென்றுமாய் துதிப்பேன்.
29 ஆம், அவர் நம்முடைய பிதாக்களை எருசலேம் தேசத்திலிருந்து கூட்டிவந்தார்; அவர் தம்முடைய அநாதி வல்லமையினாலே, அவர்களைச் சிறைத்தனத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், அவ்வப்போது, இந்நாள் வரைக்குமாக விடுவித்திருக்கிறார்; ஆம், அவர்களுடைய சிறைத்தனத்தை நான் நினைவில் வைத்திருப்பதைப்போலவே, நீயும் வைத்திருக்க வேண்டும்.
30 ஆனால் இதோ, என் குமாரனே, இவை அனைத்துமல்ல; நீ தேவ கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அளவில் தேசத்தில் விருத்தியடைவாய் என்று, நான் அறிந்திருக்கிறதைப் போலவே நீயும் அறிந்திருக்கவேண்டும். நீ தேவ கட்டளைகளைக் கைக்கொள்ளாமற்போகிற அளவில், நீ அவருடைய சமுகத்திலிருந்து தள்ளுண்டு போவாய் என்றும், நீ அறியவேண்டும்; இது அவருடைய வார்த்தையின்படியானது.