அதிகாரம் 41
உயிர்த்தெழுதலின்போது, மனுஷர் நித்திய மகிழ்ச்சி நிலைக்கோ அல்லது நித்திய துர்பாக்கிய நிலைக்கோ போகும்படி எழுவார்கள் – துன்மார்க்கம் ஒருபோதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை – மாம்ச சிந்தனையுள்ள மனுஷர் உலகத்தில் தேவனில்லாதிருக்கிறார்கள் – ஒவ்வொரு மனுஷனும் அநித்தியத்தில் பெற்றுக்கொண்ட பாவங்களையும் குணாதிசயங்களையும் திரும்பச் சேர்த்தலின்போது மறுபடியும் பெற்றுக் கொள்வான். ஏறக்குறைய கி.மு. 74.
1 இப்பொழுதும், என் குமாரனே, பேசப்பட்டுள்ள திரும்பச் சேர்த்தலைக் குறித்து நான் சொல்லவேண்டியது உண்டு; இதோ, சிலர் வேத வாக்கியங்களைப் புரட்டி, இதினிமித்தம் வழிதப்பிப்போனார்கள். இதைக் குறித்தும் உன் மனது வருத்தப்படுகிறதென்று நான் உணர்கிறேன். ஆனால் இதோ, அதை நான் உனக்கு விளக்கிச் சொல்வேன்.
2 என் குமாரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன். தேவ நியாயத்துக்கு திரும்பச் சேர்க்கும் திட்டம் அவசியமாயிருக்கிறது; இதோ, சகலமும் தங்களுடைய முறையான ஒழுங்கிற்குச் சேர்க்கப்படுவது அவசியமே. இதோ கிறிஸ்துவினுடைய வல்லமைக்கும் உயிர்த்தெழுதலுக்கும் தக்கதாக, மனுஷனுடைய ஆத்துமா தன்னுடைய சரீரத்துடன் திரும்பச் சேர்க்கப்படுவதும், சரீரத்தின் ஒவ்வொரு அங்கமும் தன்னிடத்தே திரும்பச் சேர்க்கப்படுவதும் அவசியமும் நியாயமுமாயிருக்கிறது.
3 மனுஷர் தங்களுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்படவேண்டியது தேவனுடைய நியாயத்தின் பிரகாரம் அவசியமானதே; அவர்களுடைய கிரியைகள் இவ்வாழ்க்கையில் நல்லதாயும், அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகள் நன்மையுமாயிருந்தால், அவர்களும் கடைசி நாளின்போது நன்மையானதற்குத் திரும்பச் சேர்க்கப்படவேண்டும்.
4 அவர்களுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்குமானால், அவர்களும் பொல்லாதவைகளோடு திரும்பச் சேர்க்கப்படுவார்கள். ஆதலால் அனைத்தும் தங்களுடைய முறையான ஒழுங்கிற்கும், ஒவ்வொன்றும் தன்னுடைய சுபாவ வடிவத்திற்குமாய் திரும்பச் சேர்க்கப்படும். சாவுக்கேதுவானது சாவாமைக்கும், அழிவுக்கேதுவானது அழியாமைக்கும் எழுப்பப்படும். ஒன்று ஒருபுறத்திலும் மற்றொன்று மறுபுறத்திலுமாக, முடிவற்ற சந்தோஷத்தைப் பெறும்படி தேவ ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கவோ அல்லது முடிவற்ற தவிப்பைப் பெறும்படி பிசாசின் ராஜ்யத்தைச் சுதந்தரிக்கவோ எழுப்பப்படுவார்கள்.
5 ஒருவன் தன்னுடைய மகிழ்ச்சியான வாஞ்சைகளின்படி மகிழ்ச்சிக்கும் அல்லது தன்னுடைய நன்மையான வாஞ்சைகளின்படி நன்மைக்கும் எழுப்பப்படுவான்; மற்றொருவன் தன்னுடைய துன்மார்க்க வாஞ்சைகளின்படி துன்மார்க்கத்திற்கும் எழுப்பப்படுவான்; அவன் நாள் முழுவதும் பொல்லாப்பைச் செய்ய விரும்பினதெப்படியோ, அப்படியே இரவு வரும்போது அவன் தன் பொல்லாப்பின் பலனைப் பெறுவான்.
6 ஆகவே இது அதற்கு மாறாக இருக்கிறது. அவன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தன் நாட்கள் முடியும் மட்டும் நீதியை வாஞ்சித்திருந்தால் அவன் நீதிக்கடுத்த பிரதிபலனைப் பெறுவான்.
7 இவர்களே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள்; ஆம், இவர்களே காரிருளான அந்த முடிவற்ற இரவிலிருந்து வெளிக்கொண்டுவரப்பட்டு, விடுவிக்கப்பட்டவர்கள்; இப்படியாக அவர்கள் நிற்கிறார்கள், அல்லது விழுகிறார்கள். இதோ, நன்மை செய்வதற்கும், அல்லது தீமை செய்வதற்கும், அவரவர் தங்களுக்குத் தாங்களே நியாயாதிபதிகளாய் இருக்கிறார்கள்.
8 இப்போது, தேவனுடைய கட்டளைகள் மாறாதவை; ஆகவே வழி ஆயத்தமாக்கப்பட்டிருப்பதால், அவ்வழியே நடப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
9 இப்பொழுதும் இதோ, என் குமாரனே, இந்நாள் மட்டும் துணிந்து பாவம் செய்ததைப்போல, கோட்பாட்டின் அக்கொள்கைகளை இன்னொரு முறை மீறாமல், உன் தேவனுக்கு விரோதமாய் தவறு செய்யாமலும் இரு.
10 திரும்பச் சேர்தலைக் குறித்து பேசப்பட்டிருப்பதாலே, நீயும் பாவத்திலிருந்து மகிழ்ச்சிக்கு திரும்பச் சேர்க்கப்படுவாயென்று எண்ணிவிடாதே. இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், துன்மார்க்கமானது எப்போதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை.
11 இப்பொழுதும், என் குமாரனே, சுபாவ நிலையிலோ அல்லது மாம்ச நிலையிலோ இருக்கிற சகல மனுஷரும், கசப்பான பிச்சிலும், பாவக்கட்டிலும் இருக்கிறார்கள், என்பேன். அவர்கள் உலகத்தில் தேவனில்லாதிருக்கிறார்கள். அவர்கள் தேவ சுபாவத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள்; ஆதலால், அவர்கள் மகிழ்ச்சியான நிலைக்கு மாறான ஓர் நிலையிலிருக்கிறார்கள்.
12 இப்பொழுதும் இதோ, திரும்பச் சேர்க்கப்படுதல் என்பதற்கு ஒன்றை சுபாவ நிலையிலிருந்து எடுத்து, சுபாவமற்ற நிலையில் வைப்பது அல்லது அதனுடைய சுபாவத்திற்கு முரணான நிலையில் வைப்பது என்றா அர்த்தம்?
13 என் குமாரனே, அது அப்படியல்ல; திரும்பச் சேர்க்கப்படுதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமென்னவெனில், பொல்லாப்புக்கு பொல்லாப்பையும், மாம்ச சிந்தனைக்கு மாம்ச சிந்தனையையும், பேய்த்தனத்திற்கு பேய்த்தனத்தையும், நன்மைக்கு நன்மையையும், நேர்மையுள்ளதற்கு நேர்மையானதையும், நீதியுள்ளதற்கு நீதியானதையும், இரக்கமுள்ளதற்கு இரக்கமானதையும் திரும்பிக்கொண்டு வருதலே ஆகும்.
14 ஆதலால் என் குமாரனே, உன் சகோதரரிடத்தில் நீ இரக்கமாயிருக்கப் பார்த்துக்கொள்; நியாயமாயிரு, நீதியாய் நியாயந்தீர்த்து, இடைவிடாமல் நன்மை செய்துகொண்டு இரு; இவை அனைத்தையும் நீ செய்வாயாகில், உன் பலனைப் பெற்றுக் கொள்வாய்; ஆம், உன்னிடத்தில் இரக்கம் மறுபடியும் வந்து சேரும்; உன்னிடத்தில் நியாயம் மறுபடியும் வந்து சேரும்; உன்னிடத்தில் மறுபடியும் நீதியான நியாயத்தீர்ப்பு வந்து சேரும்; நீ நன்மையால் மறுபடியும் பலனளிக்கப்படுவாய்.
15 ஏனெனில் நீ அனுப்புகிறதெதுவோ அதுவே உன்னிடத்தில் மறுபடியும் திரும்ப வந்து சேரும்; ஆதலால், திரும்பச் சேர்த்தல் என்ற வார்த்தை பாவியை நியாயவானெனத் தீர்க்காமல் அவனை அதிகமாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறது.