வேதங்கள்
ஆல்மா 42


அதிகாரம் 42

அநித்திய வாழ்க்கை மனுஷன் மனந்திரும்பி, தேவனுக்கு சேவை செய்யத் சாத்தியமாக்கும் ஒரு சோதனைக்காலம் – வீழ்ச்சி மனுஷகுலம் யாவின் மீதும் லௌகீக, ஆவிக்குரிய மரணங்களைக்கொண்டு வந்தது – மீட்பு மனந்திரும்புதல் மூலம் வருகிறது – தேவனே உலக பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தல் – மனந்திரும்புவோருக்கே இரக்கம் அளிக்கப்படும் – மற்ற யாவரும் தேவனுடைய நியாயத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் – பாவநிவர்த்தியினிமித்தம் இரக்கம் வருகிறது – உண்மையாய் மனஸ்தாபம் உள்ளவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்பொழுதும் என் குமாரனே, நீ புரிந்து கொள்ளமுடியாத சில காரியங்கள் உன் மனதை சஞ்சலப்படுத்துகின்றன, என உணர்கிறேன். அது பாவியை தண்டிக்கிற தேவனுடைய நியாயத்தைப்பற்றிய காரியமாயிருக்கிறது; ஏனெனில் பாவியை பரிதாப நிலைக்குத் தள்ளுவது அநியாயம், என்று நீ எண்ண முற்படுகிறாய்.

2 இப்பொழுதும் இதோ, என் குமாரனே, இந்தக் காரியத்தை உனக்கு விளங்கச் செய்கிறேன். இதோ, தேவனாகிய கர்த்தர் நம்முடைய முதற் பெற்றோரை அவர்கள் உண்டாக்கப்பட்ட அதே நிலத்தைப் பண்படுத்தும்படியாக, ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பி விட்ட பின்பு, ஆம், அவர் மனுஷனைத் துரத்திவிட்ட பின்னர், ஜீவ விருட்சத்தைக் காக்கவும், அதற்குப் போகிற ஒவ்வொரு வழியையும் அடைக்கும் பொருட்டும், அவர் ஏதேன் தோட்டத்தின் கிழக்கு முனையிலே கேருபீன்களையும், சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

3 இப்பொழுது மனுஷன் நன்மை தீமை அறிந்து தேவனாக ஆகியிருக்கிறான், என்று பார்க்கிறோம்; அவன் தன் கையை நீட்டி, ஜீவ விருட்சத்தினுடையதையும் பறித்து, புசித்து என்றென்றும் ஜீவிக்கக்கூடாதபடிக்கு, அக்கனியை அவன் புசிக்கக் கூடாதபடிக்கு, தேவனாகிய கர்த்தர் கேருபீன்களையும், சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

4 இப்படி மனந்திரும்பும்படியாக மனுஷனுக்கு ஓர் காலம் அளிக்கப்பட்டிருப்பதைப் காண்கிறோம், ஆம், மனந்திரும்பி, தேவனுக்கு சேவை செய்யும் காலமாகிய, சோதனைக் காலம்.

5 ஏனெனில் இதோ, ஆதாம் தன் கையை உடனே நீட்டி, ஜீவ விருட்சத்தினுடையதைப் புசித்திருப்பானேயானால், மனந்திரும்புவதற்கு ஓர் காலமிராமல், அவன் தேவ வார்த்தையின்படி, என்றென்றுமாய் ஜீவித்திருப்பான்; ஆம், இதினிமித்தம் தேவனுடைய வார்த்தை வீணாய்ப் போயிருக்கும். அந்த மகா இரட்சிப்பின் திட்டம் அவமாக்கப்பட்டிருக்குமே.

6 ஆனால் இதோ மனுஷன் சாகும்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, ஆதலால் அவர்கள் ஜீவ விருட்சத்தினின்று அறுப்புண்டு போனபடியினால், அவர்கள் பூமியின் பரப்பின் மீதிருந்து அறுப்புண்டு போகவேண்டும், மனுஷன் என்றென்றும் தொலைந்தவனானான், ஆம், வீழ்ந்தவனாயுமானான்.

7 இப்பொழுதும், நம்முடைய முதற் பெற்றோர் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரியபிரகாரமாகவும், அறுப்புண்டு போனார்களென்று நீ, இதன் மூலம் காண்கிறாய்; இப்படியாக அவர்கள் தங்கள் சுய விருப்பத்தின்படி நடக்க வேண்டியவர்களானார்கள்.

8 இப்பொழுது இதோ, இந்த உலகப்பிரகார மரணத்திலிருந்து மனுஷனை விடுவிப்பது அவசியமற்றதாய் இருக்கிறது. ஏனெனில் அது அந்த மகா மகிழ்ச்சியின் திட்டத்தை அழித்துப் போடும்.

9 ஆகையால், ஆத்துமா என்றும் அழிய முடியாதென்பதாலும், வீழ்ச்சி மனுஷகுலம் யாவின் மேலும், ஆவிக்குரிய மற்றும் இம்மைக்குரிய மரணத்தைக் கொண்டுவந்ததாலும், அதாவது அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போனார்கள் என்பதாலும், இந்த ஆவிக்குரிய மரணத்திலிருந்து மனிதகுலம் விடுவிக்கப்படுவது அவசியமாயிற்று.

10 ஆகவே அவர்கள் இயற்கையாகவே மாம்ச சிந்தையுடையோராயும், ஜென்ம சுபாவத்தாராயும், பேய்க்குணம் படைத்தவர்களானதாலும் இந்த சோதனைக் காலம் அவர்கள் ஆயத்தப்படுகிற ஒரு காலமாயிற்று; இது ஆயத்தமாகிற காலமாயிற்று.

11 இப்பொழுதும் என் குமாரனே நினைவில்கொள். இந்த மீட்பின் திட்டம் இல்லாதிருக்குமெனில் (அதை ஒதுக்கி வைத்துவிட்டு) அவர்கள் மரித்தவுடனே, கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போய், அவர்களுடைய ஆத்துமாக்கள் துர்பாக்கியமாயின.

12 இப்பொழுதும், இப்படியாக மனுஷன் தன்னுடைய சுய கீழ்ப்படியாமையினிமித்தம், தன் மீது வரவழைத்துக்கொண்ட இந்த வீழ்ந்த நிலையிலிருந்து, அவனை விடுவிக்க ஒரு வழியுமில்லாமலிருந்தது.

13 ஆதலால் ஆயத்தப்படுகிற நிலையென்கிற, இந்த சோதனைக் காலத்தில், நியாயத்தின்படியே மனுஷனுடைய மனந்திரும்புதலை மாத்திரம் நிபந்தனையாகக் கொண்டு மீட்பின் திட்டம் நிறைவேற்றப்பட முடியாது; இந்த நிபந்தனைகள் இல்லாமற்போனால், நியாயத்தின் கிரியைகளை அழிப்பதைத் தவிர, இரக்கம் பயனற்றதாக இருக்கும். இப்பொழுது நீதியின் கிரியையோ அழிக்கப்படமுடியாது; அப்படியெனில் தேவன் தேவனாயிரார்.

14 இப்படியாக, மனுஷகுலம் யாவும் வீழ்ந்து, நியாயத்தின் பிடியிலிருந்தார்கள்; ஆம், தேவ நியாயமே அவர்களை அவருடைய சமுகத்தினின்று என்றென்றுமாய் அறுப்புண்டு போக ஒப்புக்கொடுத்தது என்பதை நாம் காண்கிறோம்.

15 இப்போது ஒரு பாவநிவர்த்தி செய்யப்படாமல் இரக்கத்தின் திட்டம் நிறைவேற்றப்பட முடியாது; ஆகவே தேவன் சம்பூரணராகவும், நியாயமுள்ள தேவனாகவும், இரக்கமுள்ள தேவனாகவும் இருப்பதால், இரக்கத்தின் திட்டத்தை நிறைவேற்றவும், நியாயத்தின் நிபந்தனைகளை நிவர்த்தியாக்கவும், தேவன் தாமே இவ்வுலகத்தின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்கிறார்.

16 இப்பொழுது, மகிழ்ச்சியின் திட்டத்திற்கு எதிராக தண்டனை இல்லாவிடில் மனுஷருக்கு மனந்திரும்புதல் வர முடியாது. அந்த தண்டனையோ, மனுஷனின் ஆவியைப்போல நித்தியமானதாயிருக்கவேண்டும். அப்படியே மகிழ்ச்சியும் ஆவியின் ஜீவனைப்போல நித்தியமுள்ளது.

17 இப்பொழுதும் ஒருவன் பாவஞ்செய்யாமல் எப்படி மனந்திரும்ப முடியும்? நியாயப்பிரமாணமில்லாமல் அவன் பாவஞ்செய்வதெப்படி? தண்டனையில்லாமல் அங்கே நியாயப்பிரமாணம் எப்படி இருக்க முடியும்?

18 இப்பொழுது தண்டனை நிர்ணயிக்கப்பட்டிருந்தது, நியாயமான நியாயப்பிரமாணமும் கொடுக்கப்பட்டது. அது மனுஷருக்கு குற்ற உணர்ச்சியைக் கொண்டுவந்தது.

19 ஒருவன் கொலை செய்தால் அவன் மரிக்கவேண்டுமென்று ஒரு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாதிருந்தால், கொலை செய்தால் மரிப்பான் என்று பயப்படுவானா?

20 மேலும் பாவத்திற்கு விரோதமாய் ஒரு நியாயப்பிரமாணமும் கொடுக்கப்படாதிருந்தால், மனுஷர் பாவஞ் செய்வதற்கு பயப்படார்.

21 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாதிருந்தால், மனுஷர் பாவம் செய்தால் நியாயமோ, இரக்கமோ என்ன செய்யமுடியும்? ஏனெனில் அந்த ஜீவனின் மீது அவைகள் எந்த உரிமையும் பெற்றிருக்காது.

22 ஆனால் ஒரு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மனந்திரும்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த மனந்திரும்புதலை இரக்கம் உரிமை கோருகிறது, இல்லாவிடில் நியாயமோ அந்த ஜீவனுக்கு உரிமைகோரி, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. நியாயப்பிரமாணமோ தண்டனையைச் சுமத்துகிறது; அப்படியில்லையென்றால் நியாயத்தின் கிரியைகள் அழிக்கப்படும். தேவனும் தேவனாய் இருப்பதில்லை.

23 ஆனால் தேவன் தேவனாய் இருப்பதிலிருந்து நீங்குவதுமில்லை. இரக்கம் மனஸ்தாபமுள்ளவனை உரிமைகோருகிறது. பாவநிவர்த்தியினிமித்தமே இரக்கம் வருகிறது; பாவநிவர்த்தி மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிறது; மரித்தோரின் உயிர்த்தெழுதல் தேவசமுகத்திற்கு மறுபடியும் மனுஷரைக் கொண்டுசெல்கிறது; இப்படியாக அவர்கள் யாவரும், நியாயப்பிரமாணத்தின்படியும், நியாயத்தின் பிரகாரமும் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படி அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்பச் சேர்க்கப்படுகிறார்கள்.

24 இதோ, நியாயம் தன் எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றுகிறது. இரக்கமும் தன்னுடையவைகள் எல்லாவற்றுக்கும் உரிமை கோருகிறது. இப்படியாக உண்மையில் மனஸ்தாபமுள்ளவர்களைத் தவிர வேறொருவரும் இரட்சிக்கப்படுவதில்லை.

25 இரக்கம் நியாயத்தைக் களவாட முடியும் என்று நினைக்கிறாயா? ஒரு துளியாகிலும் இல்லை என்று, உனக்கு நான் சொல்லுகிறேன். அப்படியிருந்தால் தேவன் தேவனாயிருப்பதில்லை.

26 இப்படியாக தேவன், உலக அஸ்திபாரம் முதற்கொண்டு ஆயத்தப்படுத்தப்பட்ட, தமது பெரிய நித்திய திட்டங்களை நிறைவேறப்பண்ணுகிறார். இப்படியாக மனுஷருடைய இரட்சிப்பும் மீட்பும், அவர்களுடைய அழிவும், துர்பாக்கியமும் வருகிறது.

27 ஆகவே என் குமாரனே, விரும்புகிற எவரும் வந்து, ஜீவத்தண்ணீரை இலவசமாய்ப் பருகலாம்; வராத எவரும் வரும்படி கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்; ஆனால் கடைசி நாளின்போது அவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவனுக்கு அது திரும்பச் சேர்க்கப்படும்.

28 அவன் பொல்லாப்பானதைச் செய்ய விரும்பி தன் நாட்களில் மனந்திரும்பாமலிருந்தானேயானால், இதோ தேவனுடைய திரும்பச் சேர்த்தலின்படி, அவனுக்குப் பொல்லாப்பு செய்யப்படும்.

29 இப்பொழுதும் என் குமாரனே, இக்காரியங்கள் இனி ஒருபோதும் உன்னைச் சஞ்சலப்படுத்தக்கூடாதென்று விரும்புகிறேன். உன் பாவங்கள் மாத்திரம் உன்னை சஞ்சலப்படுத்துவதாக. அந்தச் சஞ்சலத்தினிமித்தம் நீ மனந்திரும்புதலுக்குள் கொண்டுவரப்படுவாய்.

30 என் குமாரனே, இனி ஒருபோதும் நீ தேவ நியாயத்தை மறுதலிக்ககூடாதென்று நான் வாஞ்சிக்கிறேன். தேவ நியாயத்தை மறுதலித்து, அதினிமித்தம் உன் பாவங்களிலிருந்து ஒரு துளியாகிலும் மன்னிப்பைப் பெற முற்படாதே; தேவ நியாயமும் அவருடைய இரக்கமும், அவருடைய நீடியபொறுமையும், உன் இருதயத்தில் பூரணமாய் நிலைக்கும்படி அவைகளை அனுமதி; அது உன்னைத் தூசி மட்டும் தாழ்மையாக்க அனுமதி.

31 இப்போதும் என் குமாரனே, இந்த ஜனங்களுக்கு வார்த்தையைப் பிரசங்கிக்க நீ தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறாய், என் குமாரனே ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்குள்ளே கொண்டுவரவும், அந்த இரக்கத்தின் மகாதிட்டம் அவர்கள் மீது உரிமை பாராட்டும்படிக்கும், நீ போய் வார்த்தையை உண்மையோடும், தெளிந்த மனதுடனும் அறிவி. தேவன் உனக்கு என் வார்த்தையின்படியே அருளுவாராக. ஆமென்.