வேதங்கள்
ஆல்மா 46


அதிகாரம் 46

அமலேக்கியா ராஜாவாக சதியாலோசனை பண்ணுதல் – மரோனி சுதந்திரக்கொடியை உயர்த்துதல் – தங்கள் மார்க்கத்தைக் காக்க ஜனங்களை அவன் திரட்டுதல் – மெய்யான விசுவாசிகள் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுதல் – யோசேப்பின் மீதியானவர்கள் காக்கப்படுவார்கள் – அமலேக்கியாவும், கலகக்காரரும் நேபியின் தேசத்திற்குப் பறந்தோடுதல் – சுதந்திர நோக்கத்தை ஆதரிக்காதோர் மரணத்துக்குட்படுத்தப்படுதல். ஏறக்குறைய கி.மு. 73–72.

1 அந்தப்படியே, ஏலமன் மற்றும் அவனுடைய சகோதரருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாத யாவரும் தங்கள் சகோதரருக்கு விரோதமாய்க் கூட்டப்பட்டார்கள்.

2 இப்பொழுதும் இதோ, அவர்கள் மிகவும் கோபமூண்டவர்களாய் அவர்களைக் கொன்றுபோடத் தீர்மானத்துடனிருந்தார்கள்.

3 இப்பொழுதும் தங்கள் சகோதரருக்கு விரோதமாய்க் கோபம் கொண்டவர்களின் தலைவன் பருத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவனுடைய பெயர் அமலேக்கியா என்பதாகும்.

4 ராஜாவாக வேண்டுமென அமலேக்கியா வாஞ்சையுள்ளவனாயிருந்தான். கோபம்கொண்டிருந்த ஜனங்களும், அவன் தங்கள் ராஜாவாக இருக்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்களில் அதிகமானோர் அத்தேசத்து கீழ்நிலை நியாயாதிபதிகளாய் இருந்தார்கள். அவர்கள் அதிகாரத்தை நாடினார்கள்.

5 அவர்கள் தன்னை ஆதரித்து, தங்களின் ராஜாவாக தன்னை ஏற்படுத்தினால், தான் அவர்களை ஜனங்களின்மேல் அதிகாரிகளாக்குவேன் என்ற அமலேக்கியாவின் இச்சகத்தினால் அவர்கள் நடத்தப்பட்டார்கள்.

6 ஏலமன் மற்றும் அவனுடைய சகோதரர் சபையின் பிரதான ஆசாரியர்களாய் இருந்து, சபைக்காக எடுத்துக்கொண்ட பெரும் பிரயாசத்தை பொருட்படுத்தாமலும், அவர்களுடைய பிரசங்கத்தையும் பொருட்படுத்தாமலும், அவர்கள் இப்படியாக அமலேக்கியாவினால் கலகம் பண்ணும்படி வழிநடத்தப்பட்டார்கள்.

7 சபையில் அமலேக்கியாவின் இச்சகமான வார்த்தைகளை விசுவாசித்த அநேகர் இருந்தார்கள். எனவே அவர்கள் சபையிலிருந்தும் பிரிந்து போனார்கள். இப்படியாக அவர்கள் லாமானியர் மத்தியில் பெற்றிருந்த பெரும் ஜெயத்தையும், கர்த்தருடைய கரத்தினால் விடுவிக்கப்பட்டதினிமித்தம் கொண்ட மிகுந்த களிகூருதல்களையும் பெற்றிருந்தாலும், நேபியின் ஜனங்களுடைய வர்த்தமானங்கள் மிகவும் நிலையற்றனவாயும், ஆபத்தானதாயும் இருந்தன.

8 இப்படியாக கர்த்தராகிய தங்கள் தேவனை, மனுபுத்திரர் எவ்வளவு சீக்கிரமாய் மறந்து போகிறார்களென்றும், ஆம், எவ்வளவு சீக்கிரமாய் அக்கிரமம் செய்து, பொல்லாதவனாலே வழிநடத்தப்படுகிறார்களென்றும் பார்க்கிறோம்.

9 ஆம், மனுபுத்திரர் மத்தியில் பெரும் துன்மார்க்கத்தை, ஒரு பயங்கர துன்மார்க்கன் விளைவிக்க முடியும், என்றும் பார்க்கிறோம்.

10 ஆம், அமலேக்கியா தந்திரமான மனுஷனாயும் அநேக இச்சக வார்த்தைகளைப் பேசுகிறவனாயும் இருந்தபடியாலே, தேவனுடைய சபையை அழிக்கவும், தேவன் தங்களுக்கு அளித்திருந்த, அல்லது அத்தேசத்தின் மேல் நீதிமான்களினிமித்தம் தேவன் அனுப்பியிருந்த ஆசீர்வாதமான சுதந்திரத்தின் அஸ்திபாரத்தை அதமாக்கவும் வகைதேடும் பொருட்டு, அநேக ஜனங்களின் உள்ளங்களை, துன்மார்க்கம் புரியும்படி நடத்திச் சென்றான்.

11 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியரின் சேனைகளுடைய சேனாதிபதியாயிருந்த மரோனி இந்த கலகங்களைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, அவன் அமலேக்கியாவின் மேல் கோபப்பட்டான்.

12 அந்தப்படியே, அவன் தன் மேல் அங்கியைக் கிழித்து அதிலிருந்து ஒரு பாகத்தை எடுத்து, அதின்மேல், எங்கள் தேவன், எங்கள் மார்க்கம், சுதந்திரம், எங்கள் சமாதானம், எங்கள் மனைவிகள், எங்கள் பிள்ளைகள் நினைவாக, என்று எழுதி அதை ஒரு கம்பின் நுனியிலே கட்டினான்.

13 அவன் தன் தலைக்கவசத்தையும், தன் மார்புக்கவசத்தையும், தன் கேடயங்களையும் அணிந்து, தனது அரைக்கச்சையைக் கட்டினான்; நுனியிலே அவனுடைய கிழிக்கப்பட்ட மேல் சட்டையிருந்த அந்த கம்பை எடுத்துக்கொண்டான்; (அதை அவன் சுதந்திரக் கொடி என்றழைத்தான்) அவன் தரைமட்டும் குனிந்து, தேசத்தைச் சுதந்தரிக்க ஒரு கிறிஸ்தவக் கூட்டம் நிலைத்திருக்குமட்டும், தனது சகோதரர் மீது சுதந்திரத்தின் ஆசீர்வாதங்கள் தங்கும்படியாக, தன் தேவனிடத்தில் ஊக்கமாய் ஜெபித்தான்.

14 ஏனெனில், தேவ சபையைச் சார்ந்த கிறிஸ்துவின் மெய்யான விசுவாசிகள் யாவரும், சபையைச் சார்ந்திராதவர்களால் இப்படியாக அழைக்கப்பட்டார்கள்.

15 சபையைச் சார்ந்தவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தார்கள்; ஆம், கிறிஸ்துவில் மெய்யான விசுவாசிகளாயிருந்த யாவரும் சந்தோஷத்தோடே, கிறிஸ்துவின் நாமத்தையும் அல்லது வரவிருக்கிற கிறிஸ்துவில் தங்கள் நம்பிக்கையின் நிமித்தம் கிறிஸ்தவர்கள் என்று தாங்கள் அழைக்கப்பட்டிருந்த நாமத்தையும் தங்கள் மேல் தரித்துக் கொண்டார்கள்.

16 ஆதலால் இச்சமயத்திலே, கிறிஸ்தவர்களினுடைய நோக்கமும், தேசத்தின் சுதந்திரமும் காக்கப்பட வேண்டுமென்று, மரோனி ஜெபித்தான்.

17 அந்தப்படியே, அவன் தன் ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றினபோது, அவன் பாழ்க்கடிப்பு தேசத்திற்குத் தெற்கே உள்ள தேச முழுவதிற்கும், ஆம், முடிவாக, வடக்கேயும், தெற்கேயுமான தேசமனைத்துக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தேசமென்றும், சுதந்திரத்தின் தேசமென்றும், பெயர் சூட்டினான்.

18 அவன்: மெய்யாகவே தேவன், கிறிஸ்துவினுடைய நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்வதினிமித்தம், நிந்திக்கப்படுகிற நாம், நம்முடைய சுய மீறுதல்களினால் அதை நம்மேல் கொண்டுவந்தாலொழிய, மிதிபட்டு அழிந்துபோக அனுமதியார், என்றான்.

19 மரோனி இவ்வார்த்தைகளைச் சொன்னபின்பு, அவன் ஜனங்கள் மத்தியில் சென்று, தன் வஸ்திரத்திலிருந்து கிழித்த பகுதியில், தான் எழுதின எழுத்துக்களை யாவரும் காணும்படியாய், கிழித்த பகுதியைக் காற்றிலே அசைத்து, உரத்த சத்தமாய்:

20 இதோ, இந்தக் கொடியை இத்தேசத்தின்மீது காக்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி, அவர்கள் கர்த்தருடைய பெலத்திலே முன்னே வந்து, தங்கள் உரிமைகளையும், தங்கள் மார்க்கத்தையும் காக்கும்படியான ஓர் உடன்படிக்கையினுள் பிரவேசிப்பார்களாக, என்றான்.

21 அந்தப்படியே, மரோனி இவ்வார்த்தைகளைப் பிரகடனப்படுத்தினபோது, இதோ, ஜனங்கள் தங்கள் அரைகளில் கட்டியிருந்த போர்க் கவசங்களோடே ஓடிவந்து, தாங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை கைவிடமாட்டோமென்பதற்கு ஓர் உடன்படிக்கையாக அல்லது ஓர் அடையாளமாக தங்கள் வஸ்திரங்களைக் கிழித்தார்கள்; வேறு வார்த்தைகளிலெனில், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை மீறினாலோ அல்லது மீறுதலினுள் விழுந்து கிறிஸ்துவின் நாமத்தைத் தங்கள் மீது தரித்துக் கொள்ள வெட்கப்பட்டாலோ, அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போட்டது போல, கர்த்தர் அவர்களைக் கிழித்துப் போடுவார்.

22 இப்பொழுதும் இதுவே அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கையாய் இருந்தது; அவர்கள் தங்கள் வஸ்திரங்களை மரோனியின் காலடியிலே போட்டு சொன்னதாவது: நாங்கள் மீறுதலினுள் விழுவோமெனில், வடக்கேயுள்ள தேசத்திலிருந்த எங்கள் சகோதரர் அழிக்கப்பட்டுப் போனதெப்படியோ, அப்படியே நாங்களும் அழிக்கப்பட்டுப்போவோம் என்று, எங்கள் தேவனோடு ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்கிறோம். ஆம், நாங்கள் மீறுதலினுள் விழுவோமெனில், பாதத்தினால் மிதிக்கப்படும் பொருட்டு, உமது பாதத்திலே எங்களுடைய வஸ்திரங்களை நாங்கள் போட்டதுபோல, அவர் எங்களை, எங்களுடைய சத்துருக்களின் பாதத்தில் விழப்பண்ணுவாராக.

23 மரோனி அவர்களை நோக்கி: இதோ, நாம் யாக்கோபின் சந்ததியினுடைய மீதியானோராய் இருக்கிறோம்; ஆம், நாம் யோசேப்பின் சந்ததியின் மீதியானோராயும் இருக்கிறோம்; அவனுடைய மேலங்கி அவன் சகோதரர்களால் பல துண்டுகளாகக் கிழிக்கப்பட்டது; ஆம், இப்பொழுதும் இதோ, நாம் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நினைவுகூருவோமாக. இல்லாவிடில் நம்முடைய வஸ்திரங்கள் நம்முடைய சகோதரர்களால் கிழிக்கப்பட்டு, நாமும் சிறையில் போடப்பட்டோ, விற்கப்பட்டோ, கொல்லப்பட்டோ போவோம்.

24 ஆம், யோசேப்பின் சந்ததியாரில் மீதியானோராக நாமும் நம்முடைய சுதந்திரத்தைக் காத்துக் கொள்வோமாக; ஆம், தன் மரணத்திற்கு முன்பாக யாக்கோபு சொன்ன வார்த்தைகளை நினைவு கூருவோமாக. ஏனெனில் இதோ, அவன் யோசேப்பின் வஸ்திரத்தில் மீதமானதின் ஒரு பகுதி அழிந்து போகாமல் காக்கப்பட்டதெனக் கண்டான். அவன் சொன்னதாவது, என் குமாரனுடைய இந்த அங்கியின் மிஞ்சிய பாகம் காக்கப்பட்டதைப்போல, தேவனுடைய கரத்தினால் என் குமாரனுடைய சந்ததியாரில் ஓர் பகுதியினரும் காக்கப்பட்டு, அவரிடம் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால் யோசேப்பினுடைய சந்ததியாரில் மற்ற மீதியானோரோ, அவனுடைய வஸ்திரத்தின் மிஞ்சியது அழிந்ததுபோல அழிந்து போவார்கள்.

25 இப்பொழுதும் இதோ, இது என் ஆத்துமாவுக்கு துக்கம் கொடுக்கிறது; ஆயினும் என் குமாரனுடைய சந்ததியின் அந்த பாகமானது தேவனுக்கென்று எடுத்துக் கொள்ளப்படுவதால், என் ஆத்துமா அவனில் சந்தோஷப்படுகிறது.

26 இப்பொழுதும் இதோ, இதுவே யாக்கோபின் கூற்றாயிருந்தது.

27 இப்பொழுதும் யாரறிவார்கள். யோசேப்பினுடைய சந்ததியாரில் மீதியானவர்கள், அவனுடைய வஸ்திரத்தைப்போல அழிந்து போவார்கள் என்பது, நம்மிலிருந்து பிரிந்து போனவர்களாயுமிருக்கலாம் அல்லவா? ஆம், நாமும் கிறிஸ்துவின் விசுவாசத்தில் நிலையாய் நில்லாமற் போனால் அது நாமாகவுமிருக்கலாம், என்றான்.

28 இப்பொழுதும், அந்தப்படியே, மரோனி இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, அவன் போய் கலகங்கள் நடந்த தேசத்தின் எல்லா பகுதிகளுக்கும் ஆள் அனுப்பி அமலேக்கியாவிற்கும், அமலேக்கியர் என்றழைக்கப்பட்ட கலகம் செய்தவர்களுக்கும் விரோதமாக நின்று, தங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கும் சகல ஜனங்களையும் ஏகமாய்க் கூடிவரச் செய்தான்.

29 அந்தப்படியே, மரோனியின் ஜனங்கள் அமலேக்கியரைக் காட்டிலும் மிகவும் அதிகமானோராய் இருந்ததைக் கண்டும், தாங்கள் எடுத்திருந்த செயல் நியாயமானதோ என்று தன் ஜனங்கள் சந்தேகப்பட்டிருந்ததையும் கண்டபோது, அமலேக்கியா தன் நோக்கம் பலனளிக்காது என்று பயந்து, தன் ஜனங்களில் தன்னோடு வரவிரும்புகிறவர்களைக் கூட்டிக்கொண்டு நேபியின் தேசத்திற்குள்ளே புறப்பட்டுப் போனான்.

30 இப்பொழுது லாமானியர் இதற்கும் அதிகமாய் பெலத்தைப் பெற்றிருக்க அவசியமில்லை, என மரோனி கருதினான்; ஆதலால் அவன் அமலேக்கியாவின் ஜனங்களைத் தள்ளிவிடவோ, அவர்களைப் பிடித்துத் திரும்பக் கொண்டுவந்து, அமலேக்கியாவை மரணத்திற்குள்ளாக்கவோ, நினைத்தான்; ஆம், ஏனெனில் அவன் லாமானியரைத் தங்களுக்கு விரோதமாய் கோபமூளத் தூண்டி, தங்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வரும்படி செய்வான், என்று அவன் அறிந்திருந்தான்; அமலேக்கியா தனது நோக்கங்களை நிறைவேறப்பண்ணும்படி இதைச் செய்வான் என்றும், அறிந்திருந்தான்.

31 ஆதலால் மரோனி, படைக்கவசம் அணிந்தவர்களும், சமாதானத்தைக் கைக்கொள்ளும்படி ஓர் உடன்படிக்கையினுள் பிரவேசித்தவர்களும், ஏகமாய்க் கூடியிருந்தவர்களுமாகிய தன் சேனைகளை நடத்திச் செல்வது அவசியமெனக் கண்டான். அந்தப்படியே, வனாந்தரத்தில் அமலேக்கியாவின் மார்க்கத்தை மாற்றிப்போட அவன் தன் சேனைகளைக் கூட்டிக்கொண்டு, தன் கூடாரங்களை எடுத்துக்கொண்டு வெளியேறி வனாந்தரத்தினுள் அணிவகுத்தான்.

32 அந்தப்படியே, அவன் தன் விருப்பங்களுக்கேற்ப செய்து, வனாந்தரத்தினுள் அணிவகுத்துப்போய், அமலேக்கியாவின் சேனைகளை தடுத்து நிறுத்தினான்.

33 அந்தப்படியே, அமலேக்கியா தனது மனுஷர் சிலருடன் ஓடிப்போனான். மீதியானோர் மரோனியின் கைகளுக்குள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் சாரகெம்லா தேசத்திற்குள்ளாக மறுபடியும் எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

34 மரோனி, பிரதான நியாயதிபதிகளாலும், ஜனங்களினுடைய விருப்பத்தின்படியேயும் நியமிக்கப்பட்ட மனுஷனாயிருந்தபடியினால், நேபியரின் சேனைகள் மேல் தன் விருப்பத்தின்படியே அதிகாரத்தை நிலைநாட்டவும், பிரயோகிக்கவும், அவர்களுடைய சேனையைத் தன் விருப்பத்தின்படி நடத்தவும், அவனுக்கு அதிகாரம் இருந்தது.

35 அந்தப்படியே, அவர்கள் ஓர் சுதந்திர ராஜாங்கத்தைப் பாதுகாக்கும்படி, சுதந்தர நோக்கத்தை ஆதரிக்கத்தக்கதாக, ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசிக்காத அமலேக்கியர் எவரையும், அவன் மரணத்திற்குள்ளாகச் செய்தான்; அங்கு சிலர் மாத்திரம் சுதந்திர உடன்படிக்கைகளை மறுத்தார்கள்.

36 மேலும், அந்தப்படியே, நேபியர்களினால் சுதந்தரிக்கப்பட்ட தேசமனைத்திலும் இருந்த கோபுரம் ஒவ்வொன்றின் மேலும் அவன் சுதந்திரக்கொடி ஏற்றப்படும்படிச் செய்தான். இப்படியாக மரோனி நேபியர் மத்தியில் சுதந்திரக் கொடியை நாட்டினான்.

37 அவர்கள் மறுபடியும் தேசத்திலே சமாதானத்தைப் பெறலானார்கள்; இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஏறக்குறைய பத்தொன்பதாம் வருஷ முடிவு வரைக்கும் தேசத்திலே சமாதானத்தைக் காத்தார்கள்.

38 ஏலமனும், பிரதான ஆசாரியர்களும் சபையிலே ஒழுங்கைக் காத்தார்கள். ஆம், நான்கு வருஷ காலமளவும் அவர்கள் சபையிலே மிகுந்த சமாதானத்தையும், களிகூருதலையும் பெற்றார்கள்.

39 அந்தப்படியே, தங்கள் ஆத்துமாக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டதென்று உறுதியாய் நம்பி, மரித்தவர்கள் அநேகர் இருந்தார்கள்; இப்படியாக அவர்கள் மகிழ்ச்சியோடே உலகத்தை விட்டுப் போனார்கள்.

40 அத்தேசத்தில், வருஷத்தின் சில காலங்களில் அடிக்கடி வந்த ஜுரத்தினால் சிலர் மரித்துப் போனார்கள். ஆனாலும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மனுஷனுக்கு ஏற்படுகிற வியாதிகளை நீக்க தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த, சிறந்த குணத்தன்மைகளைக் கொண்ட அநேக செடிகளும், வேர்களும், இருந்தபடியால் அதிகமானோர் ஜுரத்தினால் மரித்துப் போகவில்லை.

41 ஆனால் அங்கே அதிகமானோர் முதிர்வயதடைந்து மரித்துப் போனார்கள்; கிறிஸ்துவின் விசுவாசத்தில் மரித்தோர், நாமும் நினைக்க வேண்டியது போலவே, அவரில் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.