வேதங்கள்
ஆல்மா 47


அதிகாரம் 47

அமலேக்கியா லாமானியரின் ராஜாவாகும்படி துரோகத்தையும், கொலையையும் மற்றும் கபடமான காரியங்களையும் கையாளுதல் – லாமானியரைக் காட்டிலும் நேபிய கலகக்காரர்கள் அதிக துன்மார்க்கர்களாயும், கொடூரர்களாயும் இருத்தல் – ஏறக்குறைய கி.மு. 72.

1 இப்பொழுதும் நாம் அமலேக்கியாவைப்பற்றியும், அவனோடுகூட வனாந்தரத்தினுள் ஓடிப்போனவர்களைப் பற்றியுமான நம் விவரத்திற்குத் திரும்புவோம்; ஏனெனில் இதோ, அவன் தன்னோடு சென்றவர்களைக் கூட்டிக்கொண்டு, நேபியின் தேசத்திலிருந்த லாமானியருக்குள்ளே போய், லாமானியர்களின் ராஜா, தன் ஜனங்கள் யாவரும் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போக மறுபடியும் ஏகமாய்த் திரளும்படியான ஓர் பிரகடனத்தை அவர்களுக்குள்ளே தன் தேசம் முழுவதுமாய் அனுப்புமளவிற்கு, லாமானியரை நேபியின் ஜனங்களுக்கு விரோதமாய் கோபம் கொள்ளும்படி தூண்டிவிட்டான்.

2 அந்தப்படியே, இந்தப் பிரகடனம் அவர்களுக்குள்ளே போனபோது அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஆம், அவர்கள் ராஜாவுக்கு வெறுப்புண்டாக்கப் பயந்தார்கள். அவர்கள் நேபியருக்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போய், தங்களுடைய ஜீவன்களை இழந்து போவோமோ, என்று பயந்தார்கள். அந்தப்படியே, அவர்கள் அல்லது அவர்களில் அநேகர் ராஜாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை.

3 இப்பொழுதும், அந்தப்படியே, ராஜா அவர்களுடைய கீழ்ப்படியாமையினிமித்தம் கோபம் கொண்டான்; ஆதலால் அவன் தன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த தன் சேனையின் அந்தப் பகுதியின் அதிகாரத்தை அமலேக்கியாவிற்கு கொடுத்து, அவன் போய் அவர்களை யுத்தத்திற்கு வரும்படியாக கட்டாயப்படுத்தவேண்டுமென்று, அவனுக்குக் கட்டளையிட்டான்.

4 இப்பொழுதும் இதோ, இதுவே அமலேக்கியாவின் விருப்பமாயிருந்தது; அவன் பொல்லாப்பைச் செய்வதில் மிகவும் தந்திரக்காரனாய் இருந்தபடியாலே, அவன் லாமானியரின் ராஜாவை சிங்காசனத்தைவிட்டு அகற்ற தன் இருதயத்திலே திட்டம் வகுத்தான்.

5 இப்பொழுதும் ராஜாவுக்கு ஆதரவாயிருந்த லாமானியக் குழுக்களின் மேலான அதிகாரத்தை அவன் பெற்றிருந்தான்; கீழ்ப்படியாதிருந்தவர்களின் ஆதரவையும் பெறும்படிக்கு வகை தேடினான். ஆதலால் சகல லாமானியர்களும் பறந்தோடின இடமான ஓனிடா என்றழைக்கப்பட்ட இடத்திற்கு அவன் போனான்; அவர்கள் சேனை வருவதைக் கண்டதால், தங்களை அழிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, யுத்தக் கருவிகளிருந்த இடமான ஓனிடாவிற்கு ஓடினார்கள்.

6 தாங்கள் நேபியர்களுக்கு விரோதமாய்ப் போக வைக்கப்படுவதில்லை, என்ற உறுதியான முடிவோடு தங்கள் மனதில் தீர்மானமாயிருந்து, அவர்கள் தங்கள்மேல் ஒரு மனுஷனை ராஜாவாகவும் தலைவனாகவும் நியமித்தார்கள்.

7 அந்தப்படியே, அவர்கள் யுத்தத்திற்கு ஆயத்தமாகும்படிக்கு, அந்திப்பா என்றழைக்கப்பட்ட மலையின் உச்சியின்மேல் ஏகமாய்க் கூடியிருந்தார்கள்.

8 இப்பொழுதும் ராஜாவின் கட்டளைகளின்படி, அவர்கள்மேல் போர் தொடுப்பது அமலேக்கியாவின் எண்ணமல்ல. ஆனால் இதோ, லாமானியர்களுடைய சேனைகளின் ஆதரவைப் பெற்று, தன்னை அவர்களின் தலைமையாக வைத்து, ராஜாவை சிங்காசனத்திலிருந்து நீக்கி, ராஜ்யத்தை அடைவதே இவனுடைய நோக்கமாயிருந்தது.

9 இதோ, அந்தப்படியே, அவன் தன் சேனை அந்திப்பா மலையருகே உள்ள பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கும்படிக்குச் செய்தான்.

10 அந்தப்படியே, இரவு வந்தபோது இவன் அந்திப்பா மலையில்மேல் உள்ளவர்களின் தலைவனாகிய, லேகோன்தி என்ற நாமம் தரித்தவனிடம் பேச வாஞ்சித்தவனாய், அவனை மலையின் அடிவாரத்திற்கு வரும்படிக்கு இரகசிய தூதுவர்களை அனுப்பினான்.

11 அந்தப்படியே, லேகோன்தி இந்தச் செய்தியைப் பெற்றபோது அவன் மலையின் அடிவாரத்திற்குப் போக பயந்தான். அந்தப்படியே, அவன் கீழே வரும்படி விரும்பி, மறுபடியுமாக இரண்டாம் விசையும் அமலேக்கியா ஆள் அனுப்பினான். அந்தப்படியே, லேகோன்தி வரவில்லை. மூன்றாம் விசையாய் அவன் மறுபடியும் ஆள் அனுப்பினான்.

12 அந்தப்படியே, லேகோன்தியை மலையைவிட்டு கீழே வரவைக்க முடியாதென்று அமலேக்கியா கண்டபோது, அவன் மலையின்மேல் ஏறி, லேகோன்தியின் கூடாரம் மட்டுமாய்ப் போனான், இவன் லேகோன்தி கீழே வரவேண்டுமென்றும், அவனுடனே அவனுடைய காவற்காரரைக்கூட்டி வரலாம் என்றும் விரும்பி, தன் செய்தியை மறுபடியும் நான்காவது விசையாய் அவனுக்கு அனுப்பினான்.

13 அந்தப்படியே, லேகோன்தி தன் காவலாளிகளுடன் அமலேக்கியாவினிடத்தில் கீழே வந்தபோது, அவன் தன் சேனையோடு இரவு வேளையில் கீழே வந்து, தனக்கு ராஜா கொடுத்திருந்த அதிகாரத்திற்குட்பட்ட அந்த மனுஷரை அவர்களுடைய முகாம்களில் முற்றுகைபோட வேண்டுமென அமலேக்கியா விரும்பி, தன்னை லேகோன்தி முழு சேனைக்கும் இரண்டாம் தலைவனாக்கினால், அவர்களை அவன் கைகளுக்குள் ஒப்படைப்பதாகச் சொன்னான்.

14 அந்தப்படியே, லேகோன்தி தன் மனுஷருடனே கீழே வந்து, அமலேக்கியாவின் மனுஷரைச் சூழ்ந்து கொண்டான், அதினாலே அவர்கள் விடியற்காலையிலே எழும்பும் முன்பே லேகோன்தியின் சேனைகளால் சூழப்பட்டிருந்தார்கள்.

15 அந்தப்படியே, தாங்கள் சூழப்பட்டதை அவர்கள் கண்டபோது, தாங்கள் அழிக்கப்பட்டுப் போகாதபடிக்கு தங்கள் சகோதரரிடத்தில் தாங்களும் சேரும்பொருட்டு, அமலேக்கியாவினிடத்தில் கெஞ்சினார்கள். இப்பொழுதும், அமலேக்கியா விரும்பிய காரியமும் இதுவேதான்.

16 அந்தப்படியே, அவன் ராஜாவின் கட்டளைகளுக்கு நேர்மாறாக தன் மனுஷரை ஒப்படைத்தான். இப்பொழுதும் அமலேக்கியா, ராஜாவை சிங்காசனத்தைவிட்டு கீழிறக்க வேண்டுமென்ற தனது திட்டங்களை தான் நிறைவேற்றும்படி, அவன் விரும்பின காரியமும் இதுவே.

17 தங்களுடைய முதல் தலைவன் கொல்லப்பட்டுப் போனால், இரண்டாம் தலைவனைத் தங்களின் முதல் தலைவனாயிருக்கும்படி நியமிப்பது, இப்பொழுது லாமானியருக்குள்ளே வழக்கமாயிருந்தது.

18 அந்தப்படியே, அமலேக்கியா தன் வேலையாட்களில் ஒருவன் லேகோன்திக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் விஷத்தைக் கொடுக்கும்படிச் செய்தான், அதனால் அவன் மரித்துப் போனான்.

19 இப்பொழுதும் லேகோன்தி செத்த பின்பு, லாமானியர் அமலேக்கியாவை தங்களின் தலைவனாகவும், தங்களின் சேனாதிபதியாகவும், நியமித்துக் கொண்டார்கள்.

20 அந்தப்படியே, அமலேக்கியா தன் படைகளுடன் (தன் வாஞ்சையின்படியே ஆதாயப்படுத்திக் கொண்டபடியினாலே) நேபியின் தேசத்திலுள்ள பிரதான நகரமான நேபியின் நகரத்திற்கு அணிவகுத்துச் சென்றான்.

21 அமலேக்கியா தன் கட்டளைகளை நிறைவேற்றினான் என்றும், நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ண இவ்வளவு பெரிய சேனையை அமலேக்கியா ஏகமாய்க் கூட்டியிருக்கிறான் என்றும், ராஜா எண்ணியதால், அவனைச் சந்திக்க தன் காவற்காரருடன் வெளியே வந்தான்.

22 ஆனால் இதோ, ராஜா அவனைச் சந்திக்க வெளியே வந்தபோது, அமலேக்கியா ராஜாவை சந்திக்கும்படி தன்னுடைய வேலைக்காரர்கள் முன்னே போகும்படி செய்தான். அவர்கள் போய் ராஜாவின் மகத்துவத்தினிமித்தம் அவனுக்கு மரியாதை செலுத்துவதைப் போல, அவன் முன்பு வணங்கி நின்றார்கள்.

23 அந்தப்படியே, ராஜா அவர்களை எழுப்பும்படிக்கு, சமாதானத்திற்கு அடையாளமாக நேபியரிடமிருந்து கற்ற, லாமானியரிடம் இருந்த வழக்கத்தின்படியே தன் கையை நீட்டினான்.

24 அந்தப்படியே, அவன் முதலாவது மனுஷனை தரையிலிருந்து உயர்த்தியபோது, இதோ அவன் ராஜாவை இருதயம் வரைக்குமாய் குத்தினான்; அவன் பூமியில் விழுந்தான்.

25 இப்பொழுது ராஜாவின் வேலையாட்கள் ஓடினார்கள்; அமலேக்கியாவின் வேலையாட்கள் உரத்த சத்தமாய்:

26 இதோ, ராஜாவின் வேலையாட்கள் அவரை இருதயத்தில் குத்திவிட்டார்கள், அவர் விழுந்து போனார், அவர்களோ ஓடிப்போய்விட்டார்கள்; இதோ, வந்து பாருங்கள் என்றார்கள்.

27 அந்தப்படியே, தன் படைகள் முன்னே அணிவகுத்துப்போய், ராஜாவிற்கு என்னவாயிற்றென்று காணவேண்டுமென்று, அமலேக்கியா கட்டளையிட்டான்; அவர்கள் அவ்விடத்திற்கு வந்து, ராஜா தன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டபோது, அமலேக்கியா கோபம் கொண்டவனைப்போல நடித்து, ராஜாவை நேசித்த எவனும் அவருடைய வேலையாட்கள் கொல்லப்படும்படி, போவானாக என்றான்.

28 அந்தப்படியே, ராஜாவை நேசித்த யாவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, முன்வந்து ராஜாவின் வேலையாட்களைப் பின் தொடர்ந்தார்கள்.

29 இப்பொழுதும் ராஜாவின் வேலையாட்கள் தங்களை ஒரு சேனை பின் தொடர்ந்து வருவதைக் கண்டு, மறுபடியும் பயந்து வனாந்தரத்தினுள் ஓடிப்போய், சாரகெம்லா தேசத்தினுள் புகுந்து அம்மோனின் ஜனங்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

30 அவர்களைப் பின் தொடர்ந்த சேனை, விருதாவாய் அவர்களைப் பின்தொடர்ந்து திரும்பினார்கள்; அமலேக்கியா இப்படியாய் தனது வஞ்சகத்தினால், ஜனங்களின் மனதை ஆதாயப்படுத்திக் கொண்டான்.

31 அந்தப்படியே, மறுநாள் அவன் தன் சேனைகளோடு நேபியின் பட்டணத்தினுள் பிரவேசித்து, பட்டணத்தை தன் வசமாக்கினான்.

32 இப்பொழுதும், அந்தப்படியே, ராஜா கொல்லப்பட்டதை இராஜ ஸ்திரீ கேள்விப்பட்டபோது, ராஜா தன் வேலையாட்களால் கொல்லப்பட்டான் என்றும், தான் அவர்களைத் தன் சேனையோடு துரத்தினதாகவும், அது வீணாய்ப் போயிற்றென்றும், அவர்கள் தப்பித்துப் போனார்கள் என்றும் ராஜஸ்திரீயினடத்தில் அறிவிக்கத்தக்கதாக, அமலேக்கியா தூதுவர்களை அனுப்பியிருந்தான்.

33 எனவே ராஜஸ்திரீ இந்த செய்தியைப் பெற்றபோது, நகரத்தின் ஜனங்களை அமலேக்கியா காக்க வேண்டுமென்றும், அவன் தன்னிடம் வரவேண்டுமெனவும் தன் விருப்பம் அடங்கிய செய்தியை அவனுக்கு அனுப்பினாள். அவன் ராஜாவின் மரணத்தைக் குறித்து சாட்சி கொடுக்க தன்னோடு சாட்சிகளைக் கூட்டிக்கொண்டு வரவேண்டுமெனவும் விரும்பினாள்.

34 அந்தப்படியே, அமலேக்கியா ராஜாவைக் கொன்ற அதே வேலைக்காரனையும், அவனோடு இருந்த அனைவரையும் கூட்டிக்கொண்டு, ராஜஸ்திரீ அமர்ந்திருந்த இடத்திற்குப் போனான். அவர்கள் அனைவரும் ராஜா தன்னுடைய சொந்த வேலைக்காரரால் கொல்லப்பட்டார், என்று அவளுக்குச் சாட்சி கொடுத்தார்கள்; அவர்கள் யாவரும் ஓடிப்போனார்கள். இது அவர்களுக்கு விரோதமாய் சாட்சி கூறவில்லையா என்று சொன்னார்கள். இப்படியாக அவர்கள் ராஜாவின் மரணத்தைக் குறித்து ராஜஸ்திரீயை திருப்தியடையச் செய்தார்கள்.

35 அந்தப்படியே, அமலேக்கியா ராஜஸ்திரீயின் ஆதரவை நாடி, அவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். இப்படியாக அவன் தன் வஞ்சகத்தினிமித்தமும், தன் தந்திரமான வேலையாட்களின் உதவியின் மூலமும், ராஜ்யத்தை அடைந்து கொண்டான். ஆம், அவன் தேசம் முழுவதிலும், லாமானியர், லெமுவேலர், இஸ்மவேலர், மற்றும் நேபியின் ஆளுகை துவங்கி, இக்காலம் வரைக்குமாய் நேபியர்களிலிருந்து பிரிந்து போன அனைத்து கலகக்காரருமாகிய, சகல லாமானியர்களின் ஜனங்களுக்குள்ளும் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டான்.

36 இப்பொழுதும் இந்தக் கலகக்காரர்கள், நேபியர்களின் அதே அறிவுரைகளையும், அதே போதனைகளையும் பெற்றிருந்தும், ஆம், கர்த்தருடைய அதே அறிவில் அறிவுறுத்தப்பட்டிருந்தும், ஒப்பிடுவதற்கு வினோதமாக, அவர்களுடைய கலகங்களுக்கு பின்பு சில காலத்திற்குள்ளாகவே அவர்கள் அதிக கடினமுள்ளவர்களாயும், மனந்திரும்பாதோராயும், லாமானியரை மிஞ்சின பொல்லாதோராயும், துன்மார்க்கராயும், ஆக்கிரோஷமுள்ளவராயும், லாமானிய பாரம்பரியங்களில் பானம்பண்ணி, சோம்பலுக்கும் எல்லாவித காமவிகாரத்திற்கும் இடம் கொடுத்தார்கள்; ஆம், தேவனாகிய தங்கள் கர்த்தரை, முற்றிலும் மறந்தே போனார்கள்.