அதிகாரம் 50
மரோனி நேபியர்களின் தேசங்களில் அரண்களைக் கட்டுதல் – அவர்கள் அநேக புதிய பட்டணங்களை எழுப்புதல் – நேபியரின் துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளின் காலங்களில் யுத்தங்களும் அழிவுகளும் அவர்கள் மேல் வருதல் – மோரியாந்தன் மற்றும் அவனுடைய கலகக்காரர்கள், தியான்குமினால் வீழ்த்தப்படுதல் – நேபிகா மரித்தலும், அவனுடைய குமாரன் பகோரன் நியாயாசனத்தை ஏற்றுக் கொள்ளுதலும். ஏறக்குறைய கி.மு. 72–67.
1 இப்பொழுது, அந்தப்படியே, மரோனி யுத்தத்திற்கான ஆயத்தங்களையோ, லாமானியருக்கு விரோதமாய்த் தன் ஜனத்தை தற்காத்துக்கொள்வதையோ, நிறுத்தி விடவில்லை; ஏனெனில் நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபதாவது வருஷத்தின் துவக்கத்திலே, நேபியரின் வசமிருந்த தேசமனைத்திலும், சகல பட்டணங்களைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி குவிக்கும் வேலையின் தொடக்கத்தைத் தன் சேனைகள் தொடங்கும்படிச் செய்தான்.
2 இம்மண் குவியல்களின் உச்சிவிளிம்பிலே மரத்தடுப்புகள் இருக்கும்படியும், ஆம், பட்டணங்களைச் சுற்றியும் ஆள் உயரத்திற்கு மரத்தடுப்புகள் எழுப்பும்படி செய்தான்.
3 அந்த மரத்தடுப்பின் மேல் சுற்றிலும் முளைக் கால்கள் வைக்கப்படும்படி செய்தான்; அவைகள் பலமுடையனவாயும் உயரமாயுமிருந்தன.
4 அவன் அந்த முளைக்கால்களின் உயரத்திற்கு மேலாக கோபுரங்கள் எழுப்பும்படிச் செய்தான்; அவன் லாமானியருடைய கற்களும், அம்புகளும், அவர்களைக் காயப்படுத்த முடியாதபடிக்கு, அக்கோபுரங்களின் மேல் பாதுகாப்பு ஸ்தலங்களைக் கட்டும்படிச் செய்தான்.
5 அதன் மேலிருந்து தங்களுடைய சௌகரியத்துக்கும், தங்களுடைய பெலத்திற்குமேற்ப, பட்டணத்துச் சுவர்களை நெருங்க முயற்சிக்கும் எவனையும், கற்களை எறிந்து கொல்ல அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.
6 இப்படியாக தேசமுழுவதிலும் உள்ள ஒவ்வொரு பட்டணத்தைச் சுற்றியும், மரோனி தங்கள் விரோதிகளின் வருகையை எதிர்க்க அலங்கங்களை ஆயத்தப்படுத்தினான்.
7 அந்தப்படியே, மரோனி தன் சேனைகள் கிழக்கு வனாந்தரத்தினுள் போகவேண்டுமென கட்டளையிட்டான்; ஆம், அவர்கள் போய் கிழக்கு வனாந்தரத்திலிருந்த லாமானியர் அனைவரையும், சாரகெம்லா தேசத்திற்குத் தெற்கே இருந்த அவர்களுடைய சொந்த தேசத்திற்குள் துரத்தினார்கள்.
8 நேபியின் தேசம் கிழக்கு சமுத்திரம் தொடங்கி, நேர் மார்க்கமாய் மேற்கு சமுத்திரம் வரைக்கும் நீண்டிருந்தது.
9 அந்தப்படியே, மரோனி தங்கள் வசமிருந்த தேசங்களுக்கு வடக்கே உள்ள, கிழக்கு வனாந்தரத்திலிருந்து சகல லாமானியரையும் துரத்தி, சாரகெம்லா தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள தேசத்திலும் இருந்த குடிகளை, கடற்கரையின் எல்லைவரை, கிழக்கு வனாந்தரத்தினுள் சென்று, தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிச் செய்தான்.
10 அவன் சேனைகளைத் தெற்கில் தங்கள் வசமிருந்தவைகளின் எல்லைகளில் நிறுத்தி, தங்கள் விரோதிகளின் கைகளிலிருந்து தங்களுடைய சேனைகளையும், தங்களுடைய ஜனத்தையும் பாதுகாக்கும்படி கொத்தளங்களை அவர்கள் கட்டும்படி செய்தான்.
11 இப்படியாக அவன் கிழக்கு வனாந்தரத்திலும் மேற்கு வனாந்தரத்திலுமாக இருந்த லாமானியரின் கொத்தளங்களை அகற்றி, ஆம், சாரகெம்லா தேசத்திற்கும் நேபியரின் தேசத்திற்குமிடையே, மேற்கு சமுத்திரம் தொடங்கி சீதோன் நதியின் ஊற்று வரை நீண்ட, நேபியருக்கும் லாமானியருக்கும் இடையேயான எல்லைகளில் அரண்களை எழுப்பினான். நேபியர்கள் வடக்கேயுள்ள சகல தேசத்தையும், ஆம், தங்கள் இஷ்டப்படியே உதாரத்துவஸ்தலத்தின் வடக்கேயுள்ள தேசம் முழுவதையும் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள்.
12 இப்படியாக மரோனி, தன் கிரியைகளினாலே தனது சேனைகளுக்குக் கொடுத்த பாதுகாப்பின் நிச்சயத்தினிமித்தம், அனுதினமும் வளர்ந்துவந்த அவர்களைக்கொண்டு, தங்கள் வசமிருந்த தேசங்களின்மேல், லாமானியருக்கு எந்த அதிகாரமும் இராதபடிக்கு, அவர்களுடைய வசமிருக்கிற தேசங்களிலிருந்து அவர்களின் பெலத்தையும், அதிகாரத்தையும் எடுத்துப் போடும்படி வகைதேடினான்.
13 அந்தப்படியே, நேபியர் ஒரு பட்டணத்திற்கு அஸ்திபாரம் போடத் துவங்கினார்கள். அந்தப் பட்டணத்தை மரோனி என்று அழைத்தார்கள்; அது கிழக்கு சமுத்திரம் பக்கமாய் இருந்தது; அது தெற்கே லாமானியர் வசமிருந்தவைகளின் எல்லைக்கோட்டுக்கு அருகாமையிலிருந்தது.
14 அவர்கள் மரோனி பட்டணத்திற்கும் ஆரோன் பட்டணத்திற்கும் இடையே, அவைகளின் எல்லைகளை இணைத்து ஒரு பட்டணத்திற்கான அஸ்திபாரத்தையும் போடத்துவங்கினார்கள்; அப்பட்டணத்தை அல்லது அந்த தேசத்தை நேபிகா என்றழைத்தார்கள்.
15 அதே வருஷத்தில் அவர்கள் வடக்கே அநேக பட்டணங்களைக் கட்டத் துவங்கினார்கள், கடற்கரையோரங்களில் வடக்கே, லேகி என்று அவர்கள் அழைத்த ஒரு பட்டணத்தை விசேஷித்த விதமாக கட்டினார்கள்.
16 இப்படியாக இருபதாவது வருஷமும் முடிவுற்றது.
17 நேபியின் ஜனங்களின் மீதான நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தொன்றாவது வருஷத்தின் துவக்கத்தில், நேபியின் ஜனங்கள் இச்செழுமையான சூழ்நிலைகளில் இருந்தார்கள்.
18 அவர்கள் மிகவும் விருத்தியடைந்து, அவர்கள் மிகவும் ஐஸ்வர்யவான்களானார்கள்; ஆம், அவர்கள் பெருகி, தேசத்திலே பெலப்பட்டார்கள்.
19 இப்படியாக கர்த்தர் மனுபுத்திரரிடத்தில் தம்முடைய வார்த்தைகள் யாவும் நிறைவேறும்படிக்கு, அவருடைய கிரியைகள் அனைத்தும் எவ்வளவு இரக்கமும் நியாயமும் உள்ளவையாயிருக்கின்றன, என்று நாம் காண்கிறோம்; ஆம், இந்த நேரத்திலும் கூட அவர் லேகியிடம் சொன்ன அவருடைய வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம்:
20 நீயும் உன் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில், தேசத்தில் விருத்தியடைந்து ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிற அளவில், அவர்கள் கர்த்தரின் பிரசன்னத்தினின்று அறுப்புண்டு போவார்கள்.
21 இந்த வாக்குத்தத்தங்கள் நேபியின் ஜனங்களுக்கு நிரூபிக்கப்பட்டன என்று நாம் பார்க்கிறோம்; ஏனெனில் அவர்களுக்குள்ளிருந்த அவர்களுடைய சண்டைகள், அவர்களுடைய பிணக்குகள், ஆம், அவர்களுடைய கொலைபாதகங்கள், அவர்களுடைய கொள்ளை, அவர்களுடைய விக்கிரக ஆராதனை, அவர்களுடைய வேசித்தனம், அவர்களுடைய அருவருப்புகள், ஆகியவைகளே அவர்கள் மேல் அவர்களின் யுத்தங்களையும் அவர்களின் அழிவுகளையும் கொண்டு வந்தன.
22 கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதிலே உண்மையாயிருந்தவர்கள் எல்லா நேரங்களிலும் விடுவிக்கப்பட்டனர், ஆனால் அவர்களுடைய ஆயிரக்கணக்கான துன்மார்க்க சகோதரர் அடிமைத்தனத்திற்கோ, பட்டயத்தினால் அழிக்கப்படவோ, அல்லது அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து லாமானியரோடு கலந்துபோகவோ விடப்பட்டனர்.
23 ஆனால் இதோ நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தோராம் வருஷமாகிய இக்காலத்தில், மரோனியின் நாட்களைக் காட்டிலும் ஒரு அதிக மகிழ்ச்சியான காலம், நேபியின் ஜனங்களுக்குள்ளே நேபியின் நாட்கள் முதற்கொண்டு, ஒருபோதும் இருந்ததில்லை.
24 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்திரண்டாம் வருஷமும் சமாதானமாய் முடிவுற்றது. ஆம் அப்படியே இருபத்தி மூன்றாம் வருஷமும் முடிவுற்றது.
25 அந்தப்படியே, அத்தேசங்கள் இரண்டும் கடற்கரையோரமாய் அமைந்திருந்த, லேகியின் தேசத்தைக் குறித்தும், லேகியின் எல்லைகளுக்கு அடுத்ததாயிருந்த மோரியாந்தன் தேசத்தைக் குறித்தும், நேபியருக்குள்ளே நடந்த பிணக்கு இல்லாதிருந்திருக்குமேயானால், அவர்களினிடையே நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி நான்காம் வருஷத்தின் துவக்கத்திலேயும் சமாதானம் நிலவியிருந்திருக்கும்.
26 ஏனெனில் இதோ, மோரியாந்தன் தேசத்தைச் சுதந்தரித்த ஜனங்கள் லேகியின் தேசத்தில் ஒரு பகுதியைக் கோரினார்கள்; ஆதலால் மோரியாந்தன் ஜனங்கள், தங்கள் சகோதரருக்கு விரோதமாய் ஆயுதங்களை எடுத்து அவர்களைப் பட்டயத்தினால் மடியப்பண்ண உறுதியாயிருக்குமளவிற்கு, அவர்களுக்குள்ளே சூடான பிணக்கு துவங்கியது.
27 ஆனால் இதோ, லேகியின் தேசத்தைச் சுதந்தரித்தோர் மரோனியின் பாளயத்திற்கு ஓடிப்போய், உதவிக்காக அவனிடம் விண்ணப்பம் செய்தார்கள்; ஏனெனில் இதோ, அவர்களிடத்தில் எந்தத் தவறும் காணப்படவில்லை.
28 அந்தப்படியே, லேகியின் ஜனங்கள் மரோனியின் பாளையத்திற்கு பறந்தோடினார்கள் என்று, மோரியாந்தன் என்ற நாமம் கொண்ட மனுஷனால் வழிநடத்தப்பட்ட மோரியாந்தன் ஜனங்கள், கண்டபோது, மரோனியின் சேனை தங்கள் மேல் விழுந்து, தங்களை அழித்துவிடுமோ என்று மிகவும் பயந்தார்கள்.
29 ஆதலால், மோரியாந்தன் அவர்களை வடக்கே பரந்த தண்ணீர் நிலைகளால் சூழப்பட்டிருந்த தேசத்திற்குப் பறந்தோடி, அந்த வடதேசத்தை வசமாக்க, அவர்கள் இருதயங்களை ஏவினான்.
30 இதோ, அவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றியிருப்பார்கள். (அது புலம்பலுக்கு ஏதுவாயிருந்திருக்கும்) ஆனால் இதோ, மோரியாந்தன் அதிக உணர்ச்சிக்கு ஆட்பட்ட மனுஷனாயிருந்தபடியால், அவன் தன் வேலைக்காரிகளில் ஒருத்தி மேல் கோபம்கொண்டு அவளை உதைத்து, அவளை மிகவும் அடித்தான்.
31 அந்தப்படியே, அவள் மரோனியின் பாளயத்திற்கு ஓடிவந்து, அதைக் குறித்து சகல காரியங்களையும், வடக்கேயுள்ள தேசத்திற்குப் பறந்து போகவேண்டுமென்ற, அவர்களின் உத்தேசங்களைப்பற்றியும் மரோனியிடம் சொன்னாள்.
32 இப்பொழுதும் இதோ, மரோனி உதாரத்துவஸ்தல தேசத்து ஜனங்களைக் குறித்து பயப்பட்டான். அதாவது அவர்கள் மோரியாந்தனின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவன் ஜனத்தோடு சேர்ந்துகொண்டு இப்படியாக அவன் தேசத்தில் அப்பகுதியைப் பெற்றுவிட்டால், அது நேபியருக்குள்ளே தகாத விளைவுகளுக்கு அஸ்திபாரம் அமைப்பது மாத்திரம் அல்ல. அந்த விளைவுகளினால் அவர்களது சுதந்திரத்தை பறித்துவிடுமோ, என்று பயந்தான்.
33 ஆதலால் மோரியாந்தன் ஜனங்களுடைய வடதேசத்து பயணத்தைக் குறிக்கிட்டு நிறுத்தும்படி, மரோனி சேனையை அவர்களுடைய யுத்தக் கருவிகளோடு அனுப்பி வைத்தான்.
34 அந்தப்படியே, அவர்கள் பாழ்க்கடிப்பு என்ற தேசத்தின் எல்லைகளுக்கு வரும்வரைக்கும், அவர்களைக் குறுக்கிடவில்லை. மேற்கிலும், கிழக்கிலும் சமுத்திர வழியாய் வடதேசத்திற்கு நடத்திச் செல்லுகிற, இடுக்கான கணவாய் அருகே அவர்கள் குறுக்கிட்டார்கள்.
35 அந்தப்படியே, தியான்கும் என்ற நாமம்கொண்ட மனுஷனால் நடத்திச் செல்லப்பட்ட, மரோனியினால் அனுப்பப்பட்ட சேனை, மோரியாந்தனின் ஜனத்தை எதிர்கொண்டது. மோரியாந்தனின் ஜனங்கள் (அவனுடைய துன்மார்க்கத்தினாலும் இச்சகமான வார்த்தைகளினாலும் ஏவப்பட்டிருந்து) மிகவும் அடங்காதவர்களாயிருந்தபடியால், அவர்களுக்குள்ளே ஓர் போர் மூண்டு, அதிலே தியான்கும், மோரியாந்தனைக் கொன்று, அவன் சேனையை வீழ்த்தி, அவர்களைச் சிறைக் கைதிகளாக்கி, மரோனியின் பாளையத்திற்குத் திரும்பினான். இப்படியாக நேபியின் ஜனத்தின் மீதான நியாயாதிபதிகளின் இருபத்தி நான்காம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது.
36 இப்படியாக மோரியாந்தனின் ஜனங்கள் திரும்பக் கொண்டு வரப்பட்டார்கள். சமாதானத்தைக் கைக்கொள்ளுவோம் என்ற அவர்களின் உடன்படிக்கையின் பேரில், அவர்கள் மோரியாந்தன் பட்டணத்திற்குத் திரும்பக் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கும் லேகியின் ஜனத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டானது; அவர்களும் அவர்களுடைய தேசத்திற்குத் திரும்பக் கொண்டு சேர்க்கப்பட்டார்கள்.
37 அந்தப்படியே, அதே வருஷத்தில் நேபியின் ஜனங்களுக்குச் சமாதானம் மறுபடியும் நிலைவரப்பட்டது, இரண்டாம் பிரதான நியாயாதிபதியாகிய நேபிகா, தேவனுக்கு முன்பு பூரண சன்மார்க்கத்துடன் நியாயாசனத்தில் அமர்ந்து மரித்தான்.
38 இருப்பினும், ஆல்மாவினாலும், அவன் பிதாக்களாலும் மிகவும் பரிசுத்தமானதென்று கருதப்பட்ட பதிவேடுகளையும் பொருட்களையும் பெற்றுக்கொள், என்ற ஆல்மாவின் வேண்டுகோளை மறுத்திருந்தான்; ஆதலால் ஆல்மா அவைகளைத் தன் குமாரானாகிய ஏலமனிடத்தில் ஒப்படைத்தான்.
39 இதோ, அந்தப்படியே, நேபிகாவின் குமாரன் தன் தகப்பனுடைய ஸ்தானத்திலே நியாயாசனத்தில் அமரும்படி நியமிக்கப்பட்டான்; ஆம், அவன் நீதியாய் நியாயம் விசாரிக்கவும், ஜனங்களுடைய சமாதானத்தையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்தவும், தேவனாகிய தங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிற அவர்களுடைய பரிசுத்த பாக்கியங்களை அவர்களுக்கு கொடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதும் தேவனுடைய நியதிகளை ஆதரித்து காக்கவும், துன்மார்க்கரை அவர்களுடைய குற்றத்திற்கேற்ப நியாயத்திற்குள் கொண்டுவரவும், ஜனங்களின்மேல் பிரதான நியாயாதிபதியாயும், ஆளுனராகவும், ஆணையினாலும் பரிசுத்த நியமத்தினாலும், நியமிக்கப்பட்டான்.
40 இப்பொழுது இதோ, அவன் நாமம் பகோரன் என்பதாகும். பகோரன் தன் தகப்பனின் ஆசனத்தில் அமர்ந்தான், நேபியின் ஜனங்களின் மேல் இருபத்தி நான்காவது வருஷ முடிவிலே தன் ஆளுகையைத் துவங்கினான்.